Published:Updated:

திட்ட மதிப்பு 68 கோடி... கொள்ளளவு 22,000 டன்... சேமிக்கப்பட்ட நெல், 0 கிலோ!

`புரட்சித்தலைவி ஜெயலலிதா' வழியில் செயல்படும் என்று சொல்லும் அரசு விரைந்து விவசாயிகளின் கண்ணீர் துடைப்பது நல்லது. துடைக்குமா?

சேமிப்புக் கிடங்கு
சேமிப்புக் கிடங்கு

ஒவ்வொரு முறையும் ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும் அரசு அதன் பின்னர் அதைக் கண்டுகொள்வதில்லை. நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தானிய சேமிப்புக் கிடங்கு அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இங்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லைக் கொண்டுவந்து ஊற வைத்து உலர்த்தப்படும். பின்னர் அரிசியாக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நுகர் பொருள் வாணிபக் கழகம்
நுகர் பொருள் வாணிபக் கழகம்

இந்த ஆலையில், கடந்த 2017-ம் ஆண்டு நெல் மூட்டைகள் எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாமல் இருக்கவும் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கவும் ரூபாய் 68 கோடி மதிப்பீட்டில் நவீன தானியங்கி நெல் சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 22,000 மெட்ரிக் டன். இந்த நவீன தானியங்கி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் தாமாகவே உலரும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட நாளிலிருந்து தற்போதுவரை நெல் சேமிப்புக் கிடங்கு செயல்படாமல் பயனற்றுக் கிடக்கிறது. இதுவரை ஒரு மூட்டை நெல்கூட இங்கு சேமித்து வைக்கப்படவில்லை.

இந்தச் சேமிப்புக் கிடங்கு செயல்படாமல் இருப்பதால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியிலேயே மாதக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நெல் மூட்டைகள் சேதம் மற்றும் எடை இழப்பு ஏற்பட்டு நஷ்டமாகிறது.

``எருக்கூரில் உள்ள நவீன தானியங்கி நெல் சேமிப்புக் கிடங்கு உடனே செயல்பாட்டுக்கு வருமா" என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நாகை மாவட்ட விவசாயிகள், 68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கில் ஏதாவது கோளாறு இருக்கக் கூடுமோ என்று சந்தேகித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இது குறித்து எருக்கூர் நுகர்பொருள் வாணிபக் கழக உதவி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச முயற்சி செய்தோம். எருக்கூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பகுதி 1 மற்றும் பகுதி 2 உதவி செயற்பொறியாளர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர், பகுதி 1 உதவி செயற்பொறியாளர் செல்வசேகரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம்.

"தகவல் வழங்குவதில் சிக்கல் இருக்கிறது. மேலும், இந்தத் திட்டம் பற்றிய முழுத் தகவல் பகுதி 2 உதவி செயற்பொறியாளர்தான் வழங்க வேண்டும்" என்று மழுப்பலான பதிலைத் தெரிவித்தார்.

இயந்திரத்தில் கோளாறு என்பதுதான் காரணமா... வேறு நடைமுறை சிக்கல் இருக்கிறதா... என்று தெரியவில்லை.

எருக்கூரில் உள்ள நவீன தானியங்கி நெல் சேமிப்புக் கிடங்கு உடனே செயல்பாட்டுக்கு வருமா என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நாகை மாவட்ட விவசாயிகள், ரூ.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கில் ஏதாவது கோளாறு இருக்கக் கூடுமோ என்று சந்தேகித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர். இது குறித்து எருக்கூர் நுகர்பொருள் வாணிபக் கழக உதவி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச முயற்சி செய்தோம். எருக்கூர் நுகர்பொருள் வாணிப கழகத்தின் பகுதி 1 மற்றும் பகுதி 2 உதவி செயற்பொறியாளர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர், பகுதி 1 உதவி செயற்பொறியாளர் செல்வசேகரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம். "தகவல் வழங்குவதில் சிக்கல் இருக்கிறது. மேலும், இந்தத் திட்டம் பற்றிய முழுத் தகவல் பகுதி 2 உதவி செயற்பொறியாளர்தான் வழங்க வேண்டும்" என்று மழுப்பலான பதிலைத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் பதில் சொல்ல மறுக்கிறார்கள். மேல் அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பயனற்றுக் கிடக்கும் 68 கோடி ரூபாய் மதிப்பிலான சேமிப்புக் கிடங்குக்கு உயிர் கொடுத்து நெல் மூட்டைகள் சேதம் அடைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் விவசாயிகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு 140.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,044 சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும் என்றும் இதன் மூலம் தானிய சேமிப்புக் கிடங்குகளின் சேமிப்புத் திறன் 12 லட்சம் மெட்ரிக் டன்னாக உயரும் என அறிவித்தார். அவர் அமைத்த தானிய சேமிப்புக் கிடங்குகளில் ஒன்றுதான் இந்த எருக்கூர் சேமிப்புக் கிடங்கு.

Vikatan

ஏற்கெனவே விவசாயிகள் உரிய விலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், திறக்கப்பட்டும் செயல்படாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

ஜெயலலிதா வழியில் செயல்படும் என்று சொல்லும் அரசு விரைந்து விவசாயிகளின் கண்ணீர் துடைப்பது நல்லது. துடைக்குமா?