Published:Updated:

நெல் கொள்முதல்: ``ஆன்லைன் பதிவு இல்லாமலும் நெல் வழங்கலாம்!" - உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகள் கொண்டுசெல்ல ஆன்லைன் பதிவு தேவையில்லை என உணவுத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தம் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் சமூக நலத்துறை சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி 250 கர்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், பாத்திரம் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நெல் விவசாயிகள் தங்களது விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்த பிறகே, நெல் கொள்முதல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆன்லைன் பற்றிய விவரமறியாத விவசாயிகள் நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்று எவ்வித இடையூறும் இன்றி தங்களது விவரங்களைப் பதிவு செய்து, நெல் மூட்டைகளை வழங்கலாம். எனவே மத்திய அரசின் அறிவிப்பு குறித்து விவசாயிகள் அச்சமடைய வேண்டாம்.

அர.சக்கரபாணி
அர.சக்கரபாணி
நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி; சாமர்த்தியமாக சிக்கவைத்த விவசாயிகள்!

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்கும் வகையில், தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நெல் மூட்டைகளை, டெல்டா மாவட்டங்கள் தவிர பிறப் பகுதிகளில் கூட்டுறவுத் துறையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தாமதமின்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்லவும், காலியாக உள்ள சர்க்கரை ஆலைகள் மற்றும் அரசு கட்டடங்களில் இடங்கள் ஒதுக்கப்பட்டு தயாராக இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

மேலும், ``கடந்த ஆட்சியில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரும்போது விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் விவசாயிகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் அறிவுறுத்தியதன் பேரில், நெல் கொள்முதல் முறையாக நடந்து வருகிறது. தவறு செய்த அதிகாரிகள் மீது நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

நெல் கொள்முதல் ஆன்லைன் முன்பதிவு: `நடைமுறைக்கு உதவாத முறை இது!' - கொதிக்கும் விவசாயிகள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.பெருமாள், மழைக்காலத்தில் பெரும் அச்சத்தில் இருந்த விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்கிறார்.

மேலும், ``விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை கொள்முதல் நிலையத்தில் வழங்க வேண்டும் என்றால், பட்டா, எப்போது நெல் விதைக்கப்பட்டுள்ளது, எப்போது அறுவை அறுவடை செய்யப்படும், எப்போது கொள்முதல் நிலையம் கொண்டுவரப்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் எவ்வாறு குறிப்பிட்டத் தேதியில் நெல் அறுவடை செய்ய முடியும்? குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வோரால் எவ்வாறு பட்டா உள்ளிட்ட ஆவணங்களை வழங்க முடியும். இது விவசாயிகளுக்கும் பெரும் சிரமத்தைக் கொடுக்கும் அறிவிப்பு என விவசாயம் சங்கம் சார்பில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம்.

என்.பெருமாள்
என்.பெருமாள்

இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகள் கொண்டுவர ஆன்லைன் பதிவு தேவையில்லை என உணவுத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இருப்பினும் இந்த அறிவிப்பை தமிழக அரசு ஆணையாக வெளியிட வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு