Published:Updated:

250 கிராம் விதை நெல்லில் 1 ஏக்கர் சாகுபடி; 18 ஆண்டுகளாக அசத்தும் விவசாயி!

நெல்
நெல்

ஓர் ஏக்கர் விவசாயம் செய்வதற்கு எனக்கு ஆகும் செலவு ரூ.15,000. மற்ற விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000 வரை செலவு செய்கின்றனர்.

250 கிராம் விதை நெல்லைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில்  குறுவை சாகுபடியை கடந்த 18 ஆண்டுகளாக செய்து சாதனை படைத்துவரும் விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஆலங்குடியைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி பெருமாள் (65). நம்மாழ்வாரால் பாராட்டு பெற்ற இவர் 2004-ம் ஆண்டிலிருந்து விவசாயத்தில் புரட்சி செய்து வருகிறார்.

நெல்
நெல்

ஒரு ஏக்கர் குறுவை நடவு செய்வதற்காக 250 கிராம் நெல்லை விதை நேர்த்தி செய்யும் இவர், விதையில் பழுது இல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார். இவற்றை விதைப்பதற்கு 3 சென்ட் நிலத்தைக் கவனமாகத் தயார் செய்து, தன் கையாலேயே கால் கிலோ விதை நெல்லைத் தூவுகிறார். 20 முதல் 25 நாள்கள் வரை நாற்று வளர்ந்து பச்சை நிறமாக மாறுகிறது. அதன்பின் நாற்றைப் பறித்து  5 பெண்கூலித் தொழிலாளர்களைக் கொண்டு நடவு செய்கிறார். 50 செ.மீ இடைவெளி மற்றும் 50 செ.மீ வரிசையில் நடவு நடப்படுகிறது. விவசாயதுறையினரோ ஒரு சதுரமீட்டருக்கு 60 நாற்றுக்கள் வரை நடுவதற்கு பரிந்துரை செய்கின்றனர். ஆனால், ஒற்றை நாற்றில் ஒரு சதுரமீட்டருக்கு 4 நாற்று என நட்டு நடவையே முடித்துவிடுகிறார் ஆலங்குடி பெருமாள். தற்போது நாற்றங்காலில் நெல் தூவும் பணியை அவரே மேற்கொண்டுள்ளார்.

இதுபற்றி பெருமாளிடம் பேசினோம். ``குறுவை விவசாயப்பணிகளைத் தொடங்கும்போது விவசாயப்பணிகளைப் பார்வையிட ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக விவசாயிகள் வருவது வழக்கம். தற்போது கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கு என்பதால் யாரும் வரவில்லை.

ஓர் ஏக்கர் விவசாயம் செய்வதற்கு எனக்கு ஆகும் செலவு ரூ.15,000. மற்ற விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000 வரை செலவு செய்கின்றனர். அவர்களுக்கு ஒர் ஏக்கருக்கு 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கிறது, ஆனால், எனது விவசாய முறையில் நட்டால் குறைந்தபட்சம் 3 டன் முதல் 4 டன் வரை மகசூல் கிடைக்கிறது என நிரூபித்துக் காண்பித்துள்ளேன்.

நெல்
நெல்

எனது விவசாய முறையை 2009-ம் ஆண்டு தி.மு.க தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது அவருக்கு அனுப்பி வைத்தேன். இதை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நான் கூறுவது உண்மை என்று விவசாய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மேல் நடவடிக்கை எதுவும் இல்லை. தற்போது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தனது விவசாய முறையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்து குறைந்த செலவில் அதிக மகசூலை பெற விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு