Published:Updated:

`அரசு அலுவலகங்களிலும் பால் பொருள்களை விற்பனை செய்யணும்!' - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பால் கறத்தல்
பால் கறத்தல்

``இந்த கொரோனா காலக்கட்டத்தில், விவசாயிகளுக்கு தாங்கள் விவசாயத்தில் விளைவித்த விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், தாங்கள் வளர்க்கும் கறவைமாடுகள் மூலம் வருகின்ற சிறிய வருவாயை வைத்து அனைத்து செலவுகளையும் பூர்த்தி செய்தும் வருகிறார்கள்."

``பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு எடுத்துச் செல்லும் பாலில் இருந்து ஒரு லிட்டருக்கு 200 மில்லி லிட்டரை வாங்காமல் மீண்டும் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள் என்றும், ஒவ்வொரு பால் உற்பத்தி செய்யும் விவசாயியும், 200 கிராம் நெய்யை வாங்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த பிரச்னையைத் தடுக்க, விமான நிலையம், காவல் நிலையம், வி.ஏ.ஓ அலுவலகம் என்று எங்கெங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் பால் சார்ந்த பொருள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விவசாய சங்க பிரதிநிதிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய முன்னேற்றக் கழகத்தினர், இந்த கோரிக்கையை, தமிழக முதலமைச்சர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர், தமிழக உணவு மற்றும் நுகர்வோர்த்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செல்ல.இராசாமணி
செல்ல.இராசாமணி
நா.ராஜமுருகன்

அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் செல்ல.இராசாமணி, ``பண்டைய காலம் தொட்டு இன்றுவரை தமிழ்நாட்டில் விவசாயிகளோடு ஒன்றிணைந்த தொழிலாக கறவை மாடுகள் வளர்ப்பது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. விவசாயிகளின் வேளாண்மைக்கு உதவிடவும், பால் உள்ளிட்ட உணவு பொருள்களை வழங்கவும் கால்நடைகள் விவசாய பெருமக்களுக்கு காலம்காலமாக உற்றத் துணையாக இருந்து வருகின்றன. அப்படி, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கறவை மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில், விவசாயிகளுக்கு தாங்கள் விவசாயத்தில் விளைவித்த விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், தாங்கள் வளர்க்கும் கறவைமாடுகள் மூலம் வருகின்ற சிறிய வருவாயை வைத்து கறவை மாடுகளுக்கான தவிடு, தீவனம் வாங்கவும், விவசாயத்திற்குத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்து, ஆட்களுக்கு கூலி, மற்றும் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் பூர்த்தி செய்தும் வருகிறார்கள். இவ்வாறு இருக்க, பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு எடுத்துச்செல்லும் பாலில் இருந்து 1 லிட்டருக்கு 200 மில்லி லிட்டர் பாலை வாங்காமல் மீண்டும் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பால் உற்பத்தியாளரும் தலா 200 கிராம் நெய் வாங்கிட வேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள்.

 பால் விற்பனை
பால் விற்பனை
நா.ராஜமுருகன்
`அறிவிப்புகள் செயல் வடிவமானால் விவசாயிகளுக்கு பொற்காலம்தான்!' - வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள்

இவ்வாறு செய்வதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதோடு அவர்களுக்கு கடும் மன உளைச்சலும் ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, ஆவின்பால் நிறுவனம், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை பள்ளி மாணவர்களுக்கும், நட்சத்திர விடுதிகளுக்கும், மளிகைக் கடைகளுக்கும், ரேஷன் கடைகளின் மூலமும் விற்பனை செய்ய வழிவகுத்து பாலின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் அதைவிடுத்து, பாலைத் திரும்ப அனுப்புதல் மற்றும் நெய் வாங்கும் படி வற்புறுத்துதல் போன்ற ஆவினின் செயல்பாடுகள் விவசாயிகளை மென்மேலும் நசுக்கும்படி உள்ளது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்துப் பேசிய விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், ``பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்கள் வீட்டிற்கு பால், தயிர், வெண்ணெய், நெய் இவற்றின் தேவைகளுக்கு போக, மீதமுள்ள பாலையே கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். இவ்வாறு இருக்க, பால் உற்பத்தியாளர்களுக்கே நெய்யை 200 கிராம் 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருகிறது.

பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன்
நா.ராஜமுருகன்

இவ்வாறு விவசாயிகளிடமே பால் சார்ந்த பொருட்களான வெண்ணெய், நெய் இவற்றை கட்டாயமாக விற்பனை செய்வதற்குப் பதிலாக, வணிக நிறுவனங்களினுடைய தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, தனியாரிடம் இருந்து பெறப்படும் வெண்ணெய், நெய்க்கு பதிலாக அரசாங்கத்தினுடைய வெண்ணெய், நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதாவது, மளிகைக் கடைகள், ஷாப்பிங் மால்கள், ரேஷன் கடைகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சுற்றுலாத் தலங்கள், தலைமைச் செயலகம், காவல்நிலையங்கள், உழவர் சந்தை, காய்கறிச்சந்தைகள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், மெட்ரோ இரயில் நிலையங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள், விடுதிகள் மற்றும் இதுபோல் வாய்ப்புகள் எங்கெங்கே இருக்கிறது என்று நிபுணர் குழு அமைத்து ஆராய வேண்டும்.

ஆவின்: விவசாயிகளிடம் பாலை வாங்காமல் திருப்பியனுப்பும் சங்கங்கள்... என்னதான் பிரச்னை?

அந்த இடங்களில் எல்லாம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்திடவும், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விவசாயிகளிடம் திரும்ப வாங்க நிர்ப்பந்தம் செய்வதற்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலின் கொள்முதல் விலையினை பசும்பாலுக்கு ரூ. 3, எருமைப்பாலுக்கு ரூ.5 என உடனடியாக விலையேற்றம் செய்திடவும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கும், துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் பால் உற்பத்தியாளர்களின் சார்பாகவும், அனைத்து விவசாயிகளின் சார்பாகவும் கோரிக்கை வைத்துள்ளோம். நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு