Published:Updated:

12 நாட்டு மாடுகள், ஒன்றரை ஏக்கர் நெல்... மாதம் ₹32,000 லாபம் தரும் மாட்டுப்பண்ணை!

மாடு வளர்ப்பவர்கள் பால்பண்ணையில் போதிய வருமானம் இல்லையென வேறு தொழில்களை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில்,``சரியாகத் திட்டமிட்டுச் செய்தால் நாட்டு மாடு வளர்ப்பில் நல்ல லாபம் எடுக்கலாம்” என்கிறார், சென்னை அருகில் உள்ள மாடம்பாக்கத்தைச் சேர்ந்த தீனதயாளன்.

பண்ணையில் மாடுகளைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்த தீனதயாளனைச் சந்தித்துப் பேசினோம். ``பரம்பரையான விவசாயக் குடும்பம்தான். அப்பா வரைக்கும் விவசாயம் தொடர்ந்தது. நான் தாம்பரத்துல டூவீலர் பார்க்கிங் வச்சிருந்தேன். கூடவே கல்யாண போட்டோக்கள் எடுக்குறதுனு தொழில் கொஞ்சம் நல்லா இருந்தது. எனக்கு அப்போ விவசாயத்தை பத்தின ஆர்வம் பெருசா இல்லை. அப்பாவுக்குப் பின்னால நிலத்தைப் பார்த்துக்க முடியாம குத்தகைக்கு கொடுத்துட்டோம். 2006-ல இருந்தே நான் பசுமை விகடன் வாசகர். பசுமை விகடன் புத்தகம் படிக்கும்போது என்னோட எண்ணமெல்லாம் மாற ஆரம்பிச்சது. அதனால குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தைத் திரும்ப வாங்கிட்டேன். சரியா 2009-ம் வருஷம் முதல் 2011 வரைக்கும் நிலத்தைத் தரிசா போட்டேன். அந்த அளவுக்கு ரசாயன உரங்கள் போட்டு நிலம் கெட்டுப்போயிருந்தது. 2011-ம் வருஷம் நிலத்தை உழுது 3 ஏக்கர்ல சேலம் சன்னா, பெருங்கார் நெல் வகைகளை விதைச்சேன். அப்புறம் நான் முழுநேரமா விவசாயத்துல இறங்கிட்டேன். முதல்ல எனக்கு ஏக்கருக்கு 10 மூட்டைதான் நெல் மகசூல் கிடைச்சது. அப்புறமா பொன்னி, குள்ளக்கார், சீரகசம்பா, கிச்சிலி சம்பா, தங்க சம்பா, நிலக்கடலை, ராகினு பயிர் செஞ்சேன்.

மாட்டு தொழுவம் சுத்தப்படுத்தும் பணியில்
மாட்டு தொழுவம் சுத்தப்படுத்தும் பணியில்

இயற்கை விவசாயம் செய்யுறப்போ நாட்டு மாடுகள் தேவையும் இருந்தது. அதுக்காகச் செங்கல்பட்டுல இருக்குற முன்னோடி இயற்கை விவசாயி முகுந்தன் ஐயாகிட்ட கேட்டுக்கிட்டே இருந்தேன். அவர்கிட்ட நாட்டு மாடுகள் கொஞ்சம் அதிகமா இருந்தது. அந்த நேரத்துல அவர் பண்ணைக்குப் போய் வீட்டுக்குப் பால் வாங்கிட்டு வர்றதை வழக்கமா வச்சிருந்தேன். வீடு முழுக்கவே நாட்டு மாட்டுப் பாலைத்தான் பயன்படுத்துனோம். கடைசியா என்னால அலைஞ்சு பால் வாங்க முடியலைனு சொல்லி ஒரு காங்கிரேஜ் பசு மாட்டை வாங்கிட்டு வந்தேன். அப்படித்தான் என் தோட்டத்துக்கு வந்ததுதான் முதல் மாடு. மாட்டைக் கொண்டு வந்து நிலத்துல வச்சு வீட்டுக்குத் தேவையான பாலை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வருவேன். அதைப் பார்த்த அக்கம்பக்க மக்கள், எங்களுக்கும் பால் வேணும்னு கேட்டாங்க. அவங்களுக்கும் கொடுக்க வேண்டிய சங்கடமான சூழல் உருவாச்சு. அவங்களுக்குக் கொடுத்துட்டா எனக்குப் பால் இல்லாம போயிடும். அப்போதான் அதிகமான மாடுகளை வச்சு பால் பண்னை வச்சா நல்லா இருக்கும்னு தோணிச்சு. அதே மாதிரி தேவைக்கு ஏற்ற மாதிரி மாடுகளை வாங்கிட்டேன்" என்றவர் பண்ணைக்குள் அழைத்துச் சென்று காட்டியபடியே தொடர்ந்தார்.

``மொத்தம் 13 ஏக்கர் நிலம். கிணத்துப் பாசனம்தான். அதுல ஒரு ஏக்கர் நிலத்துல மாட்டுத் தொழுவம், கிணறு, தீவனச் சேமிப்பு இடம் எல்லாம் இருக்கு. 5 மாடுகள் சினையிலும், 7 மாடுகள் கறவையிலும், 14 கன்றுகளும் சேர்த்து மொத்தமா 26 இருக்கு. இப்போ 4 உம்பளச்சேரி, 2 தார்ப்பார்க்கர், மீதம் காங்கிரேஜ் மாடுகள்தான். வாடிக்கையாளர்கள் தினமும் என்னோட பண்ணைக்கு வந்து வாங்கிட்டுப் போறாங்க. நாட்டு மாடுகளோட பால்ங்கிறதால, என் பண்ணை பால் நல்ல அடர்த்தியா, ருசியா இருக்கும். இந்தப் பாலுக்கு மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்குது. பால் பண்ணை வெக்கிறவங்க, பாலை மட்டும்தான் பணமா பாக்குறாங்க. அதனாலதான் சில சமயங்கள்ல நஷ்டம் வந்துடுது. ஆனா, பசு ஒரு அட்சயப் பாத்திரம் மாதிரி. அது கொடுக்குற அத்தனையும் மதிப்புமிக்கது. அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டதால எதையுமே வீணாக்குறதில்லை. சாணம், சிறுநீரைத் தேக்கி வயலுக்குப் பயன்படுத்துறேன். பால் பண்ணை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி முகுந்தன் ஐயாவோட பண்ணையைப் போய்ப்பார்த்துத் தொழில்நுட்பங்களைக் கத்துக்கிட்டுத்தான் ஆரம்பிச்சேன். தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை, பால் விற்பனைனு எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுகிட்ட பிறகுதான் தொழில்ல இறங்கினேன்.

மாடுகளை வாங்குறதுக்கு முன்னாடியே தேவையான பரப்புல நெற்பயிர்கள் அல்லது பசுந்தீவனங்களைச் சாகுபடி செஞ்சுக்கணும். எடுத்த உடனேயே நான் அதிமான மாடுகளை வாங்கலை. வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ற மாதிரிதான் மாடுகளோட எண்ணிக்கையை அதிகரிச்சேன். மாடுகளுக்குத் தீவனம் கொடுக்குறது, பால் கறக்குறது மாதிரியான விஷயங்கள்ல நேரத்தைச் சரியா கடைப்பிடிக்கணும். இப்போ நான் ஆட்களை வச்சுத்தான் பராமரிச்சுக்கிட்டு இருக்கேன். இப்போ இரண்டரை ஏக்கர்ல குள்ளக்கார், பூங்கார், குண்டு நெல் பயிர் செய்திருக்கேன். நெற்பயிர்களுக்கு முழுக்கவே சாணமும் கோமியமும் கலந்த தண்ணீர்தான் கொடுத்துகிட்டு வர்றேன். நாட்டு ரகங்கள்கிறதால பெரிசா எதுவும் தேவைப்படலை. மாடுகளுக்கு வருஷத்துக்கு அம்மை, கோமாரி, தொண்டை அடைப்பான் ஆகிய நோய்களுக்கு முன்னெச்சரிக்கையான தடுப்பூசி போடுவோம்" என்றவர் வருமானம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இப்போ கறவையில 7 காங்கிரேஜ் மாடுகள் இருக்கு. இதுவும் பால் நிற்கப்போறதால ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் கிடைக்குது. சென்னை அருகில் இருப்பதால் 1 லிட்டர் 90 ரூபாய்க்கு விற்பனையாகுது. இதே கிராமப்புற பகுதியா இருந்தா, இவ்வளவு விலைக்கு பாலை விற்க முடியாது. அது மூலமா ஒரு நாளைக்கு 2,250 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுவே ஒரு மாசத்துக்கு 67,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இப்போ ஒன்றரை ஏக்கர்ல பூங்காரும் குள்ளக்காரும் அறுவடை முடிஞ்சது. மொத்தமா 34 மூட்டை (80 கிலோ) கிடைச்சிருக்கு. அரிசியாக்கி நேரடியா வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துகிட்டு வர்றேன். அதை அரிசியாக்குனா 17 மூட்டை, அதாவது சுமார் 1,500 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ 60 ரூபாய்னு விற்பனை செய்றேன். அதுமூலமா 90,000 ரூபாய் கிடைக்கும்.

நாட்டு மாடுகளுடன் தீனதயாளன்
நாட்டு மாடுகளுடன் தீனதயாளன்

மொத்தமா பண்ணையில மாடுகளுக்கு 30,000 ரூபாயும், ஆள்கூலியா 20,000 ரூபாய்னு ஆக மொத்தம் 50,000 செலவாகிடும். மீதம் 17,500 ரூபாய் லாபமா நிற்கும். அதே போல அறுவடையான நெல்லுக்கு விதை, அறுவடை செலவு, அரிசியாக்குறதுனு 30,000 ரூபாய் வரைக்கும் செலவாகிடும். அரிசியாக்கி விற்பனை செய்றது மூலமா 30,000 ரூபாய் செலவு போக 60,000 ரூபாய் லாபமா நிற்கும். இதை மாசத்துக்குக் கணக்கு வச்சா 15,000 ரூபாய்தான் லாபம் கிடைக்கும். மாசத்துக்கு பால் மூலமா 17,500 லாபமும், அரிசி மதிப்புக் கூட்டல் மூலமா 15,000 ரூபாயும், மொத்தமா 32,500 ரூபாய் லாபம் கிடைக்குது. இதுவே மாடுகள் சினையில இருக்குறதால பால் கம்மியா இருக்கு. அந்த மாடுகளும் பால் கறக்க ஆரம்பிச்சிட்டா வருமானம் இன்னும் கூடும். நமக்கு என்ன சேர்த்து வைக்குறோம்கிறதை விட நம்ம பசங்களுக்கு என்ன சேர்த்து வச்சிருக்கோம்கிறதுதான் முக்கியம்" என்கிறார் தீனதயாளன்.

மாடுகள் சினைப்பிடிக்கும் தகவல்களைப் பகிர்ந்துகொண்ட தீனதயாளன், ``மாடு சினை பிடிக்கும் பருவத்தில் கழற்சிக்காயை உடைத்து 10 முதல் 15 பருப்புகளை எடுத்து, அசோக பட்டைத் தூள் 50 கிராம், நெருஞ்சி முள் தூள் 50 கிராம் என மூன்றையும் கலந்து 7 நாள்கள் தொடர்ச்சியாகக் கொடுப்பேன். அதன் பின்னர் மாடுகள் எளிதாகச் சினைக்கு வந்துரும். சினைகள் போக மாடுகளின் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களையும் போக்குது" என்றார்.

மாட்டுச் சிறுநீர் சேமிப்புத் தொட்டி
மாட்டுச் சிறுநீர் சேமிப்புத் தொட்டி

மாட்டுச் சிறுநீர் சேமிப்புத் தொட்டி!

மாட்டுச் சிறுநீரைச் சேகரிப்பது தொடர்பாகப் பேசிய தீனதயாளன், ``மாடுகளைக் குளிப்பாட்டும் நீர், கோமியம் மற்றும் சாண நீரை 4,000 லிட்டர் தொட்டி அமைத்துச் சேகரிக்கிறேன். அதில் 10 கிலோ வெல்லமும், 10 கிலோ புண்ணாக்கும் கலந்துடுவேன். இந்தத் தொட்டியில இருந்து குழாய் அமைச்சு பாசன நீரோட கலந்து விடுறேன். அதனால நேரடியா வயலுக்குப் போய்ச் சேர்ந்துடுது. இதைப் பாசன நீரோட கொடுக்கிறதால பயிர்களோட வளர்ச்சியும் செழிப்பா இருக்குறதோட மகசூலும் கூடுது. நோய்களும் தாக்குறது இல்லை" என்றார்.

தரமான பாலுக்காகத் தாராளமா செலவு செய்யலாம்!

ஒரு லிட்டர் பாலை 90 ரூபாய்க்கு தீனதயாளனிடம் வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர் இப்பகுதி மக்கள். மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கெளதம் தனது அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

``இப்போ எல்லா பொருள்களிலும் கலப்படம் இருக்கு. நம்மளால முடிஞ்ச அளவுக்கு அதைத் தடுக்க முடியும். அதுல இந்தப் பால் வாங்குறதை ஒரு பகுதியா பார்க்கிறேன். ஆரோக்கியமான உணவு வகைகள் பத்தின விழிப்புணர்வு இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிக்குது. அப்படித்தான் இந்த நாட்டுமாட்டுப் பால் பத்தி கேள்விப்பட்டோம். விலை அதிகமாக இருக்கிறதா சொன்னாலும் தரத்துக்காக விலையில கொஞ்சம் சமரசம் செய்துகொள்ளலாம். விலையில சமரசமானாலும் அது ரொம்ப பெரிய அளவுல இல்லை. ஒரு தடவை குழந்தைகளோட வெளியில போய்ச் சாப்பிட்டா வர்ற செலவு அதிகமாகும். நம்ம ஆடம்பரத்தைக் குறைச்சுகிட்டு, தரமான பொருள்களை வாங்கலாம். தரமான பாலுக்காகத் தாராளமா செலவு செய்யலாம்” என்றார்.

பால் வாங்கும் கெளதம்
பால் வாங்கும் கெளதம்

கறவை மாடு வளர்ப்பு முறைகுறித்து தீனதயாளன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே...

``மாடுகளுக்கான கொட்டகையைக் கிழக்கு-மேற்காக அமைக்க வேண்டும். எனக்கு அந்த இட வசதி இல்லாததால் வடக்கு தெற்கில் அமைத்திருக்கிறேன். கொட்டகையின் தரைப்பகுதி தண்ணீர் தேங்காதபடி சரிவாக இருக்க வேண்டும். சரிவின் விளிம்பில் இருபுறமும் சிறிய வாய்க்கால் அமைத்துக் கோமியம், சாண நீர் ஆகியவற்றைத் தொட்டியில் சேமிக்கலாம். தரையிலிருந்து 1 அடி உயரத்தில் தளம் அமைத்து அதன்மேல் ஒரு அடி உயரத்தில் தீவனத் தொட்டி அமைக்க வேண்டும். கொட்டகையில் இருக்கும் சாணத்தைத் தினமும் சுத்தப்படுத்த வேண்டும். தினமும் காலையில் கொட்டகையைக் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும்.

ஒரு மாட்டுக்குக் குறைந்தபட்சம் 4 அடி இடம் தேவைப்படும். அதன்படிதான் அமைத்திருக்கிறேன். நல்ல காற்றோட்ட வசதி உண்டு. தினமும் தண்ணீரால் கொட்டகையைச் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் காலையிலும் மாலையிலும் 4 மணி நேரமென்று மொத்தமாக 8 மணிநேரம் பண்ணையில்தான் இருப்பேன். மாடுகளைத் தண்ணீருக்கு விடுவது, தீவனம் வைப்பது எனப் பல வேலைகளை நாம்தான் கவனிக்க வேண்டும். நம் பண்ணையை நாம் கவனித்தால்தான் பண்ணையுடைய நிறை, குறை நமக்குத் தெரியும்.

மாடுகள் நோய்வாய்ப்பட்ட அறிகுறி தெரிந்தால் கவனமாகச் செயல்பட வேண்டும். நோய்வாய்ப்பட்டிருப்பதை உறுதி செய்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம். மாடுகளுக்கு நோய்த்தொற்று குணமாகும் வரை, மற்ற கால்நடைகளிடமிருந்து பிரித்து வைப்பது நல்லது. குடற்புழு நீங்க மருந்துகளைத் தவறாமல் கொடுக்க வேண்டும். கால்நடைகளை ஒவ்வொரு நேரமும் சுத்தப்படுத்தி ஆரோக்கியமான சூழ்நிலையில் பராமரித்தாலே அவற்றுக்கு நோய்த் தாக்காமல் தடுக்கலாம். மாடுகளுக்குப் போதுமான மற்றும் சுத்தமான நீர் வழங்க வேண்டும். வெயில் காலங்களில் முறையான நிழல் மற்றும் குளிர்ந்த நீரைக் கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும். கூடாரம் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும். புதிதாகப் பிறந்த கன்றை மிகவும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். கன்றுகளுக்குத் தடுப்பு மருந்துகளைத் தொடர்ச்சியாகத் தர வேண்டும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு