Published:Updated:

பலன் கொடுத்த பலபயிர் சாகுபடி.. விளைச்சலைக் கூட்டிய பயிர் இடைவெளி..!

தவறுகளும் தீர்வுகளும்
பிரீமியம் ஸ்டோரி
தவறுகளும் தீர்வுகளும்

தவறுகளும் தீர்வுகளும்-3

பலன் கொடுத்த பலபயிர் சாகுபடி.. விளைச்சலைக் கூட்டிய பயிர் இடைவெளி..!

தவறுகளும் தீர்வுகளும்-3

Published:Updated:
தவறுகளும் தீர்வுகளும்
பிரீமியம் ஸ்டோரி
தவறுகளும் தீர்வுகளும்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சோமநாதபுரம் கிராமத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பரத், தனது விவசாய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் விவசாயத்தில் சந்தித்த தவறுகள் அதன் மூலம் கற்ற பாடங்கள், அதற்கான தீர்வுகள் மற்றும் பலன்கள் பற்றி விரிவாகச் சொன்ன விஷயங்கள் இங்கே...

“எங்க குடும்பம் பாரம்பர்யமான விவசாயக் குடும்பம். அப்பா முனியாண்டி, பத்தாவது முடிச்ச கையோட விவசாயத்துக்கு வந்துட்டாரு. ஒரு ஏக்கர் முழுக்க நெல், கரும்பு இல்லைன்னா வேர்க்கடலை (நிலக்கடலை) தான் பயிர் செய்வாரு. ஊடுபயிர் எதுவும் செய்யாம ஒரே பயிர்தான் சாகுபடி செய்வாரு. 2007-ம் வருஷம் நான் விவசாயத்துல இறங்கினேன். அப்போ இருந்து இயற்கை விவசாயம்தான் செய்றேன். அப்பாகிட்ட இருந்து கத்துகிட்டது மட்டுமல்லாம நம்மாழ்வார் ஐயா பயிற்சி வகுப்புகள்லயும் கலந்துகிட்டு இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். இப்போ வரைக்கும் தவறுகள செஞ்சுதான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டு வர்றேன்.

தோட்டத்தில் பரத்
தோட்டத்தில் பரத்

ஆரம்பத்தில ஒரே பயிரை மட்டும்தான் (Mono Crops) சாகுபடி செஞ்சேன். கொஞ்சம் யோசிச்சுப் பார்த்த பிறகுதான் அதுல இருக்கச் சில பிரச்னைகள் தெரிஞ்சது. 3 மாசத்துக்கு ஒரு பயிரை நடவு செய்வோம். அதுக்குப் பிறகு 3 மாசத்துக்கு நிலத்தைச் சும்மா போட்டுடுவோம். பிறகு 3 மாசம் மானாவாரி பயிர் செய்வோம். இப்படிச் செய்றதுல பெரிய அளவுல வருமானம் இல்ல. செலவுதான் அதிகமாச்சு.

காலச் சூழ்நிலை, தண்ணீர் பற்றாக்குறை, வேலைக்கு ஆள் கிடைக்காததுன்னு பல பிரச்னைகள் இதுல இருக்கு. அதனால லாபம் குறைவாத்தான் வந்துச்சு. வருஷம் முழுக்க உழைப்பைப் போட்டாலும் சொல்லிக்கிற அளவுக்கு லாபகரமா விவசாயத்தைச் செய்ய முடியல. இப்படியான சூழல்நிலையிலதான் விவசாய முறைகளைக் கொஞ்சம் மாத்தி பார்க்கலாம்னு முடிவு பண்ணுனேன். அதுக்காகச் சில சோதனை முயற்சிகளைச் செஞ்சேன்’’ என்றவர், தனது முயற்சிகள் பற்றி விளக்கினார்.

அவரை
அவரை

‘‘ஒரே பயிரைச் சாகுபடி செய்றதுக்குப் பதிலா பலபயிர் (Mixed Crops) சாகுபடியைச் செய்ய ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகுதான் குறைஞ்ச நிலத்திலயும் வருஷம் முழுக்கத் தொடர்ச்சியா வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. விவசாயம் சேவை கிடையாது. அதுவும் ஒரு தொழில். அதை நம்பியிருக்கிற வங்களுக்கு வருமானம் தேவை. அதனால நீண்டகால அடிப்படையில லாபகரமா விவசாயத்தை முன்னெடுக்க இந்தப் பல பயிர் சாகுபடி முறை விவசாயம் ரொம்ப சரியா இருக்குது. இதுல என்னென்ன பயிர்... எப்படி பண்ணலாம்னு அப்பாகிட்ட கலந்து பேசினேன். அவர், காலச் சூழலுக்கு ஏற்ப என்ன பயிரெல்லாம் சுழற்சி முறையில பண்ணலாம்னு சொன்னார். அதன்படி பல பயிர் சாகுபடி முறையை ஆரம்பிச்சேன்.

ஒரு ஏக்கர்ல 20 சென்ட் கோழிப் பண்ணை வச்சேன். 30 சென்ட்ல நெல், 50 சென்ட்ல பல பயிர் சாகுபடி, 20 சென்ட்ல வெண்டைக் காய், 20 சென்ட்ல கீரை, அவரைக்காய், காராமணி, வத்தல் மிளகாய்னு சுழற்சி முறையில சாகுபடி செய்றேன். நெல் சாகுபடியில வீட்டுக்குத் தேவையான நெல் போக மீதியை நேரடியா வித்துடுவேன். கோழிப்பண்ணை, கீரை, காய்கறிகள் சாகுபடி மூலமா தொடர்ச்சியா தினசரி வருமானம் வருது. நெல், நிலக்கடலை மட்டுமே பயிர் பண்ணிட்டு இருந்தபோது ஏக்கருக்கு 25,000-30,000 ரூபாய்தான் வருமானமா கிடைக்கும். செலவுபோக பாதிதான் கையில மிஞ்சும். பலபயிர் சாகுபடி பண்ண ஆரம்பிச்சபோது ஏக்கருக்கு 40,000 - 50,000 ரூபாய் லாபம் மட்டுமே கிடைச்சது. அதுவும் மூணு மாசத்துல’’ என்றவர், கோழி வளர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நாட்டுக்கோழி வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பு

‘‘5 வருஷத்துக்கு முன்னாடி அரசு திட்டத்துல 250 கோழி குஞ்சுகளை வாங்கிப் பண்ணை வெச்சோம். கோழி வளர்ப்பிலயும் பல பிரச்னைகள் இருந்துச்சு. நாய்த் தொல்லை, கோழிகளுக்கு நோய், கோழிகளுக்குள்ள சண்டைனு நிறைய பிரச்னைகள். இதனால, பலர் கோழிப் பண்ணை நடத்துறத விட்டுடுறாங்க. நான் பிரச்னைகளுக்குத் தீர்வு என்னனு யோசிச்சு, கோழிகளோட எண்ணிக்கையைக் குறைச்சேன். வெளியி லிருந்தே குஞ்சுகளை வாங்காம, பண்ணையில கோழி முட்டைகளை அடைவெச்சு உற்பத்தி செஞ்சேன். கோழிக சுதந்திரமா சுத்தி வர்றதுக்கான சூழலை உருவாக்கினேன்.

கோழிகளோட வகை, குணத்துக்கு ஏத்த மாதிரி பிரிச்சு, தனித்தனியா வெச்சு வளர்க்கிறேன். இதனால கோழிகளுக்குள்ள அடிச்சிக்கிறது, கொத்திக்கிறது குறைஞ்சது. இப்போ 300-க்கும் மேல கோழிக இருக்கு. அதுலருந்து தினம் 25 முட்டைகள் கிடைக்குது. ஒரு முட்டை 10 முதல் 12 ரூபாய்க்கு விலை போகுது. முட்டையில மட்டும் தினம் 250 முதல் 300 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்குது. அதுபோகக் கறிக்கோழியும் விற்பனை பண்றேன். அதுலயும் நல்ல வருமானம் வருது. அதுமட்டுமல்லாம கோழிக மூலமா விவசாயத்துக்குத் தேவை யான உரமும் கிடைக்குது. விவசாயத்துல கால்நடைகளோட பங்கு முக்கியம். பண்ணை யில கீரை, காய்கறிகள் வளர்க்கிறதால கால்நடைகளுக்கான தீவனச் செலவு மிச்சமாகிடும். விவசாயத்துக்கு நல்ல எரு, தொழுவுரம் போட முடியுறதால மண்ணோட மூலக்கூறு உடைஞ்சு, பொலபொலப்பு கிடைக்கும். நுண்ணுயிர்களும் நிறைய உருவாகும். இதனால பயிரோட வளர்ச்சி சிறப்பா இருக்கும். கால்நடைகளோட சாணம், சிறுநீர் இதெல்லாம் பயிர்களோட வளர்ச்சி ஊக்கியாவும், பூச்சி, நோய் தடுப்புக்கான பொருள்களைத் தயாரிக்கவும் பயன்படுது.

பாரம்பர்ய நெல் சாகுபடி
பாரம்பர்ய நெல் சாகுபடி

விவசாயத்தில ரொம்ப முக்கியம் காலமும் சூழலும். சரியான நேரத்தில செய்ய வேண்டியதைச் செய்யணும். தண்ணி பாய்ச்சுறது, களை எடுக்கிறது, உரம் போடறதுன்னு எல்லாமே சரியான நேரத்தில செய்யணும். தாமதமானால், பயிரோட வளர்ச்சி பாதிக்கும். ஆனா, விவசாயத்துக்கு ஆளுங்க கிடைக்கிறது பெரிய பிரச்னை. இதனால சரியான நேரத்துல இதெல்லாம் செய்ய முடியாமப் போகும். நஷ்டமும் உண்டாகும். ஆனா, காய்கறிகள், கீரைகள், கால்நடைகள்னு செய்யும்போது ஆளுங்க தேவை குறைவா இருக்கும். குடும்பத்தில இருக்கவங்களே கூட சேர்ந்து வேலையை முடிச்சுடலாம். நான் ஆளுங்களை நம்பியே இருக்க முடியாதுங்கறதால எளிமையா நாமே இயக்குற மாதிரி கருவிகளை உருவாக்கினேன்’’ என்றவர் கருவிகளைக் காட்டி விளக்கினார்.

அவரை
அவரை

‘‘ ‘களை பிடுங்கா பயிர் கால் பயிர்’னு சொல்வாங்க. சரியான கால இடைவெளியில நேரத்துக்குக் களைகளை எடுக்கணும். அப்படி எடுத்தாதான் பயிர் வளர்ச்சி சீரா இருக்கும். களை எடுக்கலைன்னா பயிர் சாகுபடி குறைஞ்சு, வருமானமும் குறையும். காய்கறி விவசாயத்தில அடிக்கடி உழவு செய்ய வேண்டியிருக்கும். அதனால செலவும் அதிகமாகும். அதற்கு நாமே இழுத்து உழவு செய்ற மாதிரி கலப்பையை உருவாக்கினேன். களை எடுக்கவும் கருவியும் செஞ்சேன்.

வேர்க்கடலையில கொடியைப் பறிக்கவும் ஒரு கருவி செஞ்சேன். வேர்க்கடலை அறுவடையின்போது அதைப் பிடுங்கி எடுக்க ஆளுங்களுக்கான கூலி அதிகம். சரியான ஈரப்பதத்துலயே வேர்க்கடலையைப் பிடுங்கினாதான் உண்டு. விட்டா ஈரப்பதம் காய்ஞ்சு பிடுங்கும்போது கடலை அறுபடும். அதனால மறுபடியும் தண்ணீர் பாய்ச்சி ஈரமாக்கி பிடுங்க வேண்டியிருக்கும். அது கால விரயம். செலவும் அதிகமாகி நஷ்டத்தை உண்டாக்குச்சு. வழக்கமா விவசாயிகள் செய்றதையே செஞ்சிட்டு இருந்த தவறை நானும் செஞ்சிட்டு இருந்தேன்.

அதன் பிறகு, உழவு செய்யும்போது தழைகளை வெட்டிச் சேத்துல மிதிச்சு விடுறதுக்காகத் ‘தழைமெறி’ எந்திரத்த பயன்படுத்த ஆரம்பிச்சோம். அதுல இருக்க ‘ரோலரை’ ஒரு ‘மோட்டார்’கூட இணைச்சு வேர்க்கடலை பறிக்கப் பயன்படுத்துறேன். இன்னிக்குச் சூழல்ல விவசாயத்தை இயற்கையோடு இணைஞ்சு செய்றது மட்டுமல்லாம, தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திச் சாமர்த்தியமாச் செஞ்சா தான் தொடர்ந்து விவசாயத்தை லாபகரமா முன்னெடுக்க முடியும். நான் உருவாக்குன கருவிகளை மத்தவங்களுக்கு வாடகைக்குக் கொடுக்கிறேன். அது மூலமும் கணிசமான வருமானம் வருது.

நாட்டுக்கோழி வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பு

விவசாயத்தில நான் செய்த இன்னொரு தவறு, பயிர் இடைவெளி. ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்கணும். ஆனா, நான் உட்பட பெரும் பாலான விவசாயிங்க, பயிர் இடைவெளி பற்றிப் பெருசா கவனத்துல எடுத்துக்க மாட்டாங்க. ஆனா, பயிர்களுக்குத் தேவையான இடைவெளி கொடுத்துப் பயிரிட்டாதான் அது நல்லா வளர்ந்து நல்ல மகசூல் தரும்னு பின்னாடிதான் புரிஞ்சது.

நெல் நடவு செய்யும்போது ஆளுங்க, அவங்க விருப்பத்துக்கு ஒரு குத்துக்கு மூணு, நாலு நாத்து நட்டுடுவாங்க. அந்த நாத்து களுக்கான இடைவெளி அரை அடிக்கும் குறைவாத்தான் இருக்கும். அந்த மாதிரி நடும்போது பயிரோட வளர்ச்சி சீரா இல்லாம போனதோட, மகசூலும் சிறப்பா இல்ல.

ஒரே சமயத்தில, வழக்கம்போல ஒரு நடவையும், ஓர் அடி அளவுக்கு இடைவெளி விட்டும் சோதனை முயற்சியா வெவ்வேறு நிலத்துல நடவு செஞ்சு பார்த்தேன். ஓர் அடி இடைவெளி விட்டுச் செஞ்ச நடவுல தூர் எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு. ஏக்கருக்கு 20 கிலோ விதை மிச்சமாச்சு. விளைச்சலும் 3 - 5 மூட்டை கூட கிடைச்சது. பயிரோட வளர்ச்சியும் நல்லா இருந்துச்சு. அதேபோல வெண்டைக்காய்க்கும் வரிசைக்கு வரிசை 2 அடி விட்டு, செடிக்குச் செடி ஓர் அடி இடைவெளி விட்டு நட்டோம். இடைவெளி குறைச்சலா சாகுபடி செஞ்சபோது 20 சென்ட்டுக்கு 400 கிலோ எடுத்திட்டு இருந்த நான், இடைவெளியை அதிகப் படுத்தியபோது 550 கிலோ மகசூல் பார்க்க முடிஞ்சது. இப்படி இடைவெளி விட்டுப் பயிரிடும்போது அதிகப்படியான காற்றோட்டமும் வெளிச்சமும் பயிர்களுக்குக் கிடைக்குது. பூச்சித்தாக்குதலும் குறையுது’’ என்றவர் நிறைவாக,

‘‘நிறைய பேர் என்கிட்ட ‘நல்ல படிப்பு படிச்சுட்டு விவசாயத்துக்கு ஏன் வந்த’னு கேக்குறாங்க. அதுக்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. மனநிறைவோட எனக்குப் பிடிச்ச வேலையைச் சந்தோஷமா செஞ்சுட்டு இருக்கேன்” என்று நம்பிக்கையுடன் சொல்லி முடித்தார் பரத்.

தொடர்புக்கு,
பரத்,

செல்போன்: 99766 92219

அனுபவங்களை அனுப்புங்கள்

விவசாயத்தில் தவறு செய்திருந்து, அதற்குத் தீர்வு கண்டது குறித்து மற்ற விவசாயிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களின் அனுபவங்களை எழுதி அனுப்பவும். சிறந்த அனுபவங்கள், இந்த பகுதியில் இடம்பெறும்.

தவறுகளும் தீர்வுகளும், பசுமை விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-600002

மின்னஞ்சல்: pasumai@vikatan.com

வாட்ஸ்அப்: 99400 22128

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism