ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

வாழை, கால்நடை, மதிப்புக்கூட்டல்... நேரடி விற்பனையில் மாதம் ₹ 57,000 லாபம்!

கோழிகளுடன் கவிதா
பிரீமியம் ஸ்டோரி
News
கோழிகளுடன் கவிதா

மதிப்புக்கூட்டல்

சின்ன வயசுலேருந்து விவசாய வேலை எனக்கு பரிச்சயம்தான். ஆனா, படிப்பை முடிச்சுட்டு, நமக்கான தொழில் இதுதான்னு விவசாயத்துல முழுமையா இறங்கின பிறகு, சவால்களைத்தான் அதிகமா எதிர்கொண்டேன். தீர்வுகள் தேடி வேளாண் பயிற்சிகளுக்குப் போனப்போதான், இந்தத் தொழில்ல கொட்டிக்கிடக்கும் வியாபார வாய்ப்புகளையும், எளிமையான வழிமுறை களையும் தெரிஞ்சுகிட்டேன். அதையெல்லாம் சரியா கடைப்பிடிச்சதால, வேளாண் பயிற்சி வகுப்புகள்ல விவசாயிகளுக்கு வழிகாட்டுற அளவுக்கு அனுபவம் கிடைச்சிருக்கு” என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார் கவிதா.

விவசாய வேலையை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிப் படையெடுப்பவர் களுக்கு மத்தியில், எம்.பி.ஏ பட்டதாரியான கவிதா, நகரத்திலிருந்து கிராம வாழ்க்கைக்குத் திரும்பி, விவசாய வேலையைக் கையில் எடுத்திருக்கிறார். ஈரோடு மாவட்டம், கொடிவேரி அருகேயுள்ள அனுப்பர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.விவசாயம், மதிப்புக்கூட்டல், நேரடி விற்பனை என்று முறையான அனுபவத்துடன் வேளாண் தொழிலில் நிறைவான வருமான வாய்ப்பு களையும் உறுதிசெய்திருக்கிறார். ஒரு காலை வேளையில் கவிதாவைச் சந்தித்தோம். தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்தார்.

கோழிகளுடன் கவிதா
கோழிகளுடன் கவிதா

“பூர்வீக விவசாயக் குடும்பம். பள்ளியில படிக்குற காலத்திலயே அப்பா அம்மாவுக்கு ஒத்தாசையா விவசாய வேலைகளோட, கால்நடை வளர்ப்பையும் கவனிச்சுகிட்டேன். இந்தக் கொடிவேரி சுத்துவட்டாரத்துல களிமண் நிலங்கள்தான் அதிகமிருக்கும். வடிகால் வசதியும் சரியா இருக்காது. அதனால மழைக்காலங்கள்ல நிலத்துல தண்ணித் தேங்கி நிற்குறது வாடிக்கை. இதனால, வாழையைப் பயிரிட்டா அடிக்கடி வேரழுகல் பாதிப்பு இருக்கும். வாழைக்காய் திரட்சியடையாது. நடவு, அறுவடை நேரங்கள்ல வர்ற சிக்கலைத் தாண்டிட்டா நெல், கரும்புல ஓரளவுக்கு வருமானம் பார்க்கலாம். இதுதான் இந்தப் பகுதியோட நிலைமை. இதையெல்லாம் கண்முன்னாடி பார்த்து வளர்ந்ததால, இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கணும்னு சின்ன வயசிலிருந்தே மனசுக்குள்ள ஆசை ஓடிட்டிருந்துச்சு.

படிச்சுட்டு வெளியூர்ல வேல செஞ்சுகிட்டு இருந்தேன். அப்புறம் திருமணம் ஆச்சு. ஒருகட்டத்துல என் பிறந்த வீட்டிலயே நானும் கணவரும் குடியேறினோம். அப்பா அம்மா கூடவே விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்தேன். அதுக்கு குடும்பத்துல பலமான எதிர்ப்பு. ‘என்னால விவசாயத்துல வெற்றிகரமா சம்பாதிச்சு காட்ட முடியும்’னு ரொம்பவே போராடித்தான் வீட்டுல சம்மதம் வாங்கினேன்’’ என்று முன்கதை சொன்னவர், தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘அப்பாவுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல ரெண்டரை ஏக்கரை கவனிச்சுக்குற பொறுப்பை நான் ஏத்துகிட்டேன். அப்பாகிட்டயே ஓரளவுக்குக் கத்துகிட்டு, ஒரு ஏக்கர்ல வாழை, அரை ஏக்கர்ல பருத்தி, அரை ஏக்கர்ல தீவனப்புல் நடவு செஞ்சேன். விளைஞ்ச பிறகு, வாழைக்கு விலை கிடைக்கல. முதல் போகத்துல பெரிய நஷ்டம். பத்தாத துக்குப் பக்கத்துக் காட்டுல தெளிச்ச களைக்கொல்லியால எங்க பருத்திப் பயிர்லயும் விளைச்சல் குறைஞ்சிடுச்சு. ‘இந்தப் பாடு எங்களோடவே போகட்டும்னு தான் உனக்கு விவசாயம் வேண்டாம்னு சொன்னோம்’னு வீட்டுல மறுபடியும் எதிர்ப்பு. ஆனா, என் முடிவுல உறுதியா இருந்தேன்.

பயிர்களை மட்டுமே நம்பாம, கூடவே வேற ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக் கழகத்துல போய்த் தேனீ வளர்ப்புக்கான பயிற்சி எடுத்துக்கிட்டேன்” என்றவர், வேளாண் பயிற்சி வகுப்புகளால் கிடைத்த பயன்கள் பற்றிப் பேசினார்.

தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு

“எங்க ஊர்லேருந்து கோபிசெட்டிபாளையம் 20 கிலோமீட்டர். அங்கயிருக்க மைராடா வேளாண் அறிவியல் நிலையத்துல தேனீ வளர்ப்புக்கான கூடுதல் பயிற்சி எடுத்துக்கிட்டேன். பிறகு, ரெண்டு தேனீப் பெட்டிகளை வெச்சு தேனீ வளர்க்க ஆரம்பிச்சேன். படிப்படியா எங்க தோட்டத்துல தேனீ வளர்ப்பை விரிவுபடுத்தினேன்.

இதனால, மகரந்தச்சேர்க்கை சிறப்பா நடந்து, எங்களுக்கும் அக்கம் பக்கத்து விவசாயிகள் பலருக்கும் நல்ல பலன் கிடைச்சது. அது வரைக்கும் எங்க தோட்டத்துல சரியா காய் பிடிக்காம இருந்த முருங்கை மரங்கள்ல, காய்கள் நல்லா காய்க்க ஆரம்பிச்சது. வரப்பு ஓரத்திலிருக்குற தென்னை மரங்கள்ல காய்கள் கூடுதலாவும், எடை அதிகமாவும் கிடைச்சது.

வாழையில எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால, அதை மட்டும் குத்தகைக்கு விட்டுட்டேன். விவசாயத்தோட கால்நடை வளர்ப்புலயும் இறங்குனேன். வேளாண் அறிவியல் நிலையத்துலயே தென்னை மரம் ஏறவும், ஆடு, மாடு, கோழி வளர்ப்புக்கான முறைகளையும் கத்துக்கிட்டேன். இந்த நிலையில, மூணு வருஷத்துக்கு முன்னாடி என் கணவர் இறந்துட்டார். என் விவசாய வருமானத்துலேயே மகளை வளர்க்கணும்னு முடிவெடுத்தேன். பெத்தவங்களும் எனக்குப் பக்கபலமா இருந்தாங்க’’ என்றவர், கோழி வளர்ப்பைப் பற்றிப் பேசினார்.

தோட்டத்தைச் சுத்தி 23 தேனீப் பெட்டிகளை வெச்சிருக்கேன். ஒவ்வொரு தேனீப் பெட்டியில இருந்தும் தலா அரை லிட்டர் வீதம், 23 பெட்டிகள்ல இருந்து சராசரியா 11 லிட்டர் வரைக்கும் தேன் கிடைக்குது.

மூலிகை வைத்தியம்

‘‘2 ஆடுகள், 4 கோழிகளோட கால்நடை வளர்ப்பை ஆரம்பிச்சேன். படிப்படியா அதையும் விரிவுபடுத்தினேன். இப்ப மொத்தம் 160 கோழிகள் இருக்கு. 3 வெள்ளாடுகள் இருக்கு. வேளாண் அறிவியல் மையத்துல கத்துக்கிட்ட அனுபவங்கள், கால்நடை வளர்ப்பை எளிமையாக்கியிருக்கு. பராமரிப்புச் செலவும் குறைஞ்சிருக்கு. பருவத்துக்கு ஏத்தமாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கிறேன். கால்நடைகளுக்கு மூலிகை வைத்தியம் மட்டும்தான். கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் தடுப்பூசிகூட போடுறதில்ல. மாட்டுச்சாணத்திலிருந்து மண்புழு உரம் தயாரிச்சு பயிர்களுக்கு அடியுரமா கொடுக்குறேன். அசோலா வளர்த்துக் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கிறேன். தீவனச் செலவுகளைக் குறைக்க, கால்நடைகளுக்கான பசுந்தீவனங்களை ஒரு ஏக்கர்ல வளர்க்கிறேன்” என்றவர், கோழிகளுக்கும் வாத்துகளுக்கும் தீவனம் அளித்தபடியே தொடர்ந்தார்.

நாய்கள் வளர்ப்பு
நாய்கள் வளர்ப்பு

நாய்க்கு வாத்து முட்டை

“எங்க தோட்டத்தை ஒருங்கிணைந்த பண்ணையா மாத்த நினைக்கிறேன். போன வருஷம் நாய் வளர்ப்பை ஆரம்பிச்சேன். ஜெர்மன் செப்பர்டு, டாபர் மேன், லாப்ரடர்னு 3 ரகத்துலயும் தலா 2 தாய் நாய்களை மட்டும் இனப்பெருக்கத்துக்காக வெச்சுகிட்டு, மத்ததையெல்லாம் விற்பனை செஞ்சுடுவேன். நாய்களுக்கான முட்டைத் தேவைக்காக நாட்டு ரகத்துல 40 வாத்துகளை வளர்க்கிறேன். சிந்து கலப்பின ரகத்துல 4 மாடுகள், 2 கன்றுகள் இருக்கு. மாடுகள்ல இருந்து கிடைக்கும் பாலை, நாய்களுக்கு மட்டுமே பயன்படுத்துறோம்’’ என்றவர், விற்பனை வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

“முட்டையிடும் பருவத்திலிருக்கும் தாய்க்கோழிகளை உயிர் எடை கிலோ 500 ரூபாய்க்கும், ஒரு மாதக் குஞ்சு 150 ரூபாய்க்கும் விற்பனை செய்றேன். தீவனம், பராமரிப்புச் செலவுகள் போக, கோழி வளர்ப்புல மாசத்துக்கு 10,000 ரூபாய் லாபம் கிடைக்கும். நான் வளர்க்குற மூணு வகை நாய்களும் வருஷத்துக்கு ரெண்டு முறை குட்டி போடும். நாய்க்குட்டி விற்பனையை மாசத்துக்குனு கணக்குப்போட்டா, செலவுபோக 10,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

தோட்டத்தைச் சுத்தி 23 தேனீப் பெட்டிகளை வெச்சிருக்கேன். ஒவ்வொரு தேனீப் பெட்டியில இருந்தும் தலா அரை லிட்டர் வீதம், 23 பெட்டிகள்ல இருந்து சராசரியா 11 லிட்டர் வரைக்கும் தேன் கிடைக்குது. ஒரு லிட்டர் தேன் 800 ரூபாய்னு மாசத்துக்கு 8,800 ரூபாய் வருமானம் கிடைக்கும். பராமரிப்புச் செலவுகள் போக அதுல 7,000 ரூபாய் லாபம் வரும். ஆனா, தேன் மூலமா கிடைக்குற வருமானம் குறிப்பிட்ட மாசங்களுக்குத்தான். அதனால, தேனீ வளர்ப்புக்கான பெட்டிகளை வாங்கிட்டு வந்து, அதுல ராணி மற்றும் வேலைக்காரத் தேனீக்களை உருவாக்கிக் கொடுத்து விற்பனை செய்யவும் ஆரம்பிச்சிருக்கேன்.

தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு

பொருள்கள வாங்கி மதிப்புக்கூட்டுறது மூலமா மாதம்தோறும் 1,500 கிலோ ராகி மாவு, 500 கிலோ மஞ்சள்தூள், பலவிதமான மசாலாப் பொருள்கள்னு 300 கிலோ வரை விற்பனையாகுது. மூணு எண்ணெயிலும் சேர்த்து மொத்தம் 150 லிட்டர் விற்பனை யாகும். இந்த மதிப்புக்கூட்டல் விற்பனை மூலமா செலவு போக மாசத்துக்கு 25,000 ரூபாய் வரை லாபம் கிடைக்குது. ஒரு ஏக்கர் கதலி வாழையில பக்கக்கன்றுகளைத் தொடர்ந்து வளரவிட்டு, வாழை இலை அறுவடை செய்றாங்க. இதுக்கான குத்தகையா மாசம் 9,000 ரூபாய் கிடைக்கும். இதுல பராமரிப்புச் செலவுகள் போக மாசம் 5,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆக மொத்தம் கோழி, நாய், தேன், வாழைக் கான குத்தகை, மதிப்புக்கூட்டல்னு மொத்தமா மாசத்துக்கு 57,000 ரூபாய் லாபம் கிடைக்குது. இதுல சில மாசங்கள்ல அதிகமா வரும். சில மாசங்கள்ல குறையும்” என்று கூறியவர், நிறைவாக,

“கோபிசெட்டிபாளையத்துல இருக்கிற மைராடா கே.வி.கே ஒருங்கிணைப்பாளர் அழகேசன் உட்பட அங்கிருக்கும் எல்லா விஞ்ஞானிகளும் கொடுக்குற ஊக்கம்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு. பயிர்கள்ல நஷ்டம் ஏற்பட்டாலும், கால்நடை வளர்ப்பும், மதிப்புக்கூட்டல் சார்ந்த விவசாய உபதொழில்களும் எப்போதுமே நம்மைக் கைவிடாது. அதை அனுபவத்துல உணர்ந்த தோடு, எனக்குத் தெரிஞ்ச அனுபவங்களை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டுறேன். ஏழாவது படிக்குற என் பொண்ணும் என்னுடன் விவசாய வேலைகளை ஆர்வமா செய்வா. ‘சொன்னது போலவே ஜெயிச்சு காட்டிட்டே’ன்னு அப்பா அம்மா சொல்ல ஆரம்பிச்சிருக் காங்க. இதையே பலரும் சொல்ற மாதிரி, உயர்ந்து காட்டணும்னு நம்பிக்கையோடு ஓடிட்டிருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

கவிதா,

செல்போன்: 63809 98287.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்

ஆன்லைனில் விற்பனை

‘‘விவசாயிகளே தொழில்முனைவோரா மாறினா, மதிப்புக்கூட்டல் மூலம் நாம் தயாரிக்குற உணவுப் பொருள்களுக்கு நாமே விலை நிர்ணயம் செஞ்சு, நிலையான வருமானம் ஈட்ட முடியும். அதுக்கான அடிப்படை உத்திகளையும் கே.வி.கே-யில கத்துகிட்டேன். அங்க பயிற்சி கொடுக்கப் பயன்படுத்தப்படுற உபகரணங்களை, வளரும் தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக்கவும் ஊக்கப்படுத்துறாங்க. அதைப் பயன்படுத்தி, இயற்கை விவசாயிககிட்ட விளைபொருள்களை வாங்கி மதிப்புக்கூட்டுறேன். ராகி மாவு, மஞ்சள்தூள், மசாலாப் பொருள்கள், செக்குல ஆட்டுன கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்னு பலவிதமான உணவுப் பொருள்களைத் தயாரிச்சு, மளிகைக் கடைகளுக்கும், இயற்கை அங்காடிகளுக்கும் நேரடியா விற்பனை செய்றேன். ஆன்லைன் டெலிவரியும் செய்றேன். சிங்கப்பூர், மலேசியாவுக்கும் என் தயாரிப்புகள் போகுது. ‘இண்டியா மார்ட்’டுல என்னோட பொருள்களை விற்பனை செய்துட்டிருக்கேன். சீக்கிரமா அமேசான்லயும் விற்பனையை விரிவுபடுத்தப்போறேன்” என நம்பிக்கையோடு சொல்கிறார் கவிதா.

தீவனச் செலவைக் குறைக்கும் புழுக்கள்

“புரதச்சத்து நிறைந்த கறையான் வளர்ப்பால, கோழிகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்னு பலரும் சொல்வாங்க. அதுக்காகக் கறையான் வளர்க்கும்போது, வளர்ச்சியடைஞ்ச கறையான்கள் கொட்டகையில் உள்ள மர இடுக்குகள்ல புகுந்துட்டா, பல்கிப் பெருகி, பெரிய சேதாரம் ஏற்படவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான், கறையான் வளர்ப்புக்குப் பதிலா, ‘பிளாக் சோல்ஜர் ஃப்ளை’ங்கிற ஈ இனத்தைச் சேர்ந்த புழுக்களை வளர்க்குறேன். இதுலயும் புரதச்சத்து அதிகமிருக்கு. கிச்சன் கழிவு, கோழி எரு, தேங்காய்ப் பிண்ணாக்கு ஆகியவற்றைத் தனித்தனி பிளாஸ்டிக் பேரல்ல சேமிச்சு வெச்சு, அதுல இந்தப் புழுக்களை வளர்க்குறேன். இந்தப் புழுக்கள் வளரும் பேரல் அல்லது தொட்டியில நீர் படாம பார்த்துக்கணும். ஒரு தொட்டியில கொஞ்சமா புழுக்களைவிட்டு, அதுக்கான உணவுக் கழிவுகளை மட்டும் சேர்த்துக்கிட்டே இருந்தா போதும். அசோலா மாதிரியே புழுக்களின் உற்பத்தியும் பெருகிகிட்டே இருக்கும்.

ஒன்றரை மாத வளர்ச்சியை அடைஞ்ச புழுக்களை மட்டும் சேகரிச்சு, கோழிகளுக்கும் வாத்துகளுக்கும் தீவனமா கொடுக்கிறேன். ரெண்டு மாதப் பருவத்துக்கு உட்பட்ட கோழிக் குஞ்சுகளுக்குத் தினமும் தலா மூணு கிராம் அளவுல, இந்தப் புழுக்களைத் தீவனமா கொடுக்குறதால, அவற்றின் வளர்ச்சி சிறப்பா இருக்குது.

கே.வி.கே விஞ்ஞானிகளின் ஆலோசனைபடி, சாதத்துல அரிசி அரை வேக்காடு வெந்ததும் அதுல இந்தப் புழுக்களை, ஒரு கிலோ அரிசிக்கு 200 கிராம் வீதம் சேர்த்து வேகவெச்சு, வாரத்துக்கு மூணு நாள்களுக்கு, நாய்களுக்கும் உணவாகக் கொடுக்கிறேன். இதனால, தீவனச் செலவு குறைவதுடன், கால்நடைகளோட வளர்ச்சியும் கூடும்” என்கிறார் கவிதா.