Published:Updated:

"அரிய வகை சிறுதானிய விதைகள் என்கிட்ட இருக்கு!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விதைகளுடன் ஜனகன்
விதைகளுடன் ஜனகன் ( நா.ராஜமுருகன் )

சிறுதானியங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ளைஞர்கள் பலரும் ஆர்வமா இயற்கை விவசாயம் செய்ய வர்றாங்க. அவர்களில் பலர் பாரம்பர்ய விதைகளைத் தேடிச் சேகரிக்கத் தொடங்கியிருக்காங்க. ஆனால், பாரம்பர்ய விதைகள் என்றதும், பாரம்பர்ய ரக அரிசி, காய்கறி, கீரை விதைகளை மட்டும் சேகரிக்கிறாங்க. சிறுதானிய விதைகளைச் சேகரிக்கப் பெருசா ஆர்வம் காட்டமாட்டேங்குறாங்க. ஆனால் நான், தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சுற்றித் தேடி அலைந்து பல வகையான சிறுதானிய விதைகளைச் சேகரிச்சிருக்கேன்” மகிழ்ச்சியாகச் சொல்கிறார் இளைஞர் ஜனகன்.

நாமக்கல் மாவட்டம், ராசிப்புரத்தைச் சேர்ந்த ஜனகன். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துத் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்தவர், அதை ராஜினாமா செய்துவிட்டுத் தற்போது முழுநேர சிறுதானிய விதைச் சேகரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். அதோடு, சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி இணையம் (ஆன்லைன்) மூலம் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். இதற்காக, நாமகிரிப்பேட்டை அருகில் உள்ள குருவாளாவில் மூன்றரை ஏக்கர் தோட்டம் வாங்கி, அதில் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டும் இயந்திரங்களைக் கொண்ட சிறு தொழிற்கூடத்தை அமைத்திருக்கிறார். அந்தத் தொழிற்கூடத்தில் பரபரப்பாக இருந்த ஜனகனைச் சந்தித்துப் பேசினோம்.

விதைகளுடன் ஜனகன்
விதைகளுடன் ஜனகன்


“எங்க தாத்தா காலம்வரை தீவிரமா விவசாயம் பண்ணினாங்க. ஆனா, அப்பா பி.எஸ்.என்.எல்-ல் வேலைப் பார்த்தார். அம்மா அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை. எங்களுக்குச் சொந்தமா இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் நான் சின்னப் பையனா இருக்கும்போதே அப்பா விற்பனை செஞ்சுட்டார். இருந்தாலும் எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயம் செய்யணும்னு ஆசை. ‘படிச்சு வேலைக்குப் போனாலும், 40 வயசுக்கு மேல் விவசாயத்துக்குத் திரும்பிடணும்’னு பள்ளியில படிக்கிற காலத்திலேயே நினைச்சேன்.

விதைப்பந்து

இந்த நிலையில்தான், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சுட்டு, சென்னையில் ஒரு கம்பெனியில ரூ.10,000 சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தேன். ஒருநாள் ‘தாய்ப்பால், தேன் எல்லாம் விஷமாயிடுச்சி’னு ஒரு கட்டுரை படிச்சு அதிர்ந்துபோனேன். அப்புறம், ‘விவசாயிகள் தற்கொலை’, ‘பருவநிலை மாற்றம்’ங்கிற வார்த்தைகள் எல்லாம் காதில் கேட்க ஆரம்பிச்சது. அதனால், நான் பார்த்துட்டு வந்த வேலைமேல வெறுப்பு வந்துச்சு. அப்பாவை நச்சரிச்சு, 2014-ம் வருஷமே இந்த மூன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கச் சொன்னேன். வேலையை விட்ட பிறகு, இந்த இடத்தில் ஏதாவது பண்ணணும்னு நினைச்சேன். வேலையை விட்டதும், விதைப்பந்து தயாரிப்பு, அதுபற்றிப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுனு சென்னையிலிருந்து செயல்பட்டேன். அப்ப, என்னுடைய செயல்பாடுகள் குறித்துப் பசுமை விகடனில் கட்டுரைகூட வந்தது’’ என்றவர் சிறுதானிய விதைகளைச் சேகரிக்கத் தொடங்கிய விதம் குறித்துப் பேசினார்.

விதைகள்
விதைகள்


ஆச்சர்யப்படுத்திய சிறுதானியங்கள்

‘‘ஒன்றரை வருஷம் அப்படியே ஓடுச்சு. எங்க வீட்டுல, ‘நல்ல வேலையை விட்டுட்டு, தேவையில்லாத வேலை பார்க்குற’னு திட்டினாங்க. ஊருக்கு வந்ததும் சிறுதானியங்கள் மீது ஆர்வம் உண்டாச்சு. அது தொடர்பான விஷயங்களைத் தேடி படிச்சேன். அதுசார்ந்து இயங்குபவர்களிடமிருந்து விதை குறித்த அறிவை உள்வாங்கிக்கிட்டேன். பிறகு, சிறுதானியங்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். அதை வெச்சு விதைப்பந்துகள் செஞ்சேன். சிறுதானிய விதைகள் குறித்த தேடுதலை விரிவுபடுத்தினேன். சிறுதானியங்களின் வகைகள் என்னை ஆச்சர்யப்படுத்திச்சு.

என் நண்பர் பிரபு மூலமா, ஜவ்வாது மலைக்குப் போய் அங்குள்ள பழங்குடிகளிடம் சிறுதானிய விதைகளைச் சேகரிச்சேன். அந்தப் பயணத்தில்தான், ‘பாரம்பர்ய நெல், காய்கறிகளுக்குக் கிடைக்குற முக்கியத்துவம் சிறுதானிய விதைகளுக்குக் கிடைக்கல’ங்கிற உண்மை புரிஞ்சது. அதனால, ‘சிறுதானியங்கள் குறித்த முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு உணரவைக்கும் வகையில் நாம இதுல இயங்கணும்’னு முடிவு பண்ணினேன். ராசிபுரம் பக்கத்துல இருக்கப் போதை மலைக்குப் போனப்ப, இன்னும் பல உண்மைகள் புரிய வந்துச்சு’’ என்றவர் தானியங்களை மதிப்புக்கூட்டுதல் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

விதைகள்
விதைகள்


‘‘மலையில் பழங்குடிகள் சாமை ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செஞ்சாங்க. கீழே நகரத்தில் உள்ளவங்க அதை அரிசியாக்கி கிலோ ரூ.100-க்கு வித்தாங்க. அதன் பிறகுதான், விளைவிப்பவர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்குறதை உணர்ந்தேன். அதனால், ‘நாம இதுல இடைத்தரகரா மட்டும் இருக்கக் கூடாது’னு முடிவு பண்ணினேன். எங்கப்பா அவரோட நண்பர் ஒருத்தரை அறிமுகப்படுத்தினார். அவர் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் தொழில் செய்பவர்.

நானும் அப்படி மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடிவெடுத்தேன். 2018-ம் வருஷம் இந்தத் தொழில்ல இறங்கினேன். ஆந்திரா, கர்நாடகா போய் இது சம்பந்தப்பட்ட இயந்திரங்களைப் பார்த்துட்டு வந்தேன். மாவட்ட தொழில் மையம் மூலமா ரூ.10 லட்சம் கடன் வாங்கி, தேவையான இயந்திரங்களை வாங்கினேன்.

பல நாடுகளுக்கும் போகுது எங்க அரிசி

கல் பிரிக்கிறது, மண் பிரிக்கிறது, தோல் நீக்கிறது, மாவு அரைக்கிறது, குறுணை அரைக்கிறதுனு 15 இயந்திரங்களை வாங்கினோம். 1,000 சதுர அடியில் கொட்டகை அமைச்சேன். சிறுதானிய வகைகளைக் கொல்லிமலை, போதைமலையில் இருக்க விவசாயிகள், தமிழ்நாடு முழுக்க இருக்க விவசாயிகள், மண்டினு பலதரப்பினரிடமிருந்தும் வாங்க ஆரம்பிச்சேன். அதை மாவு, குருணைனு அரைச்சு மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். நண்பர்கள், ஆன்லைன், சமூகவலைதளங்கள் மூலமாக வாடிக்கையாளர்களைப் பிடிக்க ஆரம்பிச்சேன். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா, அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள்னு அரிசி அனுப்புற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்’’ என்றவர் சில அரிசி வகைகளை நமக்குக் காட்டினார்.

சிறுதானிய மதிப்புக்கூட்டல்
சிறுதானிய மதிப்புக்கூட்டல்


‘‘போன வருஷம் மட்டும் 120 ஏக்கர்ல விளைவிக்கப்பட்ட சிறுதானியங்களை வாங்குனோம். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், அவங்களோட சிறுதானியங்களைத் தொடர்ந்து எங்ககிட்ட விற்பனை செய்றாங்க. அதே மாதிரி, சிறுதானியங்களைப் பெரும்பாலும் மானாவாரி நிலத்தில்தான் பயிர் செய்வாங்க. அதனால, விவசாயிகள் தொடர்ந்து சிறுதானியங்களை விதைக்க ஆர்வம் காட்டமாட்டாங்க.

மாதம் 60,000 ரூபாய் லாபம்

ஆனால், நான் நல்ல விலை கொடுத்து வாங்குறதால, தொடர்ந்து பல விவசாயிகள் ஆர்வமா சிறுதானியங்களைப் பயிர் செய்றாங்க. 15 விவசாயிகள் நான் கொடுத்த நம்பிக்கையில் தொடர்ந்து சிறுதானியங்களை மட்டுமே வெள்ளாமை பண்றாங்க. குறைந்தபட்சமா ராகி மாவை கிலோ ரூ.35-க்கும், அதிகபட்சமா பிரவுன்டாப் மாவை கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்றேன். இப்போ என்கிட்ட 12 பேர் வேலை பார்க்குறாங்க. எல்லாச் செலவும்போக மாதம் ரூ.60,000 லாபம் கிடைக்குது.

சிறுதானிய மதிப்புக்கூட்டல்
சிறுதானிய மதிப்புக்கூட்டல்
சிறுதானிய மதிப்புக்கூட்டல்
சிறுதானிய மதிப்புக்கூட்டல்


போன வருஷம் எனக்குத் திருமணம் ஆனது. ஐ.டி துறையில் இருந்த மனைவி கௌசல்யா, வேலையை விட்டுட்டு இப்போது என்னோட இணைந்து செயல்படுறார். அடுத்து, சிறுதானிய அரிசியில புழுங்கல் அரிசி, அவல், பொரி, தின்பண்டங்கள்னு மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய இருக்கிறோம்” என்றவர், சிறுதானிய விதைகளைச் சேகரிப்பது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

பலவகைத் தினை

“பல வகையான சிறுதானிய விதைகளை இதுவரை சேகரித்திருக்கிறேன். தினை, சாமை, வரகு, குதிரைவாலி, ராகி, கம்பு, சோளம், பனிவரகு, காடைக்கண்ணி, கர்நாடகாவின் பாரம்பர்ய சிறுதானியமான ‘பிரவுன்டாப்’னு பல வகையான விதைகளைச் சேகரித்திருக்கிறேன். விருதுநகர்ல குதிரைவாலி அதிகம் கிடைக்கும். சாமை ஜவ்வாது மலை, கருமந்துறை, தர்மபுரி, பென்னாகரம் பகுதிகள்ல தாராளமாகக் கிடைக்கும். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதிகள்ல வரகு கிடைக்கும்.

சாமையில் சடஞ்சாமை, கட்டவெட்டிச் சாமை, சிட்டஞ்சாமைனு விதைகள் இருக்கு. அதேபோல், தினையில், கில்லாந்தினை, கென்டி தினை, மாப்பிள்ளை தினைனு விதைகள் இருக்கு. வரகில், திரிவரகு, புறவரகு, சம்பா வரகு, சடை வரகுனு விதைகள் இருக்கு. பெருங்கேழ்வரகு, சுருட்டை கேழ்வரகு, கருமுழியான் கேழ்வரகு விதைகள் கைவசம் இருக்கு.

விதைகள்
விதைகள்


சோளத்தில், மத்தாப்புச் சோளம், சிவப்புரட்டுச் சோளம், கருபரட்டுச் சோள விதைகளையும் பொக்கிஷமாகச் சேமிச்சு வெச்சிருக்கிறேன். விவசாயிகளிடம் வாங்குற சிறுதானியங்கள்ல நல்ல தரமா இருக்குறதை விதையா எடுத்து வெச்சுக்குவேன். குறைந்தபட்சம் அரைக்கிலோ முதல் அதிகப்பட்சம் 3 கிலோ வரை என்கிட்ட சிறுதானிய விதைகள் இருக்குது. பல அரியவகை ரகங்களும் இருக்கு.

அரிய வகை விதைகள்

மல்லியைச் சாமை, வெள்ளை ராகி, கருந்தினை எல்லாம் அரியவகை விதைகள். ஜவ்வாது மலையில் வாரக்கணக்கில் தங்கிச் சேகரித்து வந்த விதைகள் எல்லாமே அரிய வகை விதைகள்தான். என்கிட்ட விதை கேட்டு வரும் சிறுகுறு விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் விதை கொடுக்கிறேன். இன்னும் சில விவசாயிகளுக்கு இலவசமாகவே விதைகளைக் கொடுத்துட்டு இருக்கிறேன். அவங்க அறுவடை பண்ணுனதும், வாங்குன விதையைத் திருப்பித் தருவாங்க. இன்னும் அதிக விவசாயிகளைச் சிறுதானியங்களைப் பயிர் செய்ய வைக்கணும்ங்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதேபோல், ஒவ்வொரு சிறுதானிய விதையோட தன்மைகளையும் துல்லியமாக அறிந்து, அதை ஆவணப்படுத்த போறேன்’’ என்றவர் நிறைவாக,

பணிபுரிவோர்
பணிபுரிவோர்


“எங்க தோட்டத்தோட ஒரு பகுதியில எல்லா விதைகளையும் பயிரிட்டு, அதன் தன்மைகளையும் ஆய்வு பண்ணப் போறேன். நடிகர் கார்த்தி, ‘கடைக்குட்டி சிங்கம்’ பட வெற்றி விழாவில் சிறந்த சிறுதானிய விதைகள் சேகரிப்பாளர்ங்கிற வகையில் எனக்கு ‘உழவன் விருது’ம், ஒரு லட்சம் பணமும் கொடுத்தாங்க. இன்னும் அதிக சிறுதானிய விதைகளைத் தேடி கண்டுபிடிச்சு சேகரிக்கணும். தமிழ்நாடு முழுக்க இருக்க விவசாயிகளிடம் அதைப் பரவலாக்கணும்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.தொடர்புக்கு,
ஜனகன்,
செல்போன்: 94894 61550

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு