
மாத்தியோசி
ஆன்மிகத்தில் தீவிரமான ஈடுபாடுகொண்ட நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘‘சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரமிடு தொடர்பான நிகழ்ச்சி நடக்கிறது. அதில் விவசாயத்துக்கு பிரமிடு ஆற்றல் எந்த அளவுக்குப் பயன்படும் என்று பேசப்போகிறார்களாம். நீங்களும் வாருங்களேன்...” என்று சொல்லி அழைத்தார். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரம்மரிஷி பத்ரிஜியை முன்பே அறிவேன். ஆன்மிக அமைப்புகளில் குரு இருப்பார்; அவருக்குக் கீழ் சீடர்கள் இருப்பார்கள். ஆனால், இவருடைய அமைப்பில் நீங்கள் சேர்ந்துவிட்டால், அன்றிலிருந்தே நீங்களும் `குரு (Master)’ என்று அழைக்கப்படுவீர்கள்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயில் அருகில் இவரின், `பிரமிடு ஆன்மிக மன்ற இயக்க’த்தைச் (Pyramid Spiritual Societies Movement) சேர்ந்தவர்கள் பிரமிடு தியானத்தைக் கோயிலுக்கு வருபவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டிலும்கூட இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் நூற்றாண்டு விழா அரங்கில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.

காலை 11 மணி வாக்கில் அரங்கில் நுழைந்தால், பத்ரிஜி புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தியானத்தில் திளைத்திருந்தார்கள். ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம் சிறப்புரையாற்றினார். `ஸ்பிரிச்சுவல் அக்ரிகல்ச்சர்’ (Spiritual Agriculture) என்ற ஆங்கில நூலை வெளியிட்ட சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், ‘‘கோயம்புத்தூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான்.
இந்த நூலை, என் கையால் வெளியிடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். `நல்ல விளைச்சலைக் கொடுக்க, பிரமிடு சக்தி உதவுகிறது’ என்று என்னிடம் இந்த இயக்கத்தினர் சொன்னார்கள். விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் ஆன்மிகம் பயன்பட்டால் நாடு வளம்பெறும்’’ என்றார். பிரமிடு என்றால், எகிப்துதான் நினைவுக்கு வரும். 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதல் கிரேக்க வரலாற்று ஞானி, ஹெரோடொடஸ் (Herodotus) எகிப்தை ‘நைல் நதியின் கொடை’ என்று குறிப்பிட்டுள்ளார். இது உலக நதிகளிலேயே மிகவும் நீண்டது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் வளத்தையும், மனித இனத்தையும் உன்னதமாக்கியது. கெய்ரோவுக்கு அருகிலுள்ள கிஸா பிரமிடுகள் நைல் நதிக்கு அருகே எழுந்தவை.
நைல் நதியில் ஆண்டுதோறும் வெள்ளம் வந்து, நிலங்கள் மூழ்கிக்கிடக்கும் நேரங்களில் விவசாயப் பணிகள் இருக்காது. அப்போது விவசாயிகளும் பிரமிடு கட்டும் பணியில் கலந்துகொண்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பிரமிடுகள் எதற்காகக் கட்டப்பட்டன என்ற விவாதமும் ஆராய்ச்சியும் நீண்டபடியே இருக்கிறது. ஆனால், உலகத்திலுள்ள அதிசயங்களில் ஒன்றாக எகிப்து பிரமிடுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘உலகின் ஒவ்வோர் அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டிருக்கிறது. பிரமிடுகள் தங்களுக்குள் வைத்திருக்கும் ரகசியங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவே இல்லை. வியக்கத்தக்க முறையில் கட்டப்பட்டிருக்கும் பிரமிடின் கூம்பகங்களைப் பண்டைக்கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்பு பீடமாக மட்டும் நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது’’ என்றும் ஆய்வாளர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவருகின்றனர்.
சரி... பிரமிடு நிகழ்ச்சிக்கு வருவோம். ‘‘பிரமிடு, பிரபஞ்ச சக்தியை ஒன்றுதிரட்டிச் சேமிக்கும் தன்மைகொண்டது. அண்டத்தில் உள்ள சக்தியை ஈர்த்து தன்னுள் தக்கவைக்கும் ஒன்றுதான் பிரமிடு. பிரபஞ்ச சக்தியின் வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த கலவையால் பெறப்படும் ஆற்றல்தான் பிரமிடின் ஆற்றல். பிரமிடின் கீழே அல்லது அதற்குள் அமர்ந்து செய்யும் தியானம் ‘பிரமிடு தியானம்.’ சாதாரணமாகக் கெட்டுப்போகும் பழம், பால் போன்றவை பிரமிடின் உள்ளே கெட்டுப் போகாமல் இருக்கின்றன. காபி, ஒயின், பழச்சாறு போன்றவற்றின் சுவை அதிகமாகிறது. பிளேடு, கத்தி போன்றவற்றின் கூர்மை மழுங்காமல் இருக்கிறது. துர்நாற்றத்தை நீக்கி, அறையின் தூய்மையைக் காக்கிறது பிரமிடு’’ என்றெல்லாம் பிரமிடு இயக்கத்தினர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

அன்று வெளியிடப்பட்ட 64 பக்கங்கள் கொண்ட ‘`ஸ்பிரிச்சுவல் அக்ரிகல்ச்சர்’’ நூலில், இசை விவசாய முறை, பிரமிடு விவசாயம், ரிஷி விவசாயம், மசானபு ஃபுகோகாவின் இயற்கை வேளாண்மை, ஈஷா விவசாய இயக்கம், பயோ-டைனமிக் விவசாயம், பயோ-டைவர்சிட்டி விவசாயம், ஸ்ரீ ஸ்ரீ இயற்கை விவசாயம், பிரம்ம குமாரிகள் யோகா விவசாயம்... உள்ளிட்ட 15 தலைப்புகளில் உலகத்தில் ஆன்மிகரீதியாக விவசாய ஆராய்ச்சிப் பணிகளைச் செய்யும் அமைப்புகள் குறித்துச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ‘‘பிரமிடு அமைப்புக்குக் கீழ் 21 நாள்கள் விதைகளை வைத்திருந்து விதைத்தால், பயிர் செழித்து வளர்கிறது. பூச்சிநோய்த் தாக்குதல் குறைவு. இயற்கை உரத்தை பிரமிடுக்கு அடியில் வைத்தால், அதிலுள்ள நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி வளர்கின்றன. குச்சிகளைக்கொண்டு எளிய முறையில் பிரமிடுகளை உருவாக்கி, அவற்றை வயலில் பொறுத்தலாம். இதன் மூலம், அந்தப் பயிர் அற்புதமாக வளரும். பிரமிடு வடிவம் பயன்படுத்தும் பயிர்களுக்குத் தண்ணீர்கூடக் குறைவாகத்தான் தேவைப்படும். நல்ல விளைச்சலும் கிடைக்கும். கூடுதலாக, இதில் விளையும் உணவுப் பயிர்கள் சுவை மிகுந்ததாக இருக்கும்.’’ இவை ‘தி சீக்ரெட் பவர் ஆஃப் பிரமிட்ஸ்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதை இந்த நூலில் மேற்கோள்காட்டியிருக்கிறார்கள்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகர், ‘‘என் தோட்டத்தில் பிரமிடு வடிவத்தை நிறுவி, இயற்கை வழி முறையில் விவசாயம் செய்துவருகிறேன். மண்ணின் வளம் பெருகிவருகிறது. இதன் மாற்றத்தைப் பயிர்களில் காண முடிகிறது’’ என்கிறார். இதே மாநிலத்தைச் சேர்ந்த கிரண், ‘‘எங்கள் கிராமத்தில் மழை குறைவு. வறட்சியாக இருக்கும்.
பிரமிடு அமைத்த பிறகு மழை அளவுகூடக் கூடியுள்ளது. பாமாயில் விளைச்சல் அதிகரித்துவருகிறது. வெள்ளரி விதைகளைப் பிரமிடுக்கு அடியில் 21 நாள்கள் வைத்திருந்து விதைத்தேன். 30 சதவிகிதம் விளைச்சல் அதிகமாகக் கிடைத்தது’’ என்கிறார். தெலங்கானா மாநிலத்திலுள்ள குவாண்டம் லைஃப் யுனிவர்சிட்டி என்ற அமைப்பு, ‘‘ஐதராபாத் அருகில் உள்ள எங்கள் பண்ணையில், பிரமிடு வடிவத்தை நிறுவியுள்ளோம். பயறு வகைகளைச் சாகுபடி செய்தபோது வறட்சி ஏற்பட்டது. போதாக்குறைக்கு அக்கம் பக்கத்திலுள்ள தோட்டங்களில், பூச்சிநோய்த் தாக்குதல் வேறு. ஆனால், எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், பயறு வகைப் பயிர்களில் நல்ல விளைச்சல் கிடைத்தது’’ போன்றவை யெல்லாம், அந்த நூலிலுள்ள தகவல்கள். பிரமிடு மூலம் விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம், இந்தத் தொழில்நுட்பத்தை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்ய வேண்டியதும் அவசியமே.