Published:Updated:

‘விளைச்சல் இருந்தும் விற்பனை செய்ய முடியலை!’ - உழவர்களுக்கு நஷ்டமேற்படுத்திய ஊரடங்கு!

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் மக்களைக் காப்பாற்ற மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர், காவல்துறையினர் அர்ப்பணிப்போடு பணி செய்தார்கள்; அவர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் மக்களின் பசியைத் தீர்க்கப் பல இன்னல்களுக்கிடையில் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்தார்கள் விவசாயிகள்.

பெரும் பொருளாதார நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் விளைய வைத்தார்கள். அவர்களைப் பெயருக்குக்கூட யாரும் பாராட்டவில்லை.

‘விளைச்சல் இருந்தும் விற்பனை செய்ய முடியலை!’ - உழவர்களுக்கு நஷ்டமேற்படுத்திய ஊரடங்கு!

ஊரடங்கு காலத்தில் விளைபொருள்களை விற்பனை செய்ய விவசாயிகள் பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்த நிலையில் அரசு சில ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால், அவற்றால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. இதனால் திடீரென்று முளைத்த கொள்ளைக்கார வியாபாரிகளிடம் உற்பத்தி செய்த பொருள்களை அடிமாட்டு விலைக்குக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. இது, பெரும் நஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது.

‘ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் நலன் சார்ந்து அதைச் செய்தோம், இதைச் செய்தோம்’ என்று மத்திய, மாநில அரசுகள் பல அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால், அவை அனைத்தும் ஏட்டளவில்தான் இருக்கின்றன’ என்கிறார்கள் விவசாயிகள்.

இது தொடர்பாகப் பேசிய மதுரை மாவட்டம், மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்டாலின், “மதுரை மாவட்டத்துல மேலூர், சோழவந்தான் பகுதியிலதான் நெல், பயறு வகைகள், கரும்பு, வாழை, தென்னை விவசாயம் அதிக அளவுல நடக்குது. இந்த தடவை வாழை நல்ல விளைச்சல். இங்கு விளையும் வாழைத்தார்களை மேலூர்ல ஏலம் விடுவோம். ஆனால், ஊரடங்குல அங்கே கொண்டு போக அனுமதிக்கலை. ஏலத்துக்கும் தடை போட்டுட்டாங்க. வாகனத்துல கொண்டு போய் விற்க அனுமதிச்சிருந்தா நேரடியா விற்பனை செஞ்சிருப்போம். விற்பனை ஆகலைன்னாலும் கஷ்டப்படுற மக்களுக்கு இலவசமாகக்கூடக் கொடுத்திருப்போம். ஆனா, அனுமதி இல்லாததால, கடைசியில வாழைத்தார்கள் பழுத்து வீணானதுதான் மிச்சம். சில பேர் அழகர் மலை, திருப்பரங்குன்றம் மலைக்குக் கொண்டுபோய்க் குரங்குகளுக்குப் போட்டாங்க. இதையெல்லாம் நேர்ல பார்த்தும் அதிகாரிகள் உதவ முன்வரலை. இது இங்கு மட்டுமில்ல, பல மாவட்டங்கள்லயும் நடந்திருக்கு. வீட்டு விசேஷங்கள், கோயில் நிகழ்ச்சிகள் தடைப்பட்டதால வாழை இலைகளும் வீணாகிப் போச்சு.

விவசாயிகள்
விவசாயிகள்

இந்த தடவை தக்காளி, வெண்டை, கத்திரினு காய்கறிகள் விளைச்சல் அதிகம். ஆனா, நல்லா விளைஞ்சும் நல்ல விலைக்கு விற்க முடியலை. வியாபாரிகள் அநியாய விலைக்கு வாங்கிட்டுப் போனாங்க. மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள்ல இருந்து மக்களுக்கு நேரடியாகக் காய்கறித் தொகுப்புனு விற்பனை செஞ்சாங்க. அதுக்கான காய்கறிகளை வியாபாரிககிட்டதான் வாங்கினாங்க. உற்பத்தி பண்ணி விற்க முடியாம இருந்த விவசாயிககிட்ட வாங்கலை. அப்படி வாங்கியிருந்தா விவசாயிகளுக்குச் செலவு செஞ்ச காசாவது கிடைச்சிருக்கும். மக்களுக்குக் குறைஞ்ச விலையில காய்கறிகள் கிடைச்சிருக்கும். மதுரை மாவட்டத்துல பழங்கள், காய்கறிகள் இந்த வட்டாரத்துலதான் அதிகம் விளையுது. நீண்டகாலமாக வலியுறுத்திக் கேட்டும் இங்கே குளிர்பதனக் கிடங்கு அமைக்கலை. இப்போ பெரும் நஷ்டத்துல இருக்குற விவசாயிகள் வாங்கின கடனை அடைக்க வழியில்லாமல் இருக்காங்க” என்றார்.

விவசாயி
விவசாயி

வாடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெகரட்சகன், “சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு பகுதி விவசாயிகளுக்கு ரொம்ப பாதிப்பு. விளைஞ்ச காய்கறிகளைச் சந்தைக்குக் கொண்டு போக முடியலை. அரசுத் தரப்புலயும் கொள்முதல் செய்யலை. மிகக் குறைஞ்ச விலைக்கு வியாபாரிகள் அள்ளிட்டுப் போய் நல்ல லாபம் பார்த்தாங்க. விவசாயிகள் அடுத்து பயிர் செய்ய வழி தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கோம். விவசாயத்துக்கு வாங்கின கடனை அரசு தள்ளுபடி செய்யணும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்யச் சொன்னாங்க; செஞ்சோம். இப்போ பெரிய நஷ்டமாகிடுச்சு. ஆனா, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுத் தரப்புல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. டாஸ்மாக்கைத் திறக்கக் காட்டின அக்கறையைக்கூட விவசாயிகள் விஷயத்துல காட்டலை. கொரோனா ஒருபக்கம் இருக்கட்டும்... மக்களுக்கு உணவு வேண்டாமா, ஒருவேளை இதையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் போறாங்களா?’’- இதுதான் பெரும்பாலான விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.

‘விளைச்சல் இருந்தும் விற்பனை செய்ய முடியலை!’ - உழவர்களுக்கு நஷ்டமேற்படுத்திய ஊரடங்கு!

இந்த நிலையில் விவசாயிகளின் பாதிப்பை ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்றார். ‘ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளின் விளைபொருள்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில், ‘ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் விவசாயிகளிடமிருந்து காய்கறிகள், பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதுமுள்ள 138 குளிர்சாதனக் கிடங்குகளில் விளைபொருள்களைக் கட்டணமில்லாமல் வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உழவன் செயலியை ஆறு லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் 37,635 விவசாயிகளிடம் 2.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.522 கோடி வழங்கப்பட்டுள்ளது. கால் சென்டர் மூலம் 11,550 அழைப்புகளுக்குத் தீர்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. வழக்கு மே 26-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

‘அரசு எந்த உதவியும் செய்யவில்லை. பெரு நஷ்டத்தில் இருக்கிறோம்’ என்று விவசாயிகள் கூறிவரும் நிலையில், விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது அரசு. அடுத்த விசாரணையில் எது உண்மை என்பது தெரியவரும்.

இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தனிடம் பேசினோம். “கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை மாவட்ட விவசாயிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம். அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்தோம். கரும்பு விவசாயிகளுக்குச் சில பிரச்னைகள் இருந்தது உண்மை. அவற்றையும் சரி செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். சில விவசாயிகள் இதில் பலனடையாமல் போயிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் உதவத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

காரணம் எதுவாக இருந்தாலும் சோறு போடுபவர்களை வாடவைப்பது அறம் அல்ல..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு