ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

காய்களைப் பிரிக்கும் சென்சார், ஏலக்காய் ஐஸ்க்ரீம், ஈரம் காட்டும் கருவி! களைகட்டிய உழவர் தினவிழா!

விழாவில் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
விழாவில் மக்கள்

நாட்டு நடப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாநில அளவிலான உழவர் தின விழா, கடந்த அக்டோபர் 14, 15, 16 ஆகிய மூன்று நாள்கள், மதுரை வேளாண் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். உள்ளூர் மக்களும் அதிக எண்ணிக்கையில் வருகை புரிந்ததால், கல்லூரி வளாகம் அந்த மூன்று நாள்களும் களைகட்டியது. இவ்விழாவில் கண்காட்சி, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வு களும் இடம்பெற்றன.

கண்காட்சியில் ‘டிராக்டர் மவுண்ட் ஸ்பிரேயர்’
கண்காட்சியில் ‘டிராக்டர் மவுண்ட் ஸ்பிரேயர்’

நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த நெற்கதிர்களாலான தோரணங்கள் கவனம் ஈர்த்தன. இக்கல்லூரியின் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில்... நாட்டுக் காய்கறிகள், அழகிய மலர்கள், விதவிதமான வாழை ரகங்கள், சிறுதானிய வகைகள்... அவற்றில் தயார் செய்யப்பட்ட தின்பண்டங்கள், பீட்ரூட், ஐஸ்க்ரீம், ஏலக்காய் ஐஸ்க்ரீம், பனை ஓலையில் செய்யப்பட்ட பலவிதமான கைவினைப் பொருள்கள், இயற்கை உரங்கள், வேளாண் கருவிகள், எளிதாக நீர்ப்பாசனம் செய்வதற்கு ஏற்ற உபகரணங்கள் உட்பட இன்னும் பல அம்சங்கள் இடம்பெற்றன.

விழாவில் மக்கள்
விழாவில் மக்கள்

நிறத்துக்கு ஏற்ப காய்கள் பிரிக்கும் கருவி

திருச்சி வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இங்கு காட்சிப்படுத்திய வேளாண் கருவிகள் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. “நாங்க புதுசா கண்டுபிடிச்ச சில கருவிகளை இங்க வச்சிருக்கோம். இது நிறத்தை வைத்துக் காய்களைப் பிரித்துக் கொடுக்கும்... இதில் உள்ள சென்சார் மூலம், காய், செங்காய், பழம் என நிறத்துக்கு ஏற்றாற்போல் தனித் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடும். ஒரு மணி நேரத்தில் 50 கிலோ வரை பிரித் தெடுக்கும்’’ எனத் தெரிவித்த மாணவர்கள், இன்னொரு கருவியைச் சுட்டிக் காட்டி “இந்தக் கருவி முருங்கைக் காய்களிலிருந்து விதைகளை மிக விரைவாகப் பிரித்துக் கொடுக்கும். உலர் முருங்கையை இந்தக் கருவிக்குள் செலுத்தினால் விதைகள் தனியாக வந்து விழுந்து விடும்’’ எனத் தெரிவித்தனர்.

மண்ணின் ஈரப்பதத்தை அறிந்து கொள்வதற்கான ஒரு கருவியும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இக்கருவி குறித்து விவரித்த மாணவர் கள் விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் ஈரப்பதத்தை அவ்வப்போது துல்லியமாக அறிந்துகொண்டால், அதற்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வசதியாக இருக்கும்.

கண்காட்சியில் வாழை ரகங்கள்
கண்காட்சியில் வாழை ரகங்கள்

இந்தக் கருவி மூலம் விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் ஈரப்பதத்தை எளிதாக அறிந்துகொள்ளலாம். இதன் விலை 600 ரூபாய்தான்” எனத் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனம் ஒன்று காட்சிப்படுத்தியிருந்த ‘டிராக்டர் மவுண்ட் ஸ்பிரேயர்’ விவசாயிகள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்தது. அந்த அரங்கில் இருந்த பணியாளர் சரவணன், “இந்த ஸ்பிரேயர் மூலம் ஒரே சயமத்துல, 25 அடி தூரம் வரைக்கும் பயிர்களுக்குக் கரைசல் தெளிக்க முடியும். குறிப்பாக, பருத்தி, உளுந்து, சோளம், போன்ற பயிர்களுக்குக் கரைசல் தெளிக்கப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 10 நிமிடங்களில் தெளிப்புச் செய்ய முடியும். 40 அடி நீளம் எட்டடி உயரத்துக்குக் கரைசல் தெளிப்பதற்கான மவுண்ட் ஸ்பிரேயரும் இருக்கு’’ எனத் தெரிவித்தார்.

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் வாழைத்தார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. “விவசாயிகளுக்குப் புதிய ரக வாழை ரகங்களை அறிமுகப்படுத்துவதே எங்கள் இலக்கு. வாழையில் PO 3-என்ற பெயரில் புதிய ரகம் ஒன்றை வெளியிட்டுள்ளோம். இது கற்பூரவள்ளி H 201-யின் கலப்பின வீரிய ஒட்டு ரகம். இது வாடல் மற்றும் நூற்புழு நோயை எதிர்கொண்டு வளரக்கூடியது” என இந்த அரங்கில் இருந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.

வெல்லத்தேருடன் சரவணன்
வெல்லத்தேருடன் சரவணன்

கண்காட்சியில் வெல்லத்தால் செய்யப்பட்ட தேர் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. “வெல்லத்தைக் குறிப்பிட்ட வடிவத்தில் மட்டும்தான் பண்ண முடியும்னு நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க. எல்லா வடிவத்திலும் பண்ண முடியும்னு காட்டதான் ரசாயன பொருள்கள் கலக்காமல் இந்தத் தேரை செஞ்சோம்’’ எனத் தெரிவித்தார், கரும்பில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்யும் கடலூரைச் சேர்ந்த சரவணன்.

இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உட்பட இன்னும் பலர் உரையாற்றினார்கள்.