Published:Updated:

விவசாயிகளை லட்சாதிபதிகளாக்கும் ‘அமுல்’ போன்ற அமைப்பு வேண்டும்!

‘மிஷன் சம்ரிதி
பிரீமியம் ஸ்டோரி
News
‘மிஷன் சம்ரிதி

நாட்டு நடப்பு

கிராமப்புற வளர்ச்சிக்காக ‘மிஷன் சம்ரிதி’ (Mission Samriddhi) என்ற அமைப்பைத் தொடங்கி, நாடு முழுவதும் வளர்ச்சித் திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறது. அண்மையில் சென்னை சிறுசேரியில் தென்மாநிலங்களில் உள்ள வேளாண் வல்லுநர்கள், ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள், தொண்டு நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகளை இணைத்து ‘தக்‌ஷின் சமகம்’ என்ற நிகழ்வை நடத்தி யுள்ளார்கள். இது குறித்து, இந்த அமைப்பின் செயல் இயக்குநர் ராம் பப்பு பேசும்போது,

‘‘மிஷன் சம்ரிதியைப் பற்றிச் சொல்வதற்கு முன் இதைத் தொடங்கியவர் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சாதாரண அரசு ஊழியரின் மகனாகப் பிறந்தவர் அருண் ஜெயின். டெல்லி காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங்கில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தார். 10,000 ரூபாய் முதலீட்டில் இன்டர்நேஷனல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய ஐ.டி நிறுவனங்கள் தந்த போட்டியைத் தாண்டி, சிட்டி பேங்கிடமிருந்து முதல் ஆர்டரைப் பெற்றது அருண் ஜெயினின் அபாரத் திறமை. அதிவேகமாக வளரத் தொடங்கிய அந்த நிறுவனம், பிற்பாடு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொலாரீஸ் கன்சல்டிங் அண்டு சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனமாக மாறியது.

அருண் ஜெயின், ராம் பப்பு
அருண் ஜெயின், ராம் பப்பு

பொலாரீஸ் நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவான இன்டெலக்ட் டிசைன் எரினா நிறுவனத்தின் மதிப்பும் இன்று பல ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. தொழில் செய்வதில் இருக்கும் நுட்பங்களையும் நெளிவுசுளிவு களையும் கஷ்டப்பட்டுக் கற்றுக்கொண்ட அருண் ஜெயின், அதை மற்றவர்களுக்கு மனமுவந்து கற்றுத் தருவதில் அலாதி பிரியம் காட்டுபவர்.

`உல்லாஸ்’ என்கிற அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கனவை நிஜமாக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். `ஸ்டார்ட் அப் நுக்கட்’ என்கிற அமைப்பின் மூலம் இளம் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான தொழில் ஆலோசனைகளைத் தந்துவருகிறார். `மிஷன் சம்ரிதி’ மூலம் `டிசைன் திங்கிங்கினை’ பயன்படுத்தி, கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறார். அவரது வழிகாட்டல்படி தமிழ்நாட்டில் 13 கிளஸ்டர்கள் 11 மாவட்டங்களில் 70 கிராம பஞ்சாயத்துகளின் முழுமையான வளர்ச்சிக்காகக் களப்பணிகளைச் செய்து வருகிறோம். இந்தப் பணியில் நல்லோர் வட்டம் மற்றும் ‘குத்தம்பாக்கம்’ இளங்கோ போன்றவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கிறார்கள்.

நிகழ்வில்
நிகழ்வில்

தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்க 1950-களில் ஐஐடிகளை உருவாக்கினோம். நிர்வாகிகளை உருவாக்க 1960-களில் ஐஐஎம்களைத் தொடங்கினோம். இந்தியா வின் ஆன்மா என்று சொல்லப்படும் கிராம பஞ்சாயத்துகளை நிர்வகிக்க நம்மிடம் எந்த அமைப்பும் இல்லை. ஐஐபிஎம் என்ற இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் பஞ்சாயத் மேனேஜ்மன்ட் உருவாக்கப்பட வேண்டும்.

கிராமங்களின் அடிநாதமாக இருக்கும் விவசாயிகள் பொருளாதார நிலையில் வலுப்பெற வேண்டும் என்றால், விவசாயம் லாபகரமானதாக இருக்க வேண்டும். அதற்கு, செலவு குறைந்த இயற்கை வேளாண்மைதான் ஒரே வழி. ஆனால், இதிலும் முக்கியமான சிக்கல் உள்ளது. நம் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்தாலும் உரிய விலை கிடைப்பதில்லை. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி இருப்பது? இதற்கான தீர்வுகளைத் தேடி களத்தில் இறங்கினோம்.

நிகழ்வில்
நிகழ்வில்

நம் நாட்டைப் பொறுத்தவரை அரசுத் துறைகள் ஒரு பக்கம் திரும்பிக்கொண்டு உள்ளன. ஆராய்ச்சி நிலையங்கள் இன்னொரு பக்கம் திரும்பி நிற்கின்றன. மக்களுடன் இணைந்து பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் வேறு பக்கம் திரும்பி நிற்கின்றன. இவை மூன்றையும் ஒரே திசையில் திருப்பி, மாற்றத்தை உருவாக்கம் பணியினைத்தான் `மிஷன் சம்ரிதி’ மூலம் செய்து வருகிறோம்.

இப்போது, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிகைத் துறையும் எங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளோம். இந்த நான்கு அமைப்பு களும் இணைந்து பணியாற்றினால் நிச்சயம் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும். இதன் ஒரு பகுதியாகத்தான், தென்மாநிலங்களுக்காக ‘தக்‌ஷின் சமகம்’ என்ற சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்கவும், நஞ்சில்லா உணவை மக்களுக்கு அளிக்கவும் என்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்தனையைத் தொடங்கியுள்ளோம். இதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல, இன்னும் பல நிகழ்ச்சிகளையும் பயிலரங்கு களையும் நடத்தவுள்ளோம்.

நிகழ்வில்
நிகழ்வில்
நிகழ்வில்
நிகழ்வில்
நிகழ்வில்
நிகழ்வில்

குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயி கூட்டுறவு அமைப்பு மூலம் பாலை விற்பனைக்குக் கொடுக்கிறார். ஒரு லிட்டர் பால் 58 ரூபாய்க்கு நகரத்தில் விற்பனை செய்கிறார்கள். இதில் 49 ரூபாய் விவசாயிக்கு நேரடியாகக் கிடைக்கிறது. இதன் மூலம் பல லட்சாதிபதிகளை, கோடீஸ்வரர்களை அமுல் என்ற கூட்டுறவு நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன் முதலாளிகள் பால் கொடுக்கும் விவசாயிகள்தாம். உலக அளவில் விவசாயிகளால் லாபகரமாக நடத்தப்படும் அமைப்பு இதுதான். இதற்குக் காரணம், அங்கு சரியான கூட்டுறவு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோல, இயற்கை வேளாண்மை விளைபொருள்கள் விற்பனைக்கும் உருவாக்க முடியும். அதற்கான அத்தனை தகுதிகளும் திறமையும் நம்மிடம் உண்டு. நல்ல மாற்றம் உருவாக்கக் காலம் கனிந்துவிட்டது’’ என்று நம்பிக்கையுடன் சொல்லி முடித்தார் ராம் பப்பு.