Published:Updated:

மரத்தடி மாநாடு: கழுதை வளர்க்க மானியம்! - அலறும் ஆவின் அதிகாரிகள்!

கழுதை வளர்க்க மானியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுதை வளர்க்க மானியம்!

இது வர்ற வழியில என்னோட சினேகிதன் கொடுத்த காய்கறி பை’’ சிரித்துக்கொண்டே பதிலளித்தார் வெள்ளைச்சாமி.

தோட்டத்திலிருந்த தேங்காய்களை மூட்டைக்கட்டி வண்டியில் ஏற்றி, வீட்டுக்குக் கொண்டுபோய்க் கொண்டு இருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அப்போது, தனது தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்துக் கூடையைத் தலையில் வைத்து நடந்துகொண்டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. கண்ணம்மாவின் அருகில் வண்டியை நிறுத்திய ஏகாம்பரம், “வீட்டுக்குத்தான போற.. வண்டியில ஏறு’’ என்றதும் வண்டியில் ஏறிக்கொண்டார் கண்ணம்மா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“வானம் ஒரே இருட்டா இருக்கு. மழை வருமாய்யா’’ மேகத்தைப் பார்த்துக்கொண்டே ஏரோட்டியிடம் கேட்டார் கண்ணம்மா. “வரும்... ஆனா வராது. இப்பல்லாம் மழையை நம்பவே முடியலையே. வர்ற மாதிரி இருக்கும்... காணமப்போயிடும். எதிர்பார்க்காத நேரத்துல பெய்யும். வானிலை ஆராய்ச்சி மையத்து ஆளுங்களே இன்னிக்கு வரைக்கும் தெளிவா சொல்ல முடியாத விஷயத்தை என்கிட்ட கேக்குறியே கண்ணம்மா’’ என நக்கலடித்தார் ஏகாம்பரம்.

தோட்டத்திலிருந்து சைக்கிளில் வந்துகொண்டு இருந்த வாத்தியார் வெள்ளைச்சாமி. சாலையில் மாடுகளின் மணி சத்தம் கேட்கவும் வழி விட்டு ஒதுங்கி நின்றார். புழுதி பறக்க ஓடிக்கொண்டிருந்த மாட்டு வண்டியை, வாத்தியாரைப் பார்த்தவுடன் நிறுத்தினார் ஏரோட்டி.

கழுதை வளர்க்க மானியம்!
கழுதை வளர்க்க மானியம்!

“என்ன வாத்தியாரே... சந்தைக்குப் போயிட்டு வர்றீங்களா?’’ என்றார் ஏகாம்பரம். “இல்லைய்யா...தோட்டத்துல இருந்து வர்றேன். இது வர்ற வழியில என்னோட சினேகிதன் கொடுத்த காய்கறி பை’’ சிரித்துக்கொண்டே பதிலளித்தார் வெள்ளைச்சாமி.

“போன தடவை வேளாண்மைத்துறையில சிலபேரு நாட்டாமைத்தனம் பண்றாங்கன்னு சொன்னீங்களே வாத்தியாரே... அது முதலமைச்சர் வரைக்கும் போயிடுச்சாம். சம்பந்தப்பட்டவங்களுக்குச் செம டோஸ் கிடைச்சதாம். இதை அங்க வேலை பார்க்குற எங்க சொந்தக்காரர்தான் சொன்னாரு’’ மகிழ்ச்சியாகச் சொன்னார் கண்ணம்மா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அப்படியா... ரொம்ப சந்தோஷம். நல்லது நடந்தா சரிதான். அதிகாரிங்க வேலை பார்க்கத் தயாரா இருந்தாலும் அரசியல் வியாதிக பல இடங்கள்ல தொல்லை கொடுத்துகிட்டு, அவங்களையும் வேலை பார்க்க விடாம செய்றாங்க. என்ன பண்ணித் தொலையுறது. சரி, அதை விடுங்க இந்தத் தடவை நல்லபடியா செயல்படுற ஒரு அரசாங்க துறையைப் பத்திச் சொல்றேன்’’ என்ற வாத்தியார் சைக்கிளை நிறுத்திவிட்டுப் பேசத் தொடங்கினார்.

“பால் சொசைட்டி மூலமா பால் எடுக்குற ஆவின் நிறுவனம், ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நல்ல லாபத்துல போகுதாம். ஊரடங்கு நேரத்துல தனியார் பால் கம்பெனிக கைவிட்ட விவசாயிகள்கிட்ட பால் வாங்குனது, நிறைய விவசாயிகளைத் திரும்பவும் ஆவின் பக்கம் திருப்பி இருக்குதாம். தனியார் கம்பெனிகளைவிட நல்ல விலை, மானிய விலையில தீவனம், மருத்துவம் பார்க்க இலவசமா டாக்டர்னு கலக்கிக்கிட்டு இருக்கு. போன வருஷம் ஏப்ரல்-மே மாசத்துல 327 கோடியா இருந்த ஆவின் வருமானம், இந்த வருஷம் ஏப்ரல்-மே மாசத்துல 420 கோடிக்கு வருமானம் பார்த்திருக்குதாம். இந்திய அளவுல பலகோடி மக்கள் தேர்வு செய்ற நுகர்வு பொருள்கள் வரிசையில ஆவின் பொருள்கள் 7-வது இடத்துல இருக்குதாம். இதை உலகளவுல தரவு நுண்ணறிவு ஆய்வு நிறுவனமான காந்தர் (Kantar) ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறதாம். இந்த நேரத்துல விவசாயிகளுக்கு மானிய விலையில பசுந்தீவனம் கொடுக்குறதைப் பத்தியும் யோசிச்சுகிட்டு இருக்காங்களாம். ஆவின், கிராமப்புறப் பால் உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்குற துறை. அதுமூலமா அவங்களுக்குத் தேவையானதைச் செஞ்சிக்கொடுங்கன்னு பச்சைக்கொடி காட்டிட்டாராம் முதலமைச்சர்’’ என்றார்.

“நானும் ஆவினுக்குத்தான் பால் ஊத்துறேன். முன்னவிட இப்ப கூப்பிடுற நேரத்துக்கு டாக்டர் வந்திடுறாரு. எல்லா உதவியும் உடனே கிடைக்கிது. அதே நேரம் பால் கூட்டுறவு சங்கங்கள்ல சேர்மன் பதவியில இருக்க அரசியல்வாதிகள் பலரும் இன்னும் திருந்தவே இல்லையே. ஆட்டையைப் போடுறதுலதான குறியா இருக்காங்க. பல இடத்துல அதிகாரிகள், சேர்மன் இடையில ஒப்பந்தம் போட்டுகிட்டு கொள்ளையடிச்சுட்டு இருக்காங்களே அதுக்கு என்ன செய்றது’’ என்றார் ஏகாம்பரம்.

“உண்மைதான்யா. ஆனா, அதுக்கும் ஆப்பு வெச்சிட்டாராம் இப்ப மேலாண்மை இயக்குநரா இருக்குற வள்ளலார். எல்லா இடத்துலயும் ஆடிட்டிங் நடந்துக்கிட்டு இருக்குதாம். தப்பு செஞ்சவங்களைச் சஸ்பெண்ட் செஞ்சிட்டு இருக்காங்களாம்’’ என்றார் வாத்தியார்.

“நானும் ஒரு தகவல் சொல்றேன். கேளுங்க’’ என்ற கண்ணம்மா, “கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கப்போகுதாம் அரசாங்கம். அதுக்காகத் திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்களாம். இதுல ஒரு மாவட்டத்துக்கு 20 பேர் தேர்ந்தெடுப்பாங்களாம். அவங்களுக்குக் கழுதை வளர்ப்பு, பராமரிப்பு சம்பந்தமான விஷயங்களைச் சொல்லித்தருவாங்களாம். குடற்புழு மருந்து, தாது உப்புக் கலவை, குளம்பை வெட்டும் கருவி, முதலுதவி பெட்டியெல்லாம் கொடுப்பாங்களாம். அதனால, இந்த மாவட்டங்கள்ல விருப்பம் இருக்கவங்க, கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துல ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள்ள பதிவு செஞ்சுக்கணுமாம்’’ என்றார்.

“அப்படியா... கழுதை வளர்க்குறதுல இத்தனை இருக்கா?’’ என்று ஆச்சர்யப்பட்ட ஏகாம்பரம், மாடுகளை நோக்கி அதட்ட வண்டி கிளம்பியது. மாநாடு முடிவுக்கு வந்தது.

மரத்தடி மாநாடு: கழுதை வளர்க்க மானியம்! - அலறும் ஆவின் அதிகாரிகள்!

இயற்கையில் கலந்த ‘பசுமை’ வெங்கடாச்சலம்!

ரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே பூமாரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். 2 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்த சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். எளிமையான விவசாயி. ரசாயன விவசாயத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்த வேளையில், அவரது நண்பர் ஜான் உதவியுடன் பூச்சி மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒட்டுண்ணிகள் தயாரிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு நம்மாழ்வாருடன் நெருக்கம் ஏற்பட்டது. ‘சந்து வழி சாகுபடி’ என்பது இனி, எதிர்காலத்தில் தேவையான விவசாய முறை. நிறைய மரங்களை நடுவது, மரங்களுக்கிடையே விவசாயம் செய்வதுதான் சந்து வழி சாகுபடி முறை. மழை கிடைக்கும் சமயத்திலும் விவசாயம் இல்லாத சமயத்திலும் மரம் மூலமாக வருமானம் பார்க்கும் முறையை மேற்கொண்டார். நம்மாழ்வார் ஈரோடு மாவட்டத்தில் நடத்திய 26 நாள்கள் நடைப்பயணமாக அம்மாபேட்டை வந்தபோது, ரெட்டை மாட்டுவண்டி ஏற்பாடு செய்து, அதை மாட்டு வண்டிப் பயணமாக மாற்றியவர். மரபு சார்ந்த கட்டடங்கள், மரத்தால் ஆன கட்டடங்கள் எனப் பல முயற்சிகள் செய்து பார்த்தவர். அது முன்மாதிரியான முயற்சி. மிகச்சிறந்த செயல்வீரரான வெங்கடாச்சலம், இயற்கை விவசாயத்தில் பல்வேறு களப் பரிசோதனைகளைச் செய்தவர். அதில் சிலவற்றில் வெற்றி பெற்றார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாகச் சமீபத்தில் இயற்கையோடு கலந்துவிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’, வேளாண் விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் வழிகாட்டும் ‘பசுமை சந்தை’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.