Published:Updated:

வறட்சியைத் தாங்கி வளரும் புதிய ரகத் தென்னை..! ஆதீன நிலத்தில் ஆராய்ச்சி!

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பிரீமியம் ஸ்டோரி
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

விவரிக்கும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

வறட்சியைத் தாங்கி வளரும் புதிய ரகத் தென்னை..! ஆதீன நிலத்தில் ஆராய்ச்சி!

விவரிக்கும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

Published:Updated:
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பிரீமியம் ஸ்டோரி
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

நானும் விவசாயி

சிறந்த பேச்சாளர். கல்விப்பணி, எழுத்துப் பணி எனப் பல்வேறு தளங்களில் இயங்கினாலும் விவசாய நிலங்களில் ஈடுபடும் பணியே மனதுக்கு நிறைவு தருவதாகச் சொல்கிறார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். மற்ற துறைகளைப் போலவே விவசாயத்திலும் பல்வேறு சாதனைகளைச் செய்திருக்கும் பொன்னம்பல அடிகளார்தான், தமிழகத்தில் குறிப்பாகச் சிவகங்கை மாவட்டத்தில் 2002-ம் ஆண்டில் முதல் முறையாகச் சொட்டு நீர்ப் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர். இதற்காக 2004-ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் ‘தலைசிறந்த விவசாயி’ (கிருஷி ஷிரோன்மணி சம்மான்) விருது வழங்கப்பட்டது. 2006-ம் ஆண்டுதான் தமிழக அரசு சொட்டுநீர்ப் பாசனத்தை முன்னெடுத்தது. அதற்கு முன்பு சில இடங்களில் சொட்டு நீர் அமைக்கப்பட்டாலும் அது சோதனைக்காக அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வறட்சியான சிவகங்கை மாவட்டத்தில் யூக்கலிப்டஸ் மரங்கள் சாகுபடி அதிகரித்த நிலையில், அதற்கு மாற்றாக முந்திரி சாகுபடியை முன்னெடுத்தவர். வறட்சியான மாவட்ட மக்களும் தென்னை விவசாயம் செய்ய வழிவகைச் செய்யும் வகையில் வறட்சியில் வளரும் தென்னை ரகங்களைக் கண்டறியும் ஆராய்ச்சி 6 ஆண்டுகளாகத் திருமடத்துக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்று வரக் காரணமாக இருப்பவர். இப்படி விவசாயத்திலும் வீறு நடை போடும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை நானும் விவசாயிதான் பகுதிக்காகச் சந்தித்தோம். இந்தப் பண்ணை சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் உள்ளது.

பண்ணையில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பண்ணையில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

பங்குனி உத்திர திருவிழா பணிகளில் முனைப்பாக இருந்தவர், ‘‘வாங்க... பண்ணையில் போய்ப் பேசலாம்’’ என்று மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றார். பூத்து நின்ற மா மரங்கள் காற்றில் தலையசைத்து வரவேற்றன. மரங்களுக்கு இடையில் நடந்து கொண்டே ஒவ்வொரு மரத்தையும் கனிவுடன் கவனித்துக்கொண்டே பேசத் தொடங்கினார்.

“இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது விவசாயத்தில்தான் சாத்தியம். நிலத்தைச் சீரமைத்து மண்ணைச் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றும்போது மனதும் சாந்தமாகிறது. 29 வயது வரை மதுரை மாநகரில்தான் வசித்தோம். சிறு வயதில் மதுரை மாநகரத்தில் இருந்ததால் விவசாயத்தில் நேரடி அனுபவம் இல்லை. மாநகராட்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். குன்றக்குடி ஆதீனத்துக்கு வந்த பிறகு, இயற்கைச் சூழலோடு விவசாயத்தில் ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது.

களையெடுக்கும் பணியில்
களையெடுக்கும் பணியில்

இயற்கை வளம் நமக்கு மிகப்பெரிய கொடை. திருமடத்தின் சார்பில் ஆதீன நிலங்களில் பன்னெடுங்காலமாக உழவுப் பணிகள் நடந்து வருகின்றன. 1950-களில் யானைக்கான தீவனம் அதிக அளவில் இங்கு விளைவிக்கப்பட்டது. 1960-க்குப் பிறகு, புதர்கள், முட்கள் இருந்த காடுகளை அழித்துச் சாகுபடி நிலமாக மாற்ற, குரு மகாசந்நிதானம் நினைத்தார். அதன் பிறகு நெல், வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, முந்திரி பயிர்கள் ஆதீன நிலங்களில் விளைவிக்கப்பட்டன. மகாசந்நிதானம் அவர்களும் விவசாயத்தில் அதிக ஆர்வமாக இருந்தார்கள். இங்கு விளை விக்கப்படும் நெல்லை அரிசியாக்கி, அந்த அரிசியைப் பொங்கல் திருநாளன்று ஆயிரக் கணக்கான அன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கத்தில் இருக்கிறது. அரிசி, பருப்பு, வெல்லம், ஏலக்காய், நெய், மண்பானையுடன் கரும்பு, மஞ்சள் கொத்துடன் வழங்குவது வழக்கம். 20 ஆண்டு களுக்கு முன்பு வரை மண்பானை மட்டும் வெளியில் வாங்குவோம். மற்றவை ஆதீன திருமடத்தின் நிலங்களில் விளைந்தவை. ஆனால், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நெல், கரும்பு, வாழை போன்ற அதிக நீர் தேவைப்படும் பயிர்களைக் குறைத்துக்கொண்டோம்’’ என்ற அடிகளார், முதன்முதலில் சொட்டு நீர்ப் பாசனம் அமைத்ததைப் பற்றி விளக்கினார்.

விவசாயிகளுடன் கலந்துரையாடல்
விவசாயிகளுடன் கலந்துரையாடல்

‘‘மேலப்பட்டியில் ஆதீன திருமடத்தின் நிலத்தில் 80 ஏக்கரில் தென்னந்தோப்பு இருந்தது. 1940-களில் மேலப்பட்டி பண்ணைக் குப் பிரான்மலையிலிருந்து நடந்தே வந்து விவசாய வேலைகளைப் பார்ப் பார்கள். கையில் குழிபறித்து, தென்னையை நடவு செய்திருக் கிறார்கள். அப்போது இருந்த இயற்கை வளம் அப்படி. ஆற்றில் தண்ணீர் போனது. கிணற்றில் நீர் இருந்தது. அந்த வளம் இப்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்பு.

காலப்போக்கில் தண்ணீர் குறைந்து தட்டுப்பாடு உருவானது. அங்குள்ள தென்னை மரங்களைக் காப்பாற்றுவது பெரிய சவாலாக இருந்தது. பட்டுக்கோட்டை தென்னை ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகளிடம் ஆலோசனைக் கேட்கப்பட்டது. பழைய மரங்களை முழுமை யாக அகற்றிவிட்டு, புதிய கன்றுகளை அறிவியல் முறையில் நடவு செய்யலாம்’’ என்றார்கள். ஆனால், அந்த மரங்களை அகற்றுவதில் நமக்கு உடன்பாடு இல்லை. வேறு ஏதாவது தொழில்நுட்பம் மூலமாக மரங்களைக் காப்பாற்ற முடியுமா? என்ற தேடலில் இறங்கினோம். அப்போது வெளி நாடுகளில் பயன்படுத்தத் தொடங்கியிருந்த தொழில்நுட்பம்தான் சொட்டுநீர் பாசனம். அந்த அமைப்பை நமது தோப்பில் அமைத்தோம். அதன் மூலம் சொட்டுநீர்ப் பாசன தொழில்நுட்பம் சிவகங்கை மாவட்டத் தில் முதல்முறையாகச் சிங்கம்புணரி ஆற்றுப் படுகையில் பயன்பாட்டுக்கு வந்தது.

திறந்தவெளியில் அதிக தண்ணீர் பாய்ந்தால் தான் சரியான பாசன முறை என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அறிவியல் முறைப்படி பயிருக்குத் தேவையான நீரை வேர்ப்பகுதியில் பாய்ச்சினால் போதும் என்பதனால் தான் சொட்டு நீர்ப் பாசனத்தைக் கைக்கொண்டோம். அதன் மூலம் தென்னை மரங்கள் மீண்டும் வளமாகின. இன்றைக்கு சொட்டு நீர்ப் பாசனமே பிரதான பாசனமாக மாறிவிட்டது’’ என்றவர், வறட்சியைத் தாங்கி வளரும் தென்னை ஆராய்ச்சி பற்றிப் பேசினார்.

‘‘சராசரியாக ஒரு தென்னை மரத்துக்கு 80 லிட்டர் தண்ணீர் தேவை என்றால் புதிய ரகக் கன்றுக்கு 10 லிட்டர் தண்ணீர் போதும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.’’


‘‘உயர் தொழில்நுட்ப அடிப் படையில் சொட்டுநீர்ப் பாசனத்தில் தென்னைச் சாகுபடி செய்து வரும் மேலப்பட்டி பண்ணையில், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையத் துடன் இணைந்து 10 ஏக்கர் நிலப்பரப்பில் வறட்சியைத் தாங்கி வளரும் தென்னை மரங்கள் உருவாக்குவது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது.

இலங்கை, மலேசியா, தாய்லாந்து, பர்மா உள்ளிட்ட 70 நாடுகளிலிருந்து குறைந்த தண்ணீரில் விளையும் தென்னை ரகங்கள், சிவகங்கை மாவட்டத்தில் விளையும் தென்னையுடன் சேர்த்து, புதிய ஒட்டு ரகத்தை உருவாக்கும் பரீட்சார்த்த முயற்சி 6 ஆண்டு களாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் உற்பத்தி செய்யப்படும் தென்னங் கன்றுகளுக்குத் தண்ணீர் தேவை மிகவும் குறைவாக இருக்கும். சராசரியாக ஒரு தென்னை மரத்துக்கு 80 லிட்டர் தண்ணீர் தேவை என்றால் புதிய ரகக் கன்றுக்கு 10 லிட்டர் தண்ணீர் போதும் என்று ஆய்வாளர் கள் சொல்கிறார்கள். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் வறட்சியான பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு ஊக்கமாக இருக்கும்.

1970-களில் 200 ஏக்கரில் முந்திரி நடவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அதிக வறட்சி ஏற்பட்டது. 1990-களுக்குப் பிறகு, வறட்சி காரணமாக முந்திரி மரங்கள் காயத் தொடங்கின. அதன் பிறகு, குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனை படி வனத்துறையில் கன்றுகளை வாங்கி நடவு செய்யப்பட்டது. இதற்காக நாம் சென்னைக்குச் சென்று, வனத்துறைத் தலைவரைச் சந்தித்துத் தரமான கன்றுகளைப் பெற்று மறுபடியும் உருவாக்கினோம். தற்போது சுமார் 120 ஏக்கரில் முந்திரி நல்ல மகசூல் கொடுத்து வருகிறது. மானாவாரி நிலங்களில் வேலையாட்கள் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் நிலத்தைத் தரிசாகப் போடாமல் அதிலிருந்து ஒரு வருமானம் கிடைக்க ஏற்றப் பயிர். அதைக் கண்ணும் கருத்தாகக் கவனித்தால் நல்ல லாபம் எடுக்க முடியும்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்


சிவகங்கை போன்ற வறட்சியான மாவட்டங் களுக்கு முந்திரி ஒரு நல்ல பணப்பயிர்’’ என்றவர், “நமக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் விவசாயத்தைப் பார்த்து வருகிறோம். மலைப்பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகளை, இங்கே குன்றக்குடி மடத்தின் நிலத்தில் நாமே உற்பத்தி செய்து வருகிறோம். பல்வேறு பணிகளுக் கிடையில் விவசாயம்தான் பணிச்சுமையைக் குறைக்கிறது.

ஆற்றில் மணல் இல்லை. நீர் இல்லை. மழைப்பொழிவு குறைந்துவிட்டது. கிணற்று நீரும் கிடையாது. எனவே, நீர் சிக்கனம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. மழைநீர் சேகரிப்பு, சொட்டுநீர்ப் பாசனம் போன்ற நவீன பாசன முறைக்கு விவசாயிகள் தயாராக வேண்டும். ஆழ்துளைக் கிணற்று நீரைச் சொட்டுநீர் மூலமாகப் பாசனம் செய்து விவசாயம் செய்ய முன் வர வேண்டும்’’ என்ற அடிகளார் நிறைவாக,

“இன்றைக்கு இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவது வரவேற்கத்தக்கது. அதே நேரம் ஒருங்கிணைந்த பண்ணைகளாகத் தங்கள் பண்ணைகளை மாற்றி விவசாயம் செய்வதன் மூலம் விவசாயம் நிச்சய வருவாய் கொடுக்கும் தொழிலாக இருக்கும். விளைபொருள்களில் ரசாயன இடுபொருள் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அது, சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புற்றுநோய் முதல் பல்வேறு நோய்கள் உருவாகும் மையப்புள்ளியாக ரசாயன இடுபொருள்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். எனவே, நஞ்சில்லா உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

விவசாயத்துக்கு வரும் இளைஞர்கள் மக்களுக்கும் சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்’’ என்றபடி விடைகொடுத்தார்.

- வருவார்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism