Published:Updated:

மண்புழு மன்னாரு : வானொலி விவசாயிகளும் ஈஸ்வரப்பா உபயமும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

மீபத்தில் ஒருநாள் இணையத்தில் எதையோ தேடிக் கொண்டிருக்கும்போது, சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் இணையதளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்றால்,

‘‘ஆல் இந்திய ரேடியா, சென்னை வானொலி நிலையம். வீடும் வயலும்..!’’ என்ற அறிவிப்புக் காதில் ஒலித்தது.

தொலைக்காட்சிகளுக்குச் சவால்விடும் இந்த யூடியூப் யுகத்தில் வானொலி நிலையம் அசராமல் தனது கடமையைச் செய்து கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனோன். கிராமங்களில் இப்போதுகூட வானொலியை விரும்பிக் கேட்கும் நேயர்கள் இருக்கிறார்கள்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்
தென்கச்சி கோ.சுவாமிநாதன்

‘பசுமை விகடன் படித்து இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்...’’ என்று விவசாயிகள் சொல்வதுபோல, அந்தக் காலத்தில் ஆல் இந்திய ரேடியோவைக் கேட்டு, நெல் சாகுபடி செய்தோம், மஞ்சள் சாகுபடி செய்தோம் என்று சொல்லிய விவசாயிகளை நேரில் பார்த்திருக்கிறேன்.

‘மரம்’ தங்கசாமி, ஒவ்வொரு முறையும், ‘‘திருச்சி வானொலி நிலையத்தில் பி.எஸ்.மணியனின் மரம் சம்பந்தமான புத்தகத்தைப் பற்றிய ஒலிபரப்புதான், என்னை மரம் வளர்ப்புப் பக்கம் எட்டிப் பார்க்க வைத்தது’’ என்று சொல்வார். ஏடிடீ-27 ரக நெல்லுக்கு ‘ரேடியோ நெல்’ என்ற பெயரும் உண்டு. ரேடியோவில் சொல்லிச் சொல்லியே விவசாயிகள், இந்த ரகத்தை அதிக அளவு சாகுபடி செய்தார்களாம்.

தமிழ்நாட்டில் பண்ணை இல்லத்து ஒலிபரப்பில் புதுமையைப் புகுத்திய பெருமை தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களையே சாரும். சென்னை வானொலி நிலையத்தில் துணை இயக்குநராக இருந்த போது, அவருடன் பணி நிமித்தமாக பலமுறை சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

‘‘விவசாயம் படிச்சிட்டு, ஊர்ல விவசாயம் பார்த்துக்கிட்டிருந்தேன். அந்தச் சமயத்துல திருநெல்வேலி வானொலி நிலையத்தில, விவசாய பகுதிக்கு எழுத்தாளர் வேணும்னு அறிவிப்பு வந்துச்சு. எழுதிப்போட்டேன். உடனே வேலை கிடைச்சது. பணிக்குச் சேர்ந்தேன். ஓர் அறிவிப்பைக் கொடுத்து, படிக்கச் சொன்னாங்க.

‘புளியங்குடி வட்டார விவசாயிகளே.... நீங்க சாகுபடி செய்திருக்கிற நெற்பயிர்ல.... இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் ஏற்பட்டிருக்கு. இதைக் கட்டுப்படுத்த, ஒரு வாளி தண்ணியில, இரண்டு மூடி ரசாயன மருந்து கலந்து தெளிச்சா, இலைச்சுருட்டுப்புழு கட்டுப்படும்’’னு சொன்னேன்.

இதைக் கேட்ட, என்னோட மேல் அதிகாரி, ‘‘வானொலிக்குன்னு ஒரு மொழி இருக்கு. இப்படியெல்லாம் பேசக்கூடாது’’னு சொன்னார். நானும் சரி சரின்னு தலையாட்டினேன்.

ஒரு வாரம் கழிச்சி, புளியங்குடியிலிருந்து விவசாயிகள் வந்திருந்தாங்க. ‘நீங்க விவசாயம் சம்பந்தமா சொல்ற தகவல் எளிமையா புரியுற மாதிரி இருக்கு’ன்னு சொன்னாங்க. மக்கள் மொழியில பேசினா, நிச்சயம் அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்ங்கிறதைத் தெரிஞ்சிக்கிட்டேன். அதுவே, இந்தத் துறையில என் அடையாளமாகவும் இருக்கு’’ என்று சொன்னார் தென்கச்சி அண்ணாச்சி.

திருச்சி வானொலி நிலையத்தில் காலை 6.30 மணிக்கு டீ கடைக்காரரிடம், வான்மதி கண்ணன் உரையாடுவதைக் கேட்க சுவாரஷ்யமாகவும், தகவல்களைச் சொல்வதாகவும் இருக்கும். சென்னை வானொலி நிலையத்தில் ‘‘நல்ல காலம் பிறக்குது.... நல்ல காலம் பிறக்குது....’’ என்று சாமக்கோடாங்கி சங்கரலிங்கமாக வந்து, அதகளப்படுத்துவார் ஞானசூரியபகவான். பல்துறை வித்தகரான இவருடன் சில காலம் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். ஞானசூரியபகவான் சொல்லும் தகவல்கள் வித்தியாசமாகவும் சிந்திக்கும்விதமாகவும் இருக்கும். தன்னைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்பார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

ஒருமுறை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊடகம் சம்பந்தமான பயிற்சிப் பட்டறைக்கு வானொலியில் பேசும் ‘துகிலி’ சுப்பிரமணியமும் வந்திருந்தார். இரண்டு நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவருக்கும் பக்கத்து பக்கத்து அறை, ‘‘தம்பி, ரசாயன உரத்துக்கு ஆதரவா பேசிறேன்னு, என்னை தப்பா நின்னைச்சிடாதீங்க. நாங்களும் இயற்கை உரத்தைப் பயன்படுத்துங்கன்னுத் தான் சொல்றோம்’’ என்று சொல்லிவிட்டு அன்பாகக் கைக்குலுக்கினார். இரண்டு நாள் இரவும் பள்ளியில் படித்தது, வேளாண்மைத் துறை, வானொலி அனுபவங்கள் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றி சொன்னார். இறுதியில் ‘‘மலேசியாவில் எண்ணெய்ப் பனைச் சாகுபடியில் விவசாயிகள் லாபத்தை அள்ளுகிறார்கள். அதைத் தமிழ்நாட்டில் பெருக்கலாம் என்றால் சூழ்நிலை சரியில்லை தம்பி’’ என்று அந்த வெண்கல குரல் சோர்வாக ஒலித்தது.

‘‘மக்கள் மொழியில பேசினா, நிச்சயம் அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்ங்கிறதை தெரிஞ்சுகிட்டேன். அதுவே, இந்தத் துறையில என் அடையாளமாகவும் இருக்கு’’ என்றார் தென்கச்சி சாமிநாதன்.

‘‘ ‘துகிலி’ சுப்பிரமணியம் என்னைப் பேட்டி எடுத்தார், ராஜகோபால் எங்கள் தோட்டத்துக்கு வந்தார், சரவணன் எங்கள் பண்ணையில் சாப்பிட்டார்’’ என இன்றும் பசுமை நிறைந்த நினைவுகளைப் பாசத்துடன் சொல்லும் விவசாயிகள் தமிழ்நாட்டில் உண்டு. இது வெறும் சொல் அல்ல. அதற்குப் பின் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன.

கர்நாடக மாநிலத்துக்கு ஒருமுறை பயணம் செய்தபோது, அங்கு கண்ட காட்சி அதிசயிக்க வைத்தது. விவசாயத்தில் செழித்திருந்த அந்தக் கிராமத்தில், நல்ல வசதியான வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அதில் ‘ஈஸ்வரப்பா உபயம்’ என்று வீட்டுக்கு முன்னால் கல்லில் பொறித்திருந்தார்கள். சுற்று வட்டாரக் கிராமங்களில் பரவலாகவே ஈஸ்வரப்பா உபயமாக இருந்தது. கோடை வெப்பத்துக்குப் பழச்சாறு குடிக்கலாம் என்று ஒரு கடையில் நின்றோம். ‘‘பழச்சாறு வேண்டாம்... ராகி மொத்தைச் சாப்பிடுங்கள்...’’ என்று கொடுத்தார்கள். என் அருகில் ஆண்களும் பெண்களும் சாப்பிட்டபடியே உரையாடினார்கள்... ‘‘என்னங்க நம்ம ஈஸ்வரப்பா, வெறும் நிலக்கடலைச் சாகுபடி மட்டும் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார். அப்படிச் செய்தால், பூச்சித் தாக்குதல் இருக்கும். அதனால, ராகி விதையையும் சேர்த்து விதைக்கச் சொல்லியிருக்கிறார். இதனால், நிலக்கடலையைத் தாக்குற பூச்சி-நோய்கள் மட்டுப்படுமாம்’’ என்றார் அந்தப் பெண்.

‘‘ஈஸ்வரப்பா சொல்லிட்டா செய்திட வேண்டியதுதான்’’ என்றார் அந்தப் பெண்மணியின் கணவர்.

இதற்கு மேலும், காத்திருக்க முடியாது. யாருங்க அந்த ஈஸ்வரப்பா என்று, அந்த ஊரிலிருந்த பெரிய வீட்டுக் கதவைத் தட்டினேன். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பேசிய பெரியவர்,

‘‘இந்தப் பகுதியில் விவசாய ஆலோசனை வழங்குபவர்தான், ஈஸ்வரப்பா. ஒவ்வொரு விவசாயி நிலத்துக்கும் சென்று என்ன பயிர் செய்தால் லாபம் கிடைக்கும் என்று பக்குவமாக ஆலோசனை சொல்வார். அதை வேதவாக்குபோலச் செய்வோம். இந்த வீடு, அவர் சொல்லிய மாதுளைச் சாகுபடியில் கிடைத்த வருமானத்தில்தான் கட்டினேன். வறட்சியான கிராமங்களைப் பசுமையாக மாற்றிக்காட்டினார். எங்கள் ஊர் மண்ணில் மாதுளைதான் வரும் என்று கண்டறிந்து, ‘கணேஷ்’ என்ற ரகத்தைச் சாகுபடி செய்யும்படி சொன்னார். வறட்சியில் விளையும் மாதுளையை விடாமல் சாகுபடி செய்தோம். கொஞ்ச காலத்தில் வறுமை மறைந்து, செல்வச்செழிப்பு வந்தது. அவர் மட்டும் வந்து எங்களுக்கு வழிகாட்டவில்லையென்றால், சோற்றுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போம்’’ எனக் கன்னட மொழியில் உணர்ச்சிப் பொங்க சொன்னார், அந்த பெண் விவசாயி.