Published:Updated:

20 சென்ட், ரூ.60,000... கலக்கல் வருமானம் கொடுக்கும் ராஜஸ்தான் கம்பு!

கம்பு வயலில் தனீஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
கம்பு வயலில் தனீஸ்வரன்

விதை

20 சென்ட், ரூ.60,000... கலக்கல் வருமானம் கொடுக்கும் ராஜஸ்தான் கம்பு!

விதை

Published:Updated:
கம்பு வயலில் தனீஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
கம்பு வயலில் தனீஸ்வரன்

உடல் நலம் குறித்து வளர்ந்து வரும் விழிப்புணர்வால் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால், சிறுதானியச் சாகுபடியில் பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நீளக்கம்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தனீஸ்வரன். வழக்கமாக 1 அடி நீள கம்பு கதிரைத்தான் அதிகம் பார்த்திருப்போம். அதற்கு மாறாக 5 அடி நீளமான கம்பைச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்துள்ளார் தனீஸ்வரன். இவருடைய தோட்டம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள வாழையந்தோப்புப் பகுதியில் உள்ளது. ஒரு மாலை வேளையில் தனீஸ்வரன் தோட்டத்துக்குச் சென்றோம்.

ஆறடி உயரத்துக்கும் மேலாக கம்புப் பயிர்கள் நெடுநெடுவென வளர்ந்து நின்று நம்மை வரவேற்றன. கதிர்கள் ஒவ்வொன்றும் மூன்றடி முதல் ஐந்து அடி நீளம் கொண்டவையாக இருந்தது நம் ஆச்சர்யத்தைக் கூட்டியது. எப்படி இது சாத்தியமானது? என்று தனீஸ்வரனிடம் பேசினோம்.

“எங்க பகுதியில சாமந்திப் பூதான் அதிக அளவுல பயிர் செய்வாங்க. நானும் ஆரம்பத்துல மலர் சாகுபடிதான் செஞ்சிட்டு வந்தேன். ஆனா, பூவுக்குச் சில நேரங்கள்ல சரியான விலை இல்லாததாலும், ரசாயன பூச்சிக்கொல்லி தெளிக்கற செலவு அதிகமாக இருந்ததாலும் காய்கறிகளையும், எண்ணெய் வித்துகளையும், சிறுதானியங்களையும் பயிரிட முடிவு செஞ்சேன். அதற்குத் தகுந்தாற்போல் வயலைத் தயார் படுத்தினேன்.

நீளக்கம்புவுடன் தனீஸ்வரன்
நீளக்கம்புவுடன் தனீஸ்வரன்

ஒரு ஏக்கர் அளவுக்குக் கதிரி ரக நிலக் கடலையைப் பயிர் செய்தேன். நல்ல விளைச்சல். இதற்காக, சேலம் மாவட்ட அளவிலான உயர்விளைச்சல் போட்டியில் எனக்கு 10,000 ரூபாய் பரிசும் கிடைச்சது. கதிரி நிலக்கடலையை விதையாகவே தமிழ்நாடு முழுக்க விற்பனை செஞ்சேன். இதுபோலவே சிறுதானியத்திலும் தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத, அதேசமயம் மற்ற மாநிலங்கள்ல அதிகம் பயிரிடுகிற பயிர்களைச் சாகுபடி செய்ய லாம்னு தேடினேன். அந்த வகையில முகநூலிலும் யூடியூபிலும் தேடினேன். ராஜஸ்தான் மாநிலத்துல ‘துருக்கி’ என்ற கம்பு ரகம் குறித்த தகவல் கிடைச்சது. கம்பு பத்தி பல விவரங்களைத் தெரிஞ்சுகிட்டேன். இந்த ரகம் நாட்டு ரகம்தான். இது ராஜஸ் தான் மாநில எல்லையில சாகுபடி செய்றதா சொன்னாங்க. அப்புறம் சம்பந்தப்பட்ட வங்ககிட்ட இருந்து 1 கிலோ விதை 760 ரூபாய்னு 5 கிலோ விதையை வாங்கினேன்” என்றவர் அதைப் பயிரிட்ட முறையைப் பற்றியும் பேசினார்.

“வாங்கிய கம்பு விதைகள் நல்லா முளைச்சா விவசாயிகளுக்குக் கொடுப்போம். இல்லைன்னா நாமளே வச்சிப்போம்னுதான் விதைச்சேன். பிளாஸ்டிக்ன்டிரேயில் விதை களைப் போட்டு நாற்றுகளாக முளைக்க வெச்சோம். பதினைஞ்சு நாள்கள்ல முளைச்சு வந்துடுச்சு. ரெண்டு முறை உழவு ஓட்டி, சமப்படுத்திய வயலில் சொட்டு நீர்ப்பாசனம் அமைச்சு 20 சென்ட் வயலில் தை மாசத்துல நடவு செஞ்சோம்.

கம்பு வயல்
கம்பு வயல்

விதைக்குத்தான் என்கிறதால நெருக்கமாக நடவு செய்யாமல் ஒவ்வொரு நாத்துக்கும் இடையே 2 அடி இடைவெளி விட்டிருந்தேன். நடவு செய்றதுக்கு முன்னாடி கடலைப் புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு தலா 10 கிலோ எடுத்து ஒன்றாகக் கலந்து தூள் செய்து அடியுரமாகப் போட்டுவிட்டேன். கம்பு நடவு செஞ்சு 20-வது நாள்ல 400 ரூபாய் செலவு செஞ்சு முதல் களையெடுத்தோம். அதன் பிறகு கம்பு பயிரில் நல்ல தூர்கள் வந்துச்சு. வயலுக்குள்ளே நுழைஞ்சா இருட்டாகவே இருக்கும். அந்தளவுக்குத் தளதளனு வளர்ந்துச்சு. பயிர் நல்லா வளர்ந்ததால ரெண்டாவது களை தேவைப்படல. கம்பு வயலுக்கு எப்போதும் பறவைகள் அதிகம் வந்து சாப்பிடும். ஆனா, நான் சாகுபடி செஞ்சப்ப, அக்கம்பக்கத்துல சோளம் பயிர் செஞ்சிருந்ததால பறவைகள் பிரச்னை எதுவும் இல்லாமல் வளர்ந்துச்சு.

110 நாள்லயே அறுவடைக்குத் தயாரா யிடுச்சு. அக்கம் பக்கத்துல இருந்த நிறைய பேரு வந்து ஆச்சர்யமா பார்த்துட்டு போனாங்க. அரசு அதிகாரிகளும், விவசாய ஆர்வலர்களும்கூட வந்து பார்த்துட்டு போனாங்க. 20 சென்ட்ல இருந்து 300 கிலோ கம்பு கிடைச்சது. ஏக்கருக்குன்னு கணக்கு போட்டா 1,500 கிலோ. வழக்கமா கம்பு விதைச்சா 1,000 கிலோதான் கிடைக்கும். இதுல கூடுதலா 500 கிலோ கிடைக்கும். அறுவடை செய்த கம்பை விதைச் சான்றிதழ் துறையில முளைப்புத்திறன் குறித்து ஆய்வுக்குக் கொடுத்தேன். அவங்க ஆய்வு செஞ்சிட்டு ‘நல்ல முளைப்புத்திறன் இருக்கிறது’னு சொன்னாங்க. நான் 200 ரூபாய்க்கு விக்கலாம்னு இருக்கேன். இந்த விலைக்கு வித்தா 300 கிலோவுக்கு 60,000 ரூபாய் கிடைக்கும். விதை, உழவு, களை, அறுவடை என 12,000 ரூபாய் செலவாச்சு. அதுபோக 48,000 ரூபாய் லாபமா கிடைக்கும். இதுவரை 40 கிலோ வித்திருக்கேன். எங்கிட்ட விதை வாங்கிட்டு போன அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிக்கும் நல்லா முளைச்சிருக்கு.

கம்பு வயலில்
கம்பு வயலில்

இப்ப நெடுநெடுனு வளர்ந்து உங்க கண்ணுக்கு முன்னால நிக்கறது ரெண்டாவது முறையா நான் விதைச்சிருக்கிறது. இந்தத் தடவை தலா 20 சென்ட் அளவுள்ள ரெண்டு வயல்கள்ல விதைச்சிருக்கேன். இப்ப அறுவடைக்குத் தயாரா இருக்கு. தொடர் மழை இருக்கிறதால கம்பு பயிர வளர்ந்தவுடன் கட்டிவிடணும். நான் கட்டிவிடாம விட்டதால கம்பு தட்டுகள் சாய்ஞ்சு போச்சு. கம்பு நடவை மழைக் காலத்துல தவிர்க்கிறது நல்லது. அதே மாதிரி கம்பை நெருக்கமா நடவு செஞ்சா விளைச்சலை மட்டுமல்ல, சேதாரத்தையும் குறைக்க முடியும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

தனீஸ்வரன்,

செல்போன்: 78109 88162.

தமிழ்நாட்டில் கம்பு சாகுபடி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர் கி.ஐயனாரிடம், கம்பு சாகுபடி குறித்துப் பேசினோம்.

“தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கம்பு பயிர் குறித்துப் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தமிழ்நாட்டில் நான்கு பருவங்களிலும் கம்பு பயிர் சாகுபடி செய்யலாம். கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 67,400 ஹெக்டர் அளவுக்குக் கம்பு பயிரிட்டுள்ளனர். இதில் முதலிடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளது. வட மாவட்டங் களில் சித்திரைப் பட்டத்திலும் (ஏப்ரல், மே மாதங்களில்), தென் மாவட்டங்களில் புரட்டாசி பட்டத்திலும் (செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்) அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர் வசதி இருக்கும் விவசாயிகள் தைப் பட்டத்திலும் (ஜனவரி, பிப்ரவரி) பயிரிடலாம்.

கி.ஐயனார்
கி.ஐயனார்

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ஒரு ஹெக்டேரில் சராசரியாக 3,000 கிலோ (ஏக்கருக்கு 1,200 கிலோ) அளவுக்கு மகசூல் கிடைக்கிறது. கம்புக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும். மானாவாரியாக விதைப்பவர்கள் மழைக் காலத்திலும்கூட விதைக்கலாம்.

கம்பு பயிருக்கு நல்ல வெயிலும், நல்ல தண்ணீரும் இருந்தால் மகசூல் அதிகமாகக் கிடைக்கும். கம்பு விதையைப் பார் முறையிலோ, பாத்தி முறையிலோ பயிரிடலாம். ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் 15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு வரிசைக்கும் இன்னொரு வரிசைக்கும் 50 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பயிருக்கிடையேயான இடை வெளி அதிகரித்தால் ஒவ்வொரு கதிரிலும் அதிக விதை மணிகள் கிடைக்கும்.

இயற்கை முறையில் பயிரிடுவோர், விதைக்கும் போது மண்ணின் வளத்தைக் கூட்ட உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 2 கிலோவும், பாஸ்போ பாக்டீரியா 2 கிலோவும் மண்ணுக்குக் கொடுக்கலாம். இதனுடன் நுண்ணுட்டக்கலவை உரங்களையும் போடலாம்.

ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ அளவுக்கு விதையும், ஒரு ஹெக்டேருக்கு ஐந்து அளவு விதையும் போதுமானது. இதுவே, தனியார் நிறுவன விதையாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ அளவு இருந்தால் போதும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 10 ரகங்களையும், 9 கலப்பின ரகங் களையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். அண்மையில் கோ-9 வீரிய ஒட்டுரகமும், கோ-10 என்ற கலப்பில்லா ரகத்தையும் அறிமுகப்படுத்தி அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மற்ற சிறுதானிய பயிர்களை விடக் கம்பு பயிரில் இரும்புச் சத்தும், துத்தநாகச் சத்தும் அதிக அளவில் உள்ளது. ஒருவர், ஒரு நாளைக்கு 150 - 160 கிராம் கம்பை உட்கொண்டால் அந்த நாளுக்கான ஆற்றல் முழுமையாகக் கிடைக்கும்” என்றவர், விதையை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் சொன்னார்.

“விவசாயிகள் வெளிமாநில கம்பு விதையைத் தேர்வு செய்யும்போது, நேரிடையாக விவசாயியின் நிலத்துக்கே சென்று கதிரில் கம்பு விதை மணி நல்ல அடர்த்தியாக உள்ளதா, கம்பு பயிர்கள் அதிக அளவில் அடர்த்தியாக உள்ளதா, கலப் பின ரகமா அல்லது கலப்பினமில்லாத ரகமா என்பதையெல்லாம் பார்வையிட்டு, விசாரித்து வாங்குவது நல்லது. கலப்பின ரகமாக இருந்தால் அடுத்த முறை விதைக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கம்பு பயிரிடும்போது, பறவையினங்கள் அதிகம் கொத்தி தின்னும். இதைத் தடுக்க, ஒரு பகுதியில் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து அதிகப் பரப்பளவில் கம்பு பயிரிடும்போது பறவைகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.

தற்போது தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கம்பின் கலப்பின ரக விதையை விற்பனை செய்து வருகின்றன. 1 ஏக்கருக்கு ஒன்றரை கிலோ எடையுள்ள கம்பு விதை 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி விதை கிலோ 47 ரூபாய்க்கும், வீரிய ஒட்டு கலப்பின ரக விதை கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சிறுதானியத் துறையைத் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

தொடர்புக்கு,

முனைவர் கி.ஐயனார்,

செல்போன்: 98658 06909.

முனைவர் இளங்கோவன்
முனைவர் இளங்கோவன்

நாட்டு ரகத்திலும் உண்டு நீளக்கம்பு

இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழகத்தின் முதன்மை விஞ்ஞானி இளங்கோவனிடம் பேசியபோது, “கதிர்கள் நீளமாகக் கொண்ட கம்பு ரகங்கள் நாட்டு ரகத்திலேயும் உள்ளன. ஒரு கம்பு கதிரின் நீளம் 5 செ.மீ முதல் 134 செ.மீ வரை இருக்கின்றன. அதில் ஒரு ரகமாகவும் இது இருக்கலாம். அதேபோன்று ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளியிட்ட ரகமாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. எப்படிப் பார்த்தாலும், இது நல்ல ரகம்தான். இந்தியாவைப் பொறுத்தவரை 22 சதவிகிதம் விதைகள் விவசாயிகள் மூலமாக பரவுகின்றன. மீதி 78 சதவிகிதம் சான்றளிக்கப்பட்ட விதைகளாகப் பரவுகின்றன. கம்பு பயன்பாடு உணவை விடக் கோழித்தீவனத்துக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பீட்டளவில் தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில் கம்பின் பயன்பாடு அதிகம். குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் கம்புக்கான சந்தைகள் அமோகமாக இருக்கின்றன. சத்து மாவு, கோழித்தீவனம் உள்ளிட்ட பல விதங்களில் கம்பின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன. விவசாயிகளிடமிருந்து வாங்கினாலோ, தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கினாலோ சரி அதைப் பயன்படுத்தி அதிக உற்பத்தி செய்து நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்பதே அரசுகளின் விருப்பம். அந்த வகையில் இந்த விதைகளை வாங்கி உற்பத்தி செய்வதில் தவறில்லை. முளைப்புத்திறன் நன்றாக இருந்தால் தாராளமாக வாங்கிப் பயன்படுத்தலாம்” என்றார்.

சுசீலா
சுசீலா

வறட்சியைத் தாங்கி வளரும்!

தனீஸ்வரனின் அம்மா சுசீலா கம்பு சாகுபடி குறித்துப் பேசியபோது, “கம்பு பயிருக்குத் தண்ணி அதிகம் பாய்ச்ச வேண்டிய அவசியமில்ல. நாலு தண்ணி இருந்தா போதும் கிடுகிடுனு வளர்ந்துடும். சாதாரண நம் பாரம்பர்ய விவசாய முறையிலேயே எரு, வேப்பம் புண்ணாக்கு கொடுத்து, முறையா களை எடுத்துட்டு வந்தாலே நல்லா வளர்ந்துடும். நாங்க கம்பு வளரும்போது ரசாயன அடியுரம் மட்டும்தான் போட்டோம். ஆனா, அதுகூடத் தேவையில்லை. வறட்சியைத் தாங்கியும் கம்பு வளரும். சாதாரணக் கம்பைவிட ராஜஸ்தான் ரகக் கம்புல, கதிர் ரொம்பா நீளமாக இருக்குது. அதிக மணிகள் இருக்கு. இந்த ரகம் நல்லா வளரும். இதனால மாடுகளுக்கு தீவனமா தட்டைய பயன்படுத்தலாம். கதிர் வரும் காலத்தில மழை இல்லாம இருக்கணும். மழைக்காலத்தில பயிர் செய்தா கதிரில் தண்ணி பட்டு வளையவும், தட்டு சாயவும் வாய்ப்பு இருக்குது. விதைக்காக கம்பு உற்பத்தி செய்யும்போது, ஒரு கிலோமீட்டர் தொலைவுல மத்த ரகக் கம்பு பயிர் இல்லாம பார்த்துக்கணும். ஏன்னா, இது மத்த கம்பு ரகங்களோடு எளிதுல மகரந்தச் சேர்க்கை நடத்தும். அதனால தூய விதைக்கம்பு வேணும்னு நினைக்கிறவங்க மத்த கம்பு ரகங்கள் இல்லாமல் பார்த்துக்கணும்” என்றார்.