Published:Updated:

`மின்வேலி வேண்டாம், உயிர்வேலி போதும்!' - மரபுவழியில் பயிர்களைக் காக்கும் நீலகிரி விவசாயிகள்

உயிர் வேலிக்குள் சாமந்திப்பூ சாகுபடி
News
உயிர் வேலிக்குள் சாமந்திப்பூ சாகுபடி

இது இன்னக்கி நேத்தைக்கி இல்ல பல வருசமா இதத்தான் செய்றோம். கரட்டுக் காட்டுல கெடக்குற‌ கள்ளிச்செடி இனுக்க ஒடிச்சி தோட்டத்த சுத்தி நட்டுட்டமுன்னா அடுத்த மழைக்கே திமுதிமுண்ணு நல்லா வளந்துரும்.

காடும் காட்டுயிர்களும் நிறைந்த நீலகிரியில், நாளுக்கு நாள் மக்கள் தொகைப் பெருக்கமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொழில் வாய்ப்புகள் குறைந்த இந்த மலை மாவட்டத்தில் பணப்பயிர், மலைக் காய்கறி விவசாயம், சுற்றுலா போன்றவையே மிக முக்கியப் பொருளாதார காரணிகளாக உள்ளன.

சாமந்திப்பூ
சாமந்திப்பூ

ஆங்கிலேயர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, டர்னிப் போன்ற பல்வேறு வகையான மலைக் காய்கறிகளை ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் அதிகளவு பயிர் செய்து வருகின்றனர். மேலும், மலைக் காய்கறிகள் பயிரிடப்படும்‌ பரப்பளவும்‌ அதிகரித்துக்கொண்டே உள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வன விலங்குகளிடம்‌ இருந்து பயிர்களைப்‌ பாதுகாக்க மின் வேலிகளை நம்பியே விவசாயிகள் உள்ளனர். அதிகரிக்கும் மின் வேலிகளால் பயிர்கள் பாதுகாக்கப்பட்டாலும், யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர முடியாமலும் நீர் நிலைகளுக்குச் செல்ல முடியாமலும் தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிர் வேலிக்குள் சாமந்திப்பூ சாகுபடி
உயிர் வேலிக்குள் சாமந்திப்பூ சாகுபடி

இந்நிநிலையில் முதுமலை அருகிலுள்ள மசினகுடி மக்கள், நூற்றாண்டு காலமாக நடைமுறையிலுள்ள உயிர்‌ வேலிகளை‌க் கொண்டு விளை நிலங்களைப் பாதுகாக்கும் அதே உத்தியை இன்றளவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மசினகுடியில் இருந்து சிங்காரா செல்லும் சாலையில் சிறிது நேர‌ பயனத்தில் மலை அடிவாரம் ஒன்றில் மஞ்சளும் ஆரஞ்சுமாய் பூத்துக் குலுங்கும் சாமந்திப் பூக்கள் கண்ணைப் பறிக்கின்றன. நுழைவு வாயிலாகச் சிறிய தடுப்பு ஒன்று மட்டுமே அமைக்கப்பட்டிருந்த பூந்தோட்டத்துக்குள் நுழைந்து பார்த்தோம். ஒரு வகை கள்ளிச் செடியை நேர்த்தியாகத் தோட்டத்தைச் சுற்றிலும் நடவு செய்து அழகான பசுமை‌ உயிர் வேலியை நல்ல உயரத்தில் அமைத்திருந்தனர்.

உயிர் வேலிக்குள் சாமந்திப்பூ சாகுபடி
உயிர் வேலிக்குள் சாமந்திப்பூ சாகுபடி

பூ நாற்றுகளுக்கு மண் அணைத்துக் கொண்டிருந்த விவசாயியிடம்‌‌ பேசினோம், "இது இன்னக்கி நேத்தைக்கி இல்ல பல வரக்‌ஷமா இதத்தான் செய்றோம். கரட்டுக் காட்டுல கெடக்குற‌ கள்ளிச்செடி இனுக்க ஒடிச்சு தோட்டத்த சுத்தி நட்டுட்டமுன்னா அடுத்த மழைக்கே திமுதிமுண்ணு நல்ல வளந்துரும். ஆடு மாடுங்க எதுவுமே இந்தச் செடிய‌ மோந்துகூடப் பாக்காதுங்க. யானை‌, பன்னி, மானுங்க எதுவுமே உள்ள வராதுங்க. தண்ணி குடிக்க அதுக்கு இதுக்குனு வந்தாக்கூட ஓரமா போகுமே தவற உள்ள வராது.

கரன்ட் வைக்கறது, சிமென்டு வேலி கட்றதுனு எந்த அவசியமும் இல்ல. நமக்கும் எந்தத் தொந்தரவும் இல்ல. மிருகங்களுக்கும் ஒரு பாதிப்பும் வராது. நம்ம ஏரியால முக்கால் வாசி பேரு இதத்தான் செய்றோம். இந்தத் தோட்டத்துல மொத மொறையா பூ போட்டுருக்கேன். இப்போ ஒரு கிலோ சாமந்திப்பூ 6, 7 ரூவாய்க்கு போகுது. 10 ரூவாய்க்கு மேல ரேட்‌ போனா கட்டுபடியாகும்" என்றபடி வேலையைத் தொடர்ந்தார்.

இயற்கை ஆர்வலர் மனோஜ் நம்மிடம் பேசுகையில், "பாதுகாக்கப்பட்ட பகுதியாக முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. முதுமலையின் வெளிமண்டலப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பு, பயிர் சாகுபடி போன்ற விவசாயப் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். யானை, காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான்‌ உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் விளைநிலங்களை நோக்கி வந்தாலும், எந்தச் சிக்கலும் இல்லாமல், பாரம்பர்ய முறைப்படி விளை நிலங்களைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாக உயிர் வேலிகளை அமைத்து, வெற்றிகரமாக சாகுபடி செய்து அறுவடை செய்கின்றனர்.

உயிர் வேலிக்குள் சாமந்திப்பூ சாகுபடி
உயிர் வேலிக்குள் சாமந்திப்பூ சாகுபடி

மின் வேலிகள் அதிகரித்து வரும் சூழலில், மசினகுடி விவசாயிகள் உயிர் வேலி உதவியில் பயிர்‌ செய்வதைப் போன்று‌ மற்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே விவசாயி நலன் மற்றும் வன விலங்குகளின் நலனைப் பாதுக்காக்க முடியும்" என்றார்.