Published:Updated:

மரத்தடி மாநாடு: ஒரு பாட்டில் காற்று 2,500 ரூபாய்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

போன வருஷம் பங்குனி மாசத்துல இருந்து ஒரு சீக்காதான் இருக்கு. மனுசங்களுக்கு கொரோனா. இப்ப கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல்

மரத்தடி மாநாடு: ஒரு பாட்டில் காற்று 2,500 ரூபாய்!

போன வருஷம் பங்குனி மாசத்துல இருந்து ஒரு சீக்காதான் இருக்கு. மனுசங்களுக்கு கொரோனா. இப்ப கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல்

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

“என்னத்த தேடிகிட்டு இருக்க’’ தோட்டத்தில் செடிகளுக்கிடையில் எதையோ தேடிக்கொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்தைப் பார்த்து கேட்டார் ‘காய்கறி’ கண்ணம்மா.

‘‘ஆட்டுக்குட்டி ஒண்ணு ஓடி வந்திருச்சு. அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்’’ என்றார் ஏகாம்பரம்.

இருவரும் ஆட்டுக்குட்டியைத் தேடிக்கொண்டிருக்கும்போது, வாத்தியார் வெள்ளைச்சாமியும் அங்கு வந்து சேர்ந்தார். சற்று நேரத்தில் செடிகளுக்கு இடையிலிருந்த ஆட்டுக்குட்டியைக் கண்டுபிடித்தார் கண்ணம்மா. ‘‘இங்க இருக்குய்யா...’’ எனக் கண்ணம்மா அழைக்க ஏகாம்பரம் வந்து ஆட்டுக்குட்டியைத் தூக்கினார்.

‘‘அதான் குட்டி கிடைச்சுடுச்சுல்ல... வாங்கப் போகலாம்’’ என வாத்தியார் அழைக்க, பேசிக்கொண்டே ஊரை நோக்கி நடந்தனர்.

‘‘ஐப்பசியிலதான் அடைமழை பெய்யும். இப்ப மார்கழி மாசத்துலயே அடைமழை கணக்கா மழை பெய்யுது. இது என்ன கணக்குன்னே தெரியலை வாத்தியாரே’’ புலம்பினார் ஏகாம்பரம்.

‘‘பருவநிலை கணக்குதான். பருவநிலை மாற்றத்தால எல்லாம் மாறி மாறி நடக்க ஆரம்பிச்சிடுச்சு. பூமி சூடாகுது. உஷாரா இருங்கன்னு பலநாட்டு விஞ்ஞானிகளும் கரடி கணக்கா கத்துறாங்க. ஆனா, யார் கேக்குறா? இந்த வருஷம் பருவமழை அதிக நாள்கள் நீடிக்குது. கார்த்திகை மாசத்துக்குள்ள முடியுற மழை, மார்கழி வரைக்கும் வெளுத்து வாங்குது. இன்னொரு தகவலும் சொல்றாங்க. பருவநிலை மாற்றத்தால அடுத்து வரப்போற கோடைக்காலத்துல பயிர்கள்ல சாறு உறிஞ்சும் பூச்சிகளோட தாக்குதல் அதிகமாகுமாம். செம்பேன், சிலந்தி, வெள்ளை ஈ, சுருள் பூச்சி தாக்குதல் இருக்கும்னு சொல்றாங்க. அதனால தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துக்கணும்னு சொல்றாங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘பயமுறுத்தாதீங்க வாத்தியாரே... ரெண்டு, மூணு வருஷமா மழை இல்லாம பெருசா வெள்ளாமை செய்ய முடியல. இந்த வருஷம் வெச்ச வெள்ளாமையெல்லாம் தண்ணியில மூழ்கியிருச்சு. இதுல கோடையிலயும் ஆப்பு வெச்சா எப்படி’’ வேதனையோடு சொன்னார் ஏகாம்பரம்.

‘‘போன வருஷம் பங்குனி மாசத்துல இருந்து ஒரு சீக்காதான் இருக்கு. மனுசங்களுக்கு கொரோனா. இப்ப கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல், அடுத்து பயிர்களுக்குப் பூச்சி தாக்குதலா? நடக்குறதையெல்லாம் பார்த்தா பயமாயிருக்கு’’ என்றார் கண்ணம்மா.

மரத்தடி மாநாடு: ஒரு பாட்டில் காற்று 2,500 ரூபாய்!

‘‘கண்ணம்மா சொன்ன மாதிரி இப்ப பறவைக் காய்ச்சல் நோய்னு சொல்றாங்க. முட்டை சாப்பிடாதீங்கனு சொல்றாங்க. இந்த நோயினால மனுசங்களுக்கு எதுவும் பாதிப்பு வருமா வாத்தியாரே’’ தனது சந்தேகத்தைக் கேட்டார் ஏரோட்டி.

‘‘குளிர்காலத்துல நம்ம நாட்டுக்கு வர்ற வெளிநாட்டுப் பறவைகள் மூலமாதான் இந்த நோய் பரவுது. 2016-ம் வருஷம் இந்த நோய் நம்ம நாட்டுல வந்துச்சு. பறவைக் காய்ச்சல் மனுசனுங்களுக்கும் பரவும் நோய்தான். ஆனா, ஏற்கெனவே நம்ம நாட்டுல பறவைக் காய்ச்சல் வந்தப்ப மனுசங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படல. இந்தத் தடவையும் மனுசங்களுக்கு இருக்காதுனுதான் சொல்றாங்க. அதே நேரம் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருக்கப் பகுதிகளுக்குப் போகும்போது சில நடவடிக்கைகள் அவசியம்னு டாக்டருங்க சொல்லியிருக்காங்க. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு தேய்ச்சு வெந்நீர்ல கழுவணும். சாப்பிடுறதுக்கு முன்னாடி, பின்னாடி இதைச் செய்யணும். அந்தப் பகுதிகள்ல பயணம் செய்யும்போது கிருமிநாசினி மூலமா கைகளைக் கழுவணும். கோழி, வாத்து இறைச்சிகளை நல்லா வேகவெச்சுதான் சாப்பிடணும். அரைவேக்காட்டுல சாப்பிடக் கூடாது. அதே மாதிரி பச்சை முட்டைகளையும் சாப்பிடக்கூடாதுனு சொல்லியிருக்காங்க’’ என்றார் வெள்ளைச்சாமி.

‘‘போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் கையைக் கழுவுறதுலயே முடிஞ்சுப் போயிடும்போல இருக்கேய்யா’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘மனுசங்க, பறவைகள், கால்நடைகள், பயிர்கள்னு ஒட்டுமொத்தமா எல்லா உயிர்களுக்கும் உயிர் பயத்தைக் காட்டிடுச்சு இயற்கை’’ என்றார் கண்ணம்மா.

‘‘உண்மைதான் கண்ணம்மா. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’னு சொல்றதுதான் இப்ப நடக்குது. அதிக ஆசையில மக்க மனுசங்க செஞ்ச தப்புகளுக்கு இப்ப தண்டனை கிடைச்சுட்டு இருக்கு. சுத்தமான காற்றுக்கூட இன்னும் கொஞ்சநாள்ல காணாமப் போயிடும். இப்பவே அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் நாடுகள்ல சுத்தமான காற்றைப் பாட்டில்ல வெச்சு விற்க ஆரம்பிச்சுட்டாங்க. இங்கிலாந்துல ஒரு பாட்டிலோட விலை 2,500 ரூபாய்னு விக்குறாங்களாம். ஒரு காலத்துல தண்ணியைக் காசு குடுத்து வாங்குவோம்னு யோசிச்சுக்கூட இருக்க மாட்டோம். ஆனா, இப்ப தண்ணியைப் பால் விலைக்கு வாங்குறோம். அதே மாதிரி வருங்காலத்துல காத்துக்கும் காசு கொடுத்துதான் ஆகணும்போல இருக்கு. ஆனாலும் மனுச பயக திருந்துற மாதிரி தெரியல’’ வேதனையோடு சொன்னார் வாத்தியார்.

‘‘சரியா சொன்னீங்க வாத்தியாரே... நடக்குறது நடக்கட்டும். பனிக்காலத்துல செம்மறி ஆடுகளைக் கவனிக்குறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. அதுக்கு ஏதாவது யோசனை இருந்தாச் சொல்லுங்க’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘பனிக்காலத்துல செம்மறி ஆடுகளைப் பாதுக்காக்குறது தொடர்பா சில விவரங்களைச் சொல்றேன் கேட்டுக்கங்க. ‘பனிக்காலத்துல ஆடுகளைப் பட்டியிலதான் பாதுகாக்கணும். பட்டி சரியா இல்லைன்னா சளி, இருமல், வாய்புண், புழுப்புண் நோய்கள் உருவாக வாய்ப்பிருக்கு. அதோட குட்டிகளோட வளர்ச்சி குன்றி ஆடுக இறந்து போகக்கூட வாய்ப்பிருக்கு. ஆடுகளோட எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி பட்டி விசாலமா அமைக்கணும். காலை நேரத்துல பட்டிக்குள்ள இளம் வெயில் விழுகுற மாதிரி கிழக்குப் பக்கம் கொஞ்சம் காலியிடம் விடணும். ஈரப்பதமான இடங்கள்ல பட்டி அமைக்கக் கூடாது. வாய்ப்புண் நோயைக் கட்டுப்படுத்த டாக்டருங்க ஆலோசனைப்படி ஆடுக மேல மருந்து தெளிக்கலாம். மாலை நேரங்கள்ல வேம்பு, தைலம், தும்பை, சாம்பிராணி அதோட இளம் சருகுகள் போட்டு பட்டியில புகைப் போடலாம்’’னு சொல்லி இருக்காரு திண்டுக்கல்ல இருக்கக் கால்நடை மருத்துவர் ராஜ்குமார்’’ என்றார் வாத்தியார்.

‘‘தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்ல மரங்கள்ல ஆணி அடிச்சா கேஸ் போடுறாங்களாம். அதுக்கு பயந்துகிட்டு இப்ப அங்க யாரும் மரங்கள்ல ஆணியே அடிக்கிறதில்லையாம்’’ என்றார் கண்ணம்மா.

‘‘ஆமா... கண்ணம்மா. விளம்பர போர்டுகளை மாட்டுறதுக்காக மரங்கள்ல ஆணி அடிச்சிடுறாங்க. அப்படி அடிக்குற ஆணிக எல்லாமே தேவையில்லா ஆணிகள்தாம். ஆணி அடிக்குறதால மரங்கள் பாதிக்கப்படுது. தேனி மாவட்டத்துல இருக்க இளைஞர்கள் சிலர், ‘ஆணி பிடுங்கும் திருவிழா’னு ரெண்டு வருஷமா மரங்கள்ல இருக்க ஆணிகளையெல்லாம் பிடுங்கிப் போட்டுகிட்டு இருந்தாங்க. ஆனாலும், விளம்பரக்காரங்க விடாம மரங்கள்ல ஆணி அடிச்சுட்டு தான் இருந்தாங்க. இந்த நிலைமையில திண்டுக்கல், தேனி டி.ஐ.ஜி முத்துச்சாமி, அந்த இளைஞர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்திட்டு வர்றாரு.

மரங்கள்ல இனிமே யாராவது ஆணி அடிச்சா அவங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு பண்ணுங்கனு போலீசாருக்கு சொல்லி ஆணி அடிக்குறவங்களுக்கு ஆப்பு அடிச்சிட்டாரு. அதனால இப்ப ஆணி அடிக்குறது குறைஞ்சுப் போச்சாம்’’ என்றார் வாத்தியார்.

‘‘நம்ம ஆளுங்க வாயில சொன்னா கேக்கமாட்டாங்க. சட்டம்னு சொன்னாதான்தான் அடங்குவாங்க. சரி, நான் ஆட்டுக்குட்டியை கொடாப்புல அடைச்சிட்டு வர்றேன்’’ என்ற ஏரோட்டி, அவர் வீட்டுக்குப் போக பாதியில் பிரிய முடிவுக்கு வந்தது மாநாடு.