Published:Updated:

``முல்லைப் பெரியாறு தண்ணீர் 527 இடங்களில் திருடப்படுகிறது!'' - பி.டி.ஆர் சொன்ன அதிர்ச்சி தகவல்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
News
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

``சிறு விவசாயிகள் பயன்படுத்திடாத 15 குதிரைத்திறன் அளவு கொண்ட மின் மோட்டார்களைப் பயன்படுத்தியும், மின் துறைக்கு நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வரையில் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்."

முல்லைப் பெரியாறு அணைத் தண்ணீர் திருட்டு பிரச்னையால் விவசாயிகள் பாதிக்கப்படுவது பற்றியும் அம்ரூத் திட்டத்தின் கீழ் லோயர் கேம்பிலிருந்து குழாய் வழியாக மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் தற்போதைய நிலை பற்றியும் மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு நடத்தினார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரக்கூடிய நீர் 2,19,000 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிக்கு முறைப்படி வழங்கப்பட வேண்டும். இது மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உரிமையானது.

அதிலும் குறிப்பாக, கம்பம் பள்ளத்தாக்கு, மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் இரண்டு போக விவசாயத்துக்கு உரிமை உண்டு.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சரியான நேரத்தில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டவது போக பாசனத்துக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு வரும் நீர் திருடப்படுவது குறித்தும், இதனால் சிறு குறு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இப்பகுதியில் தண்ணீர் திருட்டை தொழிலாகக் கொண்டவர்கள் கனரக மோட்டார்களைப் பயன்படுத்தி முறைகேடாகத் தண்ணீரை எடுக்கிறார்கள் என்றும், பட்டா இடங்களிலும், பட்டா இல்லாத அரசு மற்றும் வனத்துறை இடங்களில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்காக இந்தத் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும், பல விவசாயிகள் ஆயக்கட்டுக்கு தண்ணீரைப் பெற முடியாமல் விவசாயத் தொழிலை விட்டு வருகிறார்கள், வன விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது, உள்ளாட்சி நிர்வாகங்களும் பாதிக்கப்படுகிறது என்பதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன்.

மதுரை, தேனி ஆட்சியர்களுடன் அமைச்சர்
மதுரை, தேனி ஆட்சியர்களுடன் அமைச்சர்

அதன் விளைவாக முதல் முறையாக ஆற்றின் இரு புறங்களிலும் மின் இணைப்பைத் துண்டித்தார்கள். அதன் மூலம் ஒரே நாளில் வைகை அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு 160 கன அடியாக அதிகரித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தண்ணீர் திருட்டு மீண்டும் தொடர ஆரம்பித்தது. இதைப் பொதுப்பணித்துறை வெளியிடக்கூடிய அறிவிப்புகள் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்பதால் வெளியிடுவதையே நிறுத்தி விட்டார்கள்.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அதன் பிறகு, விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மேல் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்த முறைகேட்டைத் தடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளதால் இவ்வளவு நாள்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தவற்றை பொதுப்பணித்துறை, மின்சாரத்துறையினருடன் இணைந்து யார் யார் செய்கிறார்கள், எந்த அளவுக்குத் தண்ணீர் திருடப்பட்டுள்ளது என ஆய்வு செய்துள்ளார்கள்.

இந்த ஆய்வின்படி 527 இடங்களில் ஆயக்கட்டு அமைப்புக்கு விரோதமாகத் தண்ணீர் திருடப்படுகிறது. சிறு விவசாயிகள் பயன்படுத்திடாத 15 குதிரைத்திறன் அளவு கொண்ட மின் மோட்டார்களைப் பயன்படுத்தியும், மின் துறைக்கு நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வரையில் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இது போன்ற சமுதாய துரோகத்தை நினைத்து கூடப் பார்க்க முடியாது. அப்போது யார் ஆட்சி நடந்தது, அந்த மாவட்டம் யார் பொறுப்பில் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

முதலமைச்சரின் கட்டளைப்படி இந்த தவறில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையாக ஆய்வு செய்து யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே இந்த முறைகேடு எப்படி நடக்கிறது எனச் செய்தியாளர்களிடம் கூறினேன். தற்போது இதை மின்சாரத்துறை அமைச்சர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஆகியோர் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். இந்தத் தவற்றைத் திருத்தியே ஆக வேண்டும்.

மதுரை, தேனி ஆட்சியர்களுடன் அமைச்சர்
மதுரை, தேனி ஆட்சியர்களுடன் அமைச்சர்

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தேனி ஆட்சியரிடம் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வுகளுக்குப் பிறகும் சரியான முடிவுகள் வராவிட்டால் முதலமைச்சர் வழிகாட்டுதல்படி அமைச்சர்களை ஒருங்கிணைத்து தனியாகத் தணிக்கை நடத்தி நடவடிக்கை எடுப்போம்.

அதுபோல் அம்ரூத் திட்டத்தில் முல்லைப்பெரியாறு லோயர் கேம்பிலிருந்து மதுரைக்கு 125 கன அடி தண்ணீர் பெறும் திட்டத்தின் நிலை குறித்தும் ஆலோசித்து உள்ளோம். 2023 மே மாதத்துக்குள் இந்தப் பணிகளை முடித்து குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக வறண்டு போன வைகை நதி, மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் நீரோடும் நதியாக மாறும்" என்றார்.

முல்லைப்பெரியாறு நீர் சிலரால் திருடப்படுகிறது என்று தமிழக அமைச்சரே தெரிவித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.