
வாத்தியாரே... என் வயல்ல மயில் தொல்லை தாங்க முடியலை. அதுகளை விரட்டுறதுக்கு ஏதாச்சும் வழி இருந்தா சொல்லுங்க’’ பேச்சின் திசையை மாற்றினார் கண்ணம்மா.
வெயிலுக்குக் குடைபிடித்தபடி, நாய்களுக்கு பிஸ்கட் போட்டுக்கொண்டிருந்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி.
காய்கறி விற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கண்ணம்மா இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு நின்றார். ‘‘என்ன வாத்தியாரே... எங்கேயோ கிளம்பிட்டீங்க போலிருக்கு...’’ என்றார் கண்ணம்மா.
குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த வாத்தியார், ‘‘வா கண்ணம்மா... வியாபாரம் முடிஞ்சுபோச்சா?’’ என்று விசாரித்தார்.
“ஆமாங்கய்யா... கொஞ்சம்தான் கொண்டுபோனேன். எல்லாம் வித்துப்போச்சு. அதுதான் வீட்டுக்குக் கிளம்பிட்டேன்’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சைக்கிளில் வாழைத்தார்களைக் கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார் ஏரோட்டி ஏகாம்பரம்.
‘‘என்னய்யா... வண்டியில கொண்டு வர வேண்டியதுதானே... ஏன் சைக்கிள்லவெச்சு முக்கிட்டு வர்றே...’’ என்றார் கண்ணம்மா.
“அட... அந்தக் கதையை ஏன் கேக்குறே... வண்டிக்கு வாடகை கொடுக்குற காசுக்குக்கூடத் தார் விக்க மாட்டேங்குது. அதனாலதான் சைக்கிள்ல கொண்டு போய் வித்துக்கிட்டிருக்கேன்’’ என்றார் ஏகாம்பரம்.
‘‘இந்த கொரோனா காலத்துல வாழை விவசாயிங்கதான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க. பல இடங்கள்ல தோப்புலேயே தார் அழுகிப்போய்க் கிடக்குதாம்’’ என்றார் வாத்தியார்.

“போன தடவை நாம பேசுறப்போ இலவச `மின்சாரத்துக்கு ஆப்பு வெக்கப்போறாங்க’னு பேசுனீங்களே வாத்தியாரே... இப்போதான் நம்ம அரசியல்வாதிங்க அதைப் பத்திப் பேச ஆரம்பிச்சிருக்காங்க. அதுலயும், மின்சாரம் தனியாருக்குப் போயிரும். கரன்ட் பில் குறைஞ்சது ஆயிரம் ரூபாய்க்கு மேல வரும்னு பயமுறுத்துறாங்க’’ என்றார் ஏகாம்பரம்.
“அவ்வளவு பில் வருமான்னு இன்னும் உறுதியா தெரியலை ஏகாம்பரம். தமிழ்நாடு அரசும் `இலவச மின்சாரத்தை நிறுத்தக் கூடாது’னு மத்திய அரசிடம் சொல்லிக்கிட்டேதான் இருக்கு. முதலமைச்சரும் இது தொடர்பா பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்காரு’’ என்றார் வாத்தியார்.
“நம்ம முதலமைச்சர், `இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டாம்’னு சொல்றாரு. ஆனா, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, `மத்திய அரசு வழிகாட்டுதல்படி புதுவை விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்தணும்’னு சொல்றாங்க. இந்தம்மாவுக்கும் முதல்வருக்கும் இருக்குற பிரச்னையில விவசாயிகள் சலுகையைப் பறிக்க நினைக்குறாங்க’’ என்றார் ஏகாம்பரம்.
“நம்ம ஊர்லதான் வெயில் பின்னிப் பெடலெடுக்குது... பேசாம வீட்டுக்குக்கூட சோலார் மின்சாரத்தைப் போட்டுக்கணும். அப்போதான் நிம்மதியா இருக்க முடியும்’’ என்றார் கண்ணம்மா.
‘‘20 லட்சம் கோடி ரூபாய் அறிவிச்சாங்களே... அதுல, `தடுப்பூசி போடுறதுக்கு 13,000 கோடி ஒதுக்குறோம்’னு சொன்னாங்க. ஊசிக்கு அத்தனை கோடி ஆகுமா?’’ அப்பாவியாகக் கேட்டார் ஏகாம்பரம்.
“ `இந்தியா முழுக்க பசுக்கள், எருமைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகளுக்கு 100% தடுப்பூசி போட 13,343 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்யப் போறோம்’னு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்காங்க. கால்நடைகளுக்குக் கால், வாய் நோய், மலட்டுத்தன்மை ஏற்படுத்துற ‘புருசெல்லோசிஸ்’ என்ற நோயைத் தடுக்குற தடுப்பூசிகளை எல்லாக் கால்நடைகளுக்கும் போடுறதுக்காகத்தான் 13,343 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்காங்க. இதை முழுசா தனியாருக்குக் கொடுக்கப் போறாங்களாம். இதுமட்டுமில்லை, எல்லாத் துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்போகுது மத்திய அரசு’’ வேதனையோடு சொன்னார் வாத்தியார்.
“வாத்தியாரே... என் வயல்ல மயில் தொல்லை தாங்க முடியலை. அதுகளை விரட்டுறதுக்கு ஏதாச்சும் வழி இருந்தா சொல்லுங்க’’ பேச்சின் திசையை மாற்றினார் கண்ணம்மா.
“இதுக்கு ஓய்வுபெற்ற தோட்டக்கலை உதவி இயக்குநர் அசோகன் ஒரு யோசனை சொல்றாரு. அதாவது, பயிர்களைப் பாழ்படுத்துற மயில்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகளைத் துன்புறுத்தாம தடுக்கலாம். அதுக்கு, வயலுக்குள்ள மயில் வர்ற பகுதிகள்ல அழுகிய கோழி முட்டையை உடைச்சு தெளிச்சுவிட்டாப் போதும். அந்த வாடை மயில்களுக்கு ஆகாது. அதனால நிலத்துக்குள்ள வராம திரும்பிப் போயிடும். பயிர்களைக் காப்பாத்திக்கலாம். அதே மாதிரி காட்டுப்பன்றித் தாக்குதலைத் தடுக்க சலூன் கடைகள்ல இருந்து வெட்டின முடியை எடுத்துட்டு வந்து, வயல் முழுக்க இரைச்சு விட்டாப் போதும்... காட்டுப்பன்றி அந்தப் பக்கம் தலைவெச்சே படுக்காது. குரங்குகளை விரட்டுறதுக்கு வயல்ல அதுகளுக்கான உணவுப் பொருள்களைவெக்கணும். ஆனா, உணவு காரமா இருக்கணும். அதை ஒரு தடவை சாப்பிட்டா அடுத்து அந்தப் பக்கம் வராதுன்னு சொல்றாரு. முயற்சி பண்ணி பார்த்துட்டு சொல்லு. நல்ல பலன் கொடுத்தா இன்னும் நாலு பேருக்குச் சொல்லலாம்’’ என்றார் வாத்தியார்.
“நேரமாகிடுச்சு. நான் போய் வாழைத்தாரை விக்கிறேன்’’ என்றபடி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஏரோட்டி கிளம்ப, முடிவுக்கு வந்தது மாநாடு. தன் கையில் மீதமிருந்த பிஸ்கட்டுகளையும் மும்முரமாக நாய்களுக்குப் போட ஆரம்பித்தார் வாத்தியார்.
மலைப்பகுதி விவசாயிகளுக்கு மானியம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகளுக்குச் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசன வசதிக்காக 4 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகள் ஐந்து ஏக்கர் வரையும், பெரிய விவசாயிகள் 12.5 ஏக்கர் வரையும் மானியம் பெறலாம். இது தவிர மின்மோட்டார், டீசல் மோட்டார், குழாய்கள் பதிக்கவும், தொட்டி கட்டவும் மானியம் வழங்கப்படுகிறது. இவற்றில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல், நில வரைபடம், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். தோட்டக்கலை இயக்கம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் போன்ற மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் அடிப்படையில் அவகேடோ, மிளகு, முட்டைக்கோஸ் நாற்றுகளைத் தோட்டக்கலைப் பண்ணையில் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். ஊரடங்கு காரணமாக அலுவலகம் வர முடியாதவர்கள் விண்ணப்பத்தை tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஆர்.ஜே.ரமேஷ்-ஐ 97867 73359 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’ மற்றும் வேளாண் விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் வழிகாட்டும் ‘பசுமை சந்தை’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.