Published:Updated:

“நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாடித்தோட்டத்தில் மா.சுப்பிரமணியன்
மாடித்தோட்டத்தில் மா.சுப்பிரமணியன்

படங்கள்: ர.கண்ணன்

பிரீமியம் ஸ்டோரி

மாடித்தோட்டம்

“இந்த வீட்டுக்குக் குடிவந்து 25 வருஷங்களுக்கு மேல ஆகுது. இத்தனை வருஷத்துல நான் இந்த மொட்டை மாடி பக்கம் வந்ததே கிடையாது. எல்லாரையும் வீட்டுக்குள்ள முடக்கின கொரானோதான், நான் தினமும் மாடிக்கு வரக் காரணம். நடைப்பயிற்சிக்காகத்தான் இங்கே வந்தேன். வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள மரங்களைப் பார்த்துக்கிட்டே ஓடும்போது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கும். அந்தப் பசுமையை நம் அருகில் கொண்டு வந்தா என்னன்னு எனக்குள்ள எழுந்த கேள்விக்கான விடைதான் இந்தச் சின்னஞ் சிறிய மாடித் தோட்டம்.”

தன் அதிகாலை ஓட்டத்தை நிறைவு செய்துவிட்டு வந்து தன் மாடித் தோட்டம் பிறந்த கதையை உற்சாகத்துடன் விவரிக்க ஆரம்பித்தார் சென்னையின் முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிர மணியன்.

தி.மு.க-வின் பரபரப்பான அரசியல்வாதியாக அறியப்படும் மா.சுப்பிரமணியன் சென்னை யிலுள்ள கிண்டி லேபர் காலனியில், தன் வீட்டு மொட்டை மாடியில் சிறிய அளவில் மாடித் தோட்டம் அமைத்துத் தினமும் பராமரித்து வருகிறார். “நான் நிறைய மாரத்தான் போட்டிகளில் கலந்துகிறதால தினமும் அதிகாலை பத்து பதினைந்து கி.மீ ஓடுவது என் வழக்கம். எந்த ஊராக இருந்தாலும் என்ன சூழலாக இருந்தாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து ஓட ஆரம் பிச்சுடுவேன். கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, என்னால் வெளியில் ஓட முடியலை. வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய சூழல். அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. புத்தகம் படிக்கிறதுல அதிக நேரம் செலவிட்டாலும் ஓடுறது பத்தின சிந்தனை, என் மனசுக்குள்ள ஒருபக்கம் ஓடிக்கிட்டே இருந்துச்சு. அப்போதான், ‘நம்ம வீட்டு மொட்டை மாடியிலேயே ஓடலாமே’ன்னு முடிவெடுத்தேன்.

8 வடிவத்தில் ஓடினால் இடுப்பு எலும்பு வலுவடைவதுடன் கவன சக்தி அதிகரிப்பது உள்ளிட்ட பல பலன்கள் கிடைக்கும்னு முன்பு படிச்சது ஞாபகத்துக்கு வர, மாடியில 8 போன்ற வடிவத்தை ஏற்படுத்தி அதுல ஓட ஆரம்பிச்சேன். அந்த 8 வடிவ ஓடுதளத்தில் கடந்த ஜூன் மாதம் 4 மணி நேரம் ஓடி, ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடிச்சேன். அந்த நேரத்துலதான் இந்த மாடித்தோட்டம் ஐடியா உதிச்சது” என்று சொல்லும் மா.சுப்பிரமணியத்துக்கு, தன் தொகுதியான சைதாப்பேட்டையில் செயல்படுத்திவரும் ‘பசுமை சைதை’ திட்டம் மூலம் இயற்கை விவசாயிகளுடன் தொடர்பு இருந்ததால் மாடித்தோட்டம் அமைப்பது அவருக்கு மிகவும் எளிதாக இருந்திருக்கிறது. அதுபற்றிப் பேசியவர்,

மாடித்தோட்டத்தில் மா.சுப்பிரமணியன்
மாடித்தோட்டத்தில் மா.சுப்பிரமணியன்

“ரெண்டு டோல் ஃப்ரீ நம்பர் கொடுத் திருக்கோம். தொகுதிக்குள் வசிக்கும் மக்கள் தங்களோட பிறந்த நாள் அன்னைக்கு அந்த நம்பருக்கு போன் பண்ணிச் சொன்னா போதும். அவங்க வீட்டுக்கு நேர்ல போய் ஒரு மரக்கன்றைக் கொடுத்து, அவங்க கையால நடச் சொல்லி, ‘இது இவர் பிறந்த நாளுக்காக நடப்பட்ட மரம்’னு அவர் பெயர்ல போர்டு வெச்சுடுவோம். அதுதான் ‘பசுமை சைதை’ திட்டம். இதுவரைக்கும் இந்தத் தொகுதியில் மட்டும் 36,000 மரங்களை நட்டிருக்கிறோம். இப்படியான இயற்கை சார்ந்த விஷயங்களைப் பல வருஷமா செஞ்சுகிட்டிருந்தாலும் இந்த மாடித்தோட்டம் செய்யுறதுக்கெல்லாம் எனக்குத் தோணினதே கிடையாது. இது திடீர்னு தோணின ஐடியாதான். தோட்டம் அமைக்கணும்னதும் பயனுள்ள காய்கறி விதைகளை விதைக்கணும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன்.

‘பசுமை சைதை’ திட்டத்துக்கு மரக் கன்றுகள் வாங்க ஆலோசனை தரும் நண்பர்கள், இயற்கை உரம் கலந்த மண்ணைக் கொண்டு தோட்டம் அமைச்சுக் கொடுத் தார்கள். விதைகளை விதைச்சு காலையிலும் மாலையிலும் நான்தான் தண்ணீர் ஊற்றினேன். மூணு மாசத்துக்குள்ள வெண்டை, கத்திரி, தக்காளி, பச்சை மிளகாய்னு ஒவ்வொரு காய்கறிச் செடியும் 10 கிலோவுக்கு மேல காய்ச்சிருச்சு. கீரையை அறுவடை பண்ணிட்டு அந்த இடத்துல வேற செடி நடப் போறோம். அதுமட்டுமல்லாம பூச்செடிகளும் கொஞ்சம் வெச்சிருக்கேன்” என்றவர் சிறிதளவு காய்கறிகளைப் பறித்துக் காட்டி,

“இந்தக் காய்கறிகளெல்லாம் எவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்குன்னு பாருங்க. நமக்குத் தேவையான காய்கறிகளை நாமளே விளைவிச்சு சாப்பிடுறதுல ஒரு அலாதி சுகம் இருக்கத்தான் செய்யுது. அதுவும் எந்த விதமான ரசாயனங்களும் கலக்காம விளையுற காய்கறிகளோட ருசியே தனி. நான் ஆரம்பத்தி லிருந்தே தீவிர அசைவப் பிரியன். இயற்கையா விளைஞ்ச இந்தக் காய்கறிகளோட ருசி என்னைச் சைவப் பிரியனா மாத்திடும்போல இருக்கு. இது சின்ன இடம்தான். குறைவான செடிகள்தான் ஆனா, வீட்டுக்குப் போதுமான காய்கறிகள் கிடைக்குது. நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க” என்று விடைகொடுத்தார் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு