பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி பரப்பு ஆண்டுக்காண்டு அதிகரித்துவருகிறது. இதனால் அழிவின் விளிம்பிலிருந்த பல்வேறு நெல் ரகங்கள் மீண்டும் புழுக்கத்துக்கு வந்திருக்கின்றன.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சித்தையன்கோட்டை பகுதியில் பிரசித்திபெற்ற நெல் ரகம் காலாபாத். பிரியாணிக்காகவே சாகுபடி செய்யக்கூடிய ரகம். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்ட ரகம். தலப்பாகட்டி பிரியாணி உணவகம், ஆரம்ப காலங்களில் இந்தப் பகுதியில் காலாபாத் ரக நெல்லைச் சாகுபடி செய்துதான் பயன்படுத்தி வந்ததாகச் சொல்கிறார்கள். கதிர் முற்றிய பிறகு, வயல் பகுதிக்குச் சென்றாலே மணம் வீசக்கூடிய ரகம். வீரிய ரக நெல் வரவுக்குப் பிறகு, இந்தப் பகுதியிலிருந்து காணாமல் போய்விட்டது காலாபாத்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரக விதை நெல்லை வாங்கி, சாகுபடி செய்து அறுவடையையும் முடித்திருக்கிறார் முன்னோடி இயற்கை விவசாயி ரசூல் மைதீன். அதிகாலை நேரத்தில் வயலில் நெல்லை அறுவடை செய்துகொண்டிருந்தவரைச் சந்தித்தோம். “இந்தப் பகுதியில நெல், தென்னை விவசாயம்தான் பிரதானம். ஒரு காலத்துல `காலாபாத் நெல்’லுன்னு சொன்னாலே எங்க பகுதியைத்தான் சொல்வாங்க. அந்தளவுக்கு ஊரே அதைச் சாகுபடி செய்வாங்க. அறுவடைக் காலங்கள்ல வயல் பக்கம் போனா, அருமையான மணம் வீசும். அந்த மணத்துக்கே சாப்பிடணும்னு தோணும். ஆனா, காலப்போக்குல அந்த ரகம் காணாமப் போயிடுச்சு. யார்கிட்டயும் விதைநெல்கூட இல்லை. இந்தப் பகுதியில இருக்கிற வயசான அனுபவ விவசாயிகள் பலரும் காலாபாத்தைப் பத்திப் பெருமையாப் பேசுவாங்க. அவ்வளவு அருமையான நெல்லை, நாம சாகுபடி செய்யணும்னு முடிவு செஞ்சேன். விதை நெல்லைத் தேடி, பல இடங்கள்ல அலைஞ்சேன். ஒருவழியா, நண்பர் ஒருவர் அஸ்ஸாம்ல இருந்து விதைநெல் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி, நாற்று உருவாக்கி, ஒரு குழி (60 சென்ட்) நிலத்துல நடவு செஞ்சேன். இப்போ அறுவடை செய்யறோம்’’ என்றவர், நெற்கதிரைக் கையில் எடுத்துக் காண்பித்தார்.

கிலோ 85 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 1,36,000 ரூபாய் கிடைக்கும். தலப்பாகட்டி பிரியாணிக்கு காலாபாத் அரிசியைத்தான் பயன்படுத்தினார்கள்.

தொடர்ந்து பேசியவர், ‘‘இதோட வயசு 140 நாள்கள். வழக்கமான முறையில நாற்று உருவாக்கி, வழக்கமான முறையிலதான் நடவு செஞ்சோம். ஆரம்பத்துல தொழுவுரம் போட்டதோடு சரி. வேற எந்த உரம், பூச்சி மருந்தும் அடிக்கலை. இதுக்குப் பெருசா நோய்த் தாக்குதல் எதுவும் இல்லை. நான் இயற்கை முறையிலதான் சாகுபடி செஞ்சிருக்கேன். ஆனாலும், இது பொது வாய்க்கால் பாசன நிலம். மேல்பக்கம் வயல்கள்ல போடுற உரம், பூச்சிக்கொல்லி எல்லாம் தண்ணியில கலந்துதான் வரும். அதனால இதை 100 சதவிகிதம் இயற்கை விவசாயத்துல விளைஞ்சதுனு சொல்ல மாட்டேன். மெஷின்வெச்சு அறுக்க விருப்பமில்லை. அதனால, ஆளுங்களைவெச்சு, அறுவடை செய்யறேன். பழைய முறையிலேயே தட்டி, நெல்லைப் பிரிச்சு எடுக்கப்போறேன்’’ என்றவர், காலாபாத் ரகத்தின் சிறப்புகள்பற்றிப் பேசினார்.

“இந்த நெல்லோட தாள் மிகவும் மென்மையா இருக்குது. அறுகம்புல் கொஞ்சம் பெருசானா எப்படி இருக்குமோ அப்படி புல்லு மாதிரி இருக்குது. மாடுகள் கழிக்காமச் சாப்பிடும். இந்த நெல் மட்டும் மணம் இல்லை. அரிசியாக்கி சமைச்சா, சமையலறைக்குள்ள போனாலே மணம் தூக்கும். பல வருஷங்கள் கழிச்சு எங்க பகுதியில இதைச் சாகுபடி செஞ்சிருக்கேன். இந்த ரகத்தை மறுபடியும் விவசாயிகளிடம் கொடுத்து, சாகுபடி செய்யச் சொல்லணும்னு நினைக்கிறேன். அதனால, இதைக் கொஞ்சம் மட்டும் அரிசியாக்கிட்டு, மத்ததை விதை நெல்லாகக் கொடுக்கப்போறேன். விருப்பமுள்ள விவசாயிகள் வாங்கிக்கலாம்’’ என்றபடி விடைகொடுத்தார்.

அன்று மாலை நம்மை அலைபேசியில் அழைத்தவர், “12 மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சிருக்கு. மொத்தம் 720 கிலோ. இதுல 300 கிலோவை விதைநெல்லா கொடுக்கப் போறேன்’’ என்றார்.

தொடர்புக்கு, ரசூல் மைதீன், செல்போன்: 86678 45567
.மாப்பிள்ளைச் சம்பா சாதம், ருசியான காய்கறிக் குழம்பு... இயற்கை வாழ்வை போதிக்கும் தலைமையாசிரியர்!.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன் இயற்கை முறையில் மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செய்திருக்கிறார்.

அந்தப் பகுதியில் முதன்முறையாக மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செய்யப்படுவதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கீழவடகரை கிராமத்திலிருக்கிறது இவரது வயல். பாசனம் செய்து கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். “என் சொந்த ஊர் நாமக்கல். சில வருஷங்களுக்கு முன்னதான் பெரியகுளம் வந்தேன். இயற்கை முறையில விவசாயம் செய்யறதுல எனக்கு விருப்பம். அதற்கு ஐயா நம்மாழ்வாரும், பசுமை விகடனும்தான் வழிகாட்டிகள். தென்னை, எலுமிச்சையை இயற்கை முறையில் சாகுபடி செய்யறேன். மூணு நாட்டு மாடுகள் வெச்சிருக்கேன். இயற்கை முறையில நாட்டுக்கோழிகளை வளர்க்கிறேன். இப்போ சோதனை முயற்சியா மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செஞ்சிருக்கேன்’’ என்று தன்னைப் பற்றி அறிமுகம் சொன்னவர்,

“என் நிலத்துக்குப் பக்கத்துல இருக்கிற நண்பரோட நிலத்துலதான் நெல் சாகுபடி செஞ்சிருக்கேன். கிணற்றுப் பாசனம்தான். ஒரு ஏக்கர் 80 சென்ட் நிலத்துல மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செஞ்சிருக்கேன். சீர்காழியில விதைநெல் வாங்கினேன். இரண்டு ஏக்கருக்கு 40 கிலோ விதை நெல் தேவைப்பட்டது. நாற்றங்கால் மூலமா நாற்றுத் தயாரிச்சு நடவு செஞ்சேன். இதுக்கு தண்ணி அதிகமா தேவைப்படலை. நிலம் எப்பவும் ஈரமா இருக்க வேண்டியதில்லை. காயவிட்டுக்கூடப் பாசனம் செய்யலாம். நான் காய்ச்சலும் பாய்ச்சலுமாதான் பாசனம் செய்யறேன். பராமரிப்புனு பெருசா எதுவும் இல்லை. இதுவரைக்கும் ரெண்டு தடவை களை எடுத்தேன்’’ என்றவர் விற்பனை குறித்துப் பேசினார்.

“மாப்பிள்ளைச் சம்பா 160 நாள் பயிர். இன்னும் சில நாள்ல அறுவடை செய்யலாம். சந்தையில் மாப்பிள்ளைச் சம்பா அரிசி கிலோ 80 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. நான் முழுக்க இயற்கை முறையில சாகுபடி செஞ்சதால, 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலை போகும்னு எதிர்பார்க்கிறேன். ஏக்கருக்கு 30 மூட்டை (60 கிலோ மூட்டை) கணக்குல, மொத்தம் 54 மூட்டை கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். சராசரியா 3,000 கிலோ நெல் கிடைக்கும். இதை நான் அரிசியாக்கித்தான் விற்பனை செய்யப்போறேன். அரிசியாக்கினா 1,600 கிலோ அரிசி கிடைக்கும். கிலோ 85 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 1,36,000 ரூபாய் கிடைக்கும். இதுவரைக்கும் மொத்த செலவு 30,000 ரூபாய் ஆகியிருக்கு. ஆக, செலவு போக ரூ.1,00,000 லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்’’ என்றவர் நிறைவாக, “விவசாயிகள் விருப்பப்பட்டு விதை நெல் கேட்டாலும் கொடுக்கலாம்னு இருக்கேன். ஒரு கிலோ விதை நெல் 100 ரூபாய்னு வாங்கினேன். ஆனா, விவசாயிகளுக்கு கிலோ 80 ரூபாய்னு கொடுக்கப்போறேன். தண்ணீர்த் தேவை குறைவான, நம்முடைய பாரம்பர்ய நெல் ரகமான மாப்பிள்ளைச் சம்பா குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். லாப நோக்கோடு இல்லாமல், இயற்கை மீதான விருப்பத்தில் சோதனை முயற்சியில் இறங்கினேன். முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றிருக்கிறேன். அடுத்ததாக இயற்கை முறையில் கறுப்பு கவுனி சாகுபடி செய்யும் திட்டமிருக்கு” என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பாலசுப்பிரமணியன், செல்போன்: 82483 95031.

இப்படித்தான் சாகுபடி!

ஒரு ஏக்கர் 80 சென்ட் நிலத்தில் மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி குறித்து பாலசுப்பிரமணியன் சொன்னது இங்கே பாடமாக...

சாகுபடி நிலத்தில் 5 டன் தொழுவுரம், குப்பைகளிலிருந்து தயாரிக்கும் கம்போஸ்டு உரம் 14 மூட்டைகள் இரண்டையும் கலந்து நிலத்தில் போட்டு உழவு செய்ய வேண்டும். நாற்றங்கால் அமைத்து, விதைக்க வேண்டும். 12-ம் நாள் 10 லிட்டர் மாட்டுச் சிறுநீருடன், நான்கு கிலோ வேப்பங்கொட்டை கலந்து அரைத்து, வடிகட்டித் தெளிக்க வேண்டும். 25-ம் நாளில் நாற்றைப் பறித்து, நடவு செய்ய வேண்டும்.

நாற்றை ஓரடி இடைவெளிவிட்டு குத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். மாப்பிள்ளைச் சம்பா வளரும்போது அதிக தூர்கட்டி ஐந்தடிக்குக் குறையாமல் வளரும். அதனால், ஓரடி இடைவெளி தேவை. பிறகு பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மீன் அமிலம் நல்ல உரமாகவும், பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் இருக்கும். ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 15 நாளைக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். மாப்பிள்ளைச் சம்பாவில் பூச்சித் தாக்குதல் குறைவு என்றாலும், சீத்தா இலை, வேப்ப இலை, எருக்க இலை, நொச்சி இலை, புங்கன் இலை ஆகிய ஐந்திலைக் கரைசலைத் தெளிக்க வேண்டும். தலா அரைக் கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து அரைத்து வடிகட்டி 25 நாள்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்” என்றார்.

உயரம் குறைவு, மகசூலுக்குப் பிரச்னை இல்லை!

மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி குறித்து பெரியகுளம் உதவி வேளாண் அலுவலர் செந்திலிடம் பேசினோம். “இயற்கை முறையில் வாழை, தென்னை போன்றவற்றைப் பயிர் செய்யத்தான் பெரும்பாலும் விவசாயிகள் ஆர்வம்காட்டுகிறார்கள். பாலசுப்பிரமணியன், மாப்பிள்ளைச் சம்பா பயிர் செய்திருக்கிறார். இந்தப் பகுதியில் இதுதான் முதன்முறை. பொதுவாக மாப்பிள்ளைச் சம்பா பயிர் செய்ய களிமண் மற்றும் வண்டல் மண் கலந்த நிலம்தான் சரியாக இருக்கும். பாலசுப்பிரமணியனின் இடத்தில் களிமண் அதிகமாக இருப்பதால், பயிரின் உயரம் சற்று குறைவாக இருக்கிறது. ஆனால், மகசூல் பிரச்னை இருக்காது” என்றார்.