Published:Updated:

காளைக்குச் சிலைவைத்து வணங்கும் விவசாயி!

காளைச் சிலைக்கு அருகே சின்னா கவுண்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
காளைச் சிலைக்கு அருகே சின்னா கவுண்டர்

கால்நடை

ருகாலத்தில் கால்நடைகள் வளர்ப்பு கிராமப்புற மக்களின் கெளரவமாகவே கருதப்பட்டது. அதிக எண்ணிக்கையில் ஆடு, மாடுகள் வளர்ப்பவர்கள் ஊருக்குள் பெருமித உணர்வோடு நடைபோடுவார்கள். தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை வெறும் வாழ்வாதாரமாக மட்டும் பார்க்காமல், குடும்பத்தின் உறுப்பினர்களாகவே கருதி நேசித்தார்கள். காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் நிகழ்ந்த மாற்றத்தில் கால்நடைகள் வளர்ப்பு, படிப்படியாகக் கைவிடப்பட்டது. ஆனாலும் ஜல்லிக்கட்டுக்காகக் காளைகள் வளர்ப்பவர்கள் இதைக் கைவிட்டுவிடாமல் இன்றைக்கும் தொடர்கிறார்கள். பொங்கல் விழாவின் ஒரு முக்கிய அங்கமாகவே ஜல்லிக்கட்டு திகழ்ந்துவருகிறது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு கிராமப்புறங்களில் தனி மவுசு உண்டு. உயிரோடு இருக்கும்போது மட்டுமல்லாமல் மரணித்த பிறகும்கூட இவற்றுக்கு மரியாதை செய்யப்படுவதுண்டு.

தான் வளர்க்கும் புலிக்குளம் காளையுடன்...
தான் வளர்க்கும் புலிக்குளம் காளையுடன்...

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள செவலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னா கவுண்டர், இறந்துபோன தன் மஞ்சுவிரட்டுக் காளைக்குச் சமாதி அமைத்து, சிலைவைத்து வழிபட்டு வருகிறார். செவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சுவிரட்டுக் காளை வளர்ப்பவர்களும் இந்தச் சிலையை தெய்வமாகப் போற்றி வணங்கிவருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன தனது காளை குறித்து நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்த சின்னா கவுண்டர், “இன்னும் எத்தனை வருஷங்களானாலும் எங்க ராமுவை மறக்க முடியாது. அது வந்த பிறகுதான் எங்க ஊருக்கே தமிழ்நாட்டளவுல தனி மரியாதை உருவாகிச்சு. திண்டுக்கல் பக்கத்துல ஆத்திப்பட்டியில இருந்து அதை வாங்கிட்டு வந்தோம். அது புலிக்குளம் இனத்தைச் சேர்ந்தது. அப்போ அதுக்கு ஆறேழு வயசு இருக்கும். வாங்கிட்டு வந்த புதுசுல எங்களோடு பழகக் கொஞ்சம் முரண்டு புடிச்சாலும், அடுத்த கொஞ்ச நாள்லயே எங்ககிட்ட அன்பா பழகிடுச்சி. ஆனா, அது எங்களுக்கு மட்டும்தான் கட்டுப்படும். ஜல்லிக்கட்டுல அது சீறிப்பாயறதைப் பார்த்தாலே அதுக்கு பக்கத்துல போக மாடுபிடி வீரர்கள் அஞ்சி நடுங்குவாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காளைச் சிலைக்கு அருகே சின்னா கவுண்டர்
காளைச் சிலைக்கு அருகே சின்னா கவுண்டர்

தமிழ்நாடு முழுக்கப் பல பகுதிகள்ல நடந்த ஜல்லிக்கட்டுல அது கலந்திருக்கு. ஒரு தடவைகூட அது பிடிபட்டதில்லை. செவலூர் காளைனு சொன்னாலே ரொம்பப் பிரபலம். அப்போல்லாம் இப்போ மாதிரி தங்கம், வெள்ளிக் காசையெல்லாம் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பரிசாகக் கொடுக்க மாட்டாங்க. வேட்டி, துண்டு கொடுக்கறதுதான் வழக்கமா இருந்துச்சு. ஆனா, எங்க ராமுவின் வீரத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்து நெகிழ்ந்துபோய் தங்கம், வெள்ளிக் காசெல்லாம் கொடுத்திருக்காங்க. எங்க ராமுவை பார்த்துட்டுதான் இந்தப் பகுதியில இருக்கும் பலர் ஜல்லிக்கட்டு காளைகளையே வளர்க்க ஆரம்பிச்சாங்க. ஜல்லிக்கட்டுல பல அசாத்திய சாதனைகள் செஞ்ச ராமு, வயது மூப்புனால உடல்நிலை மோசமாகி இறந்துபோயிடுச்சி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நாங்க மட்டுமில்ல... ஒட்டுமொத்த செவலூர் மக்களுமே சோகத்துல மூழ்கியிருந்தாங்க. எங்க குடும்பத்துக்குப் பேரையும் புகழையும் தேடித் தந்த ராமுவுக்கு சமாதி அமைச்சு, சிலையும் வெச்சோம். எங்க வீட்டுல எந்த நல்ல காரியம் செஞ்சாலும், இங்கே வழிபாடு செஞ்சிட்டுதான் ஆரம்பிப்போம். இதை நாங்க தெய்வமா வணங்கிட்டு இருக்கோம்.

காளைக்குச் சிலைவைத்து வணங்கும் விவசாயி!

ஜல்லிக்கட்டு வளர்ப்புல நாங்க லாப, நஷ்டக்கணக்குப் பார்க்கிறது இல்லை. இப்போ எங்ககிட்ட 15 காளைகள் இருக்கு. பால் கொடுக்கும் கறவை மாடுகளைவிட இதுங்களுக்குதான் நல்ல சத்தான தீவனம் கொடுக்கிறோம். தீவனம், பராமரிப்புச் செலவுகளுக்கு மாசம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு பண்றோம். ஜல்லிக்கட்டுல வெற்றி பெற்றாலும்கூட அதுல இருந்து பெருசா சொல்லிக்கிற மாதிரியெல்லாம் வருமானம் கிடைக்காது. விவசாயம் உள்ளிட்ட மற்ற தொழில்கள்ல இருந்து கிடைக்கும் வருமானத்தைவெச்சுதான் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கான செலவுகளைச் சமாளிக்கிறோம். பணம் பெருசில்லை. ஜல்லிக்கட்டுக் காளை எங்க உணர்வோடு கலந்தது” என்று நெகிழ்ந்தார்.

இவர்களைப் போன்றவர்களால்தான் தமிழ்நாட்டின் பாரம்பர்ய மாடுகள் அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தழைத்துக் கொண்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினிமா காளைகள்

வர் வளர்க்கும் ஜல்லிக்கட்டுக் காளைகளில் சில, திரைப்படங்களில் நடித்துள்ளன. குறிப்பாக, `சண்டைக்கோழி-2’, `மெர்சல்’ ஆகிய திரைப்படங்களில் தோன்றிய இவருடைய காளைகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.