Published:Updated:

மாதம் ரூ.40,000... ஏற்றுமதியாகும் மரச்செக்கு எண்ணெய்!

மாடுகள் பூட்டப்பட்ட கல்செக்குடன் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
மாடுகள் பூட்டப்பட்ட கல்செக்குடன் செல்வன் ( நா.ராஜமுருகன் )

பாரம்பர்யம்

மாதம் ரூ.40,000... ஏற்றுமதியாகும் மரச்செக்கு எண்ணெய்!

பாரம்பர்யம்

Published:Updated:
மாடுகள் பூட்டப்பட்ட கல்செக்குடன் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
மாடுகள் பூட்டப்பட்ட கல்செக்குடன் செல்வன் ( நா.ராஜமுருகன் )

வளமான விவசாய நிலம், சாயக்கழிவு கலந்த நொய்யல் ஆற்றுத் தண்ணீரால் வீணானது. அதற்காகச் சோர்ந்துவிடாமல், மாட்டுக் கல்செக்கு அமைத்து, எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார் செல்வன். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பிண்ணாக்கு உற்பத்தி செய்து விற்பனையில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள வளையாபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வன். கரூர் - ஈரோடு சாலையில் உள்ள ஆண்டாங்கோயில் மேல்பாகம் ஆத்தூர் பிரிவு அருகில், ‘குழல் எண்ணெயகம்’ என்ற பெயரில், மாட்டுச் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார். மாட்டுக் கல் செக்கில் எள்ளைக் கொட்டி, தகுந்த பதத்தோடு எண்ணெய்யாக ஆட்டி எடுப்பது குறித்து ஊழியருக்கு ஆலோசனைக் கொடுத்துக் கொண்டிருந்த செல்வனைச் சந்தித்தோம்.

குடும்பத்தினருடன்
குடும்பத்தினருடன்

“எங்களுக்கு விவசாயம் தான் தொழில். 10 ஏக்கர் நிலமிருக்கு. நொய்யல் ஆற்றுப் பாசனம்கிறதால, அந்த நிலம் அருமையான விளைச்சலைக் கொடுக்கும். நெல், கரும்புனு பயிர் செய்வாங்க. எங்கப் பகுதி கரும்பு சுற்றுவட்டாரத்துல பிரபலம். நல்லா திரட்சியா, சர்க்கரை சத்து அதிகமா இருக்கும். புகளூர் சர்க்கரை ஆலையில எங்க ஊரு கரும்புக்குத் தனி கிராக்கி இருந்துச்சு.

பள்ளிப் படிப்பு முடிச்சுட்டு 18 வயசுலேயே விவசாயம் பார்க்க வந்துட்டேன். நல்லா வளமான மண்ணுங்கிறதால, கரும்பையும் நெல்லையும் மாறி மாறி விளைவிச்சேன். 15 வருஷத்துக்கு முன்னாடி, நொய்யல் ஆத்துல சாயப்பட்டறைக் கழிவு நீர் கலந்து வந்து, நிலம் முழுக்க பாழாகிடுச்சு. விவசாயம் போச்சு. கரும்பு, நெல்லை வயல்ல விளைவிக்க முடியாத அளவுக்கு மோசமான நிலைமை வந்துடுச்சு. அதனால நிறைய பேர் மாற்று விவசாயத்துக்குப் போயிட்டாங்க. நான் 10 ஏக்கர்லயும் தென்னையைப் போட்டேன். அதுவும் சரியாக காய்க்கல.

கஷ்டப்பட்டு மகன் சசிக்குமாரை எம்.பி.ஏ வரைக்கும் படிக்க வெச்சேன். லண்டன்ல வேலை கிடைச்சு அங்க போனான். நாலு வருஷத்துக்கு முன்னாடி, ‘லண்டன்ல இயற்கை உணவுப் பொருள், மாட்டுச் செக்கு எண்ணெய்க்கு நல்ல கிராக்கி இருக்கு. அதனால, மாட்டுச் செக்கு போடுங்க’னு மகன் சொன்னான்.

எண்ணெய் அளக்கும் பணியில்
எண்ணெய் அளக்கும் பணியில்

உடனே அதுக்கான முயற்சியில இறங்குனேன். புதுசா கல்செக்கு அமைக்குறவங்க கிடைக்கலை. காரணம், மாட்டுச் செக்கு வழக்கத்துல இல்லாமப் போனதுதான். அதனால, பழைய கல்செக்கு தேடினேன். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில விவசாயி ஒருத்தர்கிட்ட பழைய கல்செக்கு இருந்தது. அதை ரூ.30,000 கொடுத்து வாங்கிகிட்டு வந்தேன். இந்த இடத்தை மாசம் ரூ.7,000 வாடகைக்குப் பேசி, தொழிலை ஆரம்பிச்சேன். 3 வருஷம் ஆச்சு.

கல்செக்கை வாங்கினாலும், செக்கு ஆட்டத் தேவையான வால்வீச்சு மரம், மாடுகளை இணைக்கத் தேவைப்படுற நுகத்தடி, கல்செக்கில் எண்ணெய் பிழியும் உலக்கை, வால்வீச்சு மரத்தையும், உலக்கையையும் இணைக்கும் மரம்னு எல்லாவற்றையும் வாகை மரத்துல செஞ்சோம். அதுக்கு ரூ.60,000 வரை செலவாச்சு. கடலை, எள், தேங்காய்... பருப்புகளைப் போட்டு வைக்க தனி அறைகள், அலுவலக அறை, எண்ணெய் பாட்டில்களை வைக்கும் அறை, பிண்ணாக்கைக் கொட்டி வைக்கத் தனி இடம், கல்செக்கு இயங்குற இடத்துல தகரம், மேலே கூரைனு கட்டட அமைப்புகளுக்கு ரூ.7 லட்சம் வரை செலவாச்சு. காங்கேயம் மாடுகள் ஒண்ணேகால் லட்சம் ஆச்சு’’ என்றவர் எண்ணெய் உற்பத்தி குறித்துப் பேசத் தொடங்கினார்.

‘‘ஆரம்பத்துல 25 முதல் 30 கிலோ அளவுக்குத்தான் தினமும் ஆட்டுவோம். ஆனா, அதுல கிடைச்ச எண்ணெயை விற்பனை செய்றது ரொம்பச் சிரமமாகிடுச்சு. அதை வாங்க முதல்ல யாரும் ஆர்வம் காட்டல. தொடர்ந்து முயற்சி பண்ணினோம். என் மனைவி கோமதியும் மருமகள் மலர்ச்செல்வியும் ஒத்தாசைப் பண்ண ஆரம்பிச்சாங்க. கரூர் - ஈரோடு சாலையில செக்கு அமைச்சுருந்ததால, இந்த வழியா போற இயற்கை ஆர்வலர்கள் சிலர் எண்ணெய் வாங்கினாங்க. அவங்க மூலமா அப்படியே பரவி, பல மாவட்டங்கள்ல இருந்தும் நிறைய பேர் வாங்க ஆரம்பிச்சாங்க. பிறகு, மூணுபேரை வேலைக்கு நியமிச்சோம்.

மாடுகள் பூட்டப்பட்ட கல்செக்குடன் செல்வன்
மாடுகள் பூட்டப்பட்ட கல்செக்குடன் செல்வன்

என் மகனோட முயற்சியால குவைத் நாட்டுலயும் வாடிக்கை யாளர்கள் கிடைச்சாங்க. இப்போ எல்லா எண்ணெயையும் சேர்த்து, மாசம் 650 லிட்டர் வரைக்கும் குவைத் நாட்டுக்கு அனுப்புறோம். ஓரளவு இந்தத் தொழில் நம்பிக்கை கொடுத்ததால, 6 மாசத்துக்கு முன்னாடி சொந்த ஊர்ல, வீட்டுக்குப் பக்கத்திலயே இன்னொரு கல்செக்கையும் அமைச்சோம். அங்க, மாடுகள் வாங்க, ஷெட் அமைக்க, கல் செக்குனு மூணு லட்சம்வரை செலவாச்சு.

ரெண்டு இடங்கள்லயும் சேர்த்து இப்போ வாரத்துக்கு 750 கிலோ நிலக்கடலை, 500 கிலோ எள், 250 கிலோ தேங்காய் ஆட்டுறோம். இதுமூலமா, வாரத்துக்கு 300 லிட்டர் கடலை எண்ணெய், 200 லிட்டர் நல்லெண்ணெய், 120 லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைக்குது. 450 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 300 கிலோ எள் பிண்ணாக்கு, 130 கிலோ தேய்காய்ப் பிண்ணாக்கு கிடைக்குது. வாரத்துக்கு ஒருதடவை, மொத்த வியாபாரிகிட்ட எள், கடலை, சல்பர் வைக்காத தேங்காய்ப் பருப்பை வாங்கிட்டு வருவேன். சொந்த தோப்புல கிடைக்குற தேங்காயையும் பயன்படுத்துவேன்.

இப்போ கடலைப் பருப்பு ரூ.90, எள் ரூ.115, தேங்காய்ப் பருப்பு ரூ.130-க்கும் வாங்குறோம். எண்ணெய் ஆட்டுறதுக்குத் தேவையான பருப்பை முதல்நாளே, ஒருபகல் முழுக்க வெயில்ல காய வைக்கணும். ஒருநாள் கடலை, அடுத்த நாள் எள், மூணாம் நாள் தேங்காய்னு முறை வச்சு எண்ணெய் ஆட்டுவோம். ஒரு காணம் (ஒரு ரவுண்டு) ஆட்ட, எள், கடலை, தேங்காய்ப் பருப்பைப் பொறுத்தவரை 16 கிலோ வரை போடுவோம். எள் ஆட்டும்போது மட்டும், ஒன்றரை கிலோ நாட்டுக்கருப்பட்டியைச் சேர்ப்போம். அதேபோல, எள், கடலைப் பருப்பை ஆட்ட, ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்க்கணும். அப்பதான், உலக்கை எண்ணெயை ஆட்டி எடுக்கும்’’ என்றவர் மின்சார ரோட்டரி மற்றும் மாட்டுச் செக்கு இரண்டுக்குமான வித்தியாசம் குறித்து விளக்கினார்.

கல்செக்கில் கொட்டப்படும் கடலை
கல்செக்கில் கொட்டப்படும் கடலை

‘‘மாட்டுச் செக்குல ஒரு காணம் முடிய, 1 மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகும். ஆனால், மின்சார ரோட்டரியில் 20 நிமிஷத்தில் எண்ணெயை ஆட்டி முடிச்சுருவாங்க. அந்த எண்ணெய் சூடாகிடும். அதனால தாளிச்ச எண்ணெய் பதத்துலதான் அது இருக்கும். சத்து இருக்காது. நல்ல கொழுப்பு வெளியேறிடும். அந்த எண்ணெயைப் பயன்படுத்தும்போது, உடம்புல கெட்ட கொழுப்பு சேரும். ஆனால், மாட்டுச் செக்கில் மெதுவா எண்ணெய் ஆட்டுறதால குளிர்ச்சியா இருக்கும். மொத்த சத்துகளும் அதில் இருக்கும். நல்ல கொழுப்பு இருக்கும். கொழகொழப்பா இருக்கும். எண்ணெய்ச் சட்டியில் ஊற்றித் தாளிக்கும்போது, நல்ல மணம் வரும். அதில் சமைச்ச சாப்பாட்டைச் சாப்பிடும்போது ருசியாகவும் மணமாகவும் இருக்கும். செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய்யை மூணு நாள் தொடர்ந்து வெயிலில் காய வைக்கணும். அப்படிப் பண்ணினாதான், எண்ணெய்க்குக் கூடுதல் சத்து கிடைக்கும். நாங்க தயாரிக்கிற எண்ணெய்க்குத் தமிழ்நாடு அரசின் தரச்சான்றிதழ் வாங்கியிருக்கோம். ஒரு லிட்டர் கடலை எண்ணெய் ரூ.230-க்கும், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.360-க்கும், ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.280-க்கும் விற்பனை செய்றோம்.

வடியும் எண்ணெய்
வடியும் எண்ணெய்

கடலைப் பிண்ணாக்கு கிலோ ரூ.55, எள் பிண்ணாக்கு கிலோ ரூ.20, தேங்காய்ப் பிண்ணாக்கு கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்றோம். பிண்ணாக்குக்கு உள்ளூர்ல நல்ல கிராக்கி இருக்கு. மாடுகளுக்குத் தேவையான புல்லைத் தென்னந்தோப்புல விளை விச்சுக்குறேன். அதுக்கு தேவையான பிண்ணாக்கும் கைவசம் இருக்கு. தேவைப் பட்டா, கூடுதலா தீவனம் வெளியில் வாங்கிக்குவேன். இட வாடகை, மூலதனம், ஆள் கூலி, தானியங்கள், பருப்பு வாங்கியது, பாட்டில் செலவுனு எல்லாம் போக, மாசம் ரூ.40,000 வரை லாபம் கிடைக்குது.

ரோட்டரியில (மின்சாரம் மூலம் இயங்கும் செக்கு) ஆட்டுற எண்ணெய், எண்ணெய் கம்பெனிகள் விற்பனை செய்ற எண்ணெய் விலையைவிட, லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை வெச்சு விற்கிறோம். காரணம் மாட்டுச் செக்கு இயக்குறதுல செலவு, நேரம், வேலையாள் அதிகம்’’ என்றவர் நிறைவாக,

‘‘சாயப்பட்டறை கழிவுகளால் விவசாயம் போச்சேன்னு மனம் நொந்து போயிருந்தேன். ஆனா, என் மகன் கொடுத்த யோசனை, இப்ப எனக்குப் புது உத்வேகத்தைக் கொடுத்திருக்கு. இந்த மாட்டுச் செக்கு எண்ணெய் தொழிலை இன்னும் பெரிதாக்கி, உலகம் முழுக்க நாட்டுச் செக்கு எண்ணெய்யைக் கொண்டுபோய்ச் சேர்க்கணும். இதுதான், என்னோட லட்சியம்” என்றார் உறுதியுடன்.

தொடர்புக்கு, செல்வன்,

செல்போன்: 94420 63183.