சினிமா
தொடர்கள்
Published:Updated:

மண்வீட்டு விவசாயி!

நந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தகுமார்

சென்னை அண்ணா பல்கலையில் எம்.பி.ஏ படித்தபோது, பல்கலை வளாகத்திலேயே ஒரு பகுதியில் 2 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் நடந்தது.

ஒரு கிராமத்துக் குடிசையில் பிறந்து, இந்த வாழ்க்கையிலிருந்து மீண்டுவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் படித்து, நல்ல வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதித்து, சில ஆண்டுகளில் ‘மனநிறைவு கிடைக்கவில்லை’ என்று திரும்பவும் கிராமத்துக்கே வந்து விவசாயம் செய்வது இந்தத் தலைமுறையில் சிலரது லைஃப்ஸ்டைலாக மாறியிருக்கிறது.

நந்தகுமாரை இந்த ரகம் என்று சொல்லிவிட முடியாது. திருப்பத்தூரில் பிறந்த இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்துவிட்டு, கொடைக்கானலில் ஓடுகள் வேயப்பட்ட மண்வீட்டைத் தானாகவே கட்டிக்கொண்டு அங்கு விவசாயம் செய்துவருகிறார். கொடைக்கானல் அருகே வடகவுஞ்சியில் உள்ள அவரது தோட்டத்திற்குச் சென்றோம். வேட்டி, சட்டை அணிந்து, தலையில் பச்சைத்துண்டு கட்டிக்கொண்டு கோழிகளுக்கு இரை அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார் 26 வயது நந்தகுமார்.

மண்வீட்டு விவசாயி!

வாஞ்சையோடு வரவேற்று தான் கட்டிய மண் வீட்டைச் சுற்றிக் காட்டினார். ‘‘திருப்பத்தூர்தான் பூர்வீகம். அப்பா, அம்மா இருவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்பா ரயில்வே ஸ்டேஷன் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனக்கு ஒரு அண்ணன், அக்கா, தம்பி இருக்கின்றனர். அப்பா ரயில்வேயில் இருந்தாலும் தாத்தா எங்கள் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்துவந்தார். நான் சிறுவயதில் தாத்தாவுடன் சேர்ந்து விவசாய வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டேன்.

சென்னை அண்ணா பல்கலையில் எம்.பி.ஏ படித்தபோது, பல்கலை வளாகத்திலேயே ஒரு பகுதியில் 2 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் நடந்தது. நானும் அந்தக் குழுவில் இணைந்து வேலை செய்தேன். அங்கு நிறைய மூத்த இயற்கை விவசாயிகள், ஆய்வாளர்கள் வருகை தருவார்கள். அவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அப்போது 60 வீடுகளுக்கு மாடித் தோட்டம் அமைத்துக் கொடுத்துள்ளேன்.

மண்வீட்டு விவசாயி!

அதைப் பார்த்த ஒரு டூரிசம் கம்பெனி என்னை வேலைக்கு எடுத்தது. அவர்கள் கொடைக்கானலில் ஒரு புராஜெக்ட் செய்தனர். அதில் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். அப்போது வடகவுஞ்சிக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அழகிய சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இங்கு நிறைய மண் வீடுகள் இருந்தன. சிறுவயதில் மண்வீடு கட்டி விளையாடிய எனக்கு, அப்படியான ஒரு வீடு கட்டி எளிமையான முறையில் இயற்கையோடு இணைந்து வாழும் விருப்பம் உருவானது.

குத்தகைக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைத்தது. வேலையை விட்டுவிட்டு அந்த நிலத்தின் அருகே மூங்கில், செம்மண், ஓடுகள், பழைய மரச்சாமான்களை வாங்கி மண்வீடு கட்டினேன். விவசாயிகளின் உதவியுடன், மலைப்பூண்டு, கேரட், உருளை, கொத்தமல்லி, முள்ளங்கி, காலிபிளவர் பயிரிட்டேன். படிப்படியாக முழுநேர விவசாயி ஆனேன். அண்ணன் பண உதவி செய்து என்னை ஊக்கப்படுத்தினார்.

இயற்கையெழில் கொஞ்சும் இந்தச் சூழலில் வாழ்வதே மனதுக்குப் பெரும் நிம்மதி, மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் ஒவ்வொரு செயலையும் வீடியோவாக்கி, ‘தமிழ் நேட்டிவ் பார்மர்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கிப் பதிவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்களுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.

மண்வீட்டு விவசாயி!

நான் உற்பத்தி செய்யும் பொருள்களை எனது நண்பர்கள், உறவினர்களுக்கு விற்கத் தொடங்கினேன். தரமான பொருள்களாக இருந்ததால் அவர்களை வைத்தே ஒரு பெரிய நெட்வொர்க் உருவானது. இப்போது வாடிக்கையாளர் 450 பேர் இருக்கின்றனர். மேலும், கொடைக்கானலில் விளையும் அவோகேடோ, மலைவாழை, ஆரஞ்சு, பேசன் ப்ரூட், பிளம்ஸ் பழங்களுக்கு ஆர்டர்கள் வந்தன. அந்தப் பழங்களையும், கொடைக்கானல் பழங்குடியினர் எடுக்கும் மலைத்தேன் ஆகியவற்றையும் சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கினேன். பல மாநிலங்களுக்கு அனுப்பி மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்.

எதிர்காலத்தில் இங்கு சொந்தமாக நிலம் வாங்கி ஒரு மாதிரித் தோட்டத்தை உருவாக்க உள்ளேன். விவசாய ஆர்வமுள்ளவர்கள் தங்கிக் கற்றுச்செல்லும் வகையிலான ஏற்பாடுகளையும் செய்யத் திட்டமிட்டுள்ளேன். விவசாயிகள் பொருளை நன்றாக விளைவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சந்தைப்படுத்துவதில் அக்கறை காட்டுவதே இல்லை. இதனால்தான் இடைத்தரகர்கள் இடையே புகுந்து லாபம் அடைகின்றனர். விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சந்தைப்படுத்துவதற்காகப் பல்வேறு ஆப்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மண்வீட்டு விவசாயி!

படித்த இளைஞர்கள் பல லட்ச ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு விவசாயத்தில் நேரடியாகக் குதித்துவிடக்கூடாது. அதுதொடர்பாக முதலில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். படித்தவர்கள் விவசாயத்தை விட்டு விலகிச்செல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியமான விளைபொருள்கள் எல்லோரையும் சென்றடையும்’’ என்கிறார் நந்தகுமார்.

பைக் ரைடு செல்லும் இளைஞரை ஹீரோவாகக் கொண்டாடும் இளைஞர்களுக்கு மத்தியில் நந்தகுமார் வித்தியாசமானவர்.