Election bannerElection banner
Published:Updated:

30 கோடியில் ஹெலிகாப்டர் வாங்கிய மகாராஷ்டிரா விவசாயி... எதற்குத் தெரியுமா?

ஹெலிகாப்டருடன் ஜனார்தன்
ஹெலிகாப்டருடன் ஜனார்தன்

மகாராஷ்டிராவில் பால் விற்பனை செய்வதற்காக ஒருவர் 30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கி இருக்கிறார். ஹெலிகாப்டர் தரையிறங்க 2.5 ஏக்கரில் ஹெலிகாப்டர் தளம் ஒன்றை அமைக்கவும் ஹெலிகாப்டரை நிறுத்த தனி அறை கட்டவும் திட்டமிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள தானே மாவட்டம் பீவண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜனார்தன் போயர். இவர் சமீபத்தில் பால் வியாபாரத்தைத் தொடங்கினார். அதோடு விவசாயம், கட்டுமான தொழில் எனப் பல தொழில்களைச் செய்து வருகிறார். அடிக்கடி பால் விற்பனை தொடர்பாக வெளிமாநிலங்களுக்குச் சென்று வரக்கூடியவர். எல்லா ஊர்களுக்கும் விமான போக்குவரத்து வசதி இல்லை. இதையடுத்து ஜனார்த்தன் ரூ.30 கோடி கொடுத்து சொந்தமாக ஒரு ஹெலிகாப்டரை வாங்கியிருக்கிறார். ஹெலிகாப்டர் அடுத்த மாதம் அவரது கைக்குக் கிடைக்க இருக்கிறது.

Milk
Milk

அதற்கு முன்பு அவரது ஊரில் ஹெலிகாப்டரை தரை இறக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அவரது கிராமத்துக்கு ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இது குறித்து ஜனார்த்தன் கூறுகையில், ''பால் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதிகமான இடங்களில் ஹெலிகாப்டர் வசதி இல்லாமல் இருக்கிறது. நானோ அதிக நேரம் பயணம் செய்யக்கூடியவன். எனவே, என் நண்பரின் ஆலோசனையின் பேரில் இந்த ஹெலிகாப்டரை வாங்கி இருக்கிறேன். விவசாயம் மற்றும் பால் வியாபாரத்துக்கு இந்த ஹெலிகாப்டர் தேவையாக இருக்கிறது. ஹெலிகாப்டர் தரையிறங்க 2.5 ஏக்கரில் ஹெலிகாப்டர் தளம் ஒன்றை அமைக்கவும் ஹெலிகாப்டரை நிறுத்த தனி அறை கட்டவும் திட்டமிட்டு இருக்கிறேன்.

Helicopter- Representative image
Helicopter- Representative image

அதோடு பைலட்டுக்குத் தனி அறையும் டெக்னீசியனுக்கு தனி அறையும் கட்ட இருக்கிறேன். மார்ச் 15-ம் தேதி ஹெலிகாப்டர் டெலிவரியாக இருக்கிறது. அதற்குள் இப்பணிகள் முடிக்கப்படும்'' என்று தெரிவித்தார். ஜனார்த்தனுக்கு ரூ.100 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. அவரது ஊரான பிவண்டியில் அமேசான், பிளிப்கார்ட், பி.எம்.டபிள்யூ போன்ற பெரிய நிறுவனங்கள் குடோன்களை வைத்திருக்கின்றன. இதனால் ஜனார்த்தனின் ஊரில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு