
மகசூல்
சத்துகள் நிறைந்த கிழங்கு வகைகளில் ‘சர்க்கரைவள்ளிக் கிழங்கு’க்குத் தனி இடம் உண்டு.
இதன் சுவைக்காகவே தேடிப்பிடித்து வாங்குபவர்கள் இருக்கிறார்கள். அதிக தண்ணீர், அதிக பராமரிப்பு தேவையில்லை என்பதோடு, நோய்த் தாக்குதலும் இல்லை என்பதால், இந்தக் கிழங்கைப் பரவலாகச் சாகுபடி செய்துவருகிறார்கள் விவசாயிகள். அந்த வகையில் 75 வயதிலும் தளராமல், சர்க்கரைவள்ளிக்கிழங்குச் சாகுபடி செய்துவருகிறார் காசிமணி பாட்டி.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள கிராமத்திலிருக்கிறது இவரது தோட்டம். கிழங்கு அறுவடைப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.
‘‘நான் பள்ளிக்கூடத்துப் பக்கமே ஒதுங்கினதில்லை. பொறந்ததிலிருந்தே விவசாயம்தான் பொழப்பு. எங்க பக்கத்துல சீனிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சிறுகிழங்குனு வகை வகையா கிழங்குகளைத்தான் அதிகம் நடுவாங்க. அதைவிட்டா, நெல்லை ரொம்ப பேர் நடுவாங்க. அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் மட்கிய குப்பை, அடுப்புச்சாம்பலை மட்டும் போட்டு விவசாயம் செஞ்சிட்டுவர்றேன். எனக்கு இருக்குறது ரெண்டு ஏக்கர் நிலம்தான். குறைஞ்ச நிலத்துக்கு எதுக்கு ரசாயன உரம்னு அதைத் தவிர்த்திட்டேன்.
கிழங்கு வாடினாதான் இனிப்புச்சுவை கூடும். ஆனா, வாடின கிழங்கு சந்தையில அதிக விலைக்குப் போகாது. 25 சென்ட் இடத்துல சீனிக்கிழங்கு அறுவடை முடிஞ்சிருக்கு.
என் ரெண்டு மகன்களும் தனித்தனியா விவசாயம் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க அதிக பரப்புல விவசாயம் செய்யறதால, ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துறாங்க. என் மகன் மாரியப்பன் (இவரின் சிறுகிழங்குச் சாகுபடி குறித்த கட்டுரை ஏற்கெனவே பசுமை விகடனில் வெளிவந்துள்ளது) என் பேச்சைக் கேக்காம அதிகப்படியான ரசாயன உரம் போட்டு ரொம்ப நஷ்டமாகிப் போச்சு. இப்போ நாலு வருஷமா இயற்கை முறையில விவசாயம் செய்யறான். கிழங்கு வகைகளைப் பொறுத்தவரைக்கும், ரசாயன உரமே தேவையில்லை. மட்கிய சாணத்தைத் தவிர வேறெந்த உரமும் போடுறதில்லை. இந்த வருஷம்தான், என் மகன் தயாரிச்சுக் கொடுத்த ஜீவாமிர்தத்தை ரெண்டு தடவை தெளிச்சேன். நல்ல மகசூல் கிடைச்சிருக்கு’’ என்றவர், தனது விவசாயத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

“இது மொத்தம் ரெண்டு ஏக்கர் நிலம். இதுல ஒரு ஏக்கர்ல ஆத்தூர் கிச்சிலிச் சம்பா இருக்கு. கதிர் விட்டுடுச்சு. 25 சென்ட் இடத்துல சீனிக்கிழங்கு அறுவடை முடிஞ்சிருக்கு. மிச்சமிருக்கிற நிலத்தை மிளகாய் நாற்று நடுறதுக்காகத் தயார்படுத்தி வெச்சிருக்கேன்” என்றவர், மகசூல் மற்றும் வருமானம் குறித்த தகவல்களுக்குள் புகுந்தார்.
இது நிலத்தில் படரும் கொடி வகைத் தாவரம். இதன் வேர்ப்பகுதியே கிழங்காகும். செம்மண், கரிசல்மண் உள்ளிட்ட அனைத்து மணற்பாங்கான நிலமும் ஏற்றது.
“அறுவடை செஞ்ச கிழங்குகளை ரெண்டு நாள் வரைக்கும் இருப்பு வைக்கலாம். கிழங்கு லேசா வாடினாதான் இனிப்புச்சுவை கூடும். ஆனால், வாடின கிழங்கு சந்தையில அதிக விலைக்குப் போகாது. அதனால ஒரே நாள்ல அறுவடை செய்யாம, கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு, தேவைக்கேற்ப அறுவடை செஞ்சு விற்பனை செய்யலாம்.
நான் ரசாயன உரம் எதுவும் போடாம விளையவெக்கறதால உள்ளூர்க்காரங்களே வாங்கிட்டுப் போயிடுறாங்க. அதனால எனக்கு விற்பனையில எந்தச் சிக்கலும் இல்லை. இந்தத் தடவை கிணத்துல தண்ணி பற்றாக்குறையாப் போயிடுச்சு. அதனால மகசூல் குறைஞ்சிடுச்சு. 25 சென்ட் நிலத்துல 924 கிலோ விளைச்சல்தான் கிடைச்சுது. இதுல 75 கிலோ சேதாரமான கிழங்கு. அதைக் கழிச்சுட்டா 849 கிலோ. அவ்வளவையும் விற்பனை செஞ்சுட்டேன். ஒரு கிலோ ரூ.30 விலைக்குக் கொடுத்தேன்.
மொத்தம் ரூ.25,470 வருமானமாகக் கிடைச்சுது. உழவு, பாத்தி எடுத்தது, விதைக்கிழங்கு, நடவு, களை, கொடியைப் பிரட்டிவிடுறது, அறுவடைனு ரூ.5,000 செலவாகிடுச்சு. அதைக் கழிச்சா ரூ.20,470 லாபம்தான். குறைஞ்ச நிலத்துல எந்தப் பாடும் இல்லாம இந்த வருமானம் கிடைக்குது” என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, காசிமணி, செல்போன்: 96556 33408
இயற்கை சர்க்கரைவள்ளிக்கிழங்குச் சாகுபடி!
25 சென்ட் பரப்பளவில் இயற்கை முறையில் சர்க்கரைவள்ளிக்கிழங்குச் சாகுபடி செய்வது குறித்து காசிமணி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...
சர்க்கரைவள்ளிக்கிழங்குக்கு ‘சீனிக்கிழங்கு’ என்ற பெயரும் உண்டு. இது நிலத்தில் படரும் கொடிவகைத் தாவரம். இதன் வேர்ப்பகுதிதான் கிழங்கு. செம்மண், கரிசல்மண் உள்ளிட்ட அனைத்து மணற்பாங்கான நிலமும் ஏற்றது. சர்க்கரைவள்ளிக்கிழங்குக்குக் கொடியைத்தான் நட வேண்டும். அக்கம்பக்கத்தில் கொடி கிடைத்தால், வாங்கி வந்து அப்படியே நடலாம். கொடி கிடைக்காதவர்கள், நாற்றங்காலில் விதைக்கிழங்குகளை விதைத்து அதன் மூலம் கொடிகளை உற்பத்தி செய்து நட வேண்டும். நாற்றங்காலைத் தயார் செய்ய ஆடிப்பட்டம் ஏற்றது. 25 சென்ட் பரப்பில் சர்க்கரைவள்ளிக் கிழங்குச் சாகுபடி செய்ய ஒரு சென்ட் பரப்பளவில் நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
ஓரடி அகலம், ஓரடி உயரம் மற்றும் ஓரடி இடைவெளியில் மேட்டுப்பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் பாய்ச்சிய பிறகு பாத்திகளின் ஓரத்தில் அரையடி இடைவெளியில் விதைக்கிழங்குகளை ஊன்ற வேண்டும். நாற்றங்காலில் கொடி 50 முதல் 60 நாள்கள் வரை இருக்க வேண்டும். ஆடி 18-க்குப் பிறகு நாற்றங்காலில் விதைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும்.
நாற்றங்காலில் சிறிய கிழங்காக இருந்தால் அப்படியே ஊன்றலாம். பெரிய கிழங்காக இருந்தால் மூன்று அல்லது நான்கு துண்டுகளாக்கி ஊன்றலாம். கிழங்கை எப்படி வைத்தாலும் முளைக்கும். நாற்றங்காலில் விதைக்க இரண்டு கிலோ விதைக்கிழங்கு போதுமானது. ஏழு முதல் 10 நாள்களில் முளைப்பு தெரியும்.
நாற்றங்காலில் கிழங்கு ஊன்றிய முதல் 10 நாள்கள் வரை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்தால் போதும். ஆவணி, புரட்டாசி இரண்டு மாதங்களில் கொடியானது, நாற்றங்காலில் இருக்க வேண்டும்.
புரட்டாசி மாதத்தில் நடவு செய்ய வேண்டிய நிலத்தில் ஏழு நாள்களுக்கு ஒரு முறை என நான்கு முறை உழவு செய்ய வேண்டும். நான்காவது உழவுக்கு முன்னர் ஒரு டிராக்டர் மட்கிய தொழுவுரத்தை நிலத்தில் கொட்டி உழவு செய்து, ஓரடி அகலம், ஓரடி உயரம் மற்றும் ஓரடி இடைவெளியில் மேட்டுப்பாத்திகள் எடுத்து நடவுக்காகத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஐப்பசி மாத தொடக்கத்தில் நாற்றங்காலில் படர்ந்துள்ள கொடியைப் பிடுங்கி, இரண்டு கணுக்கள் சேர்ந்தாற்போல அரையடி நீளத்துக்குச் சிறு சிறு நாற்றுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நடவின்போது நிலத்தில் தண்ணீர்ப் பாய்ச்சிவிட்டு, பாத்திகளின் இரு ஓரங்களில் அரையடி இடைவெளியில் கணுவிலுள்ள தளிர் மேல்நோக்கி இருக்கும்படி, ஒரு கணு மட்டும் வெளியே தெரியும்படி ஊன்ற வேண்டும். செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை அரையடி இடைவெளி இருக்க வேண்டும். கொடியிலுள்ள தளிர்ப்பகுதி மேல்நோக்கி இல்லாமல், தலைகீழாக இருக்கும்படி ஊன்றினால் கொடி வளரும். ஆனால், கிழங்கு வராது. எனவே, ஊன்றுவதில் கவனம் தேவை.
முதல் 15 நாள்கள் மூன்று நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்தால் போதும். நிலத்தில் படரும் கொடியில் சல்லிவேர் பிடித்து, தனிக்கொடியாக வளர்ந்தால் கொடி வளருமே தவிர கிழங்கு வளராது. எனவே, 15 நாள்களுக்கு ஒரு முறை கொடியைப் பிரட்டிவிட வேண்டும். இவ்வாறு மூன்று முதல் நான்கு முறை பிரட்டிவிட வேண்டும். ஒவ்வொரு முறையும் கொடி பிரட்டி விடும்போதே களைகளையும் எடுத்துவிடலாம். 30-ம் நாளுக்கு மேல் வேர்களில் கிழங்கு பிடிக்கத் தொடங்கும்.
20 மற்றும் 35-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீரில், இரண்டு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். அதிக ஊட்டம் கொடுத்தால் கொடி வேகமாக வளருமே தவிர, கிழங்கு பெருக்காது. எனவே, இரண்டு முறை ஜீவாமிர்தம் தெளித்தால் போதும். நோய்த் தாக்குதல் ஏதுமில்லை.
தை மாதக் கடைசி அல்லது மாசி முதல் வாரத்தில் அறுவடையை முடித்துவிட வேண்டும். வெயில் அதிகமானால், அந்த வெப்பத்தில் கிழங்குக்குள் புழுக்கள் துளையிட்டுச் சென்று அதிக சேதாரத்தை ஏற்படுத்திவிடும். இதனால் மகசூல் குறையும். எனவே, வெயிலுக்கு முன்னர் அறுவடை செய்வதே சிறந்தது. 100-ம் நாளுக்கு மேல் நிலம் வெடித்துக் காணப்படும். கொடிகளின் அடிப்பாகம் பழுப்பு நிறமாகவும் மாறிக் காணப்படும். இதுதான் அறுவடைக்கான அறிகுறி. அந்த நேரத்தில் ஒரு பாத்தியை மண்வெட்டியால் வெட்டிப் பார்த்தால் கிழங்கின் பருமன் தெரியும். 110 முதல் 120-ம் நாளில் அறுவடை செய்யலாம். அறுவடைக்கு முந்தைய நாள் தண்ணீர்ப் பாய்ச்சி, கொடிகளைப் பிடுங்கிவிட்டு, மண்வெட்டியால் வெட்டிக் கிழங்குகளைச் சேகரிக்க வேண்டும்.