Published:Updated:

மயிலாடுதுறை: கிடப்பில் 30,000 டன் நெல்... விற்க முடியாமல் காத்து கிடக்கும் விவசாயிகள்!

விற்க முடியாமல் இருக்கும் நெல்
விற்க முடியாமல் இருக்கும் நெல்

அறுவடையான சுமார் 30,000 மெட்ரிக் டன் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு.

மயிலாடுதுறை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறுவை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 30,000 மெட்ரிக் டன் நெல்லை, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் மிகவும் தவித்து வருகின்றனர்.

விவசாய உற்பத்தி
விவசாய உற்பத்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் முற்பட்டக்குறுவை அறுவடை செய்யப்பட்டு 113 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை 70,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளைக் கிடங்குக்குக் கொண்டு சென்று இறக்கப் போதிய தொழிலாளர்கள் இல்லாத காரணத்தால் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் பல நாள்கள் காத்திருக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமார் 10,000 நெல் மூட்டைகள் கிடப்பில் கிடக்கின்றன. கொள்முதலுக்காகப் பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நிலையத்தில் மூடி வைக்கப்பட்டுள்ளன. அவை திடீரென பெய்யும் மழையில் நனையும் அவலம் உள்ளது. வெளிமாவட்டத்துக்கு அரவைக்கு நெல்லை அனுப்பி வைப்பதற்குச் சரக்கு ரயிலும் தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. மயிலாடுதுறை பகுதியில் திருமங்கலம், மணல்மேடு, திருவாளபுத்தூர், இளந்தோப்பு, நல்லாடை மற்றும் வில்லியநல்லூர் போன்ற 50-க்கும் மேற்பட்ட நிலையங்கள் செயல்பட முடியவில்லை. விவசாயிகள் கடந்த 20 நாள்களாகக் கொள்முதல் நிலையத்திலேயே இரவு பகலாகக் காத்துக் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்கள்
நெல் கொள்முதல் நிலையங்கள்

இதுபற்றி நுகர்ப்பொருள் வாணிப அதிகாரிகளிடம் பேசியபோது, "கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களைக் கொண்டே மூட்டைகளைக் கிடங்குக்குக் கொண்டு சென்று சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு தினங்களில் இந்தப் பிரச்னை தீர்ந்துவிடும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு