Published:Updated:

``தெய்வமா மதிச்ச மாடுங்க; விற்க மனசு வரலை... தானமா கொடுத்திட்டேன்!" - 150 மாடுகளை தானம் தந்த விவசாயி

மகளுடன் விவசாயி மணி

நாட்டு மாடுகள் அரிதாகிவிட்ட இன்றைய சூழலில் அதற்கான மதிப்பும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பராமரிக்க முடியாத காரணத்தால், மணி தன்னுடைய 150 நாட்டு மாடுகளைக் கடந்த ஆண்டு ஏராளமான விவசாயிகளுக்கு தானமாகக் கொடுத்திருக்கிறார்.

``தெய்வமா மதிச்ச மாடுங்க; விற்க மனசு வரலை... தானமா கொடுத்திட்டேன்!" - 150 மாடுகளை தானம் தந்த விவசாயி

நாட்டு மாடுகள் அரிதாகிவிட்ட இன்றைய சூழலில் அதற்கான மதிப்பும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பராமரிக்க முடியாத காரணத்தால், மணி தன்னுடைய 150 நாட்டு மாடுகளைக் கடந்த ஆண்டு ஏராளமான விவசாயிகளுக்கு தானமாகக் கொடுத்திருக்கிறார்.

Published:Updated:
மகளுடன் விவசாயி மணி
அமைதியான சூழல். திரும்பிய திசையெங்கும் விவசாய நிலங்கள். அதில் நிறைந்திருக்கும் மா மரங்களில் காய்கள் கொத்துக் கொத்தாகத் தொங்குகின்றன. ஊரை இணைக்கும் ஒத்தையடிப் பாதையில் கடந்து சென்றால் மணியின் வீடு வரவேற்கிறது. லாபத்தை மட்டுமே எதிர்பார்த்து விவசாயம் செய்பவர்களுக்கு மத்தியில் வித்தியாசமானவர் மணி.
தோட்டத்தில் மணி
தோட்டத்தில் மணி

பூர்வீக விவசாய நிலம் 100 ஏக்கர் இருக்கிறது. அவற்றில் மா, மலைவேம்பு பயிரிட்டிருக்கிறார். அவை ஓரளவுக்குத்தான் பலன் கொடுக்கின்றன. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விவசாயத்தில் பெரிதாக லாபமில்லை. ஆனாலும், மணிக்கு விவசாயத் தொழிலை கைவிட மனமில்லை. தொழுவத்திலுள்ள மாடுகளுக்குத் தீவனமிட்டுக்கொண்டிருந்தவரின் கவனம் அங்கும் இங்கும் அலைபாய்ந்துகொண்டிருந்தது. காரணம், தொழுவத்தில் எப்போதும் சத்தமிட்டுக்கொண்டிருந்த 150 நாட்டு மாடுகளும் தற்போது இல்லை. அந்த ஏக்கத்தால் மணிக்கு மட்டுமல்ல, மொத்தக் குடும்பத்தினருக்கும் தினமும் வருத்தம்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டு மாடுகள் அரிதாகிவிட்ட இன்றைய சூழலில் அதற்கான மதிப்பும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பராமரிக்க முடியாத காரணத்தால், மணி தன்னுடைய 150 நாட்டு மாடுகளைக் கடந்த ஆண்டு ஏராளமான விவசாயிகளுக்கு தானமாகக் கொடுத்தார். தற்போதும் அதுகுறித்த அழைப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள எல்.ஆர்.மேடு கிராமத்தைச் சேர்ந்த மணி, தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். ஊரில் நன்றாக வாழ்ந்த குடும்பம். ஆனாலும், அத்தனை மாடுகளையும் தானம் கொடுக்கும் நிலை எதனால் வந்தது? செழிப்பாக இருந்த இவரது விவசாயத் தொழில் சோர்வடைய என்ன காரணம்?

மணி, நிதானமாகப் பேசத் தொடங்கினார்.

தோட்டத்தில் மணி
தோட்டத்தில் மணி

``ஊர்லயே ஸ்கூல் படிப்பை முழுசா முடிச்சது நான்தான். பி.காம் முதல் வருஷத்துலயே காலேஜ் படிப்பை நிறுத்திட்டேன். அப்பாவுக்கு ஒத்தாசையா இருந்து விவசாய வேலைகளைக் கத்துக்கிட்டேன். 1970-ல் அப்பா பஞ்சாயத்துத் தலைவரா இருந்திருக்கார். 2001-ம் ஆண்டு பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்புக்கு ஊர் மக்கள் என்னைத் தேர்வு செய்தாங்க. தேர்தல்ல வெற்றியும் பெற்றேன். அந்தப் பணிக்கே நேரம் சரியா இருந்துச்சு. விவசாய வேலைகளைக் கவனிச்சுக்க முடியலை. 2016-ம் ஆண்டு வரைக்கும் தொடர்ந்து மூணு முறை பஞ்சாயத்துத் தலைவரா இருந்தேன். இதுக்கிடையே, 2013-ல் அப்பா காலமானார். பிறகு நான் விவசாய வேலைகளையும் கவனிச்சுகிட்டேன். அப்போல்லாம் விவசாயம் சிறப்பாகவும் லாபகரமாகவும்தான் இருந்துச்சு.

தொண்டை மண்டலம், காஞ்சிக்குட்டை ஆகிய நாட்டு ரகங்களைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான மாடுகள் எங்ககிட்ட இருந்துச்சு. இந்த ரக மாடுகள் நெட்டையாவும் இல்லாம குட்டையாவும் இல்லாம நடுத்தர உயரத்துடன் இருக்கும். அவை மேய்ச்சல் முறையிலதான் வளரும். ஆரோக்கியமான முறையிலதான் எல்லா மாடுகளையும் வளர்த்தோம். காலங்காலமா ஒருசில பசு மாடுகள்கிட்ட இருந்து வீட்டுத் தேவைக்கு மட்டும்தான் கொஞ்சம் பால் கறப்போம். மத்தபடி பசு மாடுகளின் பால் முழுக்கவே கன்னுக்குட்டிக்குத்தான். மாடுகளின் சாணத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்துவோம்.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

எங்ககிட்ட 80 பசு மாடுகள்கிட்ட இருந்துச்சு. ஆனா, பால் கறந்து விற்பனை செய்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டதேயில்லை. அதுல எங்களுக்கு உடன்பாடும் கிடையாது. அதனாலயே கறவை மாடுங்கிற வார்த்தையைக்கூட நாங்க பயன்படுத்த மாட்டோம். அதேபோல 30-க்கும் அதிகமான காளை மாடுகள் இருந்துச்சு. பலரும் தங்களோட பசு மாட்டைக் கொண்டு வந்து எங்க காளை மாடுகள்கிட்ட சினைப் பிடிச்சுட்டுப் போவாங்க. அதுக்கும் காசு வாங்க மாட்டோம். சிலர் வலியுறுத்தவே கொஞ்சகாலம் மட்டும் சில பசு மாடுகளிலிருந்து பால் கறந்து குறைஞ்ச விலைக்கு விற்பனை செஞ்சேன். ஒருகட்டத்துல மனசு ரொம்பவே வேதனையாகி, பால் விற்பனையை நிறுத்திட்டேன்” என்றவர் மாடுகளை தானம் கொடுத்த காரணத்தையும் விவரித்தார்.

நாட்டு மாடுகளை தானமாகப் பெற்றுச் செல்கின்றனர்
நாட்டு மாடுகளை தானமாகப் பெற்றுச் செல்கின்றனர்

``பத்து ஏக்கர் நிலத்துல தவறாம நெல் பயிரிடுவோம். அதுல கிடைக்கும் வைக்கோல் மாடுகளுக்குத் தீவனமாகும். பற்றாக்குறைக்கு வெளியில இருந்தும் தீவனம் வாங்குவோம். அந்தப் பத்து ஏக்கர் நிலமும் தனித்தனியா பிரிஞ்சு இருந்துச்சு. அந்தக் காடுகளுக்குப் போற பாதையில் இருந்த விவசாயிங்க நெல் பயிரிடுவதை கைவிட்டு தைல மரங்களை வளர்க்க ஆரம்பிச்சாங்க. அதனால எங்க காட்டுக்குள்ள போய் உழவு ஓட்டுறது, எரு போடுறது மாதிரியான வேலைகளைச் செய்றது கடினமாச்சு. அதனால வேறு வழியில்லாம நெல் பயிரிடுறதை நிறுத்திட்டு நானும் தைல மரங்களை நட்டேன். மாடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிப்போறதுலயும் நிறைய சிக்கல். வெளியில இருந்து வைக்கோல் வாங்கியும் கட்டுப்படியாகலை. வேலையாட்கள் பற்றாக்குறையும் அதிகமாச்சு.

ரெண்டு வருஷம் ஆகியும் நிலைமை சரியாகலை. மாடுகளை அதன் இயல்பில் இருந்து மாத்திக் கொட்டகையில் அடைச்சு வளர்க்க விருப்பமில்லை. தெய்வமா மதிச்ச மாடுகளை விலைக்கு வித்து பணம் பார்ப்பதிலும் உடன்பாடில்லை. மனசைக் கல்லாக்கிக்கிட்டு எல்லா மாடுகளையும் தானமா கொடுத்திடலாம்னு போன வருஷம் ஜூன் மாசம் முடிவெடுத்தோம். `என்னிடம் நாட்டு மாடுகள் இருக்கிறது. பால் விற்பனையில் லாபம் பார்க்கும் எண்ணம் இல்லாமல் விவசாயத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் எண்ணம் இருப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். இலவசமாக மாடுகளை வழங்குகிறேன்’னு சில விவசாய வாட்ஸ்அப் குழுவில் அழுதுகிட்டே பதிவிட்டேன்.

மாடுகளை எங்க புள்ளைங்க மாதிரிதான் வளர்த்தோம். மாட்டைக் கொடுத்துட்டாலும், தினமும் அதுகளைப் பத்தி எங்க வீட்டில் எல்லோரும் நினைச்சு வருத்தப்பட்டுகிட்டேதான் இருக்கோம்.
மணி

உடனடியாக தமிழகம் முழுவதிலும் இருந்து நிறைய அழைப்புகள் வந்துச்சு. என்னோட கண்டிஷனைச் சொல்லி, அதை ஏத்துக்கிறவங்களை மட்டும் நேரில் வரச்சொன்னேன். `எக்காரணம் கொண்டு மாடுகளை விற்கக்கூடாது. வளர்க்கச் சிரமம் ஏற்பட்டால் என்கிட்டயே மாடுகளைக் கொடுத்திடணும்’ என்பது உட்பட சில கண்டிஷன்களை பாண்டு பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கிட்டுதான் மாடுகளைக் கொடுத்தேன். ஒருத்தருக்கு ஒண்ணு முதல் ஐந்தாறு மாடுகள்வரை கொடுத்தேன். இயற்கை விவசாயம் செய்றவங்களுக்கு அதிகமான மாடுகளைக் கொடுத்தேன். காளை, பசு, கன்னுக்குட்டினு எல்லாம் சேர்த்து ஒரே மாசத்துல 150 மாடுகளையும் கொடுத்துட்டேன்” என்பவரின் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

``மாடுகளை தானமா கொடுக்கிற அறிவிப்பைப் பார்த்து, போன வருஷத்துல ஒரே மாசத்தில் பல ஆயிரம் போன் அழைப்புகள் வந்துச்சு. எல்லாத்துக்கும் பதில் சொன்னேன். பி.ஜே.பியில் இருக்கும் ஹெச்.ராஜாவும் எனக்கு போன் பண்ணி சில தகவல்களை விசாரிச்சார். பிறகு அவர் கூப்பிடலை. எல்லா மாடுகளையும் கொடுத்த பிறகும்கூட தொடர்ந்து நிறைய அழைப்புகள் வந்துச்சு. இப்போதுவரை அழைப்புகள் வருது.

மாடுகளை வாங்கிட்டுப்போனவங்க மாசத்துல ஒருமுறை போன் பண்ணியோ அல்லது வாட்ஸ்அப்லயோ மாடுகளின் உடல்நலம் பத்தி எனக்குத் தெரிவிப்பாங்க. ஒருகட்டத்துல அந்த வழக்கம் கணிசமா குறைஞ்சுடுச்சு. நானா கேட்டாலும், `மாட்டைக் கொடுத்துட்டு தொந்தரவு பண்றான்’னு சொல்லவும் வாய்ப்பிருக்கு. அதனால நானா யாருக்கும் போன் பண்றதில்லை. ஒருசிலர் மட்டும் தவறாம மாடுகளைப் பத்தி அப்பப்போ எனக்குத் தெரியப்படுத்துறாங்க. எங்க மாடுங்க எங்கிருந்தாலும் நல்லா இருக்கும்னுதான் தினமும் நினைக்கறோம்.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

மாடுகளை எங்க புள்ளைங்க மாதிரிதான் வளர்த்தோம். மாட்டைக் கொடுத்துட்டாலும், தினமும் அதுகளைப் பத்தி எங்க வீட்டுல் எல்லோரும் நினைச்சு வருத்தப்பட்டுகிட்டேதான் இருக்கோம். அதேசமயம் காளை, பசு, கன்னுக்குட்டினு அஞ்சு உருப்படிகளை வீட்டில் வெச்சிருக்கோம். அவைதான் எங்களுக்கு ஆறுதலா இருக்கு” என்னும் மணி, 75 ஏக்கரிலுள்ள மா மரங்களிலும் தற்போது சரியான விளைச்சல் கிடைக்காமல் மிகவும் வேதனையில் உள்ளார்.

``100 ஏக்கர்ல 75 ஏக்கர் முழுக்க மா மரங்கள்தான் இருக்கு. 10 ஏக்கரில் மலைவேம்பு இருக்கு. தைல மரம் வைக்க 10 ஏக்கர் நிலத்தைத் தயார்படுத்திட்டிருக்கேன். முன்பு கிணத்துப் பாசனம் நல்லா கைகொடுத்துச்சு. பிறகு கிணத்துலயும் போதிய தண்ணி இல்லை. ஆழ்துளைக் கிணத்துப் பாசனத்துலயும் சரியா தண்ணி கிடைக்கிறதில்லை. அதுல கிடைக்கிற கொஞ்சம் தண்ணியுடன், மழையை நம்பித்தான் விவசாயம் நடக்குது.

நாட்டு மாடுகளை தானமாகப் பெற்றுச் செல்கின்றனர்
நாட்டு மாடுகளை தானமாகப் பெற்றுச் செல்கின்றனர்

முந்தைய காலங்கள்ல முழுக்கவே இயற்கை விவசாயம்தான் செய்தோம். சுத்துவட்டார விவசாயிகள் முழுக்கவே ரசாயன விவசாயத்துக்கு மாறிட்டாங்க. அதனால நான் ரசாயன உரங்களைக் குறைவா பயன்படுத்தினாலும், பயன்படுத்தாம இருந்தாலும்கூட என் நிலத்துலயும் பூச்சித் தாக்குதல் பரவிடுது. தவிர, வேலையாட்கள் பற்றாக்குறையும் அதிகமாகிட்டே இருக்கு. எனவே, நானும் கொஞ்சமா ரசாயன உரங்களை பயிர்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சோம். தொழுவுரம், மாட்டுச்சாணம் ஆகியவற்றை 60 - 70 சதவிகிதம் கொடுப்பதைக் கடைப்பிடிக்கிறேன்.

பங்கனப்பள்ளி, ருமானி, ஜவாரி ஆகிய மூணு வகை மா மரங்கள் இருக்கு. மாந்தோப்பு மொத்தத்தையும் குத்தகைக்கு விட்டுட்டேன். பராமரிப்பு வேலைகள் என்னுடையது. அறுவடை சமயத்துல குத்தகைக்காரங்க காய்கறிகளைப் பறிச்சுட்டுப் போயிடுவாங்க. அப்பா காலத்துல ஏக்கருக்கு 30,000 ரூபாய்க்குக் குத்தகைக்கு விட்டோம். இப்போ ஏக்கருக்கு 20,000 ரூபாய்கூட கிடைக்கிறதில்லை. இப்பல்லாம் பயிர்களுக்குச் சரியா தண்ணி ஊத்த முடிவதில்லை. பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல் அதிகமாகிடுச்சு. இதனால பராமரிப்புச் செலவு கணிசமா கூடிட்டே போகுது.

தோட்டத்தில் மணி
தோட்டத்தில் மணி

இந்தக் கோடைக்காலத்துல மா அறுவடை சீசன். என் நிலத்தில் பல ஏக்கரிலுள்ள மா மரங்கள்ல சரியா பூக்கள் பிடிக்கலை. காய்கள்லயும் சரியான வளர்ச்சியில்லை. அதனால பல ஏக்கர் மா மரங்களுக்குக் குத்தகைப் பணம் வாங்காம விட்டுட்டேன். போன வருஷம் நல்லா காய் பிடிச்ச மரங்கள்ல இந்த வருஷம் சரியா காய் பிடிக்கலை. அதிக நிலப்பரப்பில் விவசாயம் செஞ்சாலும் பெரிய சிரமம்தான். இதனால விவசாய வேலையில் தினந்தோறும் சவால்களும் வேதனைகளும் அதிகமாகிட்டே இருக்கு. ஒரு விவசாயியா இருந்து பார்த்தாதான் என்னோட உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியும். என்ன ஆனாலும் ஒருபோதும் பூர்வீக விவசாயத் தொழிலைக் கைவிடமாட்டேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மணி.