Published:Updated:

`மனிதர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும்தான்..!’- ஏரியில் குறுங்காட்டை உருவாக்கி அசத்தும் இளைஞர்கள்!

ஒரத்தநாடு அருகே, இளைஞர்கள் சொந்த முயற்சியில் ஏரியைத் தூர் வாரியதுடன், பறவைகளைக் காக்கின்ற நோக்கில் ஏரியில் மரக்கன்றுகளை ஊன்றி குறுங்காட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏரி
ஏரி ( ம.அரவிந்த் )

ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தில், வெளிநாடுவாழ் கிராமத்து இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து நிதி திரட்டி, ஏரியைத் தூர் வாரியதுடன், நிலத்தடி நீரை சேமிக்கக்கூடிய வகையிலும், எதிர்காலத்தில் பறவைகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் மரக்கன்றுகளை ஊன்றி குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளனர். 'இதனால் எங்க ஊர் எப்போதும் செழிப்பாக இருக்கும்' என்றும் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

ஏரி
ஏரி

ஒரத்தநாடு அருகே உள்ளது ஆம்பாலபட்டு தெற்கு கிராமம். ஆற்றுத் தண்ணீரை மட்டும் நம்பி இல்லாமல், ஆழ்குழாயில் வரும் தண்ணீரையும் பயன்படுத்தி, இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயம் செய்துவருகின்றனர். விவசாயம்தான் இவர்களது முக்கியத் தொழிலாகவும் இருந்துவருகிறது. இதனால் எப்போதும் பச்சைப் பசேல் என பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள், உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் தங்கள் ஊரைப் பற்றிய, விவசாயத்தைப் பற்றிய அக்கறையுடன் செயல்படுபவார்கள்.

இந்த நிலையில், இங்கு 18 ஏக்கர் பரப்பளவுகொண்ட ஏரி, சுமார் 35 வருடங்களுக்கு மேலாக துார் வாரப்படமால் வறண்டுகிடந்தது. இதனால் மழைக்காலங்களில் கிடைக்கின்ற நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது. அதோடு, தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்கள், அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்களை யோசிக்கவைத்தது. குறிப்பாக, வெளிநாட்டில் வேலைபார்த்துவரும் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏரியைத் தூர் வார வேண்டும் என முடிவுசெய்து, அதற்காக பெரும் முயற்சி எடுத்தனர்.

ஏரி தூர் வாரும் பணியில்
ஏரி தூர் வாரும் பணியில்

பின்னர், பல நாடுகளில் பணிபுரியும் இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஏரியைத் தூர் வாருவதற்கு நிதி திரட்டி ஊர் மக்களிடம் கொடுத்தனர். மேலும், சீக்கிரமே இதற்கான பணியைத் தொடங்குங்கள் என ஊர் மக்களுக்கு ஊக்கமளித்தனர். இதையடுத்து, கடந்த மே மாதம் ஏரியைத் தூர் வாருவதற்கான பணிகளைத் தொடங்கினர். இதற்காக, ஊரை சேர்ந்த அனைவரும் தாமாக முன் வந்து நிதி கொடுத்தனர். பின்னர், ஒரு குழு அமைத்து, தூர் வாரும் பணி நடைபெற்றது.

முதற்கட்டமாக, குளத்தின் கரைகளில் மண்டிக்கிடந்த புதர்களை ஊர் மக்களே அகற்றினர். பின்னர், ஜே.சி.பி இயந்திரம் மூலம் குளத்தின் கரைகளைப் பலப்படுத்தியதுடன், 8 அடி ஆழத்திற்கு தூர் வாரினர். தொடக்கத்தில், நீர் சேமிப்பது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் மரங்கள் வளர்ப்பதையும், இந்த பகுதியை பறவைகள் வசிப்பிடமாக மாற்ற வேண்டும் என்றும் நினைத்து செயல்பட்டனர். இதற்காக, ஏரிக்கு நடுவில் மூன்று இடங்களில் 50 அடி அகலத்திற்கு வட்ட வடிவில் மேடாக இருப்பது போல் இடத்தைவிட்டு அதைச் சுற்றியே தூர் வாரினர். பின்னர், 50 அடி வட்டம்கொண்ட அந்த இடத்தைப் பலப்படுத்தினர்.மேலும், ஏரிக் கரை முழுவதிலும், நடுவில் உள்ள மேட்டுப் பகுதியிலும் மரக்கன்றுகளை ஊன்றினர்.

ஊர் மக்கள்
ஊர் மக்கள்

எதிர்காலத்தில் இவை, ஒரு குறுங்காடாக மாறும். அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், பறவைகள் வசிப்பிடமாகவும், பாதுக்காக்கப்படும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டே இதைச் செய்துள்ளோம் என ஊரைச் சேர்ந்தவர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அமரேந்திரன் என்பவரிடம் பேசினோம், "ஆம்பாலப்பட்டு கிராமத்தில் குறிச்சி, குரும்பன், ஆண்டாள் என மொத்தம் மூன்று ஏரிகள் உள்ளன.

இவற்றின்மூலம் ஆயிக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதிபெற்று வந்தன. ஏரி தூர் வாரப்படாததால், போதிய தண்ணீர் இல்லாமல் வறண்டே கிடக்கும். ஏரியைத் தூர் வார வேண்டும் என வெளிநாட்டில் வேலைபார்க்கும் எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் கூறியதுடன், சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள ஊர் இளைஞர்கள் அனைவரிடமும் நிதி திரட்டி அனுப்பிவைத்தனர்.

ஏரிக்கு நடுவில் மேட்டுப் பகுதி
ஏரிக்கு நடுவில் மேட்டுப் பகுதி

மேலும், கிராமத்தில் உள்ள இளைஞர்களும் எங்க ஊர் மக்களிடம் நிதி திரட்டினர். இதன்மூலம் மொத்தம் 19 லட்சம் ரூபாய் வரை நிதி கிடைத்தது. இதற்கிடையில், தூர் வாருவதற்கு நிதி கொடுப்பதற்காக, அமெரிக்காவின் டெக்காஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டோனியோ தமிழ் சங்கம் சார்பில், மொய் விருந்து நடத்தப்பட்டது. இதில், 1.50 லட்சம் வசூலானது. இதைக்கொண்டு குறிச்சி ஏரி தூர் வாரும் பணி நிறைவடைந்திருக்கிறது.

மேலும், ஏரியின் கரைகள் முழுவதிலும் அரசு, மகிழம் உள்ளிட்ட கன்றுகளை ஊன்றியிருக்கிறோம். அவற்றை ஆடு,மாடுகள் மேய்ந்துவிடாமல் காப்பதற்காக நான்கு புறமும் பச்சைத் துணியால் வலைபோல் தடுப்பு ஏற்படுத்தியிருக்கிறோம். பறவைகளுக்காக நடுவில் உள்ள மேட்டுப் பகுதியிலும் மரக்கன்றுகள் ஊன்றியிருக்கிறோம். மொத்தம் 2,500 மரக்கன்றுகள் ஊன்றப்பட்டுள்ளன. நீர் சேமிப்பு, நிலத்தடி நீரைக் காப்பது, இவைகளை மட்டும் குறிகோளாக நினைக்காமல் இந்த ஏரி மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பயன்பட வேண்டும் என நினைத்தோம்.

ஏரி
ஏரி

அதனால்தான், இந்த முறையில் தூர் வாரி மரக்கன்றுகளை ஊன்றியுள்ளோம். இதற்கு நீர் ஊற்றுவதற்கும் குழு அமைத்து பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் இந்தக் கன்றுகளைப் பெரிய மரமாக உருவாக்கி, குறுங்காடாக மாற்ற வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. நீர், மரம், பறவைகளின் சத்தம் இவற்றுடன் எங்க ஊர் எப்போதும் செழிப்பாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஒற்றுமையுடன் உழைத்துக்கொண்டிருக்கிறோம். இதேபோல் வரும் நாள்களில் மற்ற இரண்டு ஏரிகளையும் தூர் வார இருக்கிறோம்" என்றார்.