Published:Updated:

மரத்தடி மாநாடு : அதிகரிக்கும் அங்கக விவசாயிகளின் எண்ணிக்கை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

முன்ன மாதிரி இப்ப இருக்குற இளைய தலைமுறை கரும்புகளை விரும்பிச் சாப்பிடுறது இல்லையே.

‘‘என்ன கண்ணம்மா... உன்னைப் பார்த்தாதான் பொங்கல் மாதிரி தெரியுது. புதுச்சேலையில கலக்குறே கண்ணம்மா...” என்று காய்கறி கண்ணம்மாவை வம்புக்கிழுத்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். “நீ மட்டும் என்ன... புது வேட்டி, சட்டை, துண்டுனு ஜமாய்க்கிறேய்யா...” என்று சிரித்தபடி பதிலளித்தார் கண்ணம்மா. அப்போது கரும்புத்துண்டைக் கடித்தபடி வந்து சேர்ந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி.

‘‘இந்த வருஷம் ஊரெல்லாம் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுனு பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடியிருக்காங்க வாத்தியாரே...’’ என்றார் கண்ணம்மா.

“உண்மைதான். ஜல்லிக்கட்டு அருமையா நடந்திருக்கு. அதே நேரம், `ஜல்லிக்கட்டுல பரிசு வாங்கின காளைகள்ல ஜெர்சி காளைகளும் இருக்கு’னு புகார் கிளம்பியிருக்குது. நாட்டு மாடுகளைக் காப்பாற்றத்தான் மாணவர்களும் இளைஞர்களும் போராடி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தாங்க. ஆனா, ஜல்லிக்கட்டுல நாட்டு மாடுகளைப் புறக்கணிச்சுட்டு, ஜெர்சி மாடுகளுக்குப் பரிசு கொடுக்கறாங்க. இனியாவது ஜல்லிகட்டு நடத்தறவங்க இதுல கவனமா இருக்கணும்’’ என்ற வாத்தியார், ‘‘திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மதுரை, தஞ்சை மாவட்டங்கள்ல இருந்துதான் கரும்பு கொண்டு வந்திருக்காங்க. இந்த வருஷம் கரும்பு மகசூல் அதிகம். அதனால வரத்தும் அதிகமா இருந்துச்சு. ஒரு கட்டுக் கரும்பு 350 முதல் 400 ரூபாய் வரைக்கும் விலை போயிருக்கு. ஆனாலும், பொங்கலுக்கு முந்தைய நாள் ஒரு கட்டு 100 ரூபாய்க்கு குறைவா வித்தும் விற்பனையாகலையாம். டன் கணக்குல கரும்புக்கட்டுகள் தேங்கிடுச்சாம். அதனால, `ஒரு லோடுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் நஷ்டமாகிடுச்சு’னு புலம்புறாங்க வியாபாரிகள்’’ என்றார்.

‘‘முன்ன மாதிரி இப்ப இருக்குற இளைய தலைமுறை கரும்புகளை விரும்பிச் சாப்பிடுறது இல்லையே... அந்தக் காலத்துல கட்டுக்கட்டா கரும்பு வாங்குவோம். ஆனா, இப்போ சம்பிரதாயத்துக்கு ஒண்ணு ரெண்டு கரும்புதான் வாங்குறாங்க. அப்புறம் எப்படி வியாபாரம் ஆகும்...’’ என்று ஆதங்கப்பட்டார் கண்ணம்மா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘கரும்பு விவசாயிகள் மட்டுமில்லை, நெல் விவசாயிகளும் வைக்கோல் வியாபாரம் ஆகலைன்னு வருத்தத்துல இருக்காங்க’’ என்ற ஏரோட்டி, ‘‘தென்காசி மாவட்டத்துல பிசான சாகுபடி நெல் அறுவடை நடந்துக்கிட்டு இருக்கு. அறுவடைக்குப் பிறகு, வைக்கோல் கட்டுகளை கேரள வியாபாரிகளுக்கு விவசாயிகள் விற்பனை செய்வாங்க. இப்போ அதுல ஒரு சிக்கல். வைக்கோல் வாங்கிட்டுப் போற லாரிகளை செக்போஸ்ட்ல நிப்பாட்டிடுறாங்களாம். அதிக பாரம் ஏத்திட்டு போகுதுன்னு கேரள எல்லையில இருக்கிற புளியறையில, ஒரு வாரமா நிறைய லாரிகளை நிறுத்தி அபராதம் போடுறாங்களாம். அதனால கேரள வியாபாரிகள் வைக்கோல் கொள்முதல் செய்யறதை நிப்பாட்டிவெச்சிருக்காங்களாம். இப்போ வயல்ல வைக்கோல் குவிஞ்சு கிடக்காம். விவசாயிகளும் வேதனையில இருக்காங்களாம். அவங்க மட்டுமில்ல, மாவட்டத்துல வைக்கோல் கட்டுற தொழில் செய்யும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும் வேலையில்லாம தவிக்கிறாங்களாம்’’ என்றார் ஏகாம்பரம்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘ `கல்லைக் கண்டா நாயைக் காணோம்; நாயைக் கண்டா கல்லைக் காணோம்’னு சொல்ற மாதிரிதான் இருக்குது சம்சாரிக நிலைமை’’ என்று உதட்டைச் சுளித்தார் கண்ணம்மா.

‘‘ஒரு சந்தோஷமான செய்தி சொல்றேன் கேளுங்க...’’ என்ற வாத்தியார், “ `2016-ம் வருஷம் ஏப்ரல் மாசத்துல இருந்து 2017 மார்ச் மாசம் வரைக்கும், 146 விவசாயிகள் தமிழ்நாட்டுல அங்கக விவசாயச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிச்சிருக்காங்களாம். இதன் மூலமா இந்தக் காலத்துல மட்டும் 2,710 ஏக்கர் நிலங்கள் இயற்கை விவசாய நிலங்களா அங்கீகரிக்கப்பட்டிருக்கு. 2017 ஏப்ரல்ல இருந்து 2018 மார்ச் வரைக்கும், 376 விவசாயிகள் 3,291 ஏக்கர் நிலத்தைப் பதிவு செஞ்சிருக்காங்க. 2018 ஏப்ரல்ல இருந்து 2018 டிசம்பர் வரைக்கும், 1,308 விவசாயிகள் 7,145 ஏக்கர் நிலத்தைப் பதிவு செஞ்சிருக்காங்க. 2019 ஏப்ரல்ல இருந்து 2019 டிசம்பர் வரைக்கும், 4,157 விவசாயிகள் 24 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பதிவு செஞ்சிருக்காங்க. இப்படி ஒவ்வொரு வருஷமும் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது’னு மாநில அங்ககச் சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் பிரியதர்ஷினி சொல்லியிருக்காங்க’’ என்றார் மகிழ்ச்சியாக.

‘‘நம்மாழ்வார் அய்யா போட்ட விதையும், அதுக்குப் பசுமை விகடன் கொடுத்த ஊக்கமும் இப்படி வளர்ந்து நிக்குது’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘எப்படியோ... சீக்கிரமே தமிழ்நாடு இயற்கை விவசாய மாநிலமா மாறினா சந்தோஷம்தான்’’ என்று சொன்னபடி வாத்தியார் கிளம்ப, முடிவுக்கு வந்தது மாநாடு.