Published:Updated:

கலக்கல் வருமானம் கொடுக்கும் - கலப்பு மரச் சாகுபடி!

ராமநாதன்
பிரீமியம் ஸ்டோரி
ராமநாதன்

மகசூல்

கலக்கல் வருமானம் கொடுக்கும் - கலப்பு மரச் சாகுபடி!

மகசூல்

Published:Updated:
ராமநாதன்
பிரீமியம் ஸ்டோரி
ராமநாதன்
சில பயிர்களைத் தொடர்ச்சியாகச் சாகுபடி செய்யும் விவசாயிகள், அடிக்கடி தோல்வியைச் சந்திக்கும்போது துவண்டு போய்விடுகிறார்கள்.

ஆனால், அந்தக் குறிப்பிட்ட பயிரைக் கைவிடாமல், மீண்டும் மீண்டும் பயிரிட்டு நிம்மதியை இழக்கிறார்கள் என்பதுதான் வேதனை. ஆனால், சில விவசாயிகள் விதிவிலக்காக இருக்கிறார்கள். துணிச்சலான முடிவு மற்றும் சாதுர்யமான புதிய மாற்றுவழியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நிலைத்த, நீடித்த வெற்றியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

ராமநாதன்
ராமநாதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்க்கரை ஆலைகளை நம்பி கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குக் கடந்த சில ஆண்டுகளாகக் கசப்பான அனுபவங்களே கிடைத்துவருகின்றன. ஆலைகளின் முறைகேடுகளால் விவசாயிகள் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். இந்த நிலையில், தொலைநோக்குப் பார்வையுடன் மாற்றுப்பாதையைத் தேர்ந்தெடுத்த சில விவசாயிகள் மனநிறைவுடன் இருக்கிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், ஆலமன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன்.

நீண்டகாலம் கரும்புச் சாகுபடி செய்து வந்த விவசாயி. ஆனால், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதைக் கைவிட்டுவிட்டு, இரண்டு ஏக்கர் நிலத்தில் கலப்பு மரச் சாகுபடி செய்து காட்டை உருவாக்கியிருக்கிறார். அதில் தென்னை, எண்ணெய்ப் பனை, கோகோ, மலைவேம்பு, தேக்கு, குமிழ், ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்கள் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன. தற்போது தென்னை, எண்ணெய்ப் பனை இரண்டும் வருமானம் கொடுத்துவருகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடுமையான வெயில் நேரத்தில் அவரது தோட்டத்துக்குச் சென்றோம். அடர்ந்த நிழலும், குளிர்ந்த காற்றும், பரவசத்தில் ஆழ்த்தின. மண் தரையையே பார்க்க முடியாத அளவுக்கு நிலம் முழுவதும் களைச் செடிகள் மண்டிக்கிடந்தன. இலைதழைகளும் மட்டைகளும் விரவிக் கிடந்தன. “எட்டே வருஷத்துல காடு மாதிரியான சூழல் உருவாகிடுச்சு. அதனாலதான் இங்கே நிறைய பறவைகள் வருது. கிளி, தவிட்டுக்குருவி, மைனா, புறா, நார்ந்தங்குருவி, மரங்கொத்தினு இன்னும் பலவிதமான பறவைகள் இங்கே வந்துட்டுப் போகுது. இதுங்களோட சத்தத்தைக் கேட்டாலே மனசு லேசாகிடும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசத் தொடங்கிய ராமநாதன், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கலப்பு மரத் தோட்டம்
கலப்பு மரத் தோட்டம்

‘‘இளநிலை அறிவியல் படிச்சேன். காவல்துறையில வேலை கிடைச்சுது. ஆய்வாளரா பல ஊர்கள்ல வேலை பார்த்தேன். ஆனாலும் விவசாயத்து மேல இருந்த ஈடுபாடு குறையலை. விடுமுறைக் காலங்கள்ல சொந்த ஊருக்கு வந்து விவசாய வேலைகளைப் பார்ப்பேன். 2005-ம் வருஷம் பணி ஓய்வு. அதுக்குப் பிறகு முழுநேரமா விவசாயத்துல இறங்கிட்டேன். நம்மாழ்வார், பசுமை விகடன் ஏற்படுத்திய தாக்கத்துனால ரசாயன உரங்களைப் படிப்படியா குறைச்சுட்டு, எட்டு வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கோம். என்னால ஆடு, மாடுகள் வளர்க்க முடியாத சூழ்நிலை. அதனால அக்கம் பக்கத்து விவசாயிகள்கிட்ட இருந்து சாணம், கோமியம் வாங்கிக்கிறேன். எங்களுக்கு ஒன்பது ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண்ணும் களியும் கலந்த இருமண் நிலம். ஏழு ஏக்கர்ல நெல், ரெண்டு ஏக்கர்ல மரப்பயிர்கள் சாகுபடி செஞ்சிருக்கோம்” என்றவர், கலப்பு மரச் சாகுபடி குறித்துப் பேசத் தொடங்கினார்.

எண்ணெய்ப் பனை
எண்ணெய்ப் பனை

கரும்புக்கு மாற்று கலப்பு மரச் சாகுபடி

‘‘ரெண்டு ஏக்கர்ல நீண்ட காலமா கரும்பு பயிர் பண்ணிக்கிட்டு இருந்தோம். ஆரம்பத்துல ஓரளவுக்கு லாபம் கிடைச்சுது. உரம், பூச்சிக்கொல்லி, வேலையாள் செலவு கூடக்கூட லாபம் குறைஞ்சு போச்சு. அதுக்கு மேல சர்க்கரை ஆலை, சரியான பருவத்துல கரும்பை அறுவடை செய்யாதது. தாமதமா அறுவடை செஞ்சு, அதுக்குப் பிறகும் தாமதமா அரவை செய்யறது. அதனால நிறைய நஷ்டமாகுது. வெறுத்துப்போயி, எட்டு வருஷத்துக்கு முன்னாடி, ‘இனிமே கரும்பு பக்கமே தலைவெச்சுப் படுக்கக் கூடாது’ன்னு முடிவு பண்ணினேன். வேற ஏதாவது பயிர் சாகுபடி செய்யலாம்னு யோசிச்சப்போதான் கலப்பு மரங்களைச் சாகுபடி பண்ணலாம்னு தோணிச்சு. அது மூலமா ஒரு குறுங்காட்டை உருவாக்கணும்னு முடிவு செஞ்சேன். மனசுக்கும் நிம்மதி, சுற்றுச்சூழலுக்கு நம்மால் முடிஞ்ச ஒரு பங்களிப்புங்கிற நோக்கத்துலதான் இதைத் தேர்வு செஞ்சேன். அதேசமயம், அன்றாடச் செலவுக்கு, இதுல இருந்து ஒரு சின்ன வருமானமும் கிடைச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்’’ என்றவர், தோட்டத்திலுள்ள மரங்கள்பற்றிய விவரங்களைச் சொல்லத் தொடங்கினார்.

‘‘தென்னைக்குக் கொடுக்குற தண்ணியில எல்லா மரமும் வளருது. தோட்டம் முழுக்க ஏதோ ஒரு வகையில மூடாக்கு இருக்குறதுனால மண்ணுக்குள்ள எப்பவும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`பூமி கொடுத்ததை பூமிக்கே கொடுக்கணும்!’’

“வேலி ஓரத்துல 20 அடி இடைவெளியில 54 தென்னை மரங்கள், நிலத்துக்குள்ளார தலா 20 அடி இடைவெளியில 120 எண்ணெய்ப் பனை மரங்கள் இருக்கு. ரெண்டு எண்ணெய்ப் பனைக்கு இடையில தேக்கு, மலை வேம்பு, குமிழ், ரோஸ்வுட் இதுல ஏதாவது ஒரு மரம் இருக்கும். 100 தேக்கு, 75 மலை வேம்பு, 50 குமிழ், 20 ரோஸ்வுட் மரங்கள் இருக்கு. முக்கோண வடிவத்துல மூணு எண்ணெய்ப் பனை மரங்களை உள்ளடக்கிய பகுதிக்கு நடுவுல ஒரு கோகோ நடவு செஞ்சிருக்கோம். இந்த ரெண்டு ஏக்கர்ல மொத்தம் 200 கோகோ மரங்கள் இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் நடவு செஞ்சோம். இதுவும் நல்லா செழிப்பா வளருது. இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு வருமானம் கொடுக்க ஆரம்பிக்கும். மற்ற மரங்கள் எல்லாத்துக்குமே எட்டு வயசாகுது. தென்னையும் எண்ணெய்ப் பனையும் 25 அடி உயரத்துக்கு மேல வளர்ந்திருக்கு. மலைவேம்பு, தேக்கு, குமிழ் மரங்கள் 30-40 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கு. ரோஸ்வுட் 10-15 அடி உயரத்துல இருக்கு. இங்க இருக்கும் மரங்களின் இலைதழைகள், நிலத்துல விழுந்து அப்படியே உரமாகிடுது. ‘பூமி கொடுத்ததைப் பூமிக்கே கொடுத்துடணு’ங்கற நம்மாழ்வார் கோட்பாட்டின்படி, எண்ணெய்ப் பனை மட்டைகளை நிலத்துலேயே மூடாக்காகப் போட்டுடுவோம்.

தென்னை
தென்னை

தென்னைக்குக் கொடுக்குற தண்ணியில எல்லா மரமும் வளருது. தரை வெளியில தெரியாத அளவுக்குக் களைகளை நல்லா மண்ட விட்டுடுவோம். தோட்டம் முழுக்க ஏதோ ஒரு வகையில மூடாக்கு இருக்குறதுனால மண்ணுக்குள்ள எப்பவும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கு. இலைதழைகளும், மட்டைகளும் மட்கி உரமாகிக்கிட்டே இருக்குறதுனால, நுண்ணுயிரிகள் பெருகிக்கிட்டே இருக்கு. கன்று நடவு செய்யும் போது மாட்டு எரு, ஆட்டு எரு, வேம்பங் கொட்டைத்தூள் கலந்து போடுவோம். எண்ணெய்ப் பனை, தென்னை, கோகோவுக்கு நாலு மாசத்துக்கு ஒரு தடவை கன்று நடவு செய்யும்போது கொடுக்கும் இயற்கை இடுபொருள்களை மேலுரமா கொடுக்குறதுனால இந்த மரங்களுக்கு மட்டுமில்லாம மலைவேம்பு, தேக்கு, குமிழ், ரோஸ்வுட் மரங்களுக்கும் ஊட்டம் கிடைக்குது. கோடைக்காலத்துல வாரம் ஒரு தடவை தண்ணீர் பாய்ச்சுவோம். மற்ற காலங்கள்ல மண்ணின் ஈரப்பதத்துக்கு ஏற்ப 10-20 நாள்களுக்கு ஒரு தடவை தண்ணீர் பாய்ச்சுவோம். எண்ணெய்ப் பனை, தென்னை, கோகோ உள்ளிட்ட பயிர்களுக்காகக் கொடுக்குற தண்ணீர்லயும் இடுபொருள்கள்லயுமே மற்ற மரங்களும் வளருது. இதுக்குன்னு தனியா நான் எந்த ஒரு பராமரிப்பும் செய்யறதில்லை’’ என்றவர் வருமானம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

``ஏழு ஏக்கர்ல நெல், ரெண்டு ஏக்கர்ல மரப்பயிர்கள் சாகுபடி செஞ்சிருக்கோம்.’’ ``கிலோவுக்கு 8 ரூபாய் வீதம், 1,12,000 ரூபாய் வருமானம் கிடைக்குது.’’

ஆண்டுக்கு ரூ.1,12,000 கொடுக்கும் எண்ணெய்ப் பனை

‘‘நடவு செஞ்ச மூன்றரை வருஷத்துல எண்ணெய்ப் பனை காய்ப்புக்கு வர ஆரம்பிச்சுது. படிப்படியா மகசூல் அதிகமாகி, அஞ்சாம் வருஷத்துல இருந்து கணிசமான வருமானம் கொடுக்க ஆரம்பிச்சுது. ஜனவரி-ஜூலை மாசம் வரைக்கும் காய்ப்பு இருக்கும். அந்தச் சமயத்துல 15 நாளுக்கு ஒரு தடவை காய்களை அறுவடை செய்வோம். ஆகஸ்ட், செப்டம்பர் மாசத்துல 20 நாளுக்கு ஒரு தடவை அறுவடை செய்வோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாசத்துல கொஞ்சம்கூடக் காய்கள் இருக்காது. இந்த ரெண்டு ஏக்கர்ல இருக்கற 120 எண்ணெய்ப் பனை மரங்கள்ல இருந்து வெட்டுக்கு 1,300 - 1,500 கிலோ காய்கள் கிடைக்கும். வருஷத்துக்குச் சராசரியா 14 டன் காய்கள் மகசூலாகுது. கிலோவுக்கு 8 ரூபாய் வீதம் 1,12,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல அறுவடைக்கூலி, போக்குவரத்து, இடுபொருள்கள்னு 45,000 ரூபாய் செலவு போக, மீதி 67,000 ரூபாய் லாபமாகக் கையில நிக்கும்.

தென்னை
தென்னை

தென்னை

நடவு செஞ்ச, நாலாம் வருஷத்துல இருந்து தென்னை காய்ப்புக்கு வந்துச்சு. 35 நாளுக்கு ஒரு தடவை இளநீர்க் காயா அறுவடை செய்யறோம். வியாபாரிகளே வந்து நேரடியா வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. இதனால வெட்டுக்கூலி செலவு மிச்சம். ஒரு இளநீருக்கு 6 ரூபாய் விலை கிடைக்குது. சின்னதா இருந்தாலும், பெருசா இருந்தாலும் ஒரே விலைதான். காய்களாக விற்பனை செய்யறதைவிட இளநீரா விற்பனை செய்யறதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் லாபமா இருக்கு. தேங்காய்ன்னா 45 நாளுக்கு ஒரு தடவைதான் அறுவடை செய்ய முடியும். ஒரு காய்க்கு 2 ரூபாய்தான் கூடுதலா விலை கிடைக்கும். அதேசமயம் வெட்டுக்கூலியை வெட்டுறவருக்குக் கொடுத்தாகணும். மட்டை உரிக்கத் தனியா செலவு செய்யணும். மரத்துல தேங்காயா இருந்தா திருட்டுப் போறதுக்கான வாய்ப்பு அதிகம். இது மாதிரி காரணங்களாலதான் இளநீர்க் காயா அறுவடை செய்யறேன். மழை மற்றும் குளிர்காலத்துல காய்ப்பு இருக்காது. ஜனவரியில இருந்து செப்டம்பர் வரைக்கும் மகசூல் கிடைக்கும். வருஷத்துக்கு ஏழு வெட்டு. 54 தென்னை மரங்கள்ல இருந்து ஒரு வெட்டுக்கு 700 இளநீர்க் காய்கள் வீதம், மொத்தம் 4,900 இளநீர்க் காய்கள் கிடைக்கும்.

மூடாக்காக இலைதழைகளும் மட்டைகளும்
மூடாக்காக இலைதழைகளும் மட்டைகளும்

ஒரு இளநீர்க் காய்க்கு 6 ரூபாய் வீதம் மொத்தம் 29,400 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல இடுபொருள், அதைவெக்கிற செலவு 5,400 போக, 24,000 ரூபாய் லாபமா கையில மிஞ்சும். தென்னை மட்டைகளைக் கீற்றாக முடைஞ்சி விற்பனை செய்யறோம். அது மூலமா வருஷத்துக்கு 6,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக மொத்தம் இந்த ரெண்டு ஏக்கர்ல இருந்து எண்ணெய்ப் பனை, இளநீர், கீற்று மூலமாக வருஷத்துக்கு மொத்தம் 97,000 ரூபாய் லாபமாகக் கிடைச்சிக்கிட்டு இருக்கு.

என்னைப் பொறுத்தவரைக்கும் இது நிறைவான வருமானம். ஒரு வருஷத்துக்கு முன்னே 20 தென்னை மரங்களுக்குக் கீழே, மிளகு நடவு செஞ்சேன். நல்லா வளருது. இன்னும் ரெண்டு வருஷத்துல மிளகு காய்ப்புக்கு வந்துடும். குளிர்ச்சியான சூழல், மண் வளம் காரணமா மிளகுல நல்ல மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதன் மகசூலை பார்த்துட்டு மத்த மரங்கள்லயும் மிளகுக்கொடி ஏற்றிவிடலாம்னு நினைச்சிருக்கேன். கோகோவும் செழிப்பா வளர்ந்துக்கிட்டு இருக்கு. அடுத்த ரெண்டு வருஷத்துல அதுல இருந்தும் வருமானம் கிடைக்க ஆரம்பிச்சிடும். மலை வேம்பு, தேக்கு, குமிழ், ரோஸ்வுட் மரங்களுக்கு இப்போ எட்டு வயசாகுது. இந்த மரங்கள் நல்லா முதிர்ச்சி அடைஞ்சு, அடுத்த 12 வருஷத்துக்குப் பிறகு அறுவடைக்கு வந்து, கணிசமான வருமானம் கொடுக்கும்னு உறுதியா நம்புறேன்’’ என்றவர் நிறைவாக,

வீட்டுத்தோட்டத்தில் மிளகு

‘’வீட்டுத்தோட்டத்துல 25 தென்னை மரங்கள் இருக்கு. எல்லாத்துலயுமே மிளகுக்கொடி ஏத்திவிட்டு இருந்தோம். குரங்குகள் அட்டகாசத்துனால பத்து தென்னை மரங்கள்ல உள்ள மிளகுக்கொடிகள்தான் மிச்சமிருக்கு. இந்தக் கொடிகளுக்கு 5 வயசு. வருஷத்துக்கு 10 கிலோ மகசூல் கிடைக்குது. இதை நான் விற்பனை செய்யறதில்லை. எங்க பயன்பாட்டுக்கு வெச்சிக்குறோம். உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுக்குறோம். ஒரு கிலோ மிளகு கடைகள்ல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யறாங்க. என்கிட்ட இருக்குற 54 தென்னை மரங்கள்லயும் மிளகுச் சாகுபடி செஞ்சா மிகப்பெரிய வருமானம் கிடைக்கும். வீட்டுத்தோட்டத்துல நல்லா விளையுதுன்னா காடு மாதிரியான சூழலுள்ள என்னோட கலப்பு மரத் தோட்டத்துல இன்னும் கூடுதலா மகசூல் கிடைக்கும்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, ராமநாதன், செல்போன்: 63825 81001.

நடவு மற்றும் இடுபொருள்

ரங்களை நடவு செய்வது மற்றும் இடுபொருள்கள் கொடுப்பது தொடர்பாகப் பேசிய ராமநாதன், ``இரண்டடி சுற்றளவு இரண்டடி ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். 50 சதவிகிதம் மாட்டு எரு, 30 சதவிகிதம் ஆட்டு எரு, தலா 10 சதவிகிதம் வேப்பங்கொட்டைத்தூள், நிலத்தின் மேல் மண் கலந்து எட்டு கிலோ வீதம் குழியில் இட்டு, கன்று நடவு செய்ய வேண்டும். தென்னை, எண்ணெய்ப் பனை, கோகோ ஆகிய பயிர்களுக்கு முதல் ஆண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எரு வைக்க வேண்டும். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ வீதமும், இரண்டாம் ஆண்டு இரண்டு கிலோ வீதமும், மூன்றாம் ஆண்டு மூன்று கிலோ வீதமும் மேலே சொன்ன விகிதத்தில் இடுபொருள் கொடுக்க வேண்டும். நான்காம் ஆண்டிலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நான்கு கிலோ இடுபொருள் கொடுக்க வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே அளவைத் தொடர வேண்டும். மலைவேம்பு, தேக்கு உள்ளிட்ட மற்ற மரங்களுக்கு மேலுரமாக இடுபொருள் எதுவும் தர வேண்டியதில்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism