Published:Updated:

மா, கொய்யா, சப்போட்டா, சாத்துக்குடி... - மலைக்க வைக்கும் மாடித்தோட்டம்!

மாடித்தோட்டத்தில் சீனு
பிரீமியம் ஸ்டோரி
மாடித்தோட்டத்தில் சீனு

மாடித்தோட்டம்

மா, கொய்யா, சப்போட்டா, சாத்துக்குடி... - மலைக்க வைக்கும் மாடித்தோட்டம்!

மாடித்தோட்டம்

Published:Updated:
மாடித்தோட்டத்தில் சீனு
பிரீமியம் ஸ்டோரி
மாடித்தோட்டத்தில் சீனு

வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள், சில பழமரங்கள்தான் பெரும்பாலும் மாடித் தோட்டத்தில் பார்க்க முடியும். ஆனால், சென்னையில் ஒரு வீட்டு மாடியில் வேப்பமரம், மா, சப்போட்டா, முருங்கை, சாத்துக்குடி, கொய்யா மரங்களை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் அந்தப் பகுதி பொதுமக்கள்.

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு அருகில் அமைந்திருக்கிறது அந்த மாடித்தோட்டம். சீனு என்பவருக்குச் சொந்தமான அந்த மாடித்தோட்டத்தைப் பார்வையிட, ஒரு மாலைப் பொழுதில் சென்றோம். வானுயர்ந்து நின்ற குடியிருப்புக் கட்டடங்களுக்கு மத்தியில் வண்ண பூச்செடிகளும், மாடியில் வளர்ந்தோங்கி நின்ற மரங்களும் சீனுவின் இல்லத்தை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள உதவின. இரண்டு தளங்களைக் கொண்ட அந்தக் கட்டடத்தின் தரைதளத்தில் சீனுவின் துணிக்கடை செயல்பட்டு வருகிறது.

கேன்களில் செடிகள்
கேன்களில் செடிகள்

துணிக்கடைகள் செயல்படத் தற்போது அரசு அனுமதி அளித்திருப்பதால் படு ஜோராக வியாபாரம் செய்து கொண்டிருந்த சீனுவிடம் நம்மை அறிமுகம் செய்து கொண்டோம். ஊழியர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு மலர்ந்த முகத்துடன் வரவேற்று மாடித்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். முதலாம் தளத்தில் வீடும், அதற்கு மேல்தளத்தில் குறுங்காடு போல் பசுமையாகக் காட்சியளிக்கும் மாடித்தோட்டமும் அமைந்திருந்தது.

பொதுவாக, மாடித்தோட்டத்தில் பைகள், தொட்டிகள், தண்ணீர் கேன்களில்தான் மரம், செடிகளைப் பார்த்திருப்போம். ஆனால், அந்த மாடித்தோட்டத்தில் பெரிய அளவிலான பிளாஸ்டிக் (சின்டெக்ஸ்) தண்ணீர் தொட்டி களிலிருந்த மிகப்பெரிய மரங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தின. ஒரு மஞ்சள் நிறத் தொட்டியில் வளர்ந்தோங்கி நின்ற சாத்துக்குடி மரத்தின் நிழலில் நின்றுகொண்டு பேசத்தொடங்கினார் சீனு.

சப்போட்டாவுடன் சீனு
சப்போட்டாவுடன் சீனு

“எங்க அப்பா, தாத்தா எல்லாருமே விவசாயம்தான் செஞ்சுட்டு இருந்தாங்க. இதே அயப்பாக்கத்துல எங்க குடும்பத்துக்கு நிறைய இடம் இருந்துச்சு. அதுல விவசாயம்தான் நடந்துட்டு இருந்துச்சு. என்கூடப் பொறந்தவங்க மொத்தம் மூணு பேரு. நான்தான் கடைக்குட்டி. சின்ன வயசுலயே எங்க அப்பா தவறிட்டாரு. எங்க அம்மாதான் எங்க 4 பேரையும் வளர்த்து ஆளாக்குனாங்க. குடும்பச் சூழ்நிலை காரணமா இருந்த விவசாய நிலத்தையெல்லாம் வித்துட்டு இங்க 5 சென்ட் நிலம் வாங்கிட்டு வந்தோம். அதுல ஒரு மூலையில சின்ன வீடு கட்டி குடி வந்தோம். மீதமிருந்த இடத்துல வாழை, கொய்யா, மாமரம்னு பெரிய தோட்டமே வெச்சுருந்தேன். அது மூலமா தான் எனக்கு இயற்கை முறை விவசாயம் மேல ஈர்ப்பு வந்துச்சு. வேலைக்குப் போயிட்டு வீட்டுல சும்மா இருக்குற நேரம் முழுக்க மரம், செடிகளோடதான் இருப்பேன்.

அப்புறம் எனக்கும் கல்யாணம் ஆச்சு. எங்க வீட்டைச் சுத்தி காலி மனையா இருந்த எல்லா இடத்துலயும் வீடு வந்துடுச்சு. நாங்களும் வங்கியில கடன் வாங்கிப் பெரிய வீடு கட்டினோம். வீட்ட கட்டும்போதே மாடித் தளத்தை உறுதியா கட்டினோம். அப்பவே எனக்கு மாடித்தோட்டம் அமைக்க யோசனை இருந்தது. ஆனா, ‘கார்மென்ட்ஸ்’ வெச்சுருக்கறதால எனக்கு வேலை சரியா இருந்துச்சு. சென்னைக்கும் திருப்பூருக்கும் ஓடிட்டே இருப்பேன். இப்பவும் அப்படித்தான். மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாதிரி வீட்டைக் கட்டியும் தோட்டம் அமைக்க முடியாம போனது என்ன ரொம்ப உறுத்திட்டே இருந்துச்சு. அப்படியிருக்கும் போது, போன வருஷம் கொரோனா ஊரடங்குல எங்கயுமே போக முடியாம வீட்டுல இருந்தேன். அப்பதான் மாடித் தோட்டம் அமைக்கலாம்னு முடிவு பண்ணி எனக்குப் பிடிச்ச செடிகளை மாடியில வெச்சு வளர்க்க ஆரம்பிச்சேன்.

கேன்களில் செடிகள்
கேன்களில் செடிகள்

ஊரடங்கு காலத்தில் உருவான தோட்டம்

வீட்டுலயே முடங்கி இருந்த எனக்கு இந்தச் செடிகள பராமரிக்குறது ரொம்பப் பிடிச்சிருந்தது. ஜாடி, தொட்டிகள்ல தக்காளி, புதினா, பிரண்டை, பச்சை மிளகாய், கத்திரிக்காய், வெண்டைக்காய்னு பல வகையான காய்கறிகள், பூச்செடிகள் வெச்சேன். ஆனாலும், வெச்சது எதுவுமே ஒழுங்கா வளரல. மாநகராட்சியில கிடைக்குற இயற்கை உரத்தை வாங்கிப் போட்டேன். செடிகள் எல்லாம் கொஞ்சம் தெம்பா வளர ஆரம்பிச்சுது. அதுக்கப்புறம் நானே, மரத்துல இருந்து விழுற இலைகளை உரமா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன்.

செடிகள் மட்டுமே வளர்த்துட்டு இருந்தப்போ, கொய்யா, மாமரம்னு மரங்கள் வளர்க்கணும்னு என்னோட பையன் ஆசைப்பட்டான். மரங்கள் வளர்க்குற அளவுக்குப் பெரிய தொட்டி இல்லாததால, பழைய பொருள் கடையில சொல்லி வெச்சு பெரிய தண்ணித் தொட்டி 4 வாங்கினோம். அதுல கொய்யா, மாதுளை, எலுமிச்சம், சாத்துக்குடினு பழ மரங்களை நட்டோம். நல்லா பராமரிச்சதால எல்லாமே மளமளன்னு செழிப்பா வளர்ந்துச்சு. இப்போ இரண்டு தளங்கள்லயும் சேர்த்து 300 சதுரஅடியில மாடித்தோட்டம் அமைச்சிருக்கேன். இதுக்கு ரெண்டு வேளையும் தண்ணீர் விட்டு, இயற்கை உரங்கள், இலைதழைகளை மட்டும்தான் போட்டுட்டு இருக்கேன். கொய்யா, மாதுளை ரொம்பச் சீக்கிரமாவே காய் காய்க்க ஆரம்பிச்சுது. சாத்துக்குடியும் சப்போட்டாவும் மட்டும் காய் காய்க்கக் கொஞ்சம் நாள் எடுத்தது.

குடும்பத்தினருடன்
குடும்பத்தினருடன்

மாடியில் மாம்பழம்

மாடிதோட்டம் ஆரம்பிச்சு சில மாதத் துலயே வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், அவரைக்காய், கத்திரிக்காய்னு வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் ஓரளவுக்குக் கெடச்சுது. செடிகள்ல தக்காளியும், மிளகாயும் வந்தப்போ கெடச்ச சந்தோஷமும், மன நிறைவும் ரொம்ப அலாதியானது. பிறகு, பழ மரங்களும் காய்க்க தொடங்கிடுச்சு. அது வரைக்கும் கடைகள்ல மட்டுமே வாங்கிச் சாப்பிட்டுட்டு இருந்த சாத்துக்குடி, சப்போட்டா, மாம்பழம் எல்லாமே எங்க வீட்டுலயே இயற்கையான முறையில கிடைக்க ஆரம்பிச்சது. தினமும் காலையில எழுந்தா மாடித்தோட்டத்துல சப்போட்டா, கொய்யானு எல்லாப் பழங்களையும் சுவையா ரசிச்சு ருசிச்சு சாப்பிடுற அணில் கூட்டத்தைப் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். என்னதான் நாம கஷ்டப்பட்டுப் பராமரிச்சு வளர்த்தாலும், என்னப் பொறுத்த வரைக்கும் அதுங்க சாப்பிட்ட மிச்சம்தான் எங்களுக்கு.

நான் ரொம்ப ஈடுபாட்டோட இருக்குறத பார்த்துட்டு எங்க வீட்டுல என் அம்மா, மனைவி, பசங்கனு எல்லாருமே பராமரிக்க ஆரம்பிச்சாங்க. நான் வேலை விஷயமா வெளியூர் போயிட்டாலும், என் பசங்க காலையில எழுந்ததும் முதல் வேலையா மரம் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சப் போயிடுவாங்க. எங்க குடும்பம் பெருசு. எங்க தோட்டத்துல இருந்து கிடைக்குற காய்கறி எங்க பயன்பாட்டுக்கு நிச்சயம் போதுமானதா இல்ல. அதனால, ஆவடி பக்கத்துல இயற்கை முறையில விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைனு வாரத்துக்கு ஒருமுறை வாங்கிட்டு வந்துடுவோம். இயற்கை விவசாயத்துல விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கொஞ்சம் விலை அதிகமானாலும், அதனால ஆஸ்பத் திரிக்கு போகுற செலவும் குறையுது.

மாடித்தோட்டத்தில் சீனு
மாடித்தோட்டத்தில் சீனு


வீட்டுல ‘லெமன் கிராஸ்’ டீ தான்

தோட்டத்துல, மிளகாய்க்குப் பஞ்சமே இருக்காது. எப்பவும் காய்ச்சிட்டே இருக்கும், தக்காளி சீஸன்லதான் நல்லா வரும். அதே மாதிரி கத்திரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் இதெல்லாம் ஓரளவுக்குக் கிடைக்கும். கீரைல அரைக்கீரை, சிறுகீரை போட்டிருக்கோம். புதினா, பிரண்டை, தூதுவளை, முடக்கத்தான், ‘லெமன் கிராஸ்’னு செடி மற்றும் கொடி வகைகள் நிறைய வெச்சுருக்கோம். வீட்டுல ‘லெமன் கிராஸ்’ வெச்சுதான் டீ போடுவோம்.

பூ வகைகள்ல செம்பருத்தி, மூணு வகை மல்லி, இருக்கு. ரோஸ், கோழிக்கொண்டை, கனகாம்பரம்னு நெறைய இருக்கு. மர வகைகள்ல வேப்பமரம், மாமரம், சப்போட்டா, முருங்கை, சாத்துக்குடி, கொய்யா மரம் வெச்சுருக்கோம். மாடிய நல்லா உறுதியா கட்டிட்டதால பெரிய பெரிய மரங்களை எல்லாம் மாடியிலேயே வெச்சுருக்கோம். ஒவ்வொரு மரத்தையும் கட்டடத்தோட காலம்கு (பீம்) ஏத்தமாதிரி வெச்சுருக்குறதால எந்தப் பிரச்னையும் இல்ல. ரொம்ப நெருக்கமா வீடு கட்டியிருக் கிறதால முடிஞ்ச அளவுக்கு இருக்குற இடத்தை உபயோகமா பயன்படுத்திருக்கேன்.

"மரங்கள் வளர்க்குற அளவுக்குப் பெரிய தொட்டி இல்லாததால, பழைய பொருள் கடையில சொல்லி வெச்சு பெரிய தண்ணித் தொட்டி 4 வாங்கினோம்."


கொத்துக் கொத்தாகக் காய்கள்

சாத்துக்குடி மரத்துல இருந்து இதுவரைக்கும் 500 சாத்துக்குடிக்கு மேல எடுத்துருக்கோம். கொய்யா அளவே கிடையாது, சப்போட்டா கிட்டத்தட்ட 1,000 பழத்துக்கு மேல எடுத்துருப்போம். மாம்பழம் போன வாரம்தான் பறிச்சோம். அவ்ளோ சுவையா இருந்துச்சு. எலுமிச்சம் செடியில் ரெண்டு வகை எங்க கிட்ட இருக்கு. ஒண்ணு நாட்டு எலுமிச்சை, இன்னொண்ணு கொடி எலுமிச்சை. இதுல கொடி எலுமிச்சை செடியில எப்பவுமே கொத்துக் கொத்தா காய் இருந்துட்டே இருக்கும். பெரிய சைஸுல, சாறு அதிகமா இருக்கும். எங்க தேவைக்கு அதிகமாக இருக்குறதால எலுமிச்சம் பழத்தை அக்கம்பக்கம் இருக்குறவங்களுக்கும் வாடிக்கையா கொடுத்துட்டு இருக்கோம்.

மாடித்தோட்டத்தைப் பொறுத்தவரைக்கும் செலவு கம்மி. மன நிறைவு அதிகம். தண்ணீர் பற்றாக்குறை இல்லாம இருந்தா போதும். பூச்சித் தாக்குதல் வந்தா இயற்கை முறையில இடுபொருள்களைப் பயன்படுத்தினாப் போதும். சின்னதா மாடித்தோட்டம் வெச்சுருந்தாலும் எங்களுக்கு ஏதோ பெரியளவுல விவசாயம் பண்ற திருப்தி இருக்கு. எங்க வீட்டுல இருக்க மாடித் தோட்டத்தைப் பார்க்கறதுக்காகவே அக்கம் பக்கத்துல இருந்து நெறைய பேர் வர்றாங்க. மாடித்தோட்டத்துல சாத்துகுடியா? சப்போட்டாவானு ரொம்ப ஆச்சர்யமா கேக்குறாங்க. ஆனா, இதைவிடச் சிறப்பா நெறைய மாடித்தோட்டங்கள் ஊர்ல இருக்கு. இன்னும், புடலங்காய், பாகற்காய், பீன்ஸ்னு நெறைய காய்கறிகள் மாடித்தோட்டத்துல சேர்க்க திட்டமிட்டிருக்கேன்” என்றார் சீனு மன நிறைவுடன்.

தொடர்புக்கு, சீனு,

செல்போன்: 98410 07772

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism