பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் அருகே உள்ள குரும்பப்பாளையம் பகுதியில்தான் 80 வயது இளைஞர் தசரதராமனின் 8.5 ஏக்கர் பரப்பளவிலான பூமி இருக்கிறது. வானம் தென்மேற்குப் பருவமழைக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும், குளிர்காற்றுத் தழுவி கொண்டிருந்த ஓர் அழகான காலைவேளையில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“கோயம்புத்தூர், காந்திபுரம்தான் என் சொந்த ஊர். பிறந்தது விவசாயக் குடும்பம். காதியில வேலைக்குச் சேர்ந்தேன். சென்னை, கோவை, தர்மபுரி, பெங்களுரூனு பல இடங்கள்ல வேலை பார்த்தேன். கடைசியா ஊட்டியில ஓய்வுபெற்றேன். சின்ன வயசுல இருந்தே, யாரையும் சார்ந்து இருப்பது எனக்குப் பிடிக்காது. எனக்கு ரெண்டு மகன்கள். என்னோட ஓய்வுக்குப் பிறகு, அடுத்து என்ன செய்யலாம்?னு யோசனையா இருந்துச்சு. கடைசியாக 2007-ம் வருஷம், பொள்ளாச்சிக்குப் பக்கத்துல இருக்க, இந்த இடத்தை வாங்குனோம். மகன் பெங்களூர்ல இருக்குறதால, நான்தான் இதை முழுநேரமாகக் கவனிச்சுட்டு வர்றேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎங்க வீடு கோவை கணபதியில இருக்குது. வாரத்தில 4 நாள் பஸ்ல ஏறி, தோட்டத்துக்கு வந்திடுவேன். இது எனக்குச் சிரமமா இல்லை. நிலம் வாங்கியதும், இதுல என்ன வெள்ளாமை செய்றதுனு கேள்வி வந்துச்சு. இந்தப் பக்கம் பெரும்பாலும் தென்னை விவசாயம்தான். அதனால நாங்களும் தென்னையைப் பிரதான பயிரா நடவு செஞ்சோம்.

“தோட்டத்தில ரெண்டு பேர் வேலைக்கு இருக்காங்க. மாடுகள் இருக்குது. ரெண்டு போர்வெல், ரெண்டு கிணறு இருக்குது. அதனால பாசனத்துக்குத் தண்ணிப் பிரச்னையில்லை. இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துறோம். எங்க தோட்டத்துல விளையுற தேங்காய் சராசரியா 800 கிராம் எடை இருக்குது. விளைச்சல் நல்லா இருக்குது. தேங்காய் பருப்பு ரொம்ப அடர்த்தியாக இருக்கும். வருஷத்துக்கு ரெண்டு தடவை, டிராக்டர் மூலமா நிலத்தை உழுவோம். பராமரிப்புச் செலவு, சம்பளம் எல்லாம் சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மொத்தம் 1.50 லட்சம் ரூபாய்ச் செலவாகும். உள்ளூர் வியாபாரிகளை மட்டுமே நம்பினால் கட்டுப்படியாகாது. அதனால, கோயம்புத்தூருக்குக் கொண்டு போய், எங்களுக்குத் தெரிஞ்ச வியாபாரிககிட்ட நேரடியா விற்பனை செய்றோம். தேங்காய் மூலமா, வருஷத்துக்கு 2.50 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். செலவு போக ஒரு லட்ச ரூபாய் லாபம். ஊடுபயிர் மூலமா கிடைக்குற வருமானம் போனஸ்’’ என்றார் நிறைவாக.
தொடர்புக்கு, தசரதராமன், செல்போன்: 99940 52077