Published:Updated:

நம்மாழ்வார் நீர்த்தேக்கம்... சாதித்த மன்னார்குடி இளைஞர்கள்!

மீட்டெடுக்கப்பட்ட நீர்த்தேக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
மீட்டெடுக்கப்பட்ட நீர்த்தேக்கம்

சாதனை

'தண்ணீரைப் பூமிக்குள் தேடாதே... அதை வானத்திலிருந்து வரவழை’ என்பது நம்மாழ்வாரின் பொன்மொழி. மரங்களை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், நீர்நிலைகளை மீட்டெடுத்து, மழைநீரைச் சேமித்து வைக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரது கனவை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு நீர்த்தேக்கத்தை மீட்டெடுத் திருக்கிறார்கள் மன்னார்குடி இளைஞர்கள்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர்கள், அப்பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, சீமைக்கருவைக் காடாகவும் மண் முகடாகவும் கிடந்த ஒரு பெரிய நீர்த்தேக்கத்தை, பெரும் அர்ப்பணிப்பாலும் கடும் முயற்சியாலும் மீட்டெடுத்திருக்கிறார்கள். புத்துயிர் பெற்ற இந்தத் நீர்த்தேக்கத்துக்கு ‘நம்மாழ்வார் நீர்த்தேக்கம்’ எனப் பெயர் சூட்டிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள்.

நம்மாழ்வார் தனது இறுதிக் காலத்தில் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில்தான் அதிகம் சுற்றிச் சுழன்றார். இப்பகுதியை மையமாக வைத்து மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு நடை முறைப்படுத்த முயன்றது. அதற்கு எதிராகச் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நம்மாழ்வார், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர்களிடம் நேசிப்போடு பழகி, இயற்கை விவசாயம், நீர்நிலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கருத்து களையும் ஆழமாக விதைத்தார்.

மீட்டெடுக்கப்பட்ட நீர்த்தேக்கம்
மீட்டெடுக்கப்பட்ட நீர்த்தேக்கம்

இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பலரும் நம்மாழ்வாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர். அதில் சிலர், ‘மன்னையின் மைந்தர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, அவரது எண்ணங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து 10.1.2016 தேதியிட்ட இதழில், ‘நம்மாழ்வாருக்காக ஒரு பூங்கா... நெகிழ வைக்கும் மன்னை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இவர்களது தொடர் செயல்பாடுகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. உச்சபட்ச சாதனையாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மக்களின் குடிநீர்த் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு நீர்த் தேக்கத்தைத் தங்களது சொந்த பங்களிப்பாக 15 லட்ச ரூபாயை செலவிட்டு மீட்டெடுத் திருக்கிறார்கள்.

நம்மாழ்வார் பூங்கா

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மன்னையின் மைந்தர்கள் அமைப்பைச் சேர்ந்த அருண்ரவி, ‘‘நம்மாழ்வார் ஐயாவால ஈர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த அமைப்புல இருக்காங்க. ரயில் நிலையம் பகுதியில சீமைக்கருவேல் மண்டிக்கிடந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, சுமார் 50,000 ரூபாய் செலவுல நம்மாழ்வார் பூங்காவை உருவாக்கினோம். இயற்கை விவசாயம், பாரம்பர்ய உணவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துறது, பனை விதைப்பு, நெகிழி ஒழிப்புனு தொடர்ச்சியா இயங்கிக்கிட்டு இருக்கோம்.

இதுக்கிடையிலதான், ஒருகாலத்துல மன்னார்குடி மக்களோட முக்கிய நீர் ஆதார மாக இருந்து, காலப்போக்குல சீமைக்கருவேல காடாக மாறிக்கிடந்த நீர்த்தேக்கத்தை மீட்டெடுத்திருக்கோம். அதை, பெரிய சாதனையாகவும் மன்னார்குடி மக்கள் பாராட்டிகிட்டு இருக்காங்க’’ என்றார் பெருமையுடன்.

ராஜசேகரன், அருண்ரவி
ராஜசேகரன், அருண்ரவி

இவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், ‘‘இந்த இடத்தோட பேரு சியாதோப்பு. இங்க ஒரு நீர்த்தேக்கம் இருக்குங்கற விஷயமே பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துல மக்களோட குடிநீர் தேவைக்காக இங்க நீர்த்தேக்கத்தை உருவாக்கியிருக்காங்க. இதோட பரப்பு நாலரை ஏக்கர். பிரமாண்டமா இருந்திருக்கு. தண்ணீரை வடிகட்டும் அமைப்பு, நீர் செறிவூட்டும் அமைப்பு உட்பட இன்னும் பல அற்புதமான கட்டு மானங்கள் எல்லாம் இதுல இருக்கு.

மண்மேடாக மாறிப்போயிடுச்சு

60 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும், மன்னார்குடி மக்கள் தங்களோட குடிநீர் தேவைக்கு, இதைத்தான் நம்பி இருந்திருக் காங்க. ‘போர்வெல்’, கூட்டுக் குடிநீர்த்திட்டம் எல்லாம் வந்த பிறகு, காலப்போக்குல இந்த நீர்த்தேக்கத்தை யாரும் கண்டுக்கல. பராமரிப்பு இல்லாம கிடந்ததால மண்மேடாக மாறிப்போயிடுச்சு. சீமைக்கருவேலம் மண்டி காடுபோல கிடந்துச்சு. இந்த நீர்த்தேக்கத்தை மீட்டெடுக்கணும்னு எங்க அமைப்புல முடிவு பண்ணினோம். அதிகபட்சம் ரெண்டரை லட்சம் ரூபாய் செலவுல இதைச் சீரமைச்சிடலாம்னு நினைச்சுதான் இறங்கினோம். சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுன பிறகு, மூன்றரை அடிக்கு ஆழப்படுத்துனோம். பிறகு, கரைகளைப் பலப்படுத்தினோம். நீர் செறிவூட்டி குழாய் பதிச்சோம். ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் உருவாக்குனோம். இது ஒவ்வொண்ணுக்கும் செலவு இழுத்துக்கிட்டே போச்சு. ஆனாலும் நாங்க மனசு தளரவே இல்ல.

சீரமைப்புப் பணியில்
சீரமைப்புப் பணியில்

15 லட்சம் ரூபாய் செலவு

அரசியல்வாதிகள், வணிகர்கள் யார் கிட்டயும், இதுக்கு பணம் வசூலிக்கக் கூடாதுனு உறுதியாக இருந்தோம். இந்த அமைப்புல உள்ள உறுப்பினர்கள், அவங்களோட குடும்பத்தினர்கள், நண்பர்களோட பங்களிப்போடு 15.50 லட்சம் ரூபாய் செலவுல இந்த நீர்த்தேக்கத்தைச் சீரமைச்சிருக்கோம். இது மிகப்பெரிய தொகை. நம்மாழ்வார் ஐயா எங்களுக்குள்ள ஏற்படுத்தின தாக்கத்துனாலதான், 60 வருஷத்துக்குப் பிறகு, இந்த நீர்த்தேக்கம் புத்துயிர் பெற்றிருக்கு. அதனாலதான் இதுக்கு ‘நம்மாழ்வார் நீர்த்தேக்கம்’னு பெயர் சூட்டியிருக்கோம். மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நாலரை ஏக்கர் பரப்புல இருக்குற இந்த நீர்த்தேக்கம், தொடர் கனமழையால தண்ணி நிறைஞ்சிருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன்.