Published:Updated:

மேக்கேதாட்டூ அணை: `தீர்மானம் மட்டும் போதாது, இதைச் செய்ய வேண்டும்!' - அரசுக்கு மணியரசன் கோரிக்கை

மேக்கேதாட்டூ

``தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரை 1967-லிருந்து இன்று வரை தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் உரிமையைத் தி.மு.க. ஆட்சியாலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாலும் மீட்க முடியவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாகதான் உள்ளது."

மேக்கேதாட்டூ அணை: `தீர்மானம் மட்டும் போதாது, இதைச் செய்ய வேண்டும்!' - அரசுக்கு மணியரசன் கோரிக்கை

``தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரை 1967-லிருந்து இன்று வரை தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் உரிமையைத் தி.மு.க. ஆட்சியாலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாலும் மீட்க முடியவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாகதான் உள்ளது."

Published:Updated:
மேக்கேதாட்டூ

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட நிதியாக அம்மாநில அரசு பட்ஜெட்டில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்நிலையில்தான், மேக்கேதாட்டூ அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காவிரி உரிமை மீட்புக்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``மேக்கேதாட்டூ அணை கட்டுவதை தடுத்து நிறுத்த, தீர்மானம் மட்டும் போதாது. தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சி ஏற்பட வேண்டும். குறிப்பாக தற்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு, கடந்த காலங்களில் காவிரி பிரச்னையில் மெத்தனமாக இருந்தது போல் தற்பொது இருந்துவிடக்கூடாது’’ என எச்சரிக்கிறார்.

காவிரி
காவிரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து பேசிய பெ,மணியரசன், ``கர்நாடகத்தின் மேக்கேதாட்டூ அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 21.03.2022 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதை முன்மொழிவதற்கு முன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரை 1967-லிருந்து இன்று வரை தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் உரிமையைத் தி.மு.க. ஆட்சியாலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாலும் மீட்க முடியவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாக உள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`அண்ணா ஆட்சியிலிருந்து மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை - இதுவரை காவிரி உரிமையை மீட்க முடியவில்லை; என்று தணியும் காவிரித் தாகம்; நமது கொள்ளுப் பேரன் காலம் வரை காவிரிச் சிக்கல் தீராதோ என்கிற கவலை ஏற்பட்டுள்ளது' என்றெல்லாம் துரைமுருகன் பேசியுள்ளார்.

ஆனால் கடந்த காலங்களில் காவிரி உரிமையை மீட்டதாக தி.மு.க.வினரும் அ.இ.அ.தி.மு.க.வினரும் மாறி மாறி வெற்றி முழக்கங்கள் எழுப்பியுள்ளார்கள். வெற்றி விழாக்கள் கொண்டாடி உள்ளார்கள்.

வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7,8 இரு நாட்கள் அவர் தலைமையில் கர்நாடகமும் தமிழ்நாடும் காவிரி ஒப்பந்தம் போட்டன. அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி. கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்; அந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளைப் பறி கொடுக்கிறது என்று அப்போதே கண்டனம் தெரிவித்தோம்.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

அந்த ஒப்பந்தப்படி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் தலைவர், இந்திய பிரதமர். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் முதலமைச்சர்கள், அதில் உறுப்பினர்கள். அந்த ஆணையக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து உடன்பாடு ஏற்பட்டால்தான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்பது நிபந்தனை. தண்ணீர்ப் பகிர்வை அறிவித்துச் செயல்படுத்தும் தற்சார்பு அதிகாரம் அந்த ஆணையத்திற்கும் கிடையாது. `எலி பிடிக்காதது பூனையா, அதிகாரம் இல்லாதது ஆணையமா?' என்று கேட்டு அதை எதிர்த்து மாநாடும் கூட்டங்களும் நடத்தினோம். ஆனால் அந்த ஒப்பந்தத்திற்காக தஞ்சாவூர் திலகர் திடலில் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்து, `காவிரி கொண்டான்' என்று பட்டம் கொடுக்கச் செய்தார்கள்.

அதன் பிறகு 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் நாள் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வந்தது. அது தமிழ் நாட்டிற்குக் கர்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீரை மேலும் குறைத்து 192 டி.எம்.சி. ஆக்கியது. கர்நாடகத்தின் பாசனப் பரப்பை 11.05 லட்சம் ஏக்கரிலிருந்து 22 லட்சம் ஏக்கர் வரை உயர்த்தியது. அதையும் வரவேற்ற அப்போதைய முதல்வர் கருணாநிதி. `ஞாயத் தீர்ப்பு; ஆறுதல் அளிக்கிறது' என்று செய்தியாளர்களிடம் கூறினார். `மகிழ்ச்சி, மகிழ்ச்சி' என்று கொண்டாட்ட முழக்கம் எழுப்பினார் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன். இருவரும் அப்போது டெல்லியில் இருந்தார்கள். இடைக்காலத் தீர்ப்பு 205 டி.எம்.சி; இறுதித் தீர்ப்போ 192 டி.எம்.சி. அதையும் ஞாயத் தீர்ப்பு என்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்வேறு உழவர் அமைப்புகளும் அத்தீர்ப்பை எதிர்த்துப் போராடின. அதன் பிறகு அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு போட்டது தி.மு.க. ஆட்சி. ஆனால் அந்தத் தீரப்பையும் அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்த மறுத்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி. அந்தக் காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி அமைச்சர்களாக இருந்தனர் தி.முக.வினர்.

பின்னர் 2011-ல் முதல்வரான ஜெயலலிதா வற்புறுத்தலின் பேரில், மன்மோகன் சிங் ஆட்சி 2013-ல் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பை இந்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது. ஆனால் செயல்படுத்தும் ஆணையம் அமைக்க மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்தத் தீர்ப்புப்படி 18.05.2018-ல் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், 177.25 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்ட காவிரி நீரை தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரவில்லை. ஆனால் ஒவ்வோர் ஆணையக் கூட்டத்திலும் மேக்கேதாட்டூ அணைக்கான அனுமதியை நிகழ்ச்சி நிரலில் ஒரு பொருளாக முன்வைக்கிறது. ஒரு தலைச்சார்பான அந்த ஆணையத் தலைவர் ஹல்தரை நீக்கவோ, அந்த ஆணையத்தைக் கலைத்து, புதிய ஆணையம் அமைக்கவோ அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. இப்போதைய சட்டமன்றத் தீர்மானமும் அவ்வாறு கோரவில்லை.

`நீங்கள் யோக்கியனா, நான் யோக்கியனா என்று பேசுவதை விட்டுவிட வேண்டும்' என்று இப்போது பேசுகிறார் துரைமுருகன். 'நமது காலத்தில் இந்த காவிரி பிரச்னையைத் தீர்த்து வைக்காவிட்டால், பின்னர் வரும் சமுதாயம் நம்மைக் காரி துப்பும்' என்கிறார்.

இவ்வளவு தீவிரமாகப் பேசி, மேக்கேதாட்டூ தீர்மானத்தை முன்வைத்தனர். அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அத்தீர்மானம் மறுபடியும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்து, மேக்கேதாட்டூவை அனுமதிக்காதீர் என்ற கோரிக்கையுடன் முடிந்துவிட்டது.

தமிழ்நாடு தழுவிய மக்கள் எழுச்சிப் பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற எந்த செயல் திட்டத்தையும் அத்தீர்மானம் முன்வைக்கவில்லை.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாகக் காவிரிச் சிக்கலில் எதையும் சாதிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு வராமல் காவிரி நீரை தடுக்க கர்நாடக அரசு புதிது புதிதாக கட்டிய அணைகளை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களாலும், கட்சிகளாலும் தடுக்க முடியவில்லை. இந்திய அரசின் சூழ்ச்சிகளைத் தடுக்க முடியாத தி.மு.க., அ.இ.அ.தி.மு.க ஆட்சிகளையோ, அக்கட்சிகளையோ மீண்டும் எதிர்பார்த்து, செயலற்றுத் தமிழ்நாட்டு மக்கள் இருந்தால், மேக்கேதாட்டூ அணையைக் கர்நாடகம் கட்டி முடித்து விடும்.

மேக்கேதாட்டூ
மேக்கேதாட்டூ

அப்படித்தான் 1970களில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி உள்ளிட்ட சட்ட விரோத அணைகளைக் கட்டி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் வராமல் தடுத்துள்ளது. இந்த அணைகள் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசும் தஞ்சை மாவட்ட உழவர்கள் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் 1971-ல் போட்ட வழக்கை, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, வழக்குகளை 1972-ல் திரும்பப் பெற்றார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. மேக்கேதாட்டூ கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டு நீர்கூட மேட்டூர் அணைக்கு வராது. தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் காவிரி நீர் உரிமை நீர் ஆகும். அது குடிநீராக, பாசன நீராக நம் உயிரோடு கலந்துள்ளது. தமிழ்நாடு தழுவிய அளவில் மக்கள் திரள் எழுச்சியை உருவாக்க வேண்டும்'' என்று உறுதியான குரலில் சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism