Published:Updated:

5 ஏக்கர், 7 ரகங்கள், ரூ.5,77,000 கலப்பு வாழைச் சாகுபடியில் கலக்கல் லாபம்!

வாழைத்தாருடன் தனபால்
பிரீமியம் ஸ்டோரி
வாழைத்தாருடன் தனபால்

வாழை

5 ஏக்கர், 7 ரகங்கள், ரூ.5,77,000 கலப்பு வாழைச் சாகுபடியில் கலக்கல் லாபம்!

வாழை

Published:Updated:
வாழைத்தாருடன் தனபால்
பிரீமியம் ஸ்டோரி
வாழைத்தாருடன் தனபால்

படிச்சோம் விதைச்சோம்

“இயற்கை விவசாயத்துக்கு என்னைக் கைப்பிடித்து அழைத்து வந்தது மட்டுமல்லாமல், ஒரே ரக வாழையைச் சாகுபடி செய்தால் உரிய விலை கிடைக்காமல் போகலாம். பல ரக வாழையைச் சாகுபடி செய்யும்போது நஷ்டமில்லாமல் கணிசமான வருமானம் கிடைக்கும் என்பதை எடுத்துக்கூறியது ‘பசுமை விகடன்’தான்’’ என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த தனபால்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ளது தேரியூர். செக்கச் சிவந்த செம்மண் பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் வாழைச் சாகுபடிதான். ஊரின் தொடக்கத்திலேயே உள்ளது தனபாலின் வாழைத் தோட்டம். பசுமை விகடன் 16-ம் ஆண்டுச் சிறப்பிதழுக்காக, பனி படர்ந்த ஒரு காலைவேளையில் அவரைச் சந்தித்தோம். கற்பூரவள்ளிக் குலைகளை வெட்டி, ஏலக் கடைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். உடனே உற்சாகமானவர், “முதல்ல இந்தக் கற்பூரவள்ளி பழத்தைச் சாப்பிடுங்க. குலையிலேயே பழுத்தது” எனச் சிரித்த முகத்துடன் கொடுத்து வரவேற்றவர், நம்மை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்குள் நடந்தபடியே பேசத் தொடங்கினார்.

வாழைத்தாருடன் தனபால்
வாழைத்தாருடன் தனபால்

“வாழையும் தென்னையும்தான் இந்தப் பக்கம் முக்கிய விவசாயம். பெரும்பாலும் ரசாயன முறை விவசாயம்தான். பனந்தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சியும் விற்பனை செஞ்சுகிட்டு வந்தோம். வேலையாள் பற்றாக்குறையால கருப்பட்டி காய்ச்சுறதை நிறுத்தி 10 வருஷமாகுது.

பத்தாம் வகுப்பு முடிச்சதுமே அப்பாவோடு சேர்ந்து விவசாயத்தைக் கவனிச்சுக்க ஆரம்பிச்சேன். ‘உரம் போடாம எந்த விளைச் சலும் கிடைக்காது. விளைச்சலை கண்ணுல பார்க்கணும்னா உரத்தைக் கை நிறையத் தூவணும்’னு அப்பா சொல்வாரு. நானும் அப்படியே இஷ்டத்துக்கும் உரத்தைத் தூவினேன். ரசாயனப் பூச்சிக்கொல்லியைத் தூவானம் பெய்ஞ்ச மாதிரி தெளிச்சிருக்கேன். 7 வருஷத்துக்கு முன்னால முருங்கைத் தோட்டத்துல பூச்சித்தாக்குலுக்கு ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிச்சோம். அதைத் தெளிக்கத் தெளிக்க மரத்துல ஒட்டியிருந்த புழுவெல்லாம் சுருண்டு கீழே விழுந்துச்சு.

கற்றுக்கொடுத்த கொக்கு

அந்தப் புழுக்களை ஒரு கொக்கு, கொத்தித் தின்னுகிட்டே இருந்துச்சு. காலையில 11 மணி இருக்கும். தோட்டம் முழுக்கத் தெளிச்சு முடிச்சுட்டு, பழைய சாதத்துல மோர் ஊத்திப் பிசைஞ்சு சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். அந்தக் கொக்கு எங்க பக்கத்துல வந்து விழுந்துச்சு. என்ன செய்யுறதுன்னு தெரியாம குருட்டு வைத்தியம் மாதிரி, ஒரு டம்ளர்ல மோரை எடுத்துக் கொக்கோட வாயைத் திறந்து ஊத்துனோம். மோரைக் குடிச்ச கொக்கு மனுசங்க வாந்தி எடுக்குறாப்புல மூணு தடவை எடுத்துச்சு.

கலப்பு வாழைத்தோட்டம்
கலப்பு வாழைத்தோட்டம்


100 கிராம் புழுவரைக்கும் வாயில இருந்து வந்துச்சு. திரும்பவும் மோரை வாயில ஊத்தி, ஈரமான சணல்சாக்குல கொக்கைக் கிடத்திப் போட்டோம். மயக்கத்துல இருந்த கொக்கு, சாயங்காலம் 4 மணி வாக்குல மெதுவா பறந்து போச்சு. ரசாயனப் பூச்சிக்கொல்லி அடிச்சதுனால சுருண்டு விழுந்த புழுவைத் தின்னக் கொக்குக்கே இந்த நிலைமைனா, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளையவச்ச விளைபொருளைச் சாப்பிடுற மனுஷனுக்கு என்ன கெதி? ஒரே நாளுல கொக்கு செத்துச்சுன்னா, 10 வருஷத்துல மனுஷன் சாவான். இதுதானே நிலைமைன்னு நினைச்சு பார்த்தேன்.

இனிமேல் ரசாயன உரம், பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தக் கூடாதுன்னு அன்னைக்கு முடிவெடுத்தேன். அரை மூட்டையில மிச்சம் இருந்த ரசாயன உரத்தை, வேண்டாம்னு ரோட்டோரத்து மண்ணுல தூக்கி எறியகூட விருப்பம் இல்லாம, இன்னமும் தோட்டத்துல மூலையில வச்சிருக்கேன். அதுக்கு பிறகு மட்கிய சாணத்தை மட்டும் பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்’’ என்றவர், தனது இயற்கை விவசாய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

“கடாட்சபுரத்துல இருக்க செந்தில் என்பவர்தான் முதன்முதலா இயற்கை விவசாயத்தைப் பத்திச் சொன்னார். மூலைப்புலியைச் சேர்ந்த ரவீந்திரன், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மீன் அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டினு இயற்கை இடுபொருள்களைப் பற்றிச் சொன்னதோடு, பசுமை விகடனையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். வாழை, தென்னை எங்க பகுதியில முக்கிய விவசாயம் கிறதுனால அதைப் பத்தின மகசூல் கட்டுரைகளை முதல்ல விரும்பிப் படிப்பேன். அந்தந்த விவசாயிகளோட சாகுபடி முறைகளை நல்லாப் புரிஞ்சுக்குவேன்.

4 முறை மறுதாம்பு

அரை ஏக்கர்ல பூவன்வாழை போட்டிருந் தப்போ, அதுல எப்படியோ விதைக்கிழங்கு மாறி நாலஞ்சு நாடன் வாழையும் கலப்பா வந்துருச்சு. குலைதள்ளினப்போ அந்த நாலு நாடன் வாழைக்குலையும் நல்ல திரட்சியா இருந்துச்சு. பொதுவா நாடன் வாழை மறுதாம்பு விட்டா குலை திரட்சி இருக்காதுன்னு சொல்வாங்க. ஆனா, மறுதாம்புலயும் நல்ல திரட்சியா இருந்துச்சு. தொடர்ந்து 4 முறை மறுதாம்பு விட்டேன்.

கைகொடுக்கும் கலக்கல் வாழை

‘வாழையை ஒரே ரகமா போடாம, நாலஞ்சு ரகங்களா கலப்பா போட்டா நோய்த்தாக்குதல் இருக்காது. அதுமட்டு மல்லாம, ஒண்ணுல விலை இல்லன்னாலும் இன்னொண்ணுல கிடைச்சுடும்’னு அப்பாவும் சொன்னார். இப்போ 4 வருஷமா கலப்பு முறையில வாழைச் சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். இது மொத்தம் 5 ஏக்கர் நிலம். கலப்பு முறையில நாடன், பூவன், படத்தி, சக்கை (பஜ்ஜி வாழை), பூலாஞ்செண்டு, கோழிக்கூடு (ரஸ்தாலி), கற்பூரவள்ளினு 7 ரக வாழைகள் குலை தள்ளிய நிலையில இருக்கு” என்றவர், விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

செலவு, வரவுக் கணக்கு
செலவு, வரவுக் கணக்கு


“இந்த 5 ஏக்கர்ல 7 ரக வாழைகளை நடவு செஞ்சிருக்கேன். ஒவ்வொரு ரகத்துல யும் 600 வாழைகள்னு மொத்தம் 4,200 வாழைகள் இருக்குது. அறுவடை செய்யுற வாழைக் குலைகளை உடன்குடியில இருக்குற ஏலக் கடைகள்லதான் விற்பனை செய்றேன். இயற்கை முறையில விளைய வச்ச வாழைங்கிறதுக்காகத் தனி விலையெல்லாம் கிடைக்கிறதில்ல. ஆனா, இயற்கை முறை வாழையை வித்தோம்ங்கிற ஆத்ம திருப்தி கிடைக்குது. சரியான விளைச்சல் இல்லாத குலைகள்னு ஒரு ரகத்துக்கு 50 வாழைக்குலைகள் எப்படியும் கழிஞ்சுடும். அதுபோக ஒவ்வொரு ரகத்துலயும் 550 குலைகள்தான் விற்பனையாகும்.

3,850 குலைகள்... 8,25,000 ரூபாய்

அந்தக் கணக்குல பூவன், பஜ்ஜி வாழையில மொத்தம் 1,100 குலைகள். ஒரு குலை 125 ரூபாய்ங்கிற கணக்குல 1,37,500 ரூபாய். மத்த 5 ரகத்துல 2,750 குலைகள். ஒரு குலை 250 ரூபாய்ங்குற கணக்குல 6,87,500 ரூபாய்னு மொத்தம் 8,25,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. அதுல, உழவு முதல் அறுவடை வரைக்கும் மொத்தம் 2,47,100 ரூபாய் செலவாச்சு. அதைக் கழிச்சா 5,77,900 ரூபாய் நிகர லாபமாக் கிடைச்சது.

இதுல மறுதாம்பு விடும்போது உழவு, கன்று, நடவுக்கூலி மிச்சமாகுது. அந்த வகையில பாரமரிப்புச் செலவு மட்டும்தான்” என்றவர், “ ‘வாரிக்கொடுக்கும் வாழை’ன்னு சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் அது உண்மைதான்” என சிரித்தபடியே விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, தனபால்,

செல்போன்: 99763 41462

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

5 ஏக்கரில் கலப்பு வாழைச் சாகுபடி செய்வது குறித்துத் தனபால் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

வாழைச் சாகுபடிக்கு அனைத்து வகையான மண்ணும் ஏற்றது. இருப்பினும் வண்டல், கரிசல் மற்றும் செம்மண்ணில் வாழையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். தேர்வு செய்யப்பட்ட நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 8 அடி, கன்றுக்குக்கன்று 8 அடி இடைவெளியில் ஓர் அடி ஆழம், அரையடி அகலத்தில் குழி எடுக்க வேண்டும். குழியை 7 நாள்கள் வரை ஆற விட வேண்டும். இந்த நாள்களுக்குள் வாய்க்கால் பாசனம் அல்லது சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்து விட வேண்டும்.

நடவுக்கு முன்பு விதைநேர்த்தி செய்து நடவு செய்வது நல்லது. 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலக்க வேண்டும். அதனுள் விதைக்கிழங்கின் தோலை நன்றாகச் சீவிவிட்டு, கிழங்கின் அடிப்பாகத்தை முக்கி எடுக்க வேண்டும். அதை 15 நிமிடங்கள் வரை நிழலில் உலர்த்திய பிறகு, குழியில் நடவு செய்யலாம். இதனால், வேர் அழுகல், பூஞ்சண நோய்கள் கட்டுப்படும். நடவுக்காகத் தேர்வு செய்யப்படும் கிழங்குகள் ஒவ்வொன்றும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை இருக்க வேண்டும். குழிக்குள் காற்றுப் போகாமல் இருப்பதற்காக மூன்றாவது நாளில் கிழங்கைச் சுற்றிலும் மண் அணைத்து, இறுக்கமாக மிதித்து விட வேண்டும்.

சீரான இடைவெளியில் வளர்ந்து நிற்கும் வாழை மரங்கள்
சீரான இடைவெளியில் வளர்ந்து நிற்கும் வாழை மரங்கள்


இதனால், வேரின் வளர்ச்சி நன்றாக இருக்கும். பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும். விதைக்கிழங்கு நடவு செய்ததிலிருந்து 20, 90 மற்றும் 120-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 45-ம் நாளில் தூரிலிருந்து இரண்டு புறமும் ஓர் அடி தூரத்தில் குழி எடுத்து, தலா 8 கிலோ மட்கிய மாட்டுச்சாணத்தை அடி உரமாக வைக்க வேண்டும். 60-ம் நாளிலிருந்து 20 நாள் இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் தூர் வெடிப்பு, இலைப்புள்ளி, வேர் அழுகல் போன்ற நோய்களின் பாதிப்புகள் ஏதுமில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி ஜீவாமிர்தம் கலந்து தெளிப்பது நல்லது. 150 நாள்களுக்கு மேல் வாழை இலைகள் மஞ்சள் நிறமாகவும், கன்று சுருங்கியும் காணப்பட்டால் அது வாடல் நோயின் அறிகுறி.

இதைக் கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் 150-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஏற்கெனவே தெளித்து வரும் ஜீவாமிர்தத்துடன், புளித்த மோர் (10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி ஜீவாமிர்தம் மற்றும் 1 லிட்டர் புளித்தமோர்) கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இதைத்தாண்டி வேறெதுவும் செய்யத் தேவையில்லை.

தென்னை+வாழை
தென்னை+வாழை

செலவைக் குறைக்கும் மறுதாம்பு

வாழையை மறுதாம்பு விடுவதன் பயன்களைப் பற்றிப் பேசிய தனபால், “செலவுகளைக் குறைக்குறதுதான் இயற்கை விவசாயத்தோட முக்கியமான நோக்கம். மறுதாம்பு விடுறதால, உழவு, அடி உரம், விதைக்கிழங்கு செலவுகள் மிச்சப்படும். வழக்கமான அறுவடையைவிட ரெண்டு மாசத்துக்கு முன்னயே அறுவடைக்கு வந்துடும். தாய் வாழையில பூ தள்ளிய பிறகு, பூவோட எதிர்த்திசையில இருக்குற பக்கக்கன்றை வெட்டாம மறுதாம்புவுக்காக விட்டுடணும். ஒருவேளை அந்தக்கன்று ஈட்டிபோலத் திரட்சியாக இல்லாம இருந்தா, அதை விட்டுட்டு அதுக்கு பக்கத்தில இருக்குற திரட்சியான கன்றைத் தேர்வு செய்யலாம். தாய் வாழையில குலையை வெட்டியதும், அந்த வாழையில 5 அடி உசரத்துக்கு மேல இருக்கப் பகுதியை வெட்டி, அப்படியே மூடாக்காகப் போட்டுடணும். இதனால, தாய் வாழையில இருக்கச் சத்துகள் மறுதாம்பு வாழைக்கு முழுமையாகக் கிடைக்கும். இந்த முறையில, நல்லா கவனிச்சுட்டு வந்தா 8 மறுதாம்புகள் வரைக்கும் தொடர்ந்து வருமானம் எடுக்கலாம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism