Published:Updated:

ஒரு நாளைக்கு 150 கி.மீ பயணம்... எட்டுக் கோடி மக்களின் உணவு கபளீகரம்...

Locust attack in agriculture land
பிரீமியம் ஸ்டோரி
News
Locust attack in agriculture land

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துமா இந்தியா?

மனிதனின் ஆணவத்தைத் தவிடுபொடியாக்கிவருகிறது இயற்கை. கண்ணுக்குத் தெரியாத கிருமி உலகையே உலுக்கிவரும் நிலையில், ஆப்பிரிக்கப் பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த தாக்குதலைத் தொடங்கிவிட்டன.

`பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கும், இயற்கைக்கும் என்ன தொடர்பு...’ என்று தோன்றலாம். `வெட்டுக்கிளிகள் கோடிக்கணக்கில் பெருக அடிப்படைக் காரணம் புவிவெப்பமாதல்’ என்கிறார்கள் சூழலியல் விஞ்ஞானிகள். அரேபிய மற்றும் ஆப்பிரிக்கப் பாலைவனப் பகுதியில், காலநிலை மாற்றத்தால் பெய்த அளவுக்கு அதிகமான மழைதான் இந்த வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கையைக் கோடிக்கணக்கில் உயர்த்தியிருக்கிறது. எண்ணிக்கை அதிகமானதால் உணவு தேடி தேசங்கள்தோறும் கூட்டம் கூட்டமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றன வெட்டுக்கிளிகள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த வெட்டுக்கிளிகள் கடல் அலைபோல வருகின்றன. ஓர் அலையில் ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி வெட்டுக்கிளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். காற்று வீசும் திசை, வேகத்தைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 150 கிலோமீட்டர் வரை பறக்கின்றன. தற்போது பாகிஸ்தான் வழியாக நுழைந்து இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் தங்கள் படையெடுப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன வெட்டுக்கிளிகள்.

ஒரு நாளைக்கு 150 கி.மீ பயணம்... எட்டுக் கோடி மக்களின் உணவு கபளீகரம்...

இது தொடர்பாக, தைவானிலுள்ள உலக காய்கறி மையத்தின் முதன்மை விஞ்ஞானியும், பாதுகாப்பான மற்றும் நிலையான காய்கறி மதிப்பு சங்கிலிகள் ஆய்வுத் திட்டத்தின் தலைவருமான முனைவர் சீனிவாசன் ராமசாமியிடம் பேசினோம்.

‘‘இந்த வெட்டுக்கிளிகள் அரேபிய மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கப் பாலைவனப் பகுதிகளில் தான் வழக்கமாக இருக்கும். அதனால்தான் இவற்றை, `பாலைவன வெட்டுக்கிளிகள்’ என்கிறார்கள். இவையும் நம் ஊரிலுள்ள வெட்டுக் கிளிகளைப் போன்றவைதான். வழக்கமாக, தனித் தனியாகத்தான் இருக்கும். ஆனால், சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்போது இனப்பெருக்கம் அதிகமாகிவிடும். எண்ணிக்கை அதிகமாகும்போது, உணவுக்காக கும்பல் கும்பலாகக் கிளம்பும். இது, தேவையின் அடிப்படையில் நிகழும் மாற்றம்.

கடந்த 2018-ம் ஆண்டு அரேபியப் பாலைவனப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு பெரிய புயல்கள்தான் இவை அதிக அளவில் இனவிருத்தி செய்யக் காரணங்களாகிவிட்டன. மே மற்றும் அக்டோபர் மாதங்களில் உருவான இந்தப் புயல்கள் காரணமாக அதிக மழை பெய்தது. பாலைவனப் பகுதிகளிலேயே தண்ணீர் தேங்கிநிற்கும் அளவுக்கு மழை. அப்போது நிலவிய காற்றின் ஈரப்பதம் காரணமாக, அதிக அளவில் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கமாகின. அப்போது உருவான வெட்டுக்கிளிகள்தான் 2019-ம் ஆண்டு பாகிஸ்தான் வரை வந்து பாதிப்பை ஏற்படுத்தின.

ஒரு நாளைக்கு 150 கி.மீ பயணம்... எட்டுக் கோடி மக்களின் உணவு கபளீகரம்...

அதேபோல 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி நிலவியது. அதே ஆண்டின் முடிவில் கடும் மழை பெய்தது. இந்தச் சூழலியல் மாற்றம் காரணமாகவும் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி விட்டது. இந்த இரண்டும்தான் தற்போதைய அதிக எண்ணிக்கையிலான வெட்டுக்கிளி படையெடுப்புக்கு முக்கியக் காரணம். சாதகமான சூழ்நிலை காரணமாக, வழக்கமாக உருவாகும் ஒரு தலைமுறைக்குப் பதிலாக பத்து தலைமுறைகள் வரை உருவாகிவிட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வெட்டுக்கிளிகள் மண்ணுக்கு அடியில் முட்டையிடுகின்றன. அவை தனித்தனி முட்டைகள் அல்ல. 80 முதல் 100 முட்டைகள் கொண்ட முட்டைக்கூடுகளை இடுகின்றன. ஒரு வெட்டுக்கிளியின் ஆயுள் காலம் இரண்டு முதல் மூன்று மாதங்கள். இந்தக் காலகட்டத்தில் மூன்று முறை முட்டைக்கூடுகளை வைக்கும். உயிர் வாழ்வதற்கான சூழலுக்கு ஏற்பவே முட்டைகள் பொரியும்.

ஒரு நாளைக்கு 150 கி.மீ பயணம்... எட்டுக் கோடி மக்களின் உணவு கபளீகரம்...

இவை அதிகமாக உள்ள பகுதிகளில், ஒரு சதுர கிலோமீட்டரில் ஆயிரம் முட்டைக் கூடுகள் வரையில் இருக்கும். ஒரு முட்டைக்கூட்டில் 80 முதல் 100 முட்டைகள் வரை இருக்கும். 80 என்று வைத்துக்கொண்டால், 80,000 முட்டைகள். அத்தனை முட்டைகளும் வெட்டுக்கிளியாக மாறுகின்றன என வைத்துக்கொள்வோம். அவை ஒவ்வொன்றும் வாழ்நாளில் மூன்று தடவை முட்டையிடும். ஒரு தடவைக்கு 80 முட்டைகள் வீதம் மூன்று தடவைக்கு 240 முட்டைகளை ஒவ்வொரு வெட்டுக்கிளியும் இடும். 80,000-ஐ 240-ஆல் பெருக்கினால் ஒரு கோடியே 92 லட்சம் வெட்டுக்கிளிகள்.. ஒரு சதுர கிலோமீட்டரில் இத்தனை உருவானால், இதன் பெருக்கத்தை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வெட்டுக்கிளியும் அதன் உடல் எடைக்குச் சமமான உணவை ஒரு நாளில் உண்ணும். ஒரு நாளைக்கு எட்டுக் கோடி மக்கள் சாப்பிடக்கூடிய உணவை உலகம் முழுக்க உள்ள இந்த வெட்டுக்கிளிகள் உண்டுவருகின்றன. சாகுபடி செய்யக்கூடிய பயிர்கள், இயற்கையாக உள்ள மரம், செடி, கொடிகள், பூக்கள் மற்றும் சிறிய காய்கள் எனப் பசுமையாகத் தெரியும் அனைத்தும் இவற்றுக்கு உணவாகும். எதுவுமே கிடைக்காதபட்சத்தில், மரப்பட்டையைக்கூட உண்ணும்.

இந்த வெட்டுக்கிளிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா. அங்கு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சோமாலியாதான் இதன் பாதிப்பை தேசியப் பேரிடராக முதன்முதலில் அறிவித்தது. கென்யாவில் 70 ஆண்டுகள் இல்லாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மேய்ச்சல் நிலங்களிலுள்ள புல், செடி, கொடிகள், மரங்கள் அனைத்தையும் வெட்டுக்கிளிகள் சேதப்படுத்துகின்றன. அதனால், கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்குத் தீவனமில்லாமல் தவிக்கிறார்கள். தற்போது கென்யாவில் 20,000 கோடி வெட்டுக் கிளிகள் இருப்பதாகச் சொல்கிறது ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம்.

இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாகிஸ்தானில் இதன் பாதிப்புகள் அதிகம். கடந்த ஆண்டும் பாகிஸ்தானில் இதன் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. அப்போதும் இந்தியாவில் இவை நுழைந்தன. ஆனால், இப்போதுபோல பெரும் தாக்குதல் இல்லை. இந்த முறை ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மையம்கொண்டிருக்கின்றன” என்றவர், இதற்கான தீர்வுகளையும் பகிர்ந்துகொண்டார்.

“நாம் வழக்கமான பூச்சிக் கட்டுப்பாடு முறை களைக் கையாண்டு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம். இன்றுவரை இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக வான்வழித் தெளிப்பு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவுக்குள் எவ்வளவு பூச்சிகள் வந்திருக்கின்றன, இன்னும் எவ்வளவு வரும் என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சிக்கல் எப்போது தீரும் என்பது தெரியும். தற்போதைய நிலவரப்படி தென்னிந்தியாவுக்கு இவை வருவதற்கான வாய்ப்பு குறைவு’’ என்றார்.

ஒரு நாளைக்கு 150 கி.மீ பயணம்... எட்டுக் கோடி மக்களின் உணவு கபளீகரம்...

இது தொடர்பாக, தமிழக வேளாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘வழக்கமாகப் பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் வரை மட்டுமே வரும். ஆனால், இந்த முறை அதன் எல்லை நீண்டிருக்கிறது. 2019, மே மாதம் ராஜஸ்தானில் நிகழ்ந்த வெட்டுக்கிளிப் படையெடுப்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி வரை நீடித்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய வெட்டுக்கிளிப் படையெடுப்பு, தக்காண பீடபூமியைத் தாண்டி தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு. எனினும், இதன் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். ஒருவேளை தமிழகத்தில் வெட்டுக்கிளித் தாக்குதல் ஏற்பட்டால், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். பரிந்துரைக்கப்பட்ட ரசாயன மருந்தைத் தீயணைக்கும் இயந்திரம், பெரிய டிராக்டர், தெளிப்பான்கள் மூலம் பரந்த அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியான `மெட்டாரைசியம் அனிசோபிலியே’ (Metarhizium Anisopliae) என்ற எதிர் உயிர்ப் பூஞ்சாணத்தைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். வெட்டுக்கிளிகளைச் சாப்பிடும் கோழி மற்றும் பறவைகள் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் என்னென்ன பிரச்னைகளை யெல்லாம் இந்த உலகம் சந்திக்க வேண்டியிருக்குமோ?