Published:Updated:

`விதை நெல்லிலும் கலப்படமா?' - வேளாண்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

நெல் கலப்படம் குறித்து நீதிமன்றம் உத்தரவு
நெல் கலப்படம் குறித்து நீதிமன்றம் உத்தரவு ( (கோப்பு படம்) )

பல தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றே கலப்படம் செய்த நெல்களை அதிகளவு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விதை நெல்லில் கலப்படம் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் வேளாண்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

நெல்லில் கலப்படம் ஏற்பட்டுவிடக் கூடாதென்று இயற்கை விவசாயிகள் சிலர் பாரம்பர்ய நெல்களில் கலப்பு ஏற்படும் நெல்களைக்கூட தனித்தனியாகப் பிரித்து பயிர் செய்கின்றனர். காற்றில் மகரந்தச் சேர்க்கை மூலம்கூட கலப்படம் ஏற்படலாம் என ஒத்த வயது பயிர்களைக்கூட பயிர் செய்யத் தயங்குகின்றனர். ஆனால், பல தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றே கலப்பு நெல்களை அதிகளவு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

Madurai High Court
Madurai High Court

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் அதில், "மதுரை மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் இருக்கும் கடை ஒன்றில் 25.09.2020 அன்று அக்சயா விதை நெல் ஐந்து கிலோ பைகளை சுமார் 12 வாங்கினேன். அதைப் பரிசோதித்தபோது கலப்படம் இருப்பது தெரியவந்தது. அதேபோல் வேறு சில கடையிலும் அக்சயா நெல் வாங்கினேன் அதிலும் கலப்படம் இருந்தது.

இது தொடர்பாக கடையில் கேட்டபோது சரியான பதில் இல்லை. தொடர்ந்து விதை நெல் தயாரித்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அதில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அக்சயா விதை நெல்லை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து, நெல் விற்பனை வளாகத்தில் இருந்து பெற்ற அக்சயா விதை நெல்லைப் பரிசோதனை செய்யவும் மேலும் அக்சயா விதை நெல்லைத் தயாரித்து, விற்பனை செய்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தது.

நெல்
நெல்

இந்த மனு குறித்து நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேளாண்துறை இயக்குநர் காணொலிக்காட்சி மூலம் ஆஜராகி, 3 தேதிகளில் கிடைக்கப்பெற்ற நெல் விதை மாதிரிகள் மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் முடிவுகள் வருவதற்கு 3 மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு குறித்து வேளாண்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு