Published:Updated:

அப்படியே விற்றால் 40 ரூபாய்... அரிசியாக்கினால் 85 ரூபாய்... இயற்கையில் செழிக்கும் சாமை!

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி

ரு காலத்தில் `அரிசி’ என்றாலே சாமை அரிசிதான். அந்த அளவுக்கு முன்னோர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது சாமை. பசுமைப் புரட்சிக்குப் பிறகு சிறுதானியச் சாகுபடியின் பரப்பளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்போது ஆரோக்கியம், உடல்நலம் சார்ந்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி விஷம் தெளிக்காத சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்துவருகிறது.

சாமை தாள்களுடன் பழனியம்மாள்
சாமை தாள்களுடன் பழனியம்மாள்

சிறுதானியச் சாகுபடிக்குப் பெயர் பெற்றது தருமபுரி மாவட்டம். குறிப்பாக, பென்னாகரம் சுற்றுவட்டார கிராமங்களில் இன்றும் சிறுதானியச் சாகுபடி உயிர்ப்போடு இருக்கிறது. ஆடிப்பட்டத்துக்கு விதைத்த சாமை, புரட்டாசிப் பட்டத்தில் அறுவடைக்குத் தயாராகி நின்றிருந்தது.

‘அத்தியந்தல்-1’ என்ற சாமை ரகம் வறட்சியிலும் வருமானம் தரும். ஆன்லைனில் `டி-மில்லட்ஸ்’ (D-Millets) என்ற பெயரில் இணையதளம் நடத்துகிறோம்.

பென்னாகரம்-பாலக்கோடு சாலையிலுள்ள கௌரி செட்டிபட்டி கிராமத்தில் சிறுதானியச் சாகுபடி செய்துவரும் விவசாயி காளியிடம் பேசினோம். “எனக்கு மூணு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர்ல ஆரியம் (கேழ்வரகு), 30 சென்ட்ல சாமை, 30 சென்ட்ல கம்புன்னு மானாவாரியில ஆடி பதினெட்டுக்கு முன்னே விதைச்சேன். ஆனி மாசம் கிடைச்ச மழைக்கு உழவு ஓட்டினேன். நான் டிராக்டர் உழவு ஓட்டுறது கிடையாது. உழவுக்குன்னே ரெண்டு நாட்டு மாடுகளை வெச்சிருக்கேன். அதை வெச்சுதான் உழவு ஓட்டுறேன். ஒரு ஏக்கருக்கு ஒரு வள்ளம் (ஐந்து கிலோ) சாமை விதை தேவைப்படும். நான் விதையை வெளியில வாங்குறதில்லை. எப்பவுமே வீட்டுல விதைகளை எடுத்து வெச்சிடுவேன். அந்தப் பழைய வழக்கப்படிதான் இன்னிக்கும் விதைச்சிட்டு வர்றேன். விதையை வீசும்போது ஒரு பிடி எடுத்தா, மூணு விசுறு வீசுறுற மாதிரி வீசி விடணும். இப்படி வீசி விதைச்சா, பயிர்கள் ஒத்தா வளராம பரவலா வளர்ந்து மகசூல் கொடுக்கும்” என்றவர் சாமைச் சாகுபடி தொடர்பாகச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

சாமை, தினை, கம்பு
சாமை, தினை, கம்பு

“சாமை மூணு மாசப் பயிர். விதைச்சு விட்டுட்டா, அடுத்து அறுவடைக்குப் போனா போதும். நான் நாட்டுச் சாமையைத்தான் விதைச்சுவிட்டிருக்கேன். தேவைப்பட்டா ஒரு கை, களை எடுத்துவிடலாம். சாமையில இருக்கிற ஒரு பிரச்னை, வளர்ந்த பிறகு காத்தடிச்சா சாய்ஞ்சு போயிடும். அதுக்குத் தகுந்த மாதிரி அறுவடையைத் திட்டமிட்டு முடிச்சுக்கணும்.

சாமை வயலில் காளி
சாமை வயலில் காளி

அதேசமயம் சாமையில களைகள் வளராத மாதிரி நல்லா உழவு ஓட்டிவிடணும். குறிப்பா கோடை உழவு முக்கியம். தானியம் பச்சை நிறத்துல இருந்து, பழுப்பு நிறத்துக்கு மாறும்போது அறுவடை செஞ்சிடணும். ஆட்களைவெச்சு அறுவடை செய்யலாம். இல்லைனா, நெல் அடிக்குற மெஷின்ல கொடுத்து, தானியத்தைப் பிரிச்சு எடுத்துக்கலாம். ஒரு ஏக்கருக்கு 500 கிலோவுக்கு மேல சாமை மகசூலாகும். 30 சென்ட்டுக்கு 180 கிலோ கிடைக்கும். நான் பாதியை வீட்டுக்கு எடுத்துவெச்சுட்டு, மீதியை சிறுதானிய உற்பத்தியாளர் நிறுவனத்துல வித்துடுவேன். சாமை வைக்கோலுக்கு சீக்கிரம் செரிக்கிற தன்மை உண்டு. அதனால, மாடுகள் விரும்பிச் சாப்பிடும்” என்றார்.

சாமை குத்தும் கௌரி
சாமை குத்தும் கௌரி

சாலையோரத்தில் சாமைப் பயிர்கள் நன்றாகப் பச்சைகட்டி ஓங்கி வளர்ந்து நின்றுகொண்டிருந்தன. சாமை வயலில் களை பறிப்பில் இருந்த பழனியம்மாளிடம் பேச்சுக் கொடுத்தோம். “எங்களுக்கு ரெண்டரை ஏக்கர் நிலமிருக்கு. 20 குரையாடுக (செம்மறியாடுகள்) இருக்கு. ஆடுகளை வீட்டுக்காரர் மேய்க்கிறாரு. நான் விவசாயம் பார்த்துப்பேன். இந்த முறை 70 சென்ட் நிலத்துல சாமை விதைச்சிருக்கோம். மீதி நிலத்துல சோளம் இருக்கு. ஊர்லயே எங்க வயலோட சாமைதான் கரும்பச்சை புடிச்சு செழிப்பா வளந்திருக்கு. பட்டி திருப்புறதுதான் (கிடை போடுவது) அதுக்குக் காரணம். விதைக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னே, 30 நாளைக்குப் பட்டி திருப்பிவிடுவோம். பிறகு ரெண்டு சால் உழவு அடிச்சு சாமை விதைச்சோம். வேறெதுவும் கொடுக்கலை. அதுக்கே இவ்வளவு செழிப்பா வளர்ந்திருக்கு. எப்படியும் நாலு மூட்டை (400 கிலோ) சாமை கிடைக்கும். ஒரு கிலோ 40 ரூபாய் கணக்குல 16,000 ரூபாய் கிடைக்கும். இதுல உழவு ஓட்டினது போக மத்தது லாபம்தான்” என்றார் மகிழ்ச்சியாக.

‘‘ஆடிப்பட்டத்துல (ஜூலை) விதைச்ச சாமையை புரட்டாசி (செப்டம்பர்) மாசத்துல அறுவடை பண்ணிடுவோம். ஒரு ஏக்கருக்கு 5-7 மூட்டை (500-700 கிலோ) சாமை எங்களுக்கு அறுவடையாகுது.’’

அங்கிருந்து ஊருக்குள் சென்றோம். உரலில் சாமை குத்திக்கொண்டிருந்த கெளரி என்ற பெண் விவசாயியிடம் பேசினோம். “எங்களுக்கு ரெண்டு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர்ல ஆரியமும், ஒரு ஏக்கர்ல சாமையும் இருக்கு. இதோடு பட்டி ஆடுகளும் வெச்சிருக்கோம். பட்டி திருப்புறதோட சரி. வேறெதையும் கொடுக்கிறதில்லை. சாமை சோறும், ராகிக்களியும்தான் இன்னைக்கும் எங்க வீட்ல முக்கியமான சாப்பாடு. ரேஷன் கடை வந்த பிறகுதான் நாங்க அரிசியைப் பார்க்குறோம். முன்னல்லாம் சோறுன்னா சாமைச் சோறுதான். கொள்ளுத்தண்ணி ரசத்தை, சாமைச் சோத்துல கலந்து சாப்பிட்டா அம்புட்டு ருசியா இருக்கும். இதைத் தவிர நாட்டுமாட்டுத் தயிரை, பழைய சாமைச் சோத்துல ஊத்திப் பிசைஞ்சு சாப்பிட்டா அமுதம் மாதிரி இருக்கும்.

ஆடிப்பட்டத்துல (ஜூலை) விதைச்ச சாமையை, புரட்டாசி (செப்டம்பர்) மாசத்துல அறுவடை பண்ணிடுவோம். ஒரு ஏக்கருக்கு 5-7 மூட்டை (500-700 கிலோ) சாமை எங்களுக்கு அறுவடையாகுது. ஒரு கிலோ சாமை சந்தையில 30-35 ரூபாய்க்கு போகுது. கம்பெனியில 40 ரூபாய்க்கு வாங்கிக்கறாங்க. அறுவடை முடிஞ்சதும் கார்த்திகைப் பட்டத்துல கொள்ளு, காராமணி, பச்சைப் பயறுனு விதைப்போம். அதை தை மாசத்துல அறுவடை செய்வோம். ஏக்கருக்கு 600 கிலோ கொள்ளு அறுவடையாகும். ஒரு கிலோ 35-45 ரூபாய்க்கு போகுது. சாமை, கொள்ளு எல்லாத்தையும் மழையை நம்பியே விதைக்கிறோம். அறுவடை செய்யறோம்” என்றார் உற்சாகத்தோடு.

படங்கள்: சி.பிரபாகரன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

22 லட்சம் ரூபாய் மானியமாகக் கிடைத்தது!

ருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனியின் மேலாண்மை இயக்குநர் சிவலிங்கத்திடம் பேசினோம். “தமிழ்நாட்டில் சிறுதானியத்துக்கென்றே செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் எங்களுடையது. தமிழக வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை ஒத்துழைப்போடு இதைத் தொடங்கியிருக்கிறோம். கம்பெனி தொடங்கி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது. 45 லட்சம் ரூபாய் மதிப்பில் எல்லா சிறுதானியங்களையும் மதிப்புக்கூட்டும் வகையில் இயந்திரங்களை அமைத்திருக்கிறோம். அவற்றில் விதைகளைக் கொட்டினால், அரிசியாக அரைத்து, பேக்கிங்காகக் கையில் கிடைக்கும். 22 லட்சம் ரூபாய் மானியமாகக் கிடைத்தது. ஒரே இயந்திரத்தில் சாமை, தினை, குதிரைவாலி ஆகிய மூன்று தானியங்களின் உமி நீக்கும்படியும், வரகை மட்டும் தனியாக உமி நீக்கும்படியும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை வாங்கத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தை அணுகினால் வழிகாட்டுவார்கள்.

அப்படியே விற்றால் 40 ரூபாய்... அரிசியாக்கினால் 85 ரூபாய்... இயற்கையில் செழிக்கும் சாமை!

எங்கள் கம்பெனியில் 1,021 சிறுதானியச் சாகுபடி விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான விவசாயிகள் பாரம்பர்ய முறைப்படி ஆட்டு எரு, மாட்டு எருவை மட்டுமே பயன்படுத்திச் சாகுபடி செய்கிறார்கள்.

சென்னை, பெங்களூரு, ஓசூர், தருமபுரி, மயிலாடுதுறை எனப் பல இடங்களுக்கு அனுப்புகிறோம். ஆன்லைனில் `டி-மில்லட்ஸ்’ (D-Millets) என்ற பெயரில் இணையதளம் நடத்துகிறோம். அதன் மூலமாகவும் ஆர்டர்கள் கிடைக்கின்றன. இதனால் சிறுதானியங்களைச் சந்தைப்படுத்துவதில் பிரச்னை இல்லை. சாமையில் உப்புமா மிக்ஸ், ஹெல்த் மிக்ஸ், பிஸ்கட், பொங்கல் மிக்ஸ், சப்பாத்தி மாவு, புழுங்கல் அரிசி எனப் பலவிதமாகத் தயார் செய்து விற்பனை செய்கிறோம். சாமையில் மட்டுமல்லாமல் தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு அனைத்திலும் இதைப் போன்ற பொருள்களைத் தயார் செய்கிறோம். ஒரு கிலோ சாமையை கிலோ 40 ரூபாய்க்கு வாங்குகிறோம். அதை அரிசியாக மாற்றி 85 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ சாமையை அரைத்தால் 600 கிராம் அரிசி கிடைக்கும். சரியான முறையைப் பின்பற்றிச் சாகுபடி செய்தால் ஒரு ஏக்கருக்கு 600-1,000 கிலோ சாமை கிடைக்கும். குறைந்தபட்சம் 600 கிலோ தானியம் என வைத்துக்கொண்டாலும், அதை அரிசியாக மாற்றினால் 400 கிலோ அரிசி கிடைக்கும். சாமையைத் தானியமாக விற்பனை செய்தால் 24,000 ரூபாயும், அரிசியாக விற்பனை செய்தால் 34,000 ரூபாயும் கிடைக்கும். ஒரு ஏக்கர் வைக்கோலுக்கு 10,000 ரூபாயும் கிடைக்கும். உழவு, அறுவடை என 5,000 ரூபாய் செலவு போக மீதி லாபம்தான். `சிறுதானியத்தில் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் சம்பாதிக்க முடியும்’ என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்” என்றவர் நிறைவாக,

சிவலிங்கம்
சிவலிங்கம்

“முதன்முதலில் எங்களை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது பசுமை விகடன்தான். அதன் தொடர்ச்சியாக, அரசு அதிகாரிகளின் உதவியோடு சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு 280 டன் சிறுதானியங்களை கொள்முதல் செய்தோம். இந்த முறை 700 டன்னுக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். வெளி விவசாயிகளிடமிருந்தும் சிறுதானியங்களை வாங்குகிறோம். மதிப்புக்கூட்டி விற்பதால் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை விவசாயிகளுக்கு வழங்குகிறோம்” என்றார்.

தொடர்புக்கு, சிவலிங்கம், செல்போன்: 97875 45231

கொழுப்பைக் குறைக்கும், தசையை வலுப்படுத்தும்!

“சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் மாவுச்சத்து குறைவாகவும், நுண்ணூட்டச் சத்துகள் அதிகமாகவும் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்த ஓட்டம் சீராகவும், உடல் சோர்வு இல்லாமலும் இருக்கும்.

வேலாயுதம்
வேலாயுதம்

சாமையிலிருக்கும் நார்ச்சத்து, கொழுப்பைக் குறைத்து, எலும்புகளுக்கு இடையிலிருக்கும் தசைகளை வலிமைபெறச் செய்கிறது. வரகுக்கு கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்புநோய்களைத் தடுக்கும் குணம் இருப்பதோடு, நிணநீர்ச் சுரப்பிகளைச் சீராக்கும் குணமும் உண்டு. கேழ்வரகுக்கு குடல்புண்ணை குணப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு” என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

எந்த ரகம் ஏற்றது?

பென்னாகரம் உதவி வேளாண்மை இயக்குநர் பா.புவனேஸ்வரியிடம் பேசினோம். “சிறுதானியச் சாகுபடிப் பரப்பை மேம்படுத்துவதற்கு, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சாமையில் `கோ-4’ என்ற ரகம் தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. பென்னாகரம் வட்டாரத்தில் சாமை, வரகு, கேழ்வரகு உள்ளிட்ட விதைகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் பென்னாகரம் வட்டார வேளாண் அலுவலகத்தில் வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.

புவனேஸ்வரி, மணிவண்ணன்
புவனேஸ்வரி, மணிவண்ணன்

வேளாண்மை அலுவலர் கி.மணிவண்ணன், “சாமையை விதைக்கும்போது 200 கிராம் அசோஸ்பைரில்லத்தைச் சோறு வடித்த கஞ்சியில் கலந்துகொள்ள வேண்டும். அதில் 5 கிலோ விதையைக் கொட்டி நன்றாகக் கலக்க வேண்டும். இதை நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைத்துவிட வேண்டும். இப்படி விதை நேர்த்தி செய்து விதைத்தால், விதைகளின் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். மகசூலும் குறைவில்லாமல் கிடைக்கும். சாமை அறுவடை முடிந்து, பயறு வகைகளை விதைக்கும்போது அசோஸ்பைரில்லத்துக்கு பதிலாக பாஸ்போ பாக்டீரியாவைக் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். அதேபோல 50 கிலோ எருவோடு இரண்டு கிலோ அசோஸ்பைரில்லத்தைக் கலந்து கொடுத்தால், மண்ணில் காற்றோட்டம் உருவாகி, பயிரின் வேர் நன்றாக இறங்கும். மகசூலும் குறைவின்றிக் கிடைக்கும்” என்று ஆலோசனை வழங்கினார்.

தொடர்புக்கு, புவனேஸ்வரி, செல்போன்: 85267 19919

சாயாத சாமை ரகம்

‘அத்தியந்தல்-1’ என்ற சாமை ரகத்தை வெளியிட்டிருக்கிறது, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிறுதானிய மகத்துவ மையம். இது குறைவான மழையிலும் சிறப்பாக வளரக்கூடியது. காற்றடித்தாலும் பயிர்கள் சாயாமலிருக்கும். மானாவாரி நிலத்தில் ஜூன்-ஜூலை அல்லது செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சிறுதானியங்களை விதைக்கலாம். இறவைப்பாசன நிலத்தில் ஆண்டு முழுவதும் விதைக்கலாம். இந்த மையத்தில் சிறுதானிய விதைகள் விற்பனைக்குக் கிடைக்கும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04175 298001

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு