Published:Updated:

மண்ணை மலடாக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்

சுற்றுச்சூழல்
பிரீமியம் ஸ்டோரி
News
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

`பிளாஸ்டிக் மண்ணை மட்டும் சேதப்படுத்துவதில்லை. மண்ணின் வளத்தைக் காக்கும் மண்புழுக்களையும் சிதைத்துக்கொண்டிருக்கிறது’ என்ற ஆய்வறிக்கையால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் சூழலியலாளர்கள். `மைக்ரோபிளாஸ்டிக்’ எனப்படும் பிளாஸ்டிக் துகள்களால் கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து வெளியேறும் ரசாயன நச்சு, கடல்வாழ் உயிரினங்களின் உடலில் ஊடுருவி, அவற்றை உட்கொள்ளும் மனிதனின் ரத்தத்தில் கலந்துவிட்டது. அதன் பாதிப்பாக புற்றுநோய்வரை உருவாகக்கூடும் என்பது ஏற்கெனவே உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.

மண்ணை மலடாக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்

ஆனால், `மைக்ரோபிளாஸ்டிக் கடலில் ஏற்படுத்தியிருப்பதைவிட, பூமியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் மிக அதிகம்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். பிரிட்டனிலிருக்கும் ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், மைக்ரோபிளாஸ்டிக், `பாலிலேக்டிக் ஆசிட், அக்ரிலிக் மற்றும் நைலான் துணி இழைகளின் துகள்களால் மண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஆய்வு முடிவுகள் உலகை அச்சத்தில் உறைய வைத்துள்ளன. `பிளாஸ்டிக் துகள்கள், மண்ணை மாசுபடுத்துகின்றன; மண்ணின் மேற்பரப்பில் வாழும் நன்மை செய்யும் உயிரினங்களின் பேரழிவுக்கும் காரணமாக இருக்கின்றன’ என்று இந்த ஆய்வு குறிப்பிட்டிருப்பது பலரையும் பதறச் செய்திருக்கிறது.

`ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் பைகள், கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் நாளடைவில் சிதைந்து ஐந்து மில்லிமீட்டருக்குக் குறைவான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களாக மாறுகின்றன. துகள்களின் அளவு ஒரு மில்லிமீட்டருக்குக் குறைவானால் நானோ பிளாஸ்டிக் துகள்களாகின்றன. இந்தத் துகள்கள், விளைநிலங்களுக்கு மட்டுமன்றி, அவற்றில் வளரும் புழு, பூச்சிகளுக்கும் எமனாகின்றன. முக்கியமாக, மண்புழுவைத்தான் அதிகம் பாதிக்கின்றன’ என்கிறது அந்த ஆய்வு. மைக்ரோபிளாஸ்டிக் கலந்த மண்ணில் சில பிரத்யேகப் புல் விதைகளை விதைத்து ஆய்வு செய்தனர். மைக்ரோபிளாஸ்டிக் கலக்காத மண்ணிலும் அதே ஆய்வை மேற்கொண்டனர். முப்பது நாள்களுக்குப் பிறகு மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருக்கும் மண்ணில் விதைத்த விதைகளில் பல முளைக்கவில்லை. ஒரு சில விதைகள்தான் முளைத்தன. அதிலும் வளர்ச்சி மிகவும் குன்றியிருந்தது. அதைவிட அதிர்ச்சியான விஷயம், அதில் விடப்பட்ட மண்புழுக்கள் 3.1 சதவிகித உடல் எடையை இழந்திருப்பதுதான். ஆனால் சாதாரண மண்ணில் விதைத்த பெரும்பாலான விதைகள் முளைத்தன. அங்கு விடப்பட்ட மண்புழுக்கள் 5.1 சதவிகிதம் வரை உடல் எடை கூடியிருந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எடை குறைந்த மண்புழுவின் உடற்கூறுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள். மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் மண்புழுவின் உணவு மண்டலத்தை பாதித்து, மண்ணிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் அதன் ஆற்றலைச் சிதைத்திருந்தன. செரிமான உறுப்புகளில் அடைப்பை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியைத் தடுத்திருந்தன. அதனால் மண்புழுவின் உடல் எடை குறைந்திருந்தது. ‘மண்புழுபோல மண்ணில் வாழும் பல நன்மை செய்யும் உயிரினங்களையும் இவை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்’ என்று எச்சரிக்கிறார், ஆய்வுக்குழுவைச் சேர்ந்த பாஸ் பூட்ஸ் (Bas Boots).

மண்ணை மலடாக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்

`விவசாய நிலங்கள் உயிர்ப்புடனிருக்க முக்கியக் காரணியான மண்புழுக்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். மற்ற உயிரினங்களைவிட மண்புழு, விளைநிலங்களுக்குச் செய்யும் சேவை அளவிட முடியாதது. மண்ணின் உயிரியல் பண்புகளை அது உயர்த்தும். மண்ணை மறுசுழற்சி செய்வதில் மண்புழுவின் பங்கு ஈடு இணையற்றது. மண்ணிலுள்ள அங்ககப் பொருள்களை உடைத்து, அவற்றை மிகச் சிறந்த ஊட்டச்சத்தாக மாற்றுகிறது. மண்ணிலிருக்கும் உலோகங்களை மண்புழுக்கள் அகற்றுகின்றன. மண்ணின் சத்துகளை ஐந்து மடங்கு வரை உயர்த்துகின்றன. பருவநிலை மாற்றத்தால், புலிகள், குரங்கினங்கள் போன்ற காட்டு உயிரினங்களின் அழிவால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைவிட மண்புழுக்கள் அழிவதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம். சீரழிந்த நிலத்தைச் சீர்ப்படுத்தும் பொறியாளர்கள்தான் மண்புழுக்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

‘‘மூன்றில் ஒரு பங்கு பிளாஸ்டிக் துகள்கள் நீர் மூலம்தான் மண்ணில் கலக்கின்றன. அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருந்தால், சீரமைக்க முடியாத அளவுக்கு நிலங்கள் பாழாகிவிடும்.’’

முதன்முறையாக, மைக்ரோபிளாஸ்டிக்கால் மண்ணில் ஏற்படும் பாதிப்புகளையும் இந்தக் குழு ஆய்வு செய்திருக்கிறது. ‘மண்ணின் கார, அமிலத் தன்மையை (PH) கணிசமாகக் குறைத்துவிடுகிறது. மண்ணின் நீரைச் சேமிக்கும் ஆற்றலைக் குறைப்பதால், மண் அதன் உயிரித் தன்மையை இழக்கிறது.

மண் மலடாகிறது. பல்லுயிர்ப்பெருக்கம் தடைப்படுகிறது. கடைசியில் மண்ணுடன், அதில் வாழும் உயிரினங்களும் சேர்ந்து அழிந்துவிடும். மண்ணுக்கடியில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது யாருக்கும் அதிகமாகத் தெரியாது. எங்கள் ஆய்வு முடிவுகள் பாதிப்பின் ஒரு துளிதான்’’ என்கிறார் பூட்ஸ். ஒரு கிலோ மண்ணில் 700 முதல் 4,000 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர், காற்று மூலம் மைக்ரோபிளாஸ்டிக் நிலத்தில் படிகிறது. ஏற்கெனவே மண்ணில் தங்கும் ரசாயன உரங்களின் எச்சங்களும், தாவரங்களின் மீது தெளிக்கப்படும் ரசாயன பூச்சிக்கொல்லிகளும் பல நன்மை செய்யும் பூச்சி இனங்களைப் படுவேகமாக அழித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றிலும் மிகவும் பாதிக்கப்பட்டவை தேனீக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனிதனின் தொடர் தவறுகள், தவறான அணுகுமுறைகளால், விலங்கினங்கள் அழிவதைப்போலவே எண்ணற்ற தாவர இனங்களும் வேகமாக மறைந்துவருகின்றன. 1750-ம் ஆண்டு முதல் இன்று வரை 570 தாவர இனங்கள் முற்றிலுமாக மறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது மைக்ரோபிளாஸ்டிக், மிச்சமிருக்கும் தாவர இனங்களின் அழிவையும் துரிதப்படுத்தியிருக்கிறது. எங்கோ வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. நாட்டின் ஒரு மூலையிலிருக்கும் கிராமங்களில் வீசப்படும் இந்த நச்சு, நீர் மூலம் அங்கிருக்கும் விளைநிலங்களில் ஊடுருவி, விளையும் தானியங்களில் கலந்து, உணவு மூலம் பெருநகரங்களில் வாழும் மனிதர்களின் ரத்தத்தில் கலக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

இந்தியாவில் ஓர் ஆண்டில் 1.4 லட்சம் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும், ‘ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை கொண்டு வரப்படும்’ என அறிவிக்கப்பட்டது. காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவில் அந்த அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெருநிறுவனங்களின் அழுத்தம் காரணமாக, முழுமையாகத் தடை செய்வதை 2022-ம் ஆண்டு வரை ஒத்திவைத்திருக்கிறது மத்திய அரசு.

மூன்றில் ஒரு பங்கு பிளாஸ்டிக் துகள்கள் நீர் மூலம்தான் மண்ணில் கலக்கின்றன. அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருந்தால், சீரமைக்க முடியாத அளவுக்கு நிலங்கள் பாழாகிவிடும். வரும் காலங்களில் உணவுத் தேவை பலமடங்கு அதிகரிக்கும். ஆனால், விளைநிலங்களின் அளவும் குறைந்து வருகின்றன. இந்தச் சூழலில், நீர்நிலைகளையும் அவற்றின் சுற்றுப்புறங்களையும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காப்பதன் மூலம்தான், மண்புழுக்களைக் காப்பாற்ற முடியும். மீதமிருக்கும் விளைநிலங்களைப் பாதுகாக்க முடியும். உணவு நஞ்சாவதைத் தடுக்க முடியும்.

உடனடித் தேவை மக்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை.