Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ.73,000 - மணப்பாறை கத்திரி!

கத்திரிக்காய் அறுவடையில் பிரபாகரன்
பிரீமியம் ஸ்டோரி
கத்திரிக்காய் அறுவடையில் பிரபாகரன்

மகசூல்

ஒரு ஏக்கர்... ரூ.73,000 - மணப்பாறை கத்திரி!

மகசூல்

Published:Updated:
கத்திரிக்காய் அறுவடையில் பிரபாகரன்
பிரீமியம் ஸ்டோரி
கத்திரிக்காய் அறுவடையில் பிரபாகரன்

திருச்சி சுற்று வட்டாரத்தில் பல கத்திரி ரகங்கள் இருந்தாலும் ‘மணப்பாறை கத்திரி’க்கு தனி மவுசு உண்டு. முசிறி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், இந்த ரகக் கத்திரியை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் ‘மணப்பாறை கத்திரி’ ரகம் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் ஒட்டு, வீரிய விதைகளின் வருகையால், இந்த மகத்தான பாரம்பர்ய ரகத்தை மறந்துவிட்டார்கள். தற்போது மீண்டும் இந்த ரகத்தை விரும்பி சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது பெண்ணக்கோணம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக, இயற்கை முறையில், ‘மணப்பறை கத்திரி’யைச் சாகுபடி செய்து வருகிறார்.

கத்திரிக்காய் அறுவடையில் பிரபாகரன்
கத்திரிக்காய் அறுவடையில் பிரபாகரன்


ஓய்வுநேர விவசாயி

தோட்ட வேலைகளை முடித்துக்கொண்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார். “எங்க குடும்பமே பாரம்பர்ய விவசாயக் குடும்பம். மூணு தலைமுறைகளா விவசாயம் பார்த்துட்டு வர்றோம். 12-ம் வகுப்பு படிச்சு முடிச்சிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகத்துல நடத்துநரா வேலை பாத்துக்கிட்டிருக்கேன். வாரத்துல ஒருநாள் விட்டு ஒரு நாள் வேலை இருக்கும். அந்த ஒருநாள் கிடைக்குற ஓய்வு நேரத்தில் தோட்டத்துல விவசாயம் பார்த்துக் கிட்டிருக்கேன்’’ என்றவர், நம்மை நிழலில் அமர வைத்துப் பேசத் தொடங்கினார். ‘‘எங்களுக்குச் சொந்தமா 6 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, பலவகைக் காய்கறிகளை விதைச்சாலும், எப்படியும் மணப்பாறை கத்திரியைக் கொஞ்ச இடத்துலயாவது சாகுபடி செய்வோம். காரணம், எல்லோரும் நம்முடைய பாரம்பர்யத்தை மறந்துட்டு வீரிய ரக விதைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனா, நான் எப்போதும் பழசை மறக்காதவன். பாரம்பர்ய ரகத்தை மறப்பதுங்கிறது நம்முடைய முன்னோர்களை மறப்பதற்குச் சமம்னு நினைக்கிறவன்.

மணப்பாறை கத்திரிக்காய்
மணப்பாறை கத்திரிக்காய்

30 சென்ட்... மணப்பாறை கத்திரி

இப்போதுகூட 30 சென்ட்ல மணப்பாறை கத்திரியைச் சாகுபடி செஞ்சு காய் பறிச்சுட்டு இருக்கேன். என்னால முடிஞ்சவரைக்கும் இந்த ரக விதையை மற்ற விவசாயிகளுக்குப் பரவலாக்கம் செஞ்சுகிட்டு இருக்கேன். எப்போதும் மணப்பாறை கத்திரியின் விதை என்கிட்ட இருக்கும்” என்ற பிரபாகரன், கத்திரி விதையைக் காட்டியபடியே பேசினார்.

விதைகள் சேகரிக்கும் முறை

‘‘காய்கள் பறிக்க ஆரம்பிச்ச 80 - 100 நாள்கள்ல கத்திரிச் செடிகளில் நல்ல திரட்சியான காய்கள் இருக்கும். அந்தக் காய்களைப் பறிக்காமல் அப்படியே விட்டுடணும். செடியில காய் பழுத்த பிறகு, அதைப் பறிச்சு தண்ணீர் நிரப்பிய ஒரு பாத்திரத்துல கத்திரிப் பழங்கள மெதுவா பிழியணும். பிறகு, தண்ணீரை வடிகட்டிட்டு, பாத்திரத்தோட அடிப்பகுதியில் தங்கி யிருக்கும் விதைகளை எடுத்து நிழல் பகுதியில ஒரு துணியை விரிச்சு ஒருநாள் முழுக்க உலர்த்தித் தனியே பிரிச்சு எடுத்து வைத்துக் கொள்ளலாம். 50 நாள் கழிச்சு இதை விதைக்காகப் பயன்படுத்தலாம்’’ என்றவர் வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

மணப்பாறை கத்திரிக்காய்
மணப்பாறை கத்திரிக்காய்


“போன வருஷம், ஒரு ஏக்கர்ல மணப்பாறை கத்திரிச் சாகுபடி பண்ணியிருந்தேன். மூணு நாளுக்கு ஒரு பறிப்புன்னு 53 பறிப்புகள் பறிச்சேன். அது மூலமா 3,456 கிலோ காய் கிடைச்சது. ஒரு கிலோ கத்திரிக்காய் குறைஞ்சபட்சமா 14 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 38 ரூபாய் வரைக்கும் விற்பனை யானது. அந்த வகையில் ரூ.73,996 வருமான மாகக் கிடைச்சது. உழவு, தொழுவுரம், நடவு செய்தது, களை எடுத்தது இயற்கை இடுபொருள் தயாரிப்புச் செலவு, இடுபொருள் தெளிக்கும் செலவு, பறிக்கும் கூலினு மொத்தம் ரூ.26,500 செலவாச்சு. செலவுத் தொகையைக் கழிச்சது போக 47,496 லாபமாகக் கிடைச்சுது’’ என்றவர் நிறைவாக,

‘‘காய்கள் பளபளப்பாவும் திரட்சியாவும் இருக்குறதுனாலயும், இயற்கை முறையில சாகுபடி செய்யுறதுனாலயும் தனியான விலையெல்லாம் எதுவுமே கிடையாது. விசேஷ நாள்கள், விரத நாள்கள்ல கூடுதல் விலை கிடைக்கும்” என்றார்.தொடர்புக்கு,

பிரபாகரன்,

செல்போன்: 86101 62639

இப்படித்தான் கத்திரிச் சாகுபடி

மணப்பாறை கத்திரிச் சாகுபடி முறை பற்றி பிரபாகரன் சொல்லிய தகவல்கள் பாடமாக இடம் பெறுகின்றன.

மணப்பாறை கத்திரியைச் சாகுபடி செய்ய ஆடிப்பட்டம் ஏற்றது. தேர்வுசெய்த 30 சென்ட் நிலத்தில், ஒரு வார இடைவெளியில் 2 முறை உழவடிக்க வேண்டும். பிறகு, 3 டன் தொழுவுரத்தை நிலத்தில் பரப்பி, மீண்டும் ஒருமுறை உழவு ஓட்டிவிட வேண்டும். 30 நாள்கள் ஆன நாற்றுகளை நடவு செய்யலாம்.

கத்திரித் தோட்டம்
கத்திரித் தோட்டம்

ஒரு சென்ட் அளவில் நாற்றங்கால் அமைத்துக்கொள்ள வேண்டும். அதில், அரையடி இடைவெளியில், இரண்டு அடி அகலத்தில் மேட்டுப்பாத்திப்போல அமைத்து, அதில் கத்திரி விதைகளைத் தூவ வேண்டும். 100 கிராம் விதையை 50 கிராம் சூடோமோனஸ் கலந்த பிறகு பரவலாகத் தூவி விதைக்க வேண்டும். அதன் பிறகு, மணலைப் பரவலாகத் தூவி விதையை மூட வேண்டும். 6 முதல் 7 நாள்களில் முளைப்பு தெரியும்.

30-ம் நாளில் நாற்றுகளை நாற்றங்காலிலிருந்து பறித்து, வரிசைக்கு வரிசை 3 அடி மற்றும் செடிக்குச் செடி 3 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நிலத்தில் நடவு செய்வதற்கு முன்பு, பஞ்சகவ்யாவில் நாற்றின் வேர்களை முக்கி எடுத்து நேர்த்தி செய்து நடவு செய்தால் வேர்களைத் தாக்கும் நோய்களும் தாக்காது. பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாய்ச்சினாலே போதுமானது.

நாற்றுகள் நடவு செய்த முதல் 20 நாள்கள் வரை தண்ணீரை மட்டும் பாய்ச்சினால் போதும். 20-ம் நாளிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள், 40-ம் நாள் என இரண்டு முறை களை எடுத்தால் போதும். 35 - 40 நாள்களில் கத்திரிச்செடிகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பூக்கள் பூக்கும் நேரத்தில் பூச்சிகள் தாக்க வாய்ப்பு உண்டு.

அதைத் தவிர்ப்பதற்காக, 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். வெள்ளைக் கொசு, அசுவினி, குருத்துப்பூச்சி தாக்குதலுக்கு இந்த மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தலாம். 40-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி தேமோர்க்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், பூக்கள் உதிராமல் இருப்பதோடு, காய்ப்புழுக்களின் தாக்குதலையும் கட்டுப்படுத்தலாம். 50 - 55 நாள்களில் செடிகளில் காய்கள் தென்படும். 60-ம் நாளிலிருந்து காய்களைப் பறிக்கலாம். தொடர்ந்து 5 மாதங்கள் வரை காய்கள் பறிக்கலாம்.