தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கைலாசநாதர் கோயில் பின்புறம் உள்ள மலை மாதா கரடு பகுதியில் தெ.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மாந்தோப்பில் வளர்க்கப்பட்டு வந்த பசு மாட்டை சிறுத்தை தாக்கி அடித்துக் கொன்றுள்ளது. தாக்கப்பட்ட பசுமாட்டின் உடலை அப்பகுதியில் உள்ள கரட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று பாதி உடலைத் திண்றது.

இந்நிலையில் மாட்டின் உரிமையாளர் தேடிவந்த நிலையில் சிறுத்தை தாக்கப்பட்டு பசுமாடு உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பசு மாட்டின் உரிமையாளர் தேனி வனச்சரக அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுத்தை தாக்கப்பட்டு உயிரிழந்த பசு மாட்டை ஆய்வு செய்து அதைப் பிரேத பரிசோதனைக்குப் பின் அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், இதுவரையில் 5-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் பத்துக்கு மேற்பட்ட ஆடுகள் தாக்கப்பட்டு பலியாகியுள்ளன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் சிறுத்தை தாக்கியதில் இந்தப் பசு மாடு பலியாகிய சம்பவம், பலரையும் அச்சப்பட வைத்துள்ளது. குறிப்பாக, விவசாய நிலங்களில் கால்நடை வளர்த்து வரும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

அப்பகுதியில் அண்மையில் வனத்துறை அதிகாரியைத் தாக்கிய சிறுத்தை தொடர்ந்து கால்நடைகளையும் தாக்கி வருவதால் அச்சத்தில் உள்ள அப்பகுதி விவசாயிகள், ``கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் பேசினோம். ``கைலாசபட்டி பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகே இருக்கும் விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம். ஏற்கெனவே சிறுத்தையைப் பிடிக்க கூண்டு அமைத்து 3 மாதங்கள் காத்திருந்தோம் சிறுத்தைக் சிக்கவில்லை. கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்துக்கு சிறுத்தையை மாற்றினால் வேறொரு சிறுத்தை இப்பகுதிக்கு கண்டிபாக வரும். எனவே, சிறுத்தையை பிடிப்பது நிரந்தர தீர்வாக இருக்காது. தற்போதுள்ள சிறுத்தை மனிதர்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடுப்பது இல்லை. பசுமாட்டை இழந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்'' என்றனர்.