Published:Updated:

மாடித்தோட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்த 3G மந்திரம்... தெரிஞ்சுக்கலாமா? - வீட்டுக்குள் விவசாயம் -10

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 10

வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான உரம் தயாரிப்பதைப் பற்றிப் போன பகுதியில் பார்த்தோம். இந்த முறை ஒரு வீட்டுத் தோட்ட விவசாயி அவங்க அனுபவத்தைச் சொல்லப்போறாங்க. அனுபவம்தான் சிறந்த ஆசான். பல பேர்கிட்ட ஆலோசனை கேட்டாலும், புத்தகங்களைப் படிச்சாலும், யூ டியூப்ல வீடியோ பார்த்தாலும் நேரடியா செயல்ல இறங்கும்போதுதான் பல சந்தேகங்கள் வரும்.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்

உதாரணமா, `தொட்டியில விதையை நடவு செய்யச் சொன்னாங்க. சின்ன தொட்டியா, பெரிய தொட்டியா? பக்கவாட்டுல விதையை நடவு செய்யணுமா, மையத்துல நடவு செய்யணுமா?'னு பல சந்தேகங்கள் உருவாகும். சரி, `மையத்திலயே விதையை நடவு செய்யலாம்'னு நமக்கே தோணும். அதன்படி செயல்படுவோம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலயும் நாம கத்துகிட்ட விஷயத்தோட நம்ம சொந்த முயற்சியும் சேரும்போது, அது நல்ல ரிசல்ட் கொடுக்கும். பிறகு அதையே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடுவோம். அதுனாலதான் `அனுபவமே சிறந்த ஆசான்'னு நம்ம முன்னோர்கள் சொல்லியிருக்காங்க.

நம்ம அனுபவம் தினமும் புதுப்புது விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்துகிட்டே இருக்கும். வீட்டுத்தோட்டத்தைப் பொறுத்தவரைக்கும் நாம நேரடியா களத்துல இறங்குற வரைக்கும் அது பெரிய விஷயம்னு தோணும். ஆனா, செயல்ல இறங்கிட்டா, இவ்வளவுதானா வீட்டுத்தோட்டம்னு நமக்கே ஆர்வம் வந்திடும். அடுத்த கொஞ்ச நாள்ல நீங்களே மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்குற அளவுக்கு அனுபவசாலி ஆகிடுவீங்க. சரி, விஷயத்துக்குப் போகலாம் ப்ரோ.

மலர்விழி
மலர்விழி

மூணு வருஷத்துக்கு முன்னாடி வீட்டுத்தோட்டத்தை ஆரம்பிச்ச சேலத்தைச் சேர்ந்த மலர்விழி, இன்னிக்கி வெற்றிகரமான வீட்டுத்தோட்ட விவசாயி. அதோட மாடியிலயே சில மூலிகைகளை வளர்த்து அது மூலமா சோப்பு, ஜெல் மாதிரியான பொருள்களைத் தயார் பண்ணி ஆன்லைன் மூலமா விற்பனை பண்ணிட்டு இருக்காங்க. மாடித் தோட்டத்தைப் பொறுத்தவரைக்கும் அவங்களுக்கு வீட்டுக்குத் தேவையான காய்கறியும் கிடைச்சிடுது. கூடுதலா ஒரு தொழில் வாய்ப்பையும் கொடுத்திருக்கு. `மாடித்தோட்ட விவசாயத்துல உங்க அனுபவம் பற்றிச் சொல்லுங்க'னு அவங்ககிட்ட கேட்டேன். படபடன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நான் வீட்டுத்தோட்டம் அமைச்சு 3 வருஷம் ஆகிடுச்சு. இந்த மூணு வருஷத்துல தோட்டத்துல கிடைச்ச அனுபவம், என்னை ஒரு விவசாயியாகவே மாத்திடுச்சு. எங்க வீட்டு மாடியில தோட்டம் போட்டிருக்கோம். 1,200 சதுர அடியில மாடி முழுக்க செடிகளை வளர்க்குறோம். கத்திரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள், பொன்னாங்கன்னி, அரைகீரை, சிறுகீரை, புளிச்சக்கீரை மாதிரியான கீரைகள், மாதுளை, சப்போட்டா, வாழை மாதிரியான பழ மரங்கள் எங்க வீட்டு மாடியில இருக்குது. சப்போட்டா, மாதுளை மரங்கள் நல்லா காய்க்குது. இதோட மிச்ச இடங்கள்ல பூச்செடிகள் வளர்க்கிறேன். ரோஜா, அரளி, செம்பருத்தி, செவ்வந்தின்னு பல்வேறு விதமான பூக்கள் எங்க தோட்டத்துல இருக்குது. இது எல்லாம் எங்க எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்குது. மாடிக்கு வந்தாலே மனசு லேசாகிடும். அதோட சோற்றுக்கற்றாழை, பிரண்டை, துளசி, பொடுதலை, திருநீற்றுப்பச்சிலை, குப்பைமேனி மாதிரியான மூலிகைகளையும் வளர்க்குறேன். அது மூலமா ஆர்கானிக் சோப், ஜெல் தயார் செய்றேன். ஆன்லைன் மூலமா அதையும் விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். இப்ப வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் எங்க தோட்டத்துல இருந்தே கிடைச்சிடுது. அதிகமா கிடைக்கிறதை நண்பர்களுக்குக் கொடுத்திடுவேன்.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்
மாடித்தோட்ட சாகுபடியில ரொம்ப சுலபமான பயிர் கீரைதான்... ஏன் தெரியுமா? - வீட்டுக்குள் விவசாயம் - 8

மாடித்தோட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ஆர்வம்தாங்க அடிப்படை. அது இருந்தாப் போதும். தோட்டம் தன்னால உருவாகிடும். மாடித்தோட்டம் அமைக்க ஆர்வம் இருந்தாலும் பலபேர் பூச்சி, நோய்த் தாக்குதல், பராமரிப்பு சிரமம்னு அந்தப் பக்கமே திரும்பறதில்லை. சிலர் ஆர்வமா அமைச்சாலும், ஒரு மாசத்துலயே பூச்சித் தாக்குதலைப் பார்த்துத் தோட்டம் போடுற எண்ணத்தையே தூக்கிப் போட்டுட்டு போயிடுறாங்க.

ரொம்ப பேர் பயந்து போற விஷயம் பூச்சிகள்தான். பொதுவா பயிர்கள்ல பூச்சியைப் பார்த்தாலே பயந்து மாடித்தோட்டம் வேணான்னு போயிடுறாங்க. அப்படிப் பயப்படத் தேவையில்லை. சின்னச் சின்ன முயற்சிகளை மேற்கொண்டால் பூச்சி ஒரு பிரச்னையாகவே இருக்காது. குறிப்பா, அசுவினி தாக்குதல்தான் அதிகமாய் இருக்கும். அசுவினியும் வெயில் காலத்துல ஒரு மாதிரி தாக்கும். மழை, பனிக்காலத்துல ஒரு மாறித் தாக்கும். இதுக்கு நான் ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். பிறகு, சிலபேர்கிட்ட ஆலோசனைக் கேட்டேன். இப்ப, அசுவினிதான் என்னைப் பார்த்துப் பயப்படுது.

முள்ளங்கி
முள்ளங்கி

புங்கன் எண்ணெய், வேப்ப எண்ணெய் ரெண்டையும் 5 மில்லி எடுத்துக்குங்க. அதுல கொஞ்சம் காதி சோப்பையும் கலந்துக்கணும். அதை ஒரு லிட்டர் தண்ணியில மிக்ஸ் பண்ணி, செடிகளுக்குத் தெளிச்சாப் போதும். அசுவினி மட்டுமில்ல... பூச்சி தொல்லையே இருக்காது. ஆனா, இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, அசுவினியோ மத்த பூச்சிகளோ செடிகள்ல வந்தபிறகுதான் இதைத் தெளிக்கலாம்னு அஜாக்கிரதையா இருக்கக் கூடாது. பூச்சிக வருதோ இல்லையோ வாரம் ஒரு தடவை இதைத் தெளிச்சுகிட்டே இருக்கணும். அதைச் செஞ்சிட்டாப் போதும். நம்ம தோட்டத்துப் பக்கம் பூச்சிக எட்டிக்கூட பார்க்காது.

அதையும் மீறிப் பூச்சி தாக்குதல் இருந்தா 3ஜி கரைசல்னு (Garlic + Ginger + Green Chilli) சொல்ற பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு கரைசல் தெளிச்சாப் போதும். பூச்சிப் பிரச்னையே இருக்காது. பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இது மூணையும் சம அளவு எடுத்துக்கணும். உதாரணமா தலா 50 கிராம் எடுத்துக்கணும். மூணையும் அரைச்சு, 5 லிட்டர் தண்ணியில கலந்துக்கணும். அதைச் செடிகளுக்குத் தெளிச்சாப் போதும்.

சப்போட்டா
சப்போட்டா

கத்திரிக்காய்லதான் பூச்சி தாக்குதல் அதிகமா இருக்கும்னு ரொம்ப பேர் பயப்படுறாங்க. அந்த பயமே தேவையில்லைங்க. நான் மேலே சொன்ன புங்கன் எண்ணெய், வேப்ப எண்ணெய் கரைசலை அடிச்சாப் போதும். ஆனா, செடி மேல அடிக்காம, இலைகளோட பின்பிக்கம் அடிக்கணும். அசுவினிப் பூச்சிகளுக்கும் அதே மாதிரிதான் அடிக்கணும். அதைச் சரியாச் செஞ்சாப் போதும். கத்திரிக்காய் சாகுபடியில பிரச்னை இருக்காது.

ரொம்ப பேர் ஷேட்நெட் போடுறாங்க. ஆனா, நான் அதையும் அமைக்கலை. அது தேவையில்லைங்கிறதுதான் என்னோட கருத்து. வெயில் அதிகமான காலங்கள்ல பூச்செடிகள் வாடிப்போகும். அந்த நேரத்துல பூச்செடிகளை மட்டும் மாடியில வாட்டர் டேங்க் நிழல் விழுகுற இடத்துல வெச்சாப் போதும். அதோட மாடித்தோட்டத்துல அரளிப்பூச்செடிகள் இருந்தா, அது அதிக வெப்பத்தை உள்வாங்கிக்கும்.

அரளிச்செடி
அரளிச்செடி

செடிகளோட மேல்பக்கம் இருக்க பூச்சித் தாக்குதல் நம்ம கண்ணுக்குத் தெரியும். ஆனா, வேர் பகுதியில நோய்த் தாக்குதல் ஏற்பட்டா அது நமக்குத் தெரியாது. அதுனால, வேப்பம் பிண்ணாக்கைத் தண்ணியில ஊற வெச்சு அந்தத் தண்ணியை 10 நாளைக்கு ஒரு தடவை செடிகளோட வேர் பகுதியில கொஞ்சம் கொஞ்சம் ஊத்தணும். அதை மேலயும் தெளிச்சு விடலாம்.

வேப்பம் பிண்ணாக்கைத் தூளாக்கி, அதை வேர் பக்கத்துலயும் தூவி விடலாம். இதெல்லாம் முறையா செஞ்சாப் போதும். பூச்சி, நோய் தாக்குதலை நினைச்சு கவலைப்படத் தேவையில்லை. இது என்னோட அனுபவத்துல நான் கத்துகிட்ட விஷயம்''னு சொல்லி முடித்தார்.

பூக்கள்
பூக்கள்
தோட்ட உரம் வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்... எப்படி? வாங்க கத்துக்கலாம் - வீட்டுக்குள் விவசாயம்- 9

வீட்டுத் தோட்ட விவசாயத்துல இன்னும் பல விஷயங்கள் இருக்குதுங்க. அதைப் பற்றி அடுத்தடுத்த பகுதிகள்ல பார்க்கலாம். திரும்ப திங்கள்கிழமை சந்திப்போம். அதுவரை உங்களோட கேள்விகள் / கருத்துகளை கமென்ட் பகுதியில பகிர்ந்துக்கோங்க!

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு