Published:Updated:

நிலம் நீர் நீதி! : ஏரிகள் சீரமைப்பால் செழிக்கும் விவசாயம்... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

விவசாய நிலத்தில் நிரம்பியிருக்கும் கிணறு
பிரீமியம் ஸ்டோரி
விவசாய நிலத்தில் நிரம்பியிருக்கும் கிணறு

நிலம்... நீர்... நீதி!

நிலம் நீர் நீதி! : ஏரிகள் சீரமைப்பால் செழிக்கும் விவசாயம்... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

நிலம்... நீர்... நீதி!

Published:Updated:
விவசாய நிலத்தில் நிரம்பியிருக்கும் கிணறு
பிரீமியம் ஸ்டோரி
விவசாய நிலத்தில் நிரம்பியிருக்கும் கிணறு
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஆற்றுப் பாசனம் என்றால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏரிப்பாசனம் தான் பிரதானம். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘விகடன்’ குழுமம் மூலமாக மூன்று ஏரிகள் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி சீரமைக்கப்பட்டது. அந்த ஏரிகளின் மூலம் சுமார் 200 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
நரியம்பாக்கம் ஏரி
நரியம்பாக்கம் ஏரி

2015-ம் ஆண்டுப் பெருவெள்ளத்துக்குப் பிறகு, வாசகர்களுடன் கைகோத்து விகடன் குழுமம் ‘நிலம்... நீர்... நீதி’ என்ற திட்டத்தை முன்னெடுத்தது. விகடன் குழுமத்தில் அறத்திட்டப் பணிகளுக்காக இயங்கிவரும் ‘வாசன் அறக்கட்டளை’ மூலமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையைச் சுற்றியுள்ள பல ஏரிகள் பார்வையிடப்பட்டு, இறுதியாக மூன்று ஏரிகள், ஒரு குளம் சீரமைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது அந்த ஏரிகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்துகொள்வதற்காக அந்தப் பகுதிகளில் வலம் வந்தோம்.

ஏரிப்பாசனத்தால் பயன்பெறும் விவசாய நிலங்கள்
ஏரிப்பாசனத்தால் பயன்பெறும் விவசாய நிலங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் ஏரி, சாலமங்கலம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி மற்றும் அம்மன் குளம் ஆகியவை சீரமைக்கப்பட்டன. 2017-ம் ஆண்டு இந்த ஏரிகளின் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டன. கடந்த இரண்டாண்டுகளிலும் தண்ணீர் நிரம்பியது. ஆனால், இந்தாண்டு பெய்த கனமழையால் ஏரிகளில் கடல்போல் தண்ணீர் நிரம்பிக் காட்சியளிக்கிறது. அதன் பலனாக விவசாயப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நரியம்பாக்கம் ஏரியின் கரை
நரியம்பாக்கம் ஏரியின் கரை

71 ஏக்கர் பரப்பளவுள்ள நரியம்பாக்கம் ஏரியில் 1.3 கி.மீ தொலைவுக்குக் கரைகள் அகலப்படுத்தப்பட்டு 4 அடி உயர்த்தப் பட்டுள்ளன. ஏரியில் அதிக தண்ணீர் தேங்குவதற்கு ஏற்றவாறு நீர்ப்பள்ளங்கள் எடுக்கப்பட்டன. கரைக்கு எதிரே ஆக்கிரமிப்பு நிகழாதவாறு எதிர்க்கரை எடுக்கப்பட்டுள்ளது. அதில் பனைவிதைகள் நடவு செய்யப்பட்டு இப்போது வளர்ந்து நிற்கின்றன. ஏரிக்குள் வரும் நீர்வரத்துக் கால்வாய்கள், வெளியேறும் கால்வாய்கள் சீரமைக் கப்பட்டிருந்தன. அதன் வழியாக இந்த முறை சீராகத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் கரை ஒருவகையான பொறை மண். எளிதில் அரித்துவிடுவதற்குச் சாத்தியம் உண்டு. அதைத் தடுக்க நீண்டகால அடிப்படையில், எந்த ஏரியிலும் இல்லாத வகையில் ஏரிக்கரையின் உள்பக்கத்தில் கான்கிரீட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த மழைக்கு அந்த கான்கிரீட் கரையைத் தாண்டியும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. ஆனால், கரைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை.

சாலமங்கலம் ஏரி
சாலமங்கலம் ஏரி

ஏரியின் கரையில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த முனியம்மாளிடம் பேசினோம். “முன்னெல்லாம் இந்த ஏரி கரைமேல அவ்வளவு எளிதா உள்ளே வர முடியாது. சொல்லப்போனா பொம்பளைங்களே வர முடியாது. முட்புதர்கள், வேலி முள்கள்னு அடர்ந்து இருக்கும். பாம்பு, புழு, பூச்சிகள் பயத்துல யாரும் அவ்வளவா வர மாட்டோம். முன்னெல்லாம் அங்கங்க கரையெல்லாம் உடைஞ்சு இருக்கும். தண்ணீர் ஒழுகிக்கிட்டே இருக்கும். விகடன் மூலமா முட்புதர்களையெல்லாம் வெட்டி, கரையை நல்லா உயர்த்தினதுனால கரையோட இந்தப் பகுதியில இருந்து முனைவரைக்கும் நல்லா தெரியுது. ஏரிக்கரையில முளைச்சிருக்கிற தீவனங்களைத்தான் இப்போ ஆடு, மாடுகள் மேயுது. நாங்க ரொம்ப தூரம் ஓட்டிட்டுப் போறதில்ல. ஏரியைச் சுத்தியே மேய்ச்சுக்கிறோம். இந்த ஏரியில தண்ணி வந்ததுனால, குடித்தண்ணிக்கும் பிரச்னை இல்ல. விகடனுக்கு ஊர்சார்பா நன்றி சொல்லிக்கிறோம்” என்றார் நெகிழ்ச்சியோடு.

சிறுமாத்தூர் ஏரி
சிறுமாத்தூர் ஏரி

விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்த கௌசல்யாவிடம் பேசினோம். “இந்த முறைதாங்க எங்க பகுதில விவசாயம் செழிக்குது. 65 ஏக்கர் நிலத்துல நெல் விவசாயம் நடக்குது. நாங்கெல்லாம் 100 நாள் வேலைக்குத்தான் போயிட்டிருந்தோம். இப்போ விவசாய வேலைகளுக்கு வர்றோம்னா அதுக்கு இந்த ஏரியைச் சீரமைச்சதுதான் காரணம். சுத்தியிருக்கிற 65 ஏக்கரும் ஏரிப் பாசனத்த நம்பிதான் இருக்கு. இதுல நடவு, களை, அறுவடைனு 3 முறை எங்களுக்கு வேலை கிடைக்குது. விவசாயிகளுக்கு மட்டும் நல்லது பண்ணல. எங்கள மாதிரி விவசாயக் கூலிகளுக்கும் நல்லது பண்ணியிருக்கீங்க” என்றார் நன்றி பெருக்கோடு.

விவசாய நிலத்தில் நிரம்பியிருக்கும் கிணறு
விவசாய நிலத்தில் நிரம்பியிருக்கும் கிணறு

பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள சாலமங்கலம் ஏரி 103 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் கரைகளை உயர்த்தி நன்றாக மண்ணைக் கொட்டி பலப் படுத்தப்பட்டது. கரையில் சிறு பாதிப்பும் ஏற்படாமல் கலங்கலின் வழியாக நீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு விவசாயப் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன.

முனியம்மாள்
முனியம்மாள்

சிறுமாத்தூர் ஏரி 140 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மலைக்கு அருகில் இருப்பதால் காட்டு விலங்குகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் இடமாக இருந்து வருகிறது. இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி, ஆக்கிரமிப்பு நிகழாதவாறு நீண்ட குழி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிப் பாசனத்தை நம்பி நெல், சவுக்கு, காய்கறிகள் என்று 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏரிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறுகள் நிரம்பி இருக்கின்றன. அதோடு சிறுமாத்தூர் கிராமத்தின் தண்ணீர் தேவைக்காகக் கிணறு ஒன்றும் ஏரியின் முகப்பில் வெட்டப் பட்டுள்ளது. விவசாயம், குடிநீர் இரண்டுக்கும் இது பயன்பட்டு வருகிறது.

விவசாயிகள் பெற்று வரும் பலன்கள் அனைத்துக்கும் காரணம் விகடன் வாசகர்களே. அவர்கள் இல்லையென்றால் இந்தச் சீரமைப்புப் பணிகள் இல்லை. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல் நாங்கள் சிறு முயற்சியைத்தான் விதைத்திருக்கிறோம். அதற்கான பலன்கள் பெரிது. தமிழகம் முழுக்க அந்தந்தப் பகுதி இளைஞர்களால் இது போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் விவசாயத்துக்குத் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படாது; விவசாயமும் செழிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism