
ஓவியம்: வேலு
குளத்தில் மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். குளக்கரையில் அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி.வியாபாரம் முடித்து வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் கூடையை இறக்கி வைத்துவிட்டு அமர்ந்தார். மாட்டைக் குளிப்பாட்டிவிட்டு ஏரோட்டியும் மேலேறி வந்து அமர்ந்துகொள்ள, அன்றைய மாநாடு அங்கேயே கூடியது. ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.
“இப்போ சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்துகிட்டு இருக்கில்லையா... அதுல பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்கணும்னு சில தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வெச்சிருக்காங்க. அதுக்குப் பதில் சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘பால் கொள்முதல் விலையை உயர்த்த தயாராக இருக்கிறோம். பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், விற்பனை விலையையும் உயர்த்த வேண்டி வரும். அதனால், நுகர்வோர் கூடுதல் விலை கொடுத்துப் பால் வாங்க வேண்டியிருக்கும். ‘பால் விலை உயர்ந்துவிட்டதுனு நாங்கள் போராட்டம் செய்யமாட்டோம்’ என்று உறுதி கொடுத்தால், பால் கொள்முதல் விலையை உயர்த்த நாங்கள் தயார். சட்டசபைக் கூட்டம் முடிந்ததும்… பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் ரெண்டு தரப்புமே பாதிக்கப்படாத அளவுக்குப் பால் விலை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்’னு சொல்லியிருக்கார். அதனால, பால் கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கு” என்றார் வாத்தியார்.
அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்த ஏரோட்டி, “நாமக்கல், சேலம் மாவட்டங்கள்ல கிட்டத்தட்ட 1,000 முட்டைகோழிப் பண்ணைகள் இருக்கு. மொத்தமா 5 கோடி கோழிகள் மூலமா தினமும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுது. கோழிகளுக்கான தீவனம் தயாரிக்கிறதில் முக்கியமான மூலப்பொருள் மக்காச்சோளம்தான். தமிழ்நாட்டில் வறட்சிக் காரணமாகவும் படைப்புழுக்கள் தாக்குதல் காரணமாகவும் மக்காச்சோள விளைச்சல் குறைஞ்சிடுச்சு.

அதேபோல ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள்லயும் போதுமான அளவு மழை இல்லாததால், மக்காச்சோள விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கு. அதனால், கோழிகளுக்கான தீவனத்துக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கு. பீஹார் மாநிலத்திலிருந்து, 25,000 டன் மக்காச்சோளம் ரயில்மூலம் கொண்டு வரப்பட்டு, பண்ணையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கு. இந்தியாவில் போதிய அளவு மக்காச்சோள உற்பத்தி இல்லை. இதனால, கிலோ 14 ரூபாய்க்கு விற்பனையாகிட்டிருந்த மக்காச்சோளம், இப்போ விலை அதிகமாகி கிலோ 30 ரூபாய் அளவில் விற்பனையாகிட்டிருக்கு.
அந்த விலைக்கு வாங்கித் தீவனம் தயாரிச்சா பண்ணைக்காரங்களுக்குக் கட்டுப்படி ஆகாது. அதனால, இப்போதைக்கு மக்காச்சோளத்தை வெளிநாடுகள்ல இருந்து இறக்குமதி செஞ்சாத்தான் தீவனத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியும். இத பிரதமர்கிட்ட எடுத்துச் சொல்லி இறக்குமதிக்கு அனுமதி வாங்கித்தரணும்னு கோரிக்கை வெச்சு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிகிட்ட முட்டைக்கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மனு கொடுத்திருக்காங்க” என்றார். கூடையிலிருந்து ஆளுக்குக் கொஞ்சம் நாவல் பழங்களை எடுத்துக் கொடுத்தார், காய்கறி. அவற்றைச் சுவைத்துக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.
“பொள்ளாச்சி யூனியன் அலுவலக வளாகத்தில், தெற்கு வட்டார வேளாண்மைத்துறை அலுவலகமும் தெற்கு வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகமும் தனித்தனியா செயல்பட்டுக்கிட்டு இருக்கு. தோட்டக் கலைத்துறைக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறை, வேளாண்மைத்துறைக்குச் சொந்தமானது.
அந்த அறையைத் திடீர்னு வேளாண்மைத் துறை அலுவலர்கள் எடுத்துக்கிட்டாங்க. இப்போ தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் பயன்பாட்டுக்கு அலுவலக அறை இல்லை. அதனால, அவங்களை விவசாயிகள் சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கு. அலுவலகத்தில், ‘தென்னை மற்றும் தென்னை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும் வேளாண் துறையை ‘மட்டும்’ அணுகவும். மக்காச்சோளம், பருத்தி, துவரை, உளுந்து, தட்டைப்பயறு மற்றும் இதர பயிர்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கவும் வேளாண் துறையை ‘மட்டும்’ அணுகவும்’னு குறிப்பிட்டு ஃப்ளக்ஸ் பேனர் வெச்சிருக்காங்க. இதனால, விவசாயிகள் குழப்பத்தில் இருக்காங்க.
இந்தப் பிரச்னைக்குக் காரணம் மானியத்திட்டத்துக்கான இலக்கு நிர்ணயம்தானாம். இந்த வருஷம், சொட்டுநீர்ப்பாசனத் திட்டத்துக்குத் தெற்கு வட்டார வேளாண்மைத் துறைக்கு 430 ஹெக்டேர் பரப்பும், தெற்கு வட்டார தோட்டக்கலைத் துறைக்கு, 390 ஹெக்டேர் பரப்பும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கு. இது வழக்கமான அளவைவிட ரெண்டு மடங்காம். இலக்கைக் கட்டாயம் அடையணும்னு மேலதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறாங்களாம். ஆனா, விவசாயிகள் இந்தத் திட்டத்துக்குப் பெருசா ஆர்வம் காட்டலையாம். அதனால, விவசாயிகளைத் தேடிப்பிடிச்சு மானியம் கொடுக்க, படாதபாடு பட்டுக்கிட்டு இருக்காங்களாம் அலுவலர்கள். அதனால, விவசாயிகளைப் பிடிக்கிறதில் தோட்டக் கலைத்துறைக்கும் வேளாண்மைத்துறைக்கும் கடும் மோதலாம்.
உதாரணமா தென்னை வேளாண்மைத் துறையின் கீழ் வரும். ஆனா, தென்னந்தோப்பில் சாகுபடி செய்கிற ஊடுபயிர்கள் தோட்டக்கலைத்துறையின் கீழ் வரும். தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தென்னை விவசாயிகளைப் பிடிச்சு ஊடுபயிர்களைக் காட்டி மானியம் கொடுத்திடுறாங்களாம். அதனால, வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கிடைக்கிறதில் பிரச்னை ஏற்படுதாம். அதனாலதான் ஃப்ளக்ஸ் பேனர்லாம் அடிச்சு அலுவலகத்தில் மாட்டி இருக்கிறாங்களாம்.
துறை சார்ந்த மேலதிகாரிகள் சொட்டுநீர்ப் பாசனம் செய்து தர்ற கம்பெனிகளோட ‘பேசி’க்கிட்டு தங்களோட அலுவலர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறாங்கனு சொல்றாங்க. அதில்லாம இந்தத் திட்டத்தில் தரமில்லாத பொருள்களைக் கொடுக்கிறாங்கங்கிறதால விவசாயிகளும் ஆர்வம் காட்டுறதில்லையாம்” என்றார்.
அந்த நேரத்தில் “மாட்டுக்குத் தண்ணி காட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்து கிளம்ப அன்றைய மாநாடும் அத்தோடு முடிவுக்கு வந்தது.
வழிகாட்டும் கையேடு!
குட்டி பத்மினி
திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகை

‘பசுமை விகடன்’ இதழில் வெளிவரும் அனைத்து விஷயங்களையும் படித்து வருகிறேன். அவற்றை, வைத்துத்தான், காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் எனது 4 ஏக்கர் நிலத்தில், மா மற்றும் சப்போட்டா சாகுபடி செய்து வருகிறேன். தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு குறித்த விஷயங்களை ரொம்பவே விரும்பிப் படிப்பேன். இதுசம்பந்தமாகப் பசுமை விகடன் நிறைய பயிற்சிகளை நடத்த வேண்டும். அதேமாதிரி முருங்கை சம்பந்தமான கட்டுரைகளைப் படித்துத் தற்போது முருங்கை நடவு செய்வதற்கான வேலைகளைச் செய்து வருகிறேன். விவசாயம் குறித்துத் தெரியாதவர்களுக்குப் பசுமை விகடன்தான் வழிகாட்டும் கையேடு. பசுமை விகடன் மேன்மேலும் வளர வேண்டும்.
‘பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்’ தொடர், இந்த இதழில் இடம் பெறவில்லை.