நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பருவத்துக்கு ஏற்ற பயிர்..!

வித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
வித்யா

வீட்டுத்தோட்டம்

ரோடு மாவட்டம், அறச்சலூரைச் சேர்ந்த வித்யா தன் வீட்டிலும், அருகிலுள்ள அக்கா வீட்டிலும் வீட்டுத்தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்; தன் தந்தைக்கு விவசாயத்தில் உதவியாக இருக்கிறார். வீட்டுத்தோட்டத்தில் பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த வித்யாவைச் சந்தித்தோம்.

“நான் எம்.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கேன். கல்லூரி ஆசிரியர், ஹெச்.ஆர்னு பல வேலைகளைப் பார்த்திருக்கேன். சின்ன வயசுல இருந்தே இயற்கைமேல ரொம்ப ஈடுபாடு. என்ன வேலை செஞ்சாலும், இயற்கையோடு இணைஞ்சு வாழணும்னு நினைப்பேன். அப்பா விவசாயி. குத்தகை நிலத்துல விவசாயம் செய்யறாரு. எனக்கு விவசாயத்து மேலயும் ஒரு ஈடுபாடு இருந்துச்சு. நம்மாழ்வார் அய்யா புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். அவருடைய பேச்சுகளை இணையத்துல கேட்டேன். ஒருகட்டத்துல இயற்கை விவசாயத்து மேல அதிக ஈடுபாடு வந்துடுச்சு. `நான் வேலையை விட்டுட்டு முழு நேரமா விவசாயம் செய்யப்போறேன்’னு சொன்னதும், வீட்டுல பலத்த எதிர்ப்பு. பிறகு என் விருப்பத்தைப் புரிஞ்சுகிட்டாங்க. இப்போ நான் ஒரு இயற்கை விவசாயி’’ சொல்லும் போதே முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது வித்யாவுக்கு.

வீட்டுத்தோட்டத்தில் மாதுளை, புதினா
வீட்டுத்தோட்டத்தில் மாதுளை, புதினா

தொடர்ந்து பேசியவர், “வருமானத்தைவிட ஆரோக்கியம்தான் முக்கியம்னு நினைச்சேன். `முதல்ல நாம சாப்பிடும் சாப்பாடு விஷமில்லாததா இருக்கணும்’னு வீட்டுல தோட்டம் அமைச்சேன். பருவத்துக்கு ஏற்ற மாதிரி கத்திரி, சுரை, பூசணி, பாகற்காய், பீர்க்கன், நெல்லி, எலுமிச்சை, அவரை, புதினா, மாதுளை, திராட்சை, பன்னீர் ரோஜா, மல்லிகை, செம்பருத்தி, மருதாணி, வெற்றிலை, தூதுவேளை, பிரண்டை, கறிவேப்பிலை, முருங்கைனு விளையவெக்கிறேன். உரமா சமையலறைக் கழிவுகள், ஆடு, மாடுகளோட கழிவுகளைப் பயன்படுத்துறேன்.

வித்யா
வித்யா

பூச்செடிகளுக்கு வேப்பம் பிண்ணாக்கு அருமையான உரம். வேர் தொடர்பான நோய்கள் செடிகளைத் தாக்காம அது பாதுகாக்கும். அதையும் பயன்படுத்துறேன்’’ என்கிறார்.

“இயற்கை விவசாயத்தைப் பெரிய அளவுல செய்யணும்னு நினைச்சிருக்கேன். சீக்கிரம் அதுவும் நடக்கும். நாம இயற்கை விவசாயம் செஞ்சு, 100 கிலோ மகசூல் எடுக்கணும்னு அவசியமில்லை. ஒரு கத்திரிக்காயை மருந்து இல்லாம விளைவிச்சு எடுத்தாலே பெரிய விஷயம். தேவைக்கு ஏற்ற தயாரிப்புதான் முக்கியம். இவ்வளவு கஷ்டப்பட்டு விளைய வெக்கிறதை மனசுலவெச்சுக்கிட்டு உணவுகளை யாரும் வீணடிக்கக் கூடாது’’ என்ற வேண்டுகோளை நிறைவாக வைத்து விடைகொடுத்தார் வித்யா.