அண்மையில், சென்னை மாநகரில் மழை பெய்வதற்கான அத்தனை அறிகுறிகளும் இருந்த நன்னாளில் ‘வனம் இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் நிர்வாக அலுவலகத் திறப்பு விழாவும், நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஏ.வி.வெங்கடாச்சலம் ஐ.எஃப்.எஸ்ஸின் உரை, வான்மழை பொழிந்ததுபோலிருந்தது. அந்த மழையில் நீங்களும் நனையலாம்.

‘‘ `இந்த உலகில் விவசாயம்தான் சிறந்த தொழில்’ என்று நம் இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன. நானும் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகிலுள்ள ஓர் ஊரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான். மாவட்ட வனப் பாதுகாவலர், வனக்கல்லூரிப் பேராசிரியர் எனப் பல பதவிகளை வகித்திருக்கிறேன். விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நான் விவசாயிகள் வளமுடன் வாழ, சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயம் செழிக்க மழை வேண்டும். அந்த மழைநீரைச் சேமிக்க இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் சிறந்த கொடைதான் மரங்கள். ‘மரம் வளர்ப்போம், மரம் வளர்ப்போம்’ என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமிருக்கிறது. பூமிக்கும் வரும் மழைநீரைச் சேகரித்து, நமக்கு மீண்டும் வழங்கும் பணியை மரங்கள் செய்கின்றன. அது மட்டுமல்ல, மரங்களின் முக்கியமான பணிகளில் ஒன்று உண்டு. வானத்திலிருந்து வேகமாக விழும் மழைநீரின் வேகம் மரக்கிளைகளின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால், நிலத்திலுள்ள வளமான மண் அரித்துச் செல்லப்படாமல் பாதுகாக்கப் படுகிறது. நிலத்தில் சுமார் 15 செ.மீ ஆழத்திலுள்ள மண்தான் வளமானது. அதில்தான் பயிர்களுக்குத் தேவையான நுண்ணுயிர்களும் சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அந்த வளமான மண், மரங்களில்லாத பகுதிகளில் அரித்துச் செல்லப்பட்டு, நிலத்தை வளமற்றதாக மாற்றிவிடுகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
இதை விஞ்ஞானிகள் பல்வேறு விதங்களில் விளக்குகிறார்கள். உங்களுக்கு நான் எளிய முறையில் சொல்கிறேன்... உதாரணமாக, ஒருநாள் மழை பெய்கிறது. அந்த மழைநீர் மரங்களில்லாத திறந்தவெளி நிலத்தில் விழுந்தால், மழைநீர் சில நிமிட நேரங்கள்தான் அந்த நிலத்திலிருக்கும். இதைத்தான் `மேல்மட்ட மழைநீர் ஓட்டம்’ (Surface Storm Flow) என்று சொல்கிறார்கள். அதே மழைநீர் மரத்தின் கிளைகளில் பட்டு இலைகள் மூலம் மண்ணில் கீழே விழும்போது அங்கிருக்கும் இலை, தழை மட்குகள் மூலம் மண்ணில் இறங்கிப் பல நாள்கள், வாரங்கள் வரை இருக்கும். இதை, `துணை மேல்மட்ட மழைநீர் ஓட்டம்’ (Sub Surface Storm Flow) என்று அழைக்கிறார்கள்.

அடுத்துச் சொல்லப்போவதுதான் முக்கியமானது. மழை பெய்யும்போது பெரும்பாலான நீர், மரத்தின் தண்டுப்பகுதி வழியாக வழிந்து, வேர் வழியாக மண்ணுக்குள் இறங்கும். இதை, `அடிமட்ட மழைநீர் ஓட்டம்’ (Base Flow) என்கிறார்கள். மரத்தின் வேர்கள் இந்த நீரை நிலத்தின் அடிமட்டத்துக்குக் கொண்டு செல்கின்றன. இது நாள்கள், மாதங்கள் எனக் கடந்து ஆண்டு முழுவதும் நிலத்திலிருக்கும். அதாவது, அடுத்த ஆண்டுப் பருவ மழை பெய்யும் வரை இந்த நீர், அந்த மரத்தின் அடியிலிருக்கும். மலைப் பகுதிகளிலுள்ள மரங்களின் வேர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட நீர்தான் ஊற்றாகி, அருவியாகி, நதியாகப் பெருக்கெடுக்கிறது.

இதனால்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் ‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு’ என்று எழுதியிருக்கிறார். இதில், `இருபுனல்’ என்பது மேற்பரப்பு நீர் ஓட்டத்தையும், அடிமட்ட நீர் ஓட்டத்தையும்தான் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். சென்னையில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், இந்தப் பகுதிகளிலுள்ள மரங்களைப் பார்க்கும்போது வேதனை எழுகிறது. `சிவப்பு பூ வேண்டும்’, `வெள்ளைப் பூ வேண்டும்’ என்று ஆசைப்பட்டு வெளிநாட்டு மரங்களை வளர்க்கிறார்கள் மக்கள். இதனால், என்ன நடக்கிறது தெரியுமா... குயில், கிளி, சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்கள் சிங்காரச் சென்னையிலிருந்து காணாமல் போய்விட்டன. அது மட்டுமா, பட்டாம்பூச்சி தொடங்கி பல வகையான பூச்சிகள் அழிந்துவிட்டன. பூச்சிகள் மூலம்தான், பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று மகசூல் கிடைக்கும். `இந்த உலகில் பூச்சிகள் மட்டும் நான்கு ஆண்டுகளுக்கு இல்லையென்றால் உலகம் அழிந்துவிடும்’ என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’ என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர். பல்லுயிர்களும் பகுத்துண்டு வாழ்வதுதான் சிறந்தது. ஆனால், மனிதன் பேராசையால் தன்னைச் சுற்றியிருக்கும் உயிர்களை அழித்துவிட்டு, தான் மட்டும் வாழ நினைக்கிறான்.

அதனால்தான் இந்த மண்ணுக்கும், மண்ணில் வாழும் பல்லுயிர்களுக்கும் உதவாத மரங்களை வளர்க்கிறோம். இனியாவது வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதைக் கைவிடுங்கள். இங்கிருக்கும் பழைய வீடுகளில் மா, பலா, கறிப்பலா... என இன்னும் இருக்கின்றன. சென்னை என்பது மருத நிலப்பகுதி. கடற்கரை ஓரம் நெய்தல் நிலம். ஆக, மருத நிலத்தில் மா, பலா, நாவல், கடம்பு, மகிழம், செண்பகம், ஈட்டி, வேங்கை, இலுப்பை... என இந்த நிலத்துக்குரிய மரங்களைத்தான் வளர்க்க வேண்டும். இந்த வகை மரங்களை வளர்க்கத் தொடங்கினால் மீண்டும் குயில்கள், கிளிகளின் ஓசை நம் காதுகளில் கேட்கும். நம் முன்னோர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலங்களுக்கும் மரங்களைப் பட்டியலிட்டி ருக்கிறார்கள். அதை அறிந்து நடவு செய்தால், இயற்கை செழிக்கும்.
“நண்பர்களே... மரக்கன்று நடவு செய்வது ஒருவிதமான கலை. ஆனால், இப்போது மரக்கன்றுகள் நடவு செய்யப்படுவதில்லை; புதைக்கப்படுகின்றன. பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, `இப்படித்தான் மரம் நடவு செய்ய வேண்டும்’ என்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம்.

அதாவது, நிலத்தில் மூன்று அடி ஆழம், மூன்று அடி அகலத்தில் குழி எடுக்கிறோம். அதில் மரக்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துள்ள உரங்களைக் கலந்து, குழியை நிரப்ப வேண்டும். குழியின் மேல் மட்டத்தில்தான் மரக்கன்றை நடவு செய்ய வேண்டும். இதன் மூலம், வேர்கள் மண்ணில் விரைவாகப் படர்ந்து, வேகமாக வளர்ந்து பலன் கொடுக்கத் தொடங்கும். சரியான பருவம் பார்த்து மரக்கன்றுகளை நடவுசெய்தால், இயற்கையே அதைக் காப்பாற்றும். அதாவது, ஒரு மரக்கன்று நடவு செய்தவுடன் 10 மழைப் பொழிவுகளை நன்றாகப் பெற்று விட்டதென்றால் அந்த மரக்கன்று நிச்சயம் உயிர் பிழைத்து, நன்கு வளர்ந்து உலகிலுள்ள பல்லுயிர்களுக்கும் உதவும்...’’ என ஏ.வி.வெங்கடாச்சலம், பயனுள்ள தகவல்களைப் பொன்மாரியெனப் பொழிந்தார்.