Published:Updated:

மரத்தடி மாநாடு: பண்ணைக் கருவிகளை மறந்த பல்கலைக்கழகம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

அட என்ன புள்ள... இன்னிக்கு மாடு மேய்ச்சிட்டு இருக்க. உன்கிட்ட இருந்த மாட்டைத்தான் வித்துட்டியே... இது யாரு மாடு

“என்னய்யா ஏகாம்பரம். எங்க போயிட்டு வர்ற. வேர்க்க விறுவிறுக்க நடந்து வர்ற’’ ஊருக்குள் நுழையும் ஒத்தையடி பாதையில் தனியாளாக வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்தைப் பார்த்துக் கேட்டார், அங்கு நின்றிருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி.

“பக்கத்து ஊர்ல நடந்த ஜல்லிக்கட்டு பார்த்துட்டு வர்றேன் வாத்தியாரே... ஆமா, நீங்க ஏன் இங்க நின்னுகிட்டு இருக்கீங்க. டவுனுக்குப் போகணுமா’’ வாத்தியாரை எதிர்கேள்வி கேட்டார் ஏகாம்பரம்.

‘‘இல்லைய்யா... டவுன்ல இருந்துதான் வர்றேன். வீட்டுக்குத்தான் போகணும். இப்பதான் பஸ்ல இருந்து இறங்கினேன். வண்டி ஏதாவது வந்தா போகலாம்னு நின்னுகிட்டு இருந்தேன். நீ வந்துட்ட... சரி வா, போகலாம்’’ என்றபடியே இருவரும் ஊர் சாலையில் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள்.

பாதி வழியில் வரும்போது, சாலையோர புல்வெளியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா.

‘‘அட என்ன புள்ள... இன்னிக்கு மாடு மேய்ச்சிட்டு இருக்க. உன்கிட்ட இருந்த மாட்டைத்தான் வித்துட்டியே... இது யாரு மாடு?’’ கண்ணம்மாவைப் பார்த்துக் கேட்டார் ஏரோட்டி.

‘‘என் மாடுதான்யா... இன்னிக்குத்தான் வாங்குனோம். அதான் மேய்ச்சிட்டு இருக்கேன்’’ என்றார் கண்ணம்மா.

மரத்தடி மாநாடு: பண்ணைக்
கருவிகளை மறந்த பல்கலைக்கழகம்!

‘‘அதுதான பார்த்தேன். புது மாடுனால மேய்க்கிற... இல்லைன்னா வீட்டுல கட்டி வெச்சுட்டு வைக்கோலை போட்டுட்டு வியாபாரத்துக்குப் போயிடுவியே. எத்தனை நாளைக்குனு நானும் பார்க்குறேன்’’ நக்கலாகச் சொன்னார் ஏகாம்பரம்.

‘‘வாத்தியாரே... மார்கழி மாசம் பெய்ஞ்ச மழையில வெள்ளாமையெல்லாம் நாசமாப் போச்சு. அதுக்கு நிவாரணம் எதுவும் கொடுப்பாங்களா?’’ எதிர்பார்ப்புடன் கேட்டார் கண்ணம்மா.

‘‘அட நாம என்ன அம்பானியா, அதானியா? எந்த ஆணியும் இல்ல. அரசாங்க கணக்குல நாம தேவையில்லாத ஆணிங்கதான். அதனால அதை எதிர்பார்த்துட்டு இருக்காம பொழப்பைப் பாரு புள்ள’’ எரிச்சலோடு சொன்னார் ஏகாம்பரம்.

‘‘எதுக்கு கொடுக்கணுமோ அதுக்கு கொடுக்கமாட்டாங்க. தேவையில்லாதப்ப எல்லாம் கொடுப்பாங்க. தேர்தல் வரப்போகுதுனு தினமும் ஒரு திட்டத்தை அறிவிச்சுட்டே இருக்காரு முதலமைச்சர். ஆனா அதுலயும் பாதித் தேவையில்லாத ஆணிதானே’’ ஏரோட்டியை மடக்கினார் கண்ணம்மா.

அதுவரை அமைதியாக இருந்த வாத்தியார் பேசத் தொடங்கினார். ‘‘உண்மைதான் கண்ணம்மா. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன காமெடி நடக்கப்போகுதோ தெரியல. இப்ப அ.தி.மு.க காமெடி மந்திரி சீனிவாசன் இருக்காருல்ல... அவரு என்ன செஞ்சாரு தெரியுமா? திண்டுக்கல் மாவட்டத்துல ஏற்கெனவே செயல்பாட்டுல இருந்த நெல் கொள்முதல் மையத்தை மறுபடியும் திறந்து வெச்சிருக்காராம். நிலக்கோட்டை தாலுக்கா விளாம்பட்டியில பல வருஷமா நெல் கொள்முதல் மையம் செயல்பாட்டுலதான் இருக்காம். அங்க கொள்முதல் செய்றதுல தாமதம் ஆகுறதால, நாள்கணக்கா நெல் மூட்டைகள் குவிச்சு வெச்சிருக்காங்க விவசாயிங்க. இந்த நிலைமையில, 19-ம் தேதி திடீருன்னு அங்க கொட்டகை போட்டு, மைக்செட் எல்லாம் வெச்சு அலங்காரம் பண்ணுனாங்க அதிகாரிங்க. என்னன்னு பார்த்தா, அமைச்சர் சீனிவாசன் வந்து அந்தக் கொள்முதல் மையத்தைத் திறந்து வெச்சுட்டு, ‘இது விவசாயிகளுக்கான ஆட்சி. விவசாயிகளுக்காக இப்படிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திட்டு இருக்கோம்’னு மைக் பிடிச்சு தம்பட்டம் அடிச்சுட்டுப் போயிருக்காராம். இப்படித்தான் இருக்கு அரசு விவசாயிகளுக்கு அறிவிக்குற திட்டங்கள்’’ என்றார் வாத்தியார்.

அவர் சொல்லி முடிக்கவும் கண்ணம்மாவும், ஏகாம்பரமும் விழுந்து விழுந்து சிரித்தனர். ‘‘ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. ஆனா அதுக்கு ஒரு அளவு வேணாமா? என்னத்த சொல்றது... இப்படிப்பட்ட ஆட்சியில நாம வாழணும்னு நம்ம தலையெழுத்து’’ தலையில் அடித்துக்கொண்டார் ஏகாம்பரம்.

‘‘தேர்தல் தேதி அறிவிக்குறதுக்குள்ள திட்டங்களை அறிவிச்சுடணும். அதைப் பினாமி பேர்ல கான்ட்ராக்ட் எடுத்திடணும். அதேபோல எந்தெந்தத் துறையில காலியிடங்கள் இருக்கோ, அதுக்கெல்லாம் ஆளுங்களை நியமிச்சிடணும். அது மூலமா கல்லா கட்டிடணும்னுதான் அத்தனை பேரும் அலையிறாங்கனு எதிர்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க’’ என்றார் வெள்ளைச்சாமி.

‘‘ஆமா, ‘யோக்கியன் வாரான் சொம்பை எடுத்து உள்ள வை’னு சொன்ன மாதிரியில்ல இருக்கு. எதிர்கட்சிக்காரங்களும் சில கான்ட்ராக்ட் கொடுத்து வாயை அடைச்சிருக்காங்களாம். அதை விடுங்க வாத்தியாரே... ஆவின் நிறுவனத்துல வேலைக்கு ஆள் எடுக்குறாங்கனு சொல்லி, விண்ணப்பம் போட்டவங்கள்லாம் இப்ப புலம்பிகிட்டு இருக்காங்களாம். காசு கொடுக்குறவங் களுக்குத்தான் வேலைன்னு கறாரா இருக்காங்களாம். அதனால ஏழை வீட்டு பிள்ளைங்க ஏமாற்றத்தோட நிக்குறாங்க’’ என்றார் ஏரோட்டி.

‘‘அரசியல் வியாதிகளை விடுங்க. யாரை நம்பியும் புண்ணியமில்ல. நம்ம பொழப்பை நாமதான் பாக்கணும். நமக்கான சேதி ஏதாவது இருந்தாச் சொல்லுங்க வாத்தியாரே’’ பேச்சின் திசையை மாற்றினார் கண்ணம்மா.

‘‘நான் ஒரு செய்தியைச் சொல்லவா?’’ ஆர்வமாகக் கேட்டார் ஏகாம்பரம். “சொல்லுய்யா... ரொம்ப ஆர்வமா இருக்க’’ என்றார் வாத்தியார்.

‘‘தேங்காய் விற்பனை தொடர்பா கோயம்புத்தூர்ல இருக்கிற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்குது. இந்த வருஷம் பிப்ரவரி-மார்ச் மாசம் வரைக்கும் தரமான தேங்காயோட பண்ணை விலை ஒரு கிலோ 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையும், கொப்பரை விலை கிலோ 100 ரூபாய் முதல் 105 ரூபாய் வரைக்கும் இருக்கும்னு சொல்லியிருக்காங்க. இந்த அடிப்படையில தேங்காய் இருந்தா விற்பனை செய்யுறதா, இருப்பு வைக்கிறதா?னு விவசாயிங்க முடிவு பண்ணிக்கலாம்’’ என்றார் ஏரோட்டி.

‘‘பரவாயில்லை. நல்ல தகவலைத்தான் சொல்லியிருக்க. இப்படி வேளாண் பல்கலைக்கழகம் சொல்றதை விவசாயிகள் பலரும் பின்பற்றிட்டு வர்றாங்க. ஆனா, பொங்கலுக்கு வேளாண் பல்கலைக்கழகம் புது ரகங்களை வெளியிட்டுச்சு. அதைப் பத்தி பத்திரிகைகள்லயும் செய்தி வந்துச்சு. அதுல விளாம்பழத்துல புது ரகம் வெளியிட்டு இருக்காங்க. அந்த ரகத்தோட பேர் தமிழ்ல ஒரு மாதிரியும், இங்கிலீசுல ஒரு மாதிரியும் கொடுத்திருக்காங்க. விளாம்பழம் ரகத்தோட பேர் பி.கே.எம்.-1. ஆனா, தமிழ் அறிக்கையில டபிள்யூ.எப்.எல்-3 அப்படின்னு போட்டுட்டாங்க. அதேபோலக் கத்திரியில வி.ஆர்.எம்.-2 அப்படின்னு ஒரு புது ரகத்தை வெளியிட்டாங்க. அதை அறிக்கையில வி.எம்.ஆர்-2-ன்னு தவறா அச்சடிச்சுட்டாங்க. பல்கலைக்கழகமே இப்படித் தவறான அறிக்கைக் கொடுத்தா எப்படின்னு விவசாயிங்க பேசிக்கிறாங்க?’’ விளக்கமாகச் சொன்னார் வெள்ளைச்சாமி.

‘‘வாத்தியாரே... எனக்கும் ஒரு சந்தேகம். முதல்ல புது ரகம் வெளியிடுறப்போன்னு, ரெண்டு பண்ணைக் கருவிகள் அறிமுகம் செய்வாங்க. இப்ப அப்படிக் கருவிகளை அறிமுகம் செய்றதே இல்லையே. பண்ணைக்கருவிகளுக்காகவே தனிக் கல்லூரியே இருக்கே... அவங்க எதுவும் கண்டுபிடிக்கிறதே இல்லையா?’’ வெள்ளந்தியாகக் கேட்டார் ஏகாம்பரம்.

‘‘அது ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம். சரி, நாங்க கிளம்புறோம். மாட்டை மேய்ச்சிட்டு வா கண்ணம்மா’’ என்றபடி வாத்தியாரும், ஏகாம்பரமும் நடையைக் கட்ட முடிவுக்கு வந்தது மாநாடு.

எருமைப் படம்!

மரத்தடி மாநாடு: பண்ணைக்
கருவிகளை மறந்த பல்கலைக்கழகம்!

பசுமை விகடன் 25.01.21 தேதியிட்ட இதழில் 52-ம் பக்கத்தில் ‘தோடர் இன எருமை மாடு’ படம் வெளியாகியிருந்தது. அது, பசுமை விகடனின் தீவிர வாசகரான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘பசுமை’ சாகுல் எடுத்த புகைப்படம். அவருடைய பெயரைக் குறிப்பிடாமலும் அவருடைய அனுமதியைப் பெறாமலும், அந்தப் படம் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. அதற்காக வருந்துகிறோம்.

-ஆர்

வயல்வெளிப் பல்கலைக்கழகம், பசுமை சந்தை, நீங்கள் கேட்டவை ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம் பெறவில்லை.