Published:Updated:

வற்றிய நீர்; கரை ஒதுங்கிய மீன்கள்... வெறும் மணல் மேடாகிய வைகை அணை!

வைகை அணை
வைகை அணை ( வீ.சக்தி அருணகிரி )

வைகை அணையின் தற்போதைய நீர் மட்டம் 27.99 அடி. இதில் கசப்பான உண்மை என்னெவென்றால், சுமார் 20 முதல் 22 அடிவரை மணலும் சேறும்தான் அணையை ஆக்கிரமித்துள்ளன.

மேகமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வைகை ஆறு, தமிழகத்தில் பாயும் ஆறுகளில் நான்காவது பெரிய ஆறு என்ற பெயர் பெற்றது. தேனி முதல் ராமநாதபுரம் வரை ஐந்து மாவட்ட மக்களின் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு, தென் தமிழக மக்களின் உயிர் நாடி என்று கூட சொல்லலாம். அத்தகைய வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 27.99 அடி. இதில் கசப்பான உண்மை என்னெவென்றால், சுமார் 20 முதல் 22 அடிவரை மணலும் சேறும்தான் அணையை ஆக்கிரமித்துள்ளன. ஆக, தற்போது வைகை அணையின் உண்மையான நீர்மட்டம் 7 அடியும், அதற்குக் குறைவான அளவும்தான்.

அரசு அக்கறை கொள்ள வேண்டும்.!

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது வைகை அணைதான். தென் தமிழகத்தில் மெட்ரோ சிட்டியாக வளர்ந்துகொண்டிருக்கும் மதுரையின் குடிநீர்த் தேவையை வைகை அணைதான் இப்போதுவரை தீர்த்துக்கொண்டிருக்கிறது. வருடத்துக்கு இரண்டு முறை மூலவைகையில் தண்ணீர் வந்தாலே அதிசயம்தான். அப்படிப்பட்ட வைகை ஆற்றை நம்பி கட்டப்பட்ட வைகை அணையை முறையாக பராமரிப்பது அரசின் கடமை. தற்போது வைகை அணையில் சுமார் 21 அடிக்கு மணல் நிரம்பியிருக்கிறது.

வைகை அணை
வைகை அணை
வீ.சக்தி அருணகிரி

அதைத் தூர்வார வேண்டும் எனப் பலமுறை விவசாயிகள் போராடியிருக்கிறார்கள். போராட்டத்தின்போது கமிட்டி ஒன்றை நியமித்து வைகை அணையை தூர்வாருவது குறித்து பொதுப்பணித்துறையிடம் ஆலோசனை செய்வார்கள். அதோடு சரி. அதை மறந்துவிடுவார்கள். தற்போது குடிமராமத்துப்பணிக்காக தேனி மாவட்டத்துக்கு மட்டும் 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். குடிமராமத்துப் பணியைவிட மிக முக்கியமானது வைகை அணையை தூர்வாரும் பணிதான். இதற்கு முறையாக நிதி ஒதுக்கி அணையைத் தூர்வார வேண்டும்.

அணையில் நீர் மட்டம் வேகமாக சரியத்துவங்கி தற்போது 27 அடி மட்டுமே உள்ளது. இதில், 21 அடிக்கு மணல் நிரம்பி இருப்பதால், ஆறு அடி, ஏழு அடியில் மீன்கள் வாழ வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதிலும், கடும் வெயிலால், நீர் வெப்பமாகி மீன்கள் கொத்துக் கொத்தாக இறந்து கரை ஒதுங்குகின்றன. தண்ணீர் இல்லாத இந்தச் சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, வைகை அணையை உடனே தூர்வாரினால், வரும் மழைக்காலத்தில், 20 அடிக்கு மேல் அதிகமாக நம்மால் அணையில் தண்ணீர் தேக்க முடியும்” என்றார் பள்ளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சீனிராஜ்.

சீனிராஜ்
சீனிராஜ்
வீ.சக்தி அருணகிரி

மீட்கப்பட வேண்டிய நிலையில் வைகை அணை

வைகை அணையை தூர்வார வேண்டும், அதை நடக்கும் சட்டசபைக் கூட்டத்தொடரிலேயே அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று (15.7.2019) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நம்மிடம் பேசிய, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கண்ணன், ``மிகவும் பரிதாபத்துக்கு உரிய நிலைக்கு வைகை அணை சென்றுவிட்டது. ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்மட்டம் திட்டமிட்டு 20 அடி குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று முறை வைகை அணையை தூர்வார ஆய்வு செய்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், இப்போது வரை அணை தூர்வாரப்படவில்லை.

அணையைத் தூர்வாரினால், அதிலிருந்து கிடைக்கும் வளமான வண்டல் மண், விவசாயிகளுக்கும், கட்டுமான பயன்பாட்டுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் அரசுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படி இருந்தும், வைகை அணையை தூர்வாருவது குறித்து இம்மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதல்வராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் கூட பேச மறுக்கிறார். நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், வைகை அணை தூர்வார, நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து பணிகளை முடித்து, வடகிழக்குப் பருவமழைக்கு அணையை தயார் செய்ய வேண்டும்” என்றார்.

கண்ணன்
கண்ணன்
வீ.சக்தி அருணகிரி

தென் தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வைகை அணையை தூர்வாருவது பற்றிய எந்த ஒரு முடிவையும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதுவரை எடுத்தாகத் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், வைகை அணையில் மேலும் மணல் சேர்வது மட்டுமல்லாமல், குடிநீர் பற்றாக்குறைக்கும் வித்திடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அடுத்த கட்டுரைக்கு